இளைப்பது சுலபம்
வெஜ் பேலியோவில் எடை குறைப்பது எப்படி - 27
நடை... சென்ற அத்தியாயத்தில் மிச்சம் வைத்த இந்த விஷயத்தை இப்போது பார்ப்போம். நடப்பதால் என்னென்ன நன்மைகள் என்று சொல்லி நேரத்தை விரயம் செய்ய விரும்பவில்லை. நான் நடை பயின்ற கதையை ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன். இங்கு முக்கியமாக நாம் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயம் ஒன்றுண்டு. அதை மட்டும் பார்க்கலாம். பேலியோவாகவே இருந்தாலும் நீங்கள் சைவ உணவு உட்கொள்பவர் என்றால், குறைந்தபட்ச நடைப்பயிற்சியேனும் தினசரி இல்லாவிட்டால் எடை குறையாது! இந்தக் குறைந்தபட்ச நடை என்பது என்னவென்று பார்க்கலாம்.
 நீங்கள் மூச்சு வாங்க வாங்க நடக்க வேண்டாம். வியர்வை சொட்ட வேண்டாம். பத்து கிலோ மீட்டர், பதினைந்து கிலோ மீட்டர் மாரத்தான் முயற்சிகள் எல்லாம் வேண்டாம். வெறும் அரை மணி நேரம் போதும். இது அதிகாலை இருக்குமானால் சிறப்பு. அது முடியாது என்றால் எப்போது முடிகிறதோ அப்போது. என்னால் பகல் பன்னிரண்டு மணிக்குத்தான் முடியும் என்பீரா? பரவாயில்லை. அதெல்லாம் இல்லை, நான் ஒரு நடுநிசி நாய்; ராத்திரி பன்னிரண்டுக்கு மேல்தான் ஓய்வு என்பீரா? அதுவும் பரவாயில்லை. நான் சொல்லுவது ஒன்றுதான். ஏதாவது ஒரு நேரம், அரைமணி நேரம்! இந்த அரைமணி நேரத்தில் என்ன பெரிதாகக் கலோரி குறைந்துவிடும்?
கண்டிப்பாக இல்லை. மிஞ்சிப் போனால் இருநூறு கலோரி இதில் எரிக்கப்படலாம். அதற்குமேல் இல்லை. நீங்கள் ஒரு மணி நேரம் நடந்தால் முன்னூறு முதல் முன்னூற்றைம்பது கலோரிகள் எரிக்கப்படும். அரை மணிக்கு அதில் பாதி. அவரவர் நடக்கும் வேகம் சார்ந்து இதில் மாறுதல்கள் இருக்கும். ஆனால், பேலியோ வலியுறுத்தும் மெதுவான நடையில் வேகத்துக்கு அத்தனை முக்கியத்துவம் கிடையாது. சாதாரணமாக நடந்தால் போதும். வியர்வை பூக்கக்கூட அவசியமில்லை. இந்த மென்நடையானது மெடபாலிசம் ஒழுங்காக இருப்பதற்கு அவசியம். இன்றைய காலகட்டத்தில் நமது வேலை என்பது பெரும்பாலும் உட்கார்ந்து செய்கிற விதமாக அமைந்துவிட்டது.
உடல் பருமன், நீரிழிவு, ரத்த அழுத்தப் பிரச்னை போன்ற சிக்கல்களேகூட இந்த விதமான வாழ்க்கையின் கொடைதான். ஒரு தொழிற்சாலையில் நாளெல்லாம் நின்று, நடந்து, உடல் உழைப்பைச் செலுத்திப் பணியாற்றும் யாரும் என்னைப் போல் குண்டர்குலத் திலகமாக இருப்பதில்லை என்பதால் அவர்களுக்கு இந்த விவகாரமே அவசியமில்லை. நாம் பேசுவது பிரச்னை உள்ளவர்களை நோக்கி. அவர்களுக்கான தீர்வை நோக்கி. ஒரு அரைமணி நேர நடை என்ன செய்யும்?
* முழு உடலுக்கும் ஒரு மிதமான சுறுசுறுப்பை நம்மையறியாமல் வழங்கும். உட்கார்ந்திருப்பதால், படுத்துத் தூங்குவதால் உண்டாகும் தசைப் பிடிப்புகள், மூட்டு அடைப்புகள், கழுத்து, தோள்பட்டை வலிகளை, சிறு உபாதைகளை உடனடியாக விலக்கிவிடுகிறது. * ரத்த ஓட்டம் சீராகிறது. * சுவாசம் சீராகிறது. * இதயத்தின் சுருங்கி விரியும் தன்மை மேம்படுகிறது. * உள் உறுப்புகள் அனைத்தும் தன் இயல்பான வேகத்தில் இயங்க ஆரம்பிக்கின்றன. * செரிமானம் சரியாக நடக்கிறது.
 இவ்வளவு லாபங்களும் அரை மணி நேரம் சும்மா காலாற நடப்பதால் கிடைக்கின்றன. அவ்வளவுதான். இதற்குமேல் செலவாகும் சுமார் இருநூறு கலோரி என்பது ஒரு பெரிய விஷயமே இல்லை. ஆனால், இந்த அனைத்தும் நடக்கிறபோதுதான் சைவ பேலியோ சரியாக வேலை செய்கிறது. இது என் அனுபவம். பேலியோ என்றல்ல; நீங்கள் எந்த டயட்டைக் கடைப்பிடித்தாலும் ஆரம்பத்தில் ஒரு ஆறேழு கிலோ சரசரவென்று இறங்கவே செய்யும். அதற்கு நீங்கள் நடக்க வேண்டாம், ஓட வேண்டாம், உடற்பயிற்சி செய்ய வேண்டாம்; ஒன்றுமே வேண்டாம். டயட்டைத் தொடங்கினாலே இந்த ஆறேழு கிலோ எடைக் குறைப்பு நிச்சயம். உடலில் உள்ள நீர் எடைதான் அது.
முதலில் இறங்குவது அதுதான். பேலியோவிலும் இப்படியே. ஆனால், இந்த எடை இழப்பு தொடர்ந்து நிகழவேண்டுமென்றால் நமது மெடபாலிசம் ஒழுங்காக இருக்க வேண்டும். என்னதான் பேலியோ உணவுகளில் கார்ப் இல்லை என்று சொன்னாலும் ‘குறைந்த அளவு உள்ளது’ என்பதே சைவத்தைப் பொறுத்த அளவில் உண்மை. பால், தயிர், மோர், வெண்ணெய், சீஸ், பனீர், நெய் இவையே சைவ பேலியோவின் முக்கிய உணவுகள். இதில் சிலருக்கு பனீர் சாப்பிட்டாலே சர்க்கரை அளவு கூடுகிறது என்று சொல்லுகிறார்கள். என்னை சிண்டைப் பிய்த்துக்கொள்ள வைத்த தகவல் இதுதான்.
பனீரில் கார்ப் கிடையாது. என்னைப் பொறுத்தவரை பால் தயிராகி, மோரானால், கார்ப் காண்டம் அதோடு முற்றும். பனீர், வெண்ணெய், நெய்யில் கார்ப் சேர்மானம் இருக்காது. அல்லது குறிப்பிடவே தகுதியற்ற வெகு சொற்ப அளவில். இருந்தாலும் சிலருக்கு பாலே ஒத்துக்கொள்ளாத உணவாக இருந்துவிடும் பட்சத்தில் பாலின் துணைப்பொருள்கள் எதுவானாலும் சிக்கல் அளிக்கக்கூடியதே - ஆனால், ரெகுலர் உணவு அளிக்கும் அளவுக்கல்ல. ஓரளவுக்கு. இம்மாதிரி சிக்கல்களினால் பேலியோவே நம்மால் முடியாது என்று சிலர் ஓடிவிடுகிறார்கள். என் கருத்து, உடல் இளைக்க வேண்டுமானால், பேலியோவைத் தவிர சிறந்த வழி வேறில்லை.
 ஆனால், இச்சிக்கல்களில் இருந்து காக்க அந்தக் குறைந்த நடைப் பயிற்சி உதவும். சாதாரண டயட்டிலேயே நீரிழிவு நோயாளிகளுக்கு தினசரி நடைப்பயிற்சியை மருத்துவர்கள் வலியுறுத்துவதை நீங்கள் கவனித்திருக்கலாம். ரத்த சர்க்கரை அளவைக் குறைக்க அது உதவும் என்பதுதான் காரணம். நீரிழிவெல்லாம் இல்லை; எடைக் குறைப்பு மட்டும்தான் தேவை என்றாலும் இந்த நடை அவசியமே. முடிந்ததா? மிச்சமிருக்கும் ஒரே விஷயம் ருசி. நானாவித உணவினங்களைச் சாப்பிட்டு வளர்ந்த தேகம் நம்முடையது. சட்டென்று வாழ்க்கை முறையையே அடியோடு மாற்றி வெறும் பாதாம், பனீர், காய்கறிகளோடு முடித்துக்கொள்வதென்றால் வாழ்க்கையே போரடித்துவிடாதா?
பெண்களின் ஆகப்பெரிய பிரச்னை இதுதான். அவர்கள் தம் வீட்டாருக்காக விதவிதமாகச் சமைக்க வேண்டியிருக்கிறது. ஆனால், அவர்கள் சாப்பிட உட்கார்ந்தால் மட்டும் பனீர், பாதாம், காய்கறிகள். என்ன போங்காட்டம் இது என்று அந்தராத்மா அலறினால் அது நியாயமே. என்ன செய்ய? எடை குறைந்தாக வேண்டுமே? கொஞ்சம் பொறுத்துக்கொள்ளத்தான் வேண்டும். நானும் என் மனைவியும் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக பேலியோவில் இருக்கிறோம். வியாதி வெக்கை ஏதுமில்லாமல், ஏற்றிய எடையை சொகுசாக இறக்கி, சௌக்கியமாக வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.
இந்தக் காலத்தில் ஓரிரு நாள்கள் மட்டும் வழக்கமான சாப்பாட்டைச் சாப்பிட்டிருப்போம். அதுவும் தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில் மட்டும். ஆனால், அந்த உணவுக்காக என்றுமே ஏங்கியதில்லை. இது எப்படி என்றால், கொழுப்புணவு பழகிவிட்டால் கார்ப் உணவுகளின் மீதுள்ள பந்த பாசம் படிப்படியாக வடியத் தொடங்கிவிடும். ஒரு கட்டத்தில் இல்லாமலேகூடப் போய்விடும். நாம் எதைப் பழக்குகிறோமோ அதுதானே நமதாகிறது! கேவலம், மனிதன் பழக்கத்தின் அடிமை அல்லவா! நமக்கு ஆரோக்கியம் முக்கியமா, ருசி முக்கியமா என்று யோசித்து ஒரு முடிவுக்கு வந்துவிட்டால் போதுமானது. தவிர பேலியோ உணவும் ருசியானதே.
வெறும் ஒரு பனீரை வைத்துக்கொண்டு என்னாலேயே இருபது விதமான உணவு வகைகள் சமைக்க முடியும். சமையல் கலையில் விற்பன்னர்களான மகளிரால் முடியாதா? அமாவாசை, ஏகாதசி போன்ற தினங்களில் வெங்காயம், பூண்டு சேர்க்க முடியாது என்பவர்கள்கூட வெறும் பனீரை வேகவைத்து உதிர்த்துப் போட்டு மோர்க்குழம்பு கலந்து அடிக்க முடியும். மனமிருந்தால் மார்க்கபந்து.
(தொடரும்)
- பா.ராகவன்
|