வீடு





 Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine

                      நகரமயமாதலின் விளைவாக, இன்று சிறுநகரங்களில் கூட தனிவீடு வாங்குவதோ கட்டுவதோ பெருங்கனவு. நடுத்தர மக்களுக்குக் கைகொடுப்பது அபார்ட்மென்ட் என்கிற அடுக்குமாடிக் குடியிருப்புதான். ஆனால், வீடு வாங்குவதற்கும் அடுக்குமாடி கட்டிடத்தில் ஃபிளாட் வாங்குவதற்கும் பல வித்தியாசங்கள் உள்ளன. அதிலும் வங்கிக்கடன் மூலம் வாங்குவதாக இருந்தால் அனைத்து விஷயங்களையும் அலசி ஆராய வேண்டும்.

நல்லதொரு மனை வாங்கி, அதில் நம் மனதுக்கேற்ப வீட்டை உருவாக்குவதில் பிரச்னைகள் குறைவு. அந்நிலமும் அதில் அமையும் வீடும் நமக்கே சொந்தம். அடுக்குமாடிக் குடியிருப்பில் அப்படி அல்ல!

ஒரு அபார்ட்மென்ட் எப்படி உருவாகிறது? ஒரு இடத்தில் பல அடுக்குகளாக பல வீடுகள் கட்டப்படுகின்றன. உதாரணமாக, குறிப்பிட்ட அளவு நிலத்தில் 4 தளங்களில் 8 வீடுகள். அப்படியானால் அந்த 8 வீடுகளின் உரிமையாளருக்கும் அந்த குறிப்பிட்ட நிலத்தில் பங்கு உண்டு. ஆனால், அந்நிலம் 8 பகுதிகளாகப் பிரிக்கப்படுவதில்லை. 8 பேருக்கும் சொந்தம் என்றாலும்கூட, எந்தப் பகுதி எவருக்கு எனப் பிரிக்க முடியாது. இதனால், அந்த 8 பேருக்கும் அந்த நிலத்தில் ‘பிரிக்கப்படாத பங்கு’ (அன்டிவைடட் ஷேர்) உள்ளது!

4800 சதுர அடி மனையில் ஒரே அளவுள்ள 8 ஃபிளாட்டுகள் கட்டப் படுவதாகக் கொள்வோம். இக்கணக்கீட்டின்படி 8 உரிமையாளர்களுக்கும் தலா 600 சதுர அடி பிரிக்கப் படாத பங்கு கிடைக்கும். இந்த அளவே பத்திரத்திலும் பதியப் படும். ஆனால், ‘அந்த’ 600 சதுர அடி எந்தத் திசையில், எதற்கு அருகில் போன்ற விவரங்கள் தீர்மானிக்கப்படுவதில்லை.

அது மட்டுமல்ல... இந்த 8 ஃபிளாட்களும் ஒரே அளவு கொண்டவையாக இருக்க வேண்டிய அவசியமில்லை. சில வீடுகள் பெரியதாகவும், சில சிறியதாகவும் இருக்கலாம். அதனால், ஃபிளாட்டின் பரப்பளவுக்கு ஏற்ப, பிரிக்கப்படாத பங்கின் அளவும் நிர்ணயிக்கப்படும். ஆக, அபார்ட்மென்ட்டில் ஃபிளாட் வாங்குவது என்பது என்ன? பிரிக்கப்படாத பாகமாக குறிப்பிட்ட பரப்பளவு நிலத்தையும், விகிதாச்சார அடிப்படையில் அதற்கு ஈடான பரப்பளவுள்ள கட்டிடத்தையும் நம் பெயரில் பத்திரப்பதிவு செய்வதே!

ஃபிளாட் கட்டிடத்தின் பரப்பளவிலும் ஒரு நுட்பம் உண்டு. 800 சதுர அடி ஃபிளாட் என்றாலும் கூட, ஏறக்குறைய 650&725 சதுர அடிதான் வீட்டின் நிஜமான பரப்பளவாக இருக்கும். இதையே ‘கார்பெட் ஏரியா’ என்கிறோம். தரைவிரிப்பை விரித்தால் எவ்வளவு இடம் மறைக்கப்படும் என்பதுதான் கார்பெட் ஏரியா. இது பொதுவாக சுவரிலிருந்து சுவருக்குக் கணக்கிடப்படுகிறது.
சரி... 800 சதுர அடி என்றார்களே... மீதி இடம் எங்கே போனது?

‘காமன் ஏரியா’ என்ற பொது இடங்களையும் சேர்த்தே ஃபிளாட்டின் அளவை கவர்ச்சிகரமாகக் கூட்டிக் காட்டுகிறார்கள் விற்பனையாளர்கள். நடைபாதை, மாடிப்படி, மோட்டார் பம்ப்பிங் இடம், பார்க்கிங் பகுதி, சுற்றுச்சுவர் வரையுள்ள பகுதி, ஃபிளாட்டை சுற்றியுள்ள இடங்கள், மொட்டை மாடி ஆகியவையே பொது இடங்கள். இவற்றுக்கும் சேர்த்தே நாம் பணம் கொடுக்கிறோம்.
பொதுவாக ஃபிளாட்டின் அளவு என்ற கூறப்படுவதில் ஏறக்குறைய 10&20 சதவிகிதம் ‘காமன் ஏரியா’ அளவீடுதான்!

காமன் ஏரியா தவிர, ஃபிளாட்டின் ஒட்டுமொத்தப் பரப்பளவை ‘பிளின்த் ஏரியா’ என்கிறோம். தரை (கார்பெட் ஏரியா)யும் சுவர்கள் இருக்கும் இடமும் சேர்ந்ததே பிளின்த் ஏரியா.
ஃபிளாட் வாங்கும்போது கார்பெட் ஏரியா, பிளின்த் ஏரியா, காமன் ஏரியா, மொத்த ஏரியா என சகலத்தையும் தெளிவாகக் கேட்டு அறிந்துகொள்வதோடு, ஆவணத்திலும் எழுத வேண்டும்.
தனிவீட்டில் நம் இஷ்டப்படி மராமத்தோ, மாற்றியமைப்போ செய்வது போல அபார்ட்மென்ட்களில் செய்ய முடியாது. ஃபிளாட் சுவர்கள், தரை, மேற்கூரை ஆகியவை நமக்கு மட்டுமே ஆனவை அல்ல. நான்கு புறமும் உள்ள ஃபிளாட்டின் சுவரில் எல்லோருக்குமே உரிமையுண்டு. நம் ஃபிளாட்டின் கூரையானது மேல்தளத்தில் குடியிருப்போருக்குத் தரை.... நமது தரை கீழ்தளத்தில் உள்ளோருக்கு மேற்கூரை. அதனால், ஃபிளாட்டின் உள்ளே ஏதேனும் மாற்றம் செய்ய விரும்பினால், கட்டிடத்தின் எந்தப் பகுதிக்கும் பாதிப்பு இல்லாமல் இருக்க வேண்டியது அவசியம். மின்சார அமைப்புகளும், குடிநீர் மற்றும் கழிவுநீர் அமைப்புகளும் கூட அபார்ட்மென்ட்டில் அனைவருக்கும் பொதுவானவையே.

இவ்விஷயங்களோடு, ‘பார்க்கிங்’ பற்றியும் விற்பனையாளரிடம் எழுத்து மூலம் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். பொதுவாக பல  குடியிருப்புகளில் ‘ஓபன் பார்க்கிங்’ முறையே பின்பற்றப்படுகிறது. காரோ, இருசக்கர வாகனமோ முதலில் வருபவருக்கு முன்னுரிமை அடிப்படையில் நிறுத்திக் கொள்ளும் முறை இது. சில குடியிருப்புகளில் ‘கவர்ட் கார் பார்க்கிங்’ என்ற மூடப்பட்ட கார் நிறுத்துமிடம் அமைத்திருப்பார்கள். ‘இந்த இடத்தில் இந்த ஃபிளாட் காரர் வாகனம் நிறுத்தலாம்’ எனக்கூறி, அதற்குத் தனியாக சிலபல லட்சங்கள் பணமும் பெறுவார்கள். அப்படி இருப்பின், அது நம் இடம் என உறுதிசெய்யப்பட்டு ஆவணத்திலேயே பதிவு செய்யப்பட வேண்டும். இது பிற்காலத்தில் பல சிக்கல்களைத் தவிர்க்க உதவும். பல அபார்ட்மென்ட்களில் பார்க்கிங் பிரச்னை அடிதடி வரை போவது நாம் அறிந்ததே!

அபார்ட்மென்ட்வாசி ஆக விரும்புவோர் கவனிக்க வேண்டிய இன்னும் சில விஷயங்கள் அடுத்த வாரம்...
(கட்டுவோம்!)
 தாஸ்