மாத்திரையா ஊசியா பாதிப்பா?



Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine
Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine


சர்க்கரை நோய் மாத்திரைகள் பக்க விளைவு ஏற்படுத்துவதால் தடை செய்யப்பட்டிருக்கிறதாமே? தொடர்ந்து ஊசி குத்திக் கொள்வதும் சரியானதுதானா? நீண்டகாலம் மாத்திரை எடுத்துக் கொள்வதாலும் கிட்னி முதலானவை பாதிக்கப்படுவதாகச் சொல்லப்படுகிறதே?
 மகேஷ்வரன், திருச்சி.

பதில் சொல்கிறார் சென்னை எம்.வி. நீரிழிவு மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் விஜய் விஸ்வநாதன்

சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு ‘மெடாஃபார்மின்’ உள்ளிட்ட 7 வகை மாத்திரைகள் பரிந்துரைக்கப்பட்டு வந்தன. உடலில் உள்ள இன்சுலினை வேலை செய்ய வைக்க, கணையத்தைத் தூண்டி இன்சுலினைச் சுரக்கச் செய்ய... என ஒவ்வொரு மாத்திரையும் ஒவ்வொரு வகையில் செயல்பட்டு, ரத்த சர்க்கரை அளவு சீராக இருக்க வழி செய்யும். இவற்றுள் ‘ரோஸிக் லிடோசோன்’ என்ற ஒன்றை மட்டும் சமீபத்தில் தடை செய்துள்ளது மத்திய அரசு. அந்த மாத்திரை மாரடைப்புக்குக் காரணமாகிறது என்பதே தடைக்குக் காரணம்.

மற்ற மாத்திரைகள் அனைத்தும் சர்வதேச அளவில் நீரிழிவுக்கு கொடுக்கப்படுபவைதான். ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருப்பவர்களுக்கு இந்த மாத்திரைகள் போதும். நீரிழிவு, ரத்த அழுத்தம் போன்றவற்றுக்கு எடுத்துக்கொள்ளும் மாத்திரைகளால் எந்தவித பக்கவிளைவுகளும் நேராது. வலிநிவாரண மாத்திரைகளைத் தொடர்ந்து எடுத்துக்கொள்கிறபோதுதான் கிட்னி பாதிக்கும் பிரச்னை நேரும்.

சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு உணவுக்கு முன், பின் என எடுத்துக்கொள்ளும் மாத்திரைகள், நாம் உண்ணும் உணவு சக்தியாவதற்குத் தேவைப்படும் இன்சுலினை சுரக்கச் செய்யவே. உணவு வயிற்றினுள் போய்ச் சேர்வதற்கும் இன்சுலின் சுரப்பதற்கும் உள்ள நேரத்தொடர்பைப் பொறுத்தே மாத்திரைகள் உணவுக்கு முன், பின் என பிரித்துத் தரப்படுகின்றன. இது உடலின் தன்மையைப் பொறுத்து வேறுபடலாம். சிலருக்கு மாத்திரை எடுத்த அரை மணிநேரம் கழித்தே இன்சுலின் சுரக்கும். இவர்கள் சாப்பிடுவதற்கு அரைமணி நேரத்துக்கு முன் மாத்திரை போட்டுக்கொள்ள வேண்டும். இந்தப் பிரச்னை இல்லாதவர்கள் உணவுக்குப் பிறகு எடுத்துக் கொள்கிறார்கள். 

மாறாக, உடலில் இன்சுலினின் அளவு மிகவும் குறைவாக இருப்பவர்களுக்கு, அதாவது இன்சுலின் சுரப்பிகள் முற்றிலும் சுரக்கும் தன்மையை இழந்து விட்டவர்களுக்கே இன்சுலின் ஊசி பரிந்துரைக்கப்படுகிறது. இவர்கள் தொடர்ந்து இன்சுலின் ஊசியை குத்திக் கொள்வதாலும் எந்த பாதிப்பும் இல்லை. ஊசியைக் குத்தும்போது கடைப்பிடிக்க வேண்டிய சில விஷயங்கள் அறிவுறுத்தப்படுகின்றன. உதாரணத்துக்கு வயிறு, தொடை என வாரம் ஒருமுறை இடத்தை மாற்றி ஊசியைப் போட்டுக் கொள்ளச் சொல்கிறோம். அவ்வளவுதான்!

வாகனங்களுக்கு காலை வேளையில்தான் பெட்ரோல் நிரப்ப வேண்டும் என்கிறார்களே... ஏன்?
 ஆர்.நாதன், செங்கல்பட்டு.

பதில் சொல்கிறார் ஆட்டோமொபைல் எஞ்சினியர் எஸ்.பாலாஜி

காலை அல்லது வெயில் மங்கிய மாலையில் எரிபொருள் நிரப்புவதே நல்லது. வெயில் வேளையில் பெட்ரோல் நிலையத்திலுள்ள பெட்ரோலும் சூடாக இருக்கும். காலை, மாலை வேளைகளில் பெட்ரோல் குளிர்ச்சியாக இருக்கும்போது, அதன் அடர்த்தி அதிகமாக இருக்கும். அதனால், அதே பணத்துக்கு கூடுதல் எரிபொருள் கிடைக்கும். கொளுத்தும் வெயிலில் ஒரு லிட்டர் நிரப்பினால்..? அப்போது சுமார் 900 மிலி அளவு பெட்ரோலும், மீதிக்குக் காற்றும்தான் கிடைக்கும்!

மூக்குக்கண்ணாடி வாங்கும்போது தரப்படுகிற ஸ்பெஷல் துணியால்தான் அதைச் சுத்தம் செய்ய வேண்டுமா? கர்ச்சீப் போன்ற மற்ற துணிகளையும் பயன்படுத்தலாமா?
எஸ்.விஜயா, மதுரை-11.

பதில் சொல்கிறார் ஆப்டிஷியன் ராஜசேகர்

கண்ணாடியில் பொருத்தப் படும் லென்ஸ் மிக மென்மையானது. கர்ச்சீப் போன்ற துணிகளைப் பயன்படுத்தி துடைத்தால் கீறல் ஏற்படும். கீறல்கள் அதிகமானால் கண்ணாடியின் திறன் பாதிக்கப்படும். கண்ணாடி பழுதாவதோடு, கண்ணுக்கும் பிரச்னை ஏற்படும். கண்ணாடியை அதற்காக அளிக்கப்படும் துணியால் மட்டுமே சுத்தம் செய்ய வேண்டும். தேவையானால் கண்ணாடிக்கடைகளில் அத்துணியை மட்டும் தனியே வாங்கிக் கொள்ளலாம்.