சினிமாவுக்கு சம்பந்தம் இல்லாதவர் சென்சார் போர்டு தலைவரா?



Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine
Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine

 


     சென்சார் போர்டின் தலைமைப் பொறுப்பை ஏற்றிருக்கிறார் பிரபல பரதநாட்டியக் கலைஞர் லீலா சாம்சன். ‘சினிமாவுக்குக் கொஞ்சமும் சம்பந்தமில்லாதவரை எப்படி இந்தப் பொறுப்பில் அமர்த்தலாம்’ என்கிற சர்ச்சை ஒரு பக்கம் கிளம்ப, ‘‘என்னை ஒரு கலைஞராகப் பார்க்காமல், அதிகாரியாக மட்டுமே பார்க்கிறவர்களின் வாதம் அது. வேறு எதுவும் சொல்வதற்கில்லை’’ என்கிற விளக்கத்தோடு பேச ஆரம்பிக்கிறார் லீலா.

 கலாக்ஷேத்ராவின் இயக்குனர், சங்கீத் நாடக் அகடமியின் சேர் பர்சன், இப்போது சென்சார் போர்டின் தலைமைப் பொறுப்பு.... முதல் இரண்டுக்கும் சம்பந்தமில்லாத பொறுப்பு மூன்றாவது... எப்படியிருக்கிறது?

‘‘அதிர்ச்சியாகவும், ஆச்சரியமாகவும்தான்.... முதல் இரண்டும் என்னுடைய குடும்பங்கள் மாதிரி. குடும்பத்தை சமாளிப்பது என்பது எப்போதுமே சிரமமானதுதான். அதே சமயம் இந்தப் புதிய பொறுப்பு நான் எதிர்பார்த்து வந்ததில்லை என்றாலும், சவால்கள் நிறைந்ததாகவே இருக்கிறது.’’

 உங்களுக்கும், சினிமாவுக்கும் எவ்வளவு தூரம்?

‘‘நல்ல சினிமாக்களை பார்ப்பதில் எல்லோரையும் போலவே எனக்கும் ஆர்வம் உண்டு. மொழியைப் பற்றிக் கவலைப்படாமல், தரமான படங்களைத் தேடிப் பிடித்துப் பார்ப்பேன். தனியே பார்க்கப் பிடிக்காது. சமீபத்தில் மிகவும் ரசித்துப் பார்த்த படம் ‘பிளாக் ஸ்வான்’. நல்ல பொழுதுபோக்குப் படங்களும், சீரியஸான டாகுமென்டரிகளுமே என் சாய்ஸ்.’’

 பெண்களை படுகேவலமாகச் சித்தரிக்கிற சினிமாக்களை நிறுத்த என்ன செய்யப் போகிறீர்கள்? உதாரணத்துக்கு அயிட்டம் நம்பர் பாடல்கள்...

‘‘தனி மனுஷியாக நான் மட்டுமே இதை மாற்றிவிட முடியாது. மாற்றம் என்பது ஒவ்வொரு வீட்டிலிருந்தும், சமுதாயத்திலிருந்தும் வரவேண்டும். பிறகு தன்னால் சினிமாவும் மாறும். இங்கே ஆபாசமும் வன்முறையும் விரவிக் கிடப்பதை மறுப்பதற்கில்லை. சினிமாக்களின் தரம் உயரவும், மரியாதை கூடவும் என்னவெல்லாம் முடியுமோ, அத்தனையையும் செய்யலாம்.’’

 திரைப்படத் தணிக்கைக் குழுவில் உறுப்பினர்களாக உள்ள பலரும் சினிமா பற்றித் தெரியாதவர்கள். அரசியல்வாதிகள் சுட்டிக்காட்டும் யாரோ, அல்லது செல்வாக்குள்ள எவரோதான் பெரும்பாலும் உறுப்பினர்களாக இருக்கிறார்கள்.

 நல்ல சினிமா ரசிகர், திரைப்பட விமர்சகர், பத்திரிகையாளர்கள் போன்றவர்கள்தானே இதில் உறுப்பினர்களாக இருக்க நிஜமாகவே தகுதியானவர்கள்..?

‘‘இது நிச்சயம் பரிசீலிக்கப்படும்.’’

 குடும்பம்..?

‘‘சகோதரர்கள் எல்லாம் வெளிநாடுகளில் இருக்க, சென்னையில் நானும், அம்மாவும்... ரொம்பவே ஒற்றுமையான, உறவுகளையும், மனிதர்களையும் மதிக்கத் தெரிந்த அழகான குடும்பம் எங்களுடையது.’’
 ஆர்.வைதேகி