காட்ஃபாதர்
போதை உலகின் பேரரசன் - 38
தங்களுடைய சட்ட அமைச்சர் லாராவை கொன்றது பாப்லோ எஸ்கோபார்தான் என்று கொலம்பிய அரசு உறுதியாக நம்பியது. எனினும், பாப்லோவை நேரடியாக சம்பந்தப்படுத்தி நடவடிக்கை எடுப்பதற்கு போதுவான ஆதாரங்கள் கிடைக்காமல் போலீஸ் அதிகாரிகள் திணறிக் கொண்டிருந்தனர். மே 4, 1984. லாரா மறைந்து நான்கு நாட்கள்தான் ஆகியிருந்தது. பாப்லோவின் அண்ணன் ராபர்ட்டோ வீட்டுக்கு போலீஸ் படை வந்திருந்தது. வாசலில் நின்ற பாதுகாவலர் அவர்களோடு மல்லுக் கட்டிக் கொண்டிருந்தார்.“சோதனை போட வாரண்ட் வெச்சிருக்கீங்களா?”கேள்வியை எதிர்கொண்ட போலீஸ்காரர் பதில் ஏதும் சொல்லவில்லை. மாறாக பளாரென அறைந்தார். பாதுகாவலருக்கு காதில் ‘ங்ஙொய்’ என்கிற ரீங்காரம்.
 அவர் சைகை காட்ட காவலர்கள் திமுதிமுவென்று வீட்டின் ஹாலுக்குள் நுழைந்தார்கள். அப்போது ராபர்ட்டோ வீட்டில் இல்லை. அவருடைய மனைவியும் சோதனை போடுவதற்கான வாரண்டை கேட்க, பெண் காவலர்கள் இருவர் அவரை வலுக்கட்டாயமாகப் பிடித்து, “நீங்கள் கைது செய்யப்பட்டிருக்கிறீர்கள்...” என்றார்கள். சோதனை என்கிற பெயரில் வீட்டையே தலைகீழாகப் புரட்டிப் போடத் தொடங்கினார்கள். ராபர்ட்டோவின் நான்கு வயது மகன், அச்சத்தில் அழத் தொடங்கினான். அவனுடைய அழுகைச் சத்தம் சோதனை போட்டவர்களுக்கு தொந்தரவாக இருந்ததோ என்னவோ, குழந்தையென்றும் பாராமல் அவனைக்கூட அடித்தார்கள்.
குழந்தையின் மூக்கு உடைந்து ரத்தம் கொட்டத் தொடங்கியது. இதைத் தடுக்க முனைந்த ராபர்ட்டோவின் பணியாள் ஒருவரும் காட்டுத்தனமாகத் தாக்கப்பட்டார். உண்மையில் அவர்கள் தேடிவந்தது ஆயுதங்களையும், போதை மருந்தையும். பாப்லோவின் அண்ணன் எப்போதுமே இதுமாதிரி அசைவ சமாச்சாரங்களில் ஈடுபாடு கொண்டவரல்ல. எஸ்கோபாரின் ஒட்டுமொத்த வரவு செலவையும் அவர்தான் கவனித்தார் என்றாலும், தன்னுடைய கரங்களை முடிந்தவரை தூய்மையாக வைத்துக் கொள்ளவே மெனக்கெட்டுக் கொண்டிருந்தார். தாங்கள் எதிர்பார்த்தது எதுவும் கிடைக்கவில்லை என்றதும் அங்கிருந்தே தலைமையகத்துக்கு போன் அடித்து விவரம் சொன்னார்கள்.
கொஞ்ச நேரத்தில் ஒரு போலீஸ் ஜீப் வந்தது. அதில் வந்தவர்கள் பழைய துப்பாக்கிகளையும், வெடிகுண்டுகளையும் கொண்டுவந்து தரையில் போட்டார்கள். போலீஸ் போட்டோகிராபர் அவற்றை படம் பிடித்தார். மறுநாள் செய்தித்தாள்களில், ‘அரசுக்கு எதிரான கொரில்லாக்களுக்கு ஆயுதம் சப்ளை செய்த பாப்லோ எஸ்கோபாரின் அண்ணன்!’ என்று தலைப்புச் செய்தி வெளியிடப்பட்டது. கிட்டத்தட்ட இதே நேரத்தில் எஸ்கோபாரின் நம்பிக்கைக்குரிய சகா குஸ்டாவோவின் வீட்டிலும் இதே போன்ற சம்பவங்கள் நடந்தன. ராபர்ட்டோ மற்றும் குஸ்டாவோ இருவரின் மனைவிகளும் போலீஸ் கஸ்டடிக்கு கொண்டு செல்லப்பட்டார்கள்.
 விஷயம் கேள்விப்பட்டதுமே ராபர்ட்டோ, குஸ்டாவோ இருவரும் தப்பிவிட்டார்கள். நகருக்கு வெளியே இருந்த பண்ணை வீடு ஒன்றில் மறைந்திருந்தார்கள். அங்கும் போலீஸ் நடமாட்டம் தெருவில் தெரிந்தது. பண்ணை வீட்டின் நுழைவாயிலை இரண்டு போலீஸ்காரர்கள் கண்கொத்திப் பாம்பாக கவனித்துக் கொண்டிருந்தார்கள். அந்த பண்ணை வீட்டுக்குப் பின்பாக ஆறு ஒன்று ஓடியது. தப்பிப்பதாக இருந்தால், ஆற்றின் வழியாகத்தான் செல்ல வேண்டும். ஆனால், நீரோட்டமோ நீந்துவதற்கு வாகாக இல்லாமல் மிகவும் ஆக்ரோஷமாக இருந்தது. பண்ணை வீட்டில் இருந்த பழைய லாரி டயர் இரண்டை எடுத்தார்கள். அதற்கு காற்று அடித்து இடுப்பில் மாட்டிக் கொண்டு ஆற்றில் குதித்தார்கள்.
இவர்கள் ஆற்றில் குதித்துத் தப்பிய அதே நிமிடத்தில்தான் பண்ணை வீட்டில் கதவை போலீஸ் இடித்துக் கொண்டிருந்தது. எப்படியோ சிரமப்பட்டு பாப்லோவிடம் சென்றார்கள்.“பாப்லோ, விஷயம் தெரியுமா? என் மனைவியை போலீஸ்…” ராபர்ட்டோ சொல்லி முடிப்பதற்குள்ளாகவே பாப்லோ பேச்சை நிறுத்த சைகை காண்பித்தார்.“உன்னுடைய மனைவி மட்டுமல்ல. எனக்கு அண்ணியும்கூட. இதற்குக் காரணமான ஒரு போலீஸ்காரன்கூட உயிரோடு இருக்க மாட்டான்...” ஆத்திரத்தோடு சொன்னபோது, அவருடைய கண்கள் சிவந்திருந்தன. அனுதாபத்தோடு குஸ்டாவோவைப் பார்த்தார்.“என்னால்தான் உனக்கும் தொல்லை குஸ்டாவோ...”
“அடச்சீ. மடையன் மாதிரி பேசாதே. என்னுடைய வாழ்க்கையே நீ கொடுத்ததுதான். இதுமாதிரி சின்னச் சின்ன பிரச்னைகள் வரும்போது, அதை நானும் சேர்ந்து அனுபவிப்பதுதான் நியாயம்...” குஸ்டாவோ பாப்லோவை சமாதானப்படுத்தினான்.“ஓகே. உடனடியாக நான் என்ன செய்யமுடியும் என்று பார்க்கிறேன். அதுவரை நீங்கள் இருவரும் போலீஸிடம் சிக்கிக் கொள்ளக் கூடாது. நீங்களும் மாட்டிக் கொண்டால் பிரச்னை இடியாப்பச் சிக்கலாகி விடும்...”இருவரையும் பாதுகாப்பாக வேறொரு மறைவிடத்துக்கு அனுப்பினார் பாப்லோ.
அங்கே ஓரிருநாள் தங்கியிருந்தபோது, குஸ்டாவோவால் தன் மனைவி சிறையில் இருக்க, தான் இங்கே மறைந்திருக்கும் சூழலை தாங்கிக் கொள்ள முடியவில்லை. போனை எடுத்து தனக்குத் தெரிந்த வக்கீல் ஒருவரிடம் பேச முயற்சித்தான். “வேண்டாம் குஸ்டாவோ. பாப்லோ, நம் மனைவிகளை மீட்க முயற்சித்துக் கொண்டிருப்பான். நீ வேறு தனியாக குழப்பத்தை ஏற்படுத்தாதே...” ராபர்ட்டோவின் எச்சரிக்கையை குஸ்டாவோ பொருட்படுத்தவில்லை. “வேறு வேறு வழிகளில் முயல்வோம். ஏதோ ஒரு பாதையில் தீர்வு கிடைக்கத்தானே செய்யும்?” என்றான்.
குஸ்டாவோ போனில், தன்னுடைய மனைவியை போலீஸ் போதிய ஆதாரங்களோ ஆவணங்களோ இல்லாமல் கைது செய்ததைச் சொல்லி, தன்னுடைய நிலையையும் வக்கீலிடம் அப்படியே எடுத்துச் சொன்னான். மேலும், தான் மறைந்திருக்கும் இடத்தையும் வக்கீல் மீதிருக்கும் கண்மூடித்தனமான நம்பிக்கையில் முட்டாள்தனமாக உளறித் தொலைத்து விட்டான். அன்று இரவு பாப்லோவிடமிருந்து போன் வந்தது.“யாரிடமாவது அங்கிருந்து போனில் பேசினீர்களா?” “நான் பேசவில்லை. குஸ்டாவோதான் அவனுடைய வக்கீல் நண்பன் ஒருவனிடம் பேசினான்...”“அவன் ஒரு முட்டாள். அந்த வக்கீல் ஒரு துரோகி...”“நாங்கள் என்ன செய்யட்டும்?”“கேட்டுக் கொண்டிருக்கிறாயே! ஓடு…”
 இருவரும் ஓடினார்கள். தெருவில் சைரன் வைத்த கார்களைக் கண்டதுமே ராபர்ட்டோவுக்கு மூச்சே நின்றுவிட்டது. குஸ்டாவோதான் சட்டென்று முடிவெடுத்தான். ராபர்ட்டோவை இழுத்துக்கொண்டு சாலையின் ஓரத்தில் ஓடிக் கொண்டிருந்த சாக்கடையில் குதித்தான். சாக்கடையில் வளர்ந்திருந்த புதர் மறைவுக்குள் இருவரும் பதுங்கிக் கொண்டார்கள். போலீஸ் வாகனங்கள் மறைந்தபிறகு தெருவுக்கு வந்தார்கள். இருவரின் மீதும் சேறு. சாலையில் சென்றுகொண்டிருந்தவர்கள் இவர்களை வினோதமாகப் பார்த்தார்கள். அருவருப்பாக முகம் சுளித்தார்கள். இவர்கள் யாரென்றே அடையாளம் தெரியாத அளவுக்கு முகமெல்லாம் கருப்பு நிறத்தில் சாக்கடை சேறு.
ராபர்ட்டோ நினைத்துப் பார்த்தார். ஒரு வாரத்துக்கு முன்பு வரை இதே ஊரில் விஐபிகளாக வலம் வந்தோம். இப்போது சாக்கடையில் பதுங்கி உயிர் தப்ப வேண்டிய அவலம். நம்பிக்கைக்குரிய நண்பர் ஒருவரது வீட்டில் அடைக்கலம் புகுந்தார்கள். அங்கிருந்து பாப்லோவைத் தொடர்பு கொண்டார்கள்.“நகரத்தில் நிலைமை ரொம்பவும் மோசம். நம்மை மட்டுமல்ல, ஒட்டுமொத்த கார்டெல்களையே ஒழித்துவிடும் நோக்கத்தில் அரசாங்கம் படையெடுத்து வருகிறது. நான் உடனடியாக பனாமாவுக்கு தப்பிச் செல்கிறேன். அண்ணியையும், குஸ்டாவோவின் மனைவியையும் மீட்ட பிறகு நீங்களும் எங்களோடு வந்து விடலாம்.
நீங்கள் வரும்போது என்னுடைய மனைவியையும், குழந்தைகளையும் அழைத்து வந்துவிடுங்கள். அதுவரை நீங்கள் தங்குவதற்கு பாதுகாப்பான ஏற்பாடுகளைச் செய்து வைத்திருக்கிறேன்...”ராபர்ட்டோ மனைவியும், குஸ்டாவோவின் மனைவியும் பதினைந்து நாட்கள் சிறையில் இருந்தார்கள். அங்கே மிகக் கடுமையான சித்திரவதைக்கு உள்ளானார்கள். அவர்களை மீட்க எந்த வக்கீலும் தயாராக இல்லை. மேலும் அவர்களை வைத்திருப்பது சட்டவிரோதமானது என்கிற நிலையில் போலீஸே அவர்களை விடுவிடுத்தது. கர்ப்பமாக இருந்த பாப்லோவின் மனைவி மரியா விக்டோரியாவையும், தன்னுடைய குடும்பத்தையும் அழைத்துக் கொண்டு பனாமாவுக்குச் செல்லத் தயாரானார் ராபர்ட்டோ.
அவர்களை அழைத்துச் செல்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஹெலிகாப்டர் வந்தது. எந்த நிமிடத்திலும் போலீஸ் வரலாம் என்கிற பதைபதைப்புடன் அதில் ஏறினார்கள். ஹெலிகாப்டர் பறக்க ஆரம்பித்து ஐந்தே நிமிடங்களில் விதவிதமான சத்தங்கள் வந்தன. ஹெலிகாப்டரை ஓட்டிக் கொண்டிருந்தவர் பயந்து போனார்.“இறக்கைகளில் ஏதோ பிரச்னை. என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை...” என்றார். ஹெலிகாப்டர் நடுவானத்தில் தள்ளாடத் தொடங்கியது. பாப்லோ குடும்பத்தார் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு, ஆண்டவனை வேண்டத் தொடங்கினார்கள்.
(மிரட்டுவோம்)
- யுவகிருஷ்ணா ஓவியம்: அரஸ்
|