பட்டி மன்றமும் இந்த பாப்பையாவும்



Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine



Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine


                     சினிமாவில சில வில்லன்கள் கூடவே இருந்துக்கிட்டு குழி பறிப்பாங்களே... பட்டிமன்றப் பேச்சாளர்கள் மத்தியிலயும் அதுமாதிரி ஆட்கள் உண்டு. இவர்தான் காரணகர்த்தான்னு தெரியுற நிமிடம் வரைக்கும் நமக்கு அவர்மேல சந்தேகமே வராது. தன்னோட சுயரூபத்தை சிரிப்பால மறைச்சுக்குவார். அந்தச் சிரிப்புல மயங்கி அதுக்குள்ள மறைஞ்சிருக்கிற வன்மத்தை கண்டுபிடிக்கத் தவறிடுவோம். என்னை அடிச்சு படுக்கையில போட்டுட்டா, என்னோட இடம் காலியாகிடும். அந்த இடத்தை எளிதா பிடிச்சுக்கலாம். தாக்குதல் நடத்தப்பட்டதோட அடிப்படையே அதுதான்.

இன்னொரு மோசமான அனுபவத்தையும் உங்ககிட்ட பகிர்ந்துக்க விரும்புறேன்...  

அப்போ தொலைக்காட்சியில பட்டிமன்றம் நடத்துறதெல்லாம் அபூர்வம். பட்டிமன்றத்துக்கு வாய்ப்புக் கொடுத்து அதை வளர்தெடுத்ததுல தூர்தர்ஷனுக்கு முக்கியப் பங்குண்டு. சன் டிவி, அதை இன்னொரு மேலான தளத்துக்கு எடுத்துக்கிட்டுப் போயிடுச்சு. அந்த வகையில தூர்தர்ஷன் முன்னாள் இயக்குனர் நடராஜனுக்கும், சன் டி.வி. சேர்மன் கலாநிதி மாறனுக்கும் நான் நிறைய நன்றிக்கடன் பட்டிருக்கேன்.

தீபாவளிப் பண்டிகைக்காக, தூர்தர்ஷன்ல ஒரு பட்டிமன்றம் நடத்தச் சொல்லி கேட்டிருந்தாங்க. தலைப்பு, ‘ஆணின் வெற்றிக்குக் காரணமா இருப்பது தாயா? தாரமா?’. அப்போவெல்லாம் பெரும்பாலும் தொலைக்காட்சி நிலையத்தார்தான் பேச்சாளர்கள் யாருன்னு முடிவு செய்வாங்க. இந்தப் பட்டிமன்றத்துக்கும் அப்படித்தான். அதில சில மதுரைப் பேச்சாளர்களும் இருந்தாங்க. ஒளிப்பதிவை சென்னை தூர்தர்ஷன் அலுவலகத்தில நடத்துறதா திட்டம்.  மதுரையில இருந்து கிளம்பி சென்னை போய் சேந்தாச்சு. அலுவலகத்துக்குப் போனா, கதவு அடைச்சுக் கிடக்கு. பயங்கரமான போலீஸ் பந்தோபஸ்து. மோப்ப நாய் வச்சு செக் பண்ணிக்கிட்டிருக்காங்க. என்னன்னு விசாரிச்சா, ‘பட்டிமன்றம் நடத்துறதால தூர்தர்ஷன் அலுவலகத்தில குண்டு வச்சுருக்கோம்’னு அநாமதேயக் கடிதம் வந்திருக்கு. மதுரையில இருந்து வந்த அந்த மிரட்டல் கடிதம் காரணமா, பட்டிமன்றத்தையே நிறுத்திட்டாங்க.

இந்த சித்து விளையாட்டுக்கும் சில பேச்சாளர்கள்தான் காரணகர்த்தா. அதுவும் தெரிஞ்சு போச்சு. காலம் இருக்கே... மனிதர்களோட செயல்பாட்டுக்கும் எண்ணத்துக்கும் தகுந்தமாதிரிதான் அவங்க அவங்களுக்கான இடங்களைத் தீர்மானிக்குது. எங்களை ஒழிக்கணும்னு நினைச்ச நபர்கள் இன்னைக்கு எங்கே இருக்காங்கன்னே தெரியலே. இந்தச் செய்தியை எதுக்குச் சொன்னேன்னா, பட்டிமன்ற சரித்திரத்தில இந்தமாதிரி கறுப்புப் பக்கங்களும் ஏராளம் இருக்கு. எல்லாத் துறைகளையும் போல இதுவும் பல நுண் அரசியல்களைக் கடந்துதான் இன்னைக்கு விசுவரூபம் எடுத்து நிக்குது.

வெறும் வார்த்தைகளுக்கும் அறிவுரைகளுக்கும் இந்த உலகத்தில எந்த சக்தியும் இல்லே. என் பிள்ளைகளுக்கு அறிவுரை சொல்றதா இருந்தாக்கூட ஒருதடவைக்கு நாலுதடவை யோசிச்சுதான் சொல்லுவேன். ‘உன் வயசுல தோனி இந்திய கிரிக்கெட் அணிக்கே கேப்டனா ஆயிட்டாருடா’ன்னு என் பையன்கிட்ட சொன்னா, ‘உங்க வயசுல அப்துல் கலாம் அய்யா ஜனாதிபதியாவே ஆகிட்டாரே’ன்னு என் பையன் என்னைத் திருப்பிக் கேப்பானா, கேக்கமாட்டானா? ‘உன் வயசுல சாப்பாட்டுக்கே வழியில்லாம சிரமப்பட்டு நான் படிச்சேன்டா’ன்னு சொன்னா, அந்த வார்த்தைக்கு மரியாதை இருக்கும்.

யாரு காதிலயும் நுழையாம எண்ணிக்கையில அடங்காத அளவுக்கு அறிவுரைகள் காத்திலயே மிதந்துக்கிட்டு இருக்கு. காரணம், எல்லாமே தகுதியில்லாத அறிவுரைகள்!

எனக்கு அடிக்கடி நினைவுக்கு வரும் ஞானியோட கதை இது. ஒரு பையன் நிறைய சர்க்கரை சாப்பிடுறான். அம்மாவுக்கு கவலை. ‘உடம்புக்கு ஆகாதுய்யா’ன்னு சொல்லிப் பாக்குறா... அடிச்சும் பாக்குறா. பையன் திருந்தலே. ‘ஊருக்கு புதுசா வந்திருக்கற ஞானிகிட்ட கூட்டிக்கிட்டுப் போங்க. அவரு புத்திமதி சொன்னா உங்க பையன் கேப்பான்’னு பக்கத்து வீட்டுக்காரர் சொல்றாரு. அந்த அம்மா அழைச்சுக்கிட்டுப் போறா. ஞானிக்குப் பையனைப் பாத்ததும் கொஞ்சம் யோசனை. ‘அடுத்த வாரம் அழைச்சுக்கிட்டு வாங்க...’னு அனுப்பி வைக்கிறார். அடுத்த வாரம் அந்த அம்மா அழைச்சுக்கிட்டு வர்றா. அந்தப் பையனைக் கூப்பிட்ட ஞானி, Ôதம்பி, சர்க்கரை அதிகமா சாப்பிடக்கூடாது. உடம்புக்கு ஆகாது. வயித்தில பூச்சி வச்சுரும்யா’ன்னு சொல்லி தோள்ல தட்டிக் குடுத்துருக்காரு.

அந்த அம்மாவுக்கு பயங்கர கோபம். ‘இதை முதல்முறை கூட்டிக்கிட்டு வந்தப்பவே சொல்லியிருக்கலாமே... ஏங்க அலையவிட்டீங்க’ன்னு கேட்டிருக்கா. அப்போ அந்த ஞானி, ‘அம்மா, முதல்முறை நீங்க பையனைக் கூட்டிக்கிட்டு வந்தப்போ, எனக்கும் நிறைய சர்க்கரை சாப்பிடுற பழக்கம் இருந்துச்சு. புத்திமதி சொல்றதுக்கு முன்னாடி நான் அந்த தப்பை செய்யாம இருக்கணும். அப்பத்தான் என்னோட வார்த்தைக்கு மரியாதை இருக்கும். அதுக்காகத்தான் அடுத்த வாரம் வாங்கன்னு சொன்னேன். இப்போ அந்தப் பழக்கத்தை விட்டுட்டேன். உங்க பையனுக்கு புத்திமதி சொல்ற தகுதி எனக்கு வந்திருச்சு’ன்னு சொன்னாராம்!

நம்மள்ள புத்திமதி சொல்ற எத்தனை பேர் அந்த ஞானி போல இருக்கோம்ங்கிறதுதான் முக்கியமான கேள்வி. மத்தவங்களைப் பத்தி நான் ஆய்வு பண்ண விரும்பலே. நான் அப்படி இருக்கேனாங்கிறதுதான் முக்கியம். ஒரு விஷயத்தைப் பேசுறதுக்கு முன்னாடி நான் என்னவா இருக்கேன்னு ஒரு சுயபரிசோதனை செஞ்சுக்கறது முக்கியம். இந்த விஷயத்திலே ரொம்பத் தெளிவா இருக்கேன். பேச்சும் செயலும் வெவ்வேறா இருந்தா இந்த சமூகம் மிக எளிதா அடையாளம் கண்டு ஒதுக்கி வச்சிரும். என் பேச்சாளர்களுக்கும் நான் இதையே சொல்லுவேன்.
 பட்டிமன்றம்னாவே நகைச்சுவை மட்டும்தான்ங்கிற பார்வையிலயும் எனக்கு உடன்பாடில்லை.

 அதில எல்லா உணர்வுகளுக்கும் இடமிருக்கு. நகைச்சுவை, கோபம், சோகம்.. வாழ்க்கையில எதெல்லாம் இருக்கோ, அதெல்லாம் பட்டிமன்றத்தில இருக்கணும். சமூகத்தையும் குடும்பத்தையும் பேச வந்துட்டு அந்த உணர்வுகளை பிரதிபலிக்கலன்னா அந்த பேச்சுக்கு மதிப்பிருக்காது. போறபோக்குல அழகியலா சில நகைச்சுவைகளைத் தூவலாம். அதுக்காக, நகைச்சுவையாலயே பட்டிமன்றத்தை அலங்கரிக்கக்கூடாது. தொடக்கத்தில மக்களோட கவனத்தை ஈர்க்கிறதுக்காக நான் சில பாடல்களைப் பாடுவேன். குன்றக்குடி சாமி அதை ஏத்துக்கலை. பட்டிமன்றம், பேச்சுக்கான களம். அதோட பாடலைச் சேக்காதேன்னு உரிமையாத் திட்டினாரு. அவரு சொல்வதுதான் சரிங்கிறதை நான் சீக்கிரம் புரிஞ்சுக்கிட்டேன். இன்னைவரைக்கும் அதையே பின்பற்றவும் செய்றேன்.

குறிப்பிட்ட கால வரையறைக்குள்ள தலைப்பைத் தாண்டாம பேசணும். இதுதான் பட்டிமன்றத்தோட அடிப்படை. இது கொஞ்சம் நெருக்கடியான விஷயம்தான். இதைப்பத்தி எழுதுறப்போ, குன்றக்குடி சாமி தலைமையில நடந்த ஒரு பட்டிமன்றம் நினைவுக்கு வருது. ‘கோவலன் வீழ்ச்சிக்குக் காரணம் & ஊழ்வினையா? சூழ்நிலையா? காமமா?’ங்கிற தலைப்பு. ஒரு பழுத்த தமிழ்ப்புலவர் ‘காமமே’ அணியில பேச வர்றார். தலைப்பில அவருக்கு உடன்பாடில்லை போலிருக்கு. ஆனா, பேச மேடை கிடைக்குதேங்கிற ஆர்வத்தில வந்துட்டார்.

அவருக்கு கொடுத்திருந்தது பத்து நிமிஷம். முதல் ரெண்டு நிமிஷம் தமிழ்மொழியோட சிறப்பைப் பத்திப் பேசினார். சாமி பார்த்தார். உடனே மணியை அடிச்சு, ‘அய்யா... ரெண்டு நிமிஷம் போயிருச்சு... தலைப்பைப் பேசுங்கய்யாÕன்னாரு. ‘வர்றேன்யா... வர்றேன்’னு சொல்லிட்டு, அடுத்த ரெண்டு நிமிஷத்துக்கு தமிழோட சிறப்பை விளக்குற சில பாடல்களைப் பாடுறாரு. சாமி திரும்பவும் மணியடிச்சு, ‘அய்யா, தலைப்பை எப்போ பேசப் போறீங்க’ன்னாரு. புலவர் தமிழை விட்டு நகரமாட்டேங்கிறாரு. அடுத்த ரெண்டு நிமிஷம் சிலப்பதிகாரத்தோட சிறப்பைப் பத்தி... அதுக்கடுத்து இளங்கோவடிகளைப் பத்தி... இப்பிடியே 8 நிமிஷம் ஓடியிருச்சு. இன்னும் ரெண்டு நிமிஷம்தான் பாக்கியிருக்கு.

 அடுத்து ஆரம்பிக்கிறாரு... ‘கோவலனோட வீழ்ச்சிக்குக் காரணம் காமம்னு நான் பேசணும். காமத்தாலதான் கோவலன் வீழ்ந்தான்னு என் வாயால பேசலாமா... அது தகுமா’ன்னாரு பாருங்க. சாமிக்கு பயங்கர கோபம். அவரு மேல வந்த கோபத்தை எல்லாம் மணியில காமிச்சாரு. ‘ரெய்ங்க்’னு அடிச்ச மணிச் சத்தத்தில புலவர் அதிர்ந்துபோயி திரும்பிப் பாத்தாரு... ‘உக்காருங்கய்யா’ன்னு அதட்டிட்டு சாமி அடுத்த பேச்சாளரைக் கூப்பிட்டுட்டாரு.

இப்படியும் சில பேச்சாளர்கள் உண்டு. பட்டிமன்றங்கிறதே கொடுத்த தலைப்பை ஆராய்ஞ்சு விவாதிச்சு நிறுவுறதுதானே? தலைப்பில உடன்பாடு இல்லைன்னா, பேச வரலேன்னு மறுத்துடணும். மேடைக்கு வந்துட்டு மாத்திப் பேசுனா பட்டிமன்ற வடிவமே குலைஞ்சு போயிராதா? கேக்குறவங்க மனசை வார்த்தைகள் தைக்காமப் போயிடுமே..!

மதுரையைத் தாண்டி ஒரு கிராமத்தில பட்டிமன்றம். ‘குடும்பத்தை தாங்கி நிக்கிறது ஆண்களா? பெண்களா?’ன்னு தலைப்பு. தீர்ப்பு சொல்றபோது, ஆண்கள் குடிக்கிறதால ஏற்படக்கூடிய விளைவுகளைப் பத்தி சொன்னேன். ‘ஒரு மனிதன் குடிச்சான்னா விலங்கா மாறிடுவான். மனிதத்தன்மையே இருக்காது. என்ன செய்றோம்னு தெரியாம பல கொடுமைகளைச் செய்யத் தொடங்குறான். மனைவி, அத்தனை கொடுமையையும் சகிச்சுக்கிட்டு வெளியில தெரியாம குடும்பத்தை நடத்துறா’ன்னு சொல்லி பெண்களே குடும்பத்தைத் தாங்கி நிக்கிறாங்கன்னு தீர்ப்பைச் சொல்லிட்டு மேடையை விட்டு இறங்குனேன்.

 கீழே ஒரே பரபரப்பு. ஒருத்தரு கையில கத்தியோட நிக்கிறாரு. என்னைப் பாத்ததும் எம்மேல பாய முயற்சி பண்றாரு. ஊர்க்காரங்க அவரை சமாதானப்படுத்துறாங்க. ‘மேடையில உக்காந்துக்கிட்டு, குடிகாரன் மனுஷனே இல்லை, மிருகம்னு என்னைத் திட்டுறான்யா இந்த ஆளு... இவனை குத்தாம விடமாட்டேன்’னு கத்துறாரு. அதுக்குப்பிறகுதான் எனக்கு விஷயமே புரிஞ்சுச்சு. நான் பொதுவாப் பேசினது அவர் மனசைத் தச்சுருச்சு. ஆளு முழு போதையில இருந்தாரு.
அடுத்த வாரம் சந்திப்போமா!
சாலமன் பாப்பையா