Rocking Rock Stars



உணர்வுகளை மீட்டும் தமிழ் ராக் கலைஞர்கள்

தமிழை இயல், இசை, நாடகம் என்று மூன்றாகப் பிரித்து கலை வளர்த்த மண் இது. சினிமாவின் வருகைக்குப் பின், ‘எல்லா சாலைகளும் ரோமை நோக்கி’ என்ற பழமொழி போல எல்லா கலைகளும் சினிமாவில் தஞ்சமாகிவிட்டன. இன்று இசை என்றால் நமக்கு திரையிசை மட்டும்தான். சினிமாவுக்கு வெளியே சாஸ்திரீய சங்கீதம் எனும் கர்நாடக இசை, இந்துஸ்தானி, பாரம்பரிய தமிழ் பண்ணிசை போன்ற செவ்வியல் இசை வடிவங்களும் கானா முதல் கிராமிய இசை வரையிலான நாட்டார் இசை வடிவங்களும் இருக்கவே செய்கின்றன.

ஆனால், இந்தக் கலைஞர்களுக்கான கவனம், அங்கீகாரம் என்றால் அது மிகமிகக் குறைவே. கால காலமாக இந்த மண்ணின் மைந்தர்களை குஷிப்படுத்திய இசை வடிவங்களுக்கே இந்த கதி என்றால் வெளிநாட்டில் இருந்து விண்ணைத் தாண்டி வந்த பண் வடிவங்கள் பற்றி கேட்கவே வேண்டாம். தமிழில் மேற்கத்திய பாணியிலான பேண்டு (Band) இசைக் குழுக்கள் என்று எடுத்துக்கொண்டால் அவற்றின் நிலை பரிதாபம் என்றுதான் சொல்ல வேண்டும். கடந்த சில ஆண்டுகளாகத்தான் அவர்களின் இருப்பு ஏதோ ஓரளவு பொருட்படுத்தப்படுகிறது. ஆனாலும் உள்ளே தகிக்கும் கலையின் தவிப்பை யாரால் கட்டுப்படுத்த முடியும்?

மடை திறந்து பாடும் நதியலையாகப் பாய்கிறார்கள் சில கலைஞர்கள். தமிழில் ‘லா பொங்கல் (la pongal)’; ‘யோதாக (yodhaka)’ போன்ற பேண்டுகளை ‘கிடாரி’ படத்தின் இசைமைப்பாளர் தர்புகா சிவா பயன்படுத்தினார். நாட்டுப்புற இசையையும் செவ்வியல் இசையான கர்நாடக இசையையும் இணைக்கும் புதிய இசை வடிவங்களின் ஆல்பங்களாக இவை இருந்தன. இந்த இசைக் குழுவில் சந்தோஷ் நாராயணன், பிரதீப் குமார், கேபா போன்ற இசைக் கலைஞர்களும் சிவாவுடன் இணைந்து சில காலம் இசை அமைத்தனர்.

தொடர்ந்து, ‘கிராஸ்ஹாப்பர் கிரீன்’ (grasshopper green), ‘சீன் ரோல்டன்’ குழு (sean roldan and friends), ‘ஜானு’ (jhanu), ‘ஊர்கா’ (oorka), ‘நம்ம ஊர் பாய் பேண்ட்’ (namma oor boy band) போன்ற இசைக் குழுக்கள் வரிசைகட்டின. இப்போது, ராக் இசையில் ராக்கிங் பேண்ட்கள் என்று சொன்னால் ‘குரங்கன்’ (kurangan), ‘ஒத்தச்செவுரு’ (othasevuru), ‘சியென்னார்’ (seinnor) ஆகியோரைத்தான் சொல்ல வேண்டும். புத்தம் புதிய சத்தங்கள், வசீகரமான வரிகள், மனதின் நுண் உணர்வுகளை மீட்டும் இசைக் கோர்ப்புகள் என்று ஜென் Z தலைமுறையின் பல்ஸ் பிடித்து பட்டையைக் கிளப்பிக்கொண்டிருக்கிறார்கள் இந்த வைரல் கலைஞர்கள்.

ஐபாட் தலைமுறையின் ப்ளேலிஸ்ட்டை ஆக்ரமித்திருக்கும் இந்த இசை சுனாமிகள் குறித்த டேட்டாஸை பார்ப்போம். குரங்கன் கேபர் வாசுகி, தேன்மா இணைந்து ‘குரங்கன்’ இசைக் குழுவை உருவாக்கினர். இசையின் தொடக்கத்தை தேடுவதுதான் இவர்களின் நோக்கம். அதனால்தான் மனிதனின் மூலமான ‘குரங்கன்’ பெயர்.‘‘ஒரு ஐ-பாடில் இருந்துதான் பாஸ் இந்தக் குழு தொடங்குச்சு. கல்லூரி விடுதியில் ஒரு ஐ-பாடை ஐந்து பேர் பகிர்ந்து மாற்றி மாற்றி பாடல் கேட்போம். வெறித்தனமா கேட்டுக்கிட்டே இருப்போம். மைக்கேல் ஜாக்சன் ஆல்பங்களை மட்டுமே கேட்டுக்கிட்டு இருந்த எங்களுக்கு ஐ-பாட் மூலம் மற்ற வெளிநாட்டு பாப், ஜாஸ் ஆல்ப பாடல்களை கேட்கும் வாய்ப்பு கிடைச்சது.

கேள்வி ஞானம் வழியாத்தான் இசைப் பயணத்தை ஆரம்பிச்சோம். இப்போது, கத்துக்கிட்டே மேடைகளில் இயங்கி வருகிறோம்...’’ என்கிறார் கேபர் வாசுகி.‘‘‘அழகு’, ‘புரட்சி’ இசை ஆல்பத்துக்கு நிதி திரட்ட நிகழ்ச்சி நடத்தினப்பதான் கேபரை சந்திச்சேன். இவரோட தமிழ் நடை ஈர்த்துச்சு. கோடை கால மழை, மழைக்கால வெயிலை எல்லாம் பாட்டுல கொண்டு வந்தது பாதிச்சது. தொடர்ந்து இப்ப இவர் கூடவே பணிபுரியறேன். மகிழ்ச்சியா இருக்கேன்...’’ லேசான புன்னகையுடன் சொல்கிறார் தேன்மா. இப்போது சினிமா, அரசியல் போன்ற விஷயங்களை மெல்லிசையில் சொல்லும் முயற்சியில் இந்த டீம் ஈடுபட்டுள்ளது. 

ஒத்தச்செவுருகட்டடக் கலையில் பொறியியல் முடித்த இளைஞர்கள் இவர்கள். தருண் கிட்டார் வாசிப்பார். பிரவேகா ரவிச்சந்திரன் பாடுவார்.‘‘கல்லூரி நாட்கள்ல ஓசூர் அழகை ரசிச்சு அந்த இயற்கையை வியந்து பாடல்கள் எழுதி மெட்டமைச்சு பாடினோம். இப்படி இயல்பா உருவானதுதான் ‘ஒத்தச்செவுரு’ இசைக் குழு...’’ என்கிறார் தருண். இன்று, இவர்களின் தனித்துவமான மெட்டுகளும் பாடல் வரிகளும் இளம் தலைமுறையினரிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுவருகிறது. ‘‘இந்த பெயருக்குப் பின்னாடி ஒரு வரலாறு இருக்கு...’’ என மர்மச் சிரிப்புடன் பேசத் தொடங்குகிறார் பிரவேகா.‘‘தருணுக்கு சொந்த ஊர் மதுரை.

அங்க போறப்ப எல்லாம் வைகை ஆற்றங்கரைல இருப்போம். தருணோட பால்ய கால காதலி வீடு அங்கதான் இருந்தது! நாங்க போய் பார்த்தப்ப அங்க ஒரேயொரு ஒத்தச்செவுருதான் இருந்தது! அதுல உட்கார்ந்துட்டுதான் மைதானத்துல பசங்க விளையாடறதைப் பார்ப்போம். இசையைப் பற்றிப் பேசுவோம். கல்லூரி விடுமுறையைக் கழிப்போம். இந்த நினைவாதான் எங்க குழுவுக்கு இந்தப் பேரு வைச்சோம். இப்ப வைரலா கேட்கப்படற ‘முயல் தோட்டம்’ பாடல்களோட பிறப்பிடம் அந்த ஒத்தச்செவுருதான்!’’ என்கிறார் பிரவேகா ரவிச்சந்திரன். சியென்னார் நவீன இசையுடன் சாமானிய மனிதர்களின் உனர்வுகளை, சப்தங்களை இசையாகக் கொடுப்பதுதான் இவர்களின் இயல்பு.

“நான் சென்னை பையன்தான். சின்ன வயசுலேந்தே ஹிப்-ஹாப் இசைதான் எனக்கு எல்லாமும். அதன் கவர்ச்சிக்கு மயங்கிட்டேன். யோகி பி, நாச்சத்ராவோட ‘வல்லவன்’ ஆல்பம், மிகப்பெரிய உத்வேகத்தை எனக்கு கொடுத்துச்சு. இப்ப கேட்டாக் கூட 13 வயசுல முதன் முதல்ல நான் கேட்டப்ப ஏற்பட்ட அதே ஃபீலிங் வருது. இதுமாதிரி உணர்வை மத்தவங்களுக்கு நாமும் ஏன் ஏற்படுத்தக் கூடாது? இதுக்கான பதில்தான் எங்க இசைக்குழு. சென்னை மக்கள் உணர்வுகளை அவங்களோட சோகம், சந்தோஷம், வாழ்க்கைமுறைனு சகலத்தையும் வார்த்தைகள்ல மட்டுமில்ல, ஒலிகள்லயும் கொண்டு வர நினைச்சோம்.

பகுதி நேரமா இசைப் பணி செய்துட்டு இருந்தவன் ‘குயின்’, ‘தி டோர்ஸ்’ பாடல்கள் ஏற்படுத்திய தாக்கத்தால முழுநேர இசையோடு பயணிக்கத் தொடங்கிட்டேன். பாரதிதாசன் கவிதைகளை இசை அமைச்சுப் பாடி இணையத்துல பதிவேற்றினேன். பெரிய வரவேற்பு கிடைச்சது. இப்ப நாலு பேரா இயங்கறோம். தன்னிச்சையா பாடிட்டு இருக்கோம். திறமையான புது இசைக்கலைஞர்களோட பயணிக்கணும்னு ஆசை...’’ கண்களில் கனவு மின்ன சொல்கிறார் சியென்னார். இவர் பெயரே இதுதான்!

- திலீபன் புகழ்