காட்டுக்குள் சொர்க்க பூமி



முதியவர்களையும் குழந்தைகளையும் இணைக்கும் முதல் பள்ளி! 

‘‘வாழ்க்கையின் அத்தனை அனுபவங்களையும் ருசித்து, அதன் இறுதிப் படிக்கட்டுகளில் மரணத்துக்காகக் காத்திருக்கும் முதியவர்களும்; அனுபவங்களை ருசிப்பதற்காக வாழ்க்கையின் முதல் படிக்கட்டில் காலடி எடுத்து வைத்திருக்கும் குழந்தைகளும் இணைகின்ற ஓர் இடமாக இந்தக் காட்டுப் பள்ளி இருக்கும்...’’ மெல்லிய நிலவொளி வெளிச்சத்தில் முகம் முழுவதும் புன்னகை ததும்ப ஒரே குரலில் பேச ஆரம்பித்தார்கள் பீட்டர் ஜெயராஜும், சிவராஜும். ‘குக்கூ குழந்தைகள் வெளி’யின் ஒருங்கிணைப்பாளர்கள். திருவண்ணாமலையை அரவணைத்திருக்கும் ஜவ்வாது மலையின் அடிவாரத்தில் அழகாக வீற்றிருக்கிறது புளியனூர் கிராமம்.

அங்கே அமைதியாக அமர்ந்திருக்கிறது ‘குக்கூ’ காட்டுப்பள்ளி. ‘எதற்கும் பயன்படாது’ என்று தூக்கி வீசப்பட்ட பொருட்களை மறுசுழற்சி செய்து இந்தப் பள்ளியைக் கட்டியிருக்கின்றனர்.‘‘இப்போது வடிவமைத்துக் கொண்டிருக்கும் பாடத்திட்டத்தில் 10 குழந்தைகளுடன் ஒரு முதியவரும் இருப்பார். குழந்தைகள்தான் அந்த முதியவரைப் பராமரிப்பார்கள். அவர் இறந்தபிறகு அடக்கம் செய்வதும் குழந்தைகளே. எந்த பாடசாலையிலும் கற்றுக்கொள்ள முடியாத வாழ்க்கைக் கல்வியை குழந்தைகள் முதியவர்களிடமிருந்து கற்றுக் கொள்வார்கள்.

இந்தக் காட்டுப்பள்ளியை விட்டு வெளியேறும் மாணவன் ஒரு மருத்துவனாகவோ, பொறியாளனாகவோ அல்லது வேறு ஏதாவது உயர்ந்த பொறுப்பில் இருப்பானோ என்று தெரியாது. ஆனால், அவன் சாலையில் நடந்துசெல்லும்போது துயருறும் மனிதனைக் கண்டால் தன் கரங்களை உள்ளன்புடன் நீட்டுவான். வாடிய செடியைப் பார்க்கும்போது அதற்கு நீரூற்றுவான். உயிர்ப்புள்ள ஒரு ஆன்மாவாக இருப்பான்...’’ நிறுத்தாமல் பேசுகிற சிவராஜின் சொற்களில் நம்பிக்கை மிளிர்கிறது.  ‘‘குழந்தைகள் அதிகாலையில் எழுந்தவுடன் சூர்யோதயத்தைக் காணச் செல்வார்கள். கதிரவனின் வருகைக்காகக் காத்திருக்கும் இடைவெளியில் சிறுவன் ஒருவன் புல்லாங்குழலை வாசிப்பான்.

இயற்கையோடு இணைந்த இசையின் தாள நயத்தோடு ஒவ்வொரு நாளும் புத்துணர்வோடு ஆரம்பிக்கும். பிறகு அடிப்படைக் கல்வியோடு, இயற்கை வழி விவசாயம், மருத்துவம் மற்றும் நல்ல திரைப்படங்களை திரையிடல், அரசியல் குறித்த விவாதங்கள், விலங்குகள், பூச்சிகள், வானியல், மண்ணியல், நட்சத்திரம் குறித்த கற்பித்தல், கூடை முடைவது, விளையாட்டு, தையல் கலை, காகிதம் தயாரிப்பது, மண், மரம், காகிதம், சிரட்டையைக் கொண்டு பொம்மைகள், சிற்பங்கள் செய்வது, ஓவியம் வரைவது, பறவைகளின் சப்தம் கொண்டு இசைக் கோர்வை உருவாக்குவது, கதை சொல்லுவது, நாடகம் நடிப்பது, கூத்துப் பயிற்சிகள்... என குழந்தைகளின் உலகை இயற்கையின் அழகியலோடு இணைக்கும் பாடங்கள்தான் இங்கே பகிர்ந்துகொள்ளப்படும்.

வரும் ஜூன் மாதம் முதல் முறைப்படி பள்ளி செயல்படத் தொடங்குகிறது. அதற்கான பாடத்திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன. தற்சமயம் பல்லுயிர் சுழற்சி அறிதல், விதைநாற்றுப் பண்ணை அமைத்தல், மூலிகைகளை ரகப்படுத்தி பதியமிடுதல், நோய்தீர் தாவரங்களை இனங்கண்டறிதல் மற்றும் சேகரித்தல், இராட்டையின் வழியாக நூற்று, கைநூற்பு மற்றும் கைநெசவு சார்ந்த பயிற்சி வகுப்புகளும், பயிலரங்குகளும் நடக்கின்றன...’’ குழந்தைகளை மகிழ்ச்சிப்படுத்தும் கனவுப் பாடத்திட்டத்தைப் பகிர்ந்த சிவராஜின் கண்கள் இருளிலும் மின்னுகின்றன.

சுற்றுச்சூழலைப் பாதிக்காத வகையில் இப்பள்ளியை அமைத்திருக்கின்றனர். மரங்கள் வெட்டப்படவில்லை. இரும்புக் கம்பிகள் சேர்க்கப்படவில்லை. இங்கே வகுப்பறை கிடையாது. தேர்வு, மதிப்பெண் கிடையாது. கட்டணம் கூடக் கிடையாது. இங்கு படிக்க வரும் குழந்தைகள் தங்குவதற்கான இருப்பிடமே இது‘‘குப்பையிலிருந்து பொம்மையை உருவாக்கும் அரவிந்த் குப்தா, மற்றவர்களுக்காகவே வாழ்ந்து வரும் என்னுடைய பிசிக்ஸ் மாஸ்டர், ஆசான் நம்மாழ்வார், பள்ளி முடிந்த பிறகு மாலைவேளையில் ஒரு ஆலமரத்தின் அடியில் எங்களை மடியில் அமரவைத்து வாழ்க்கைப் பாடத்தைக் கற்பித்த டீச்சர், தன்னார்வலர்கள், நண்பர்கள், முக்கியமாக குழந்தைகள், புளியனூர் மக்கள்...
 
இவர்களின் ஒத்துழைப்பும், பங்களிப்பும் இன்றி இந்தப்பள்ளி உருவாகியிருக்கவே முடியாது. நான் இங்கே ஒரு காவலாளிதான். குழந்தைகள் குழந்தைகளாக இருப்பதென்பது நாளுக்கு நாள் அருகிக்கொண்டே வருகிறது. தேர்வு, மதிப்பெண் அடிப்படையிலான கல்விச் சக்கரம் கருணையில்லாமல் அவர்களை மொத்தமாக நசுக்குகிறது. இயற்கையோடு ஒன்றுவதற்கான சூழலே இல்லாமல் வளர்கின்ற குழந்தைகளின் நிலை மேலும் நம்மை அச்சுறுத்துகிறது. இதனால் அவர்களுக்குள் இயற்கையாகவே இருக்கும் படைப்பாற்றல் ஒடுக்கப்படுகிறது.

இப்படி ஒடுங்கிப்போயிருக்கும் குழந்தைகளின் ஏக்கமும், தவிப்புகளும், பிரார்த்தனைகளும்தான் இந்தக் காட்டுப்பள்ளி உருவாக முதன்மையான காரணம். இது எல்லோருக்குமான இடம். யார் வேண்டுமானாலும் வரலாம்; தங்கலாம். முக்கியமாக நிராகரிக்கப்பட்ட, புறக்கணிக்கப்பட்ட முதியவர்களின் ஓய்விடமாகவும், கல்விக் கனி பறிக்கப்பட்ட குழந்தைகளின் மைதானமாகவும் இது இருக்கும்...’’ இனிய புன்முறுவலுடன் அழுத்தமாக முடித்தார் சிவராஜ்.                      


காட்டுப்பள்ளி ஹிஸ்டரி

அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணத்திலுள்ள ஒரு விவசாயக் கல்லூரியில் டீனாக இருந்த ஹெச்.எல்.ரஸல் என்பவரின் மனதில் உதித்த சிந்தனைதான் ‘காட்டுப்பள்ளி’. குழந்தைகளை பள்ளி என்ற நான்கு சுவர்களுக்குள் இருந்து மீட்டு இயற்கை வெளியில் நடமாட விடுவதும், இயற்கையிலிருந்து பாடங்களை கற்றுக்கொள்ள வழிவகை செய்வதும், பெரியவர்கள் அதற்கான சூழலை உருவாக்கித்தருவதுமே ரஸலின் கனவாக இருந்தது.

அவரின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின்படி 1927ல் விஸ்கான்சின் மாகாணத்தில் உள்ள லவோனாவில் உலகின் முதல் காட்டுப்பள்ளி ஆரம்பிக்கப்பட்டது. பிறகு 1950ல் ஸ்வீடன், டென்மார்க் உள்ளிட்ட மற்ற ஐரோப்பிய நாடுகளிலும் காட்டுப்பள்ளி முறைப்படி செயல்படத்தொடங்கியது. இங்கெல்லாம் கட்டணம் உண்டு. ஆனால், முதியவர்களையும் குழந்தைகளையும் இணைக்கின்ற கட்டணமில்லா முதல் காட்டுப்பள்ளி ‘குக்கூ’தான்.

- த.சக்திவேல்ஜோதி