மீன்கடை பையன்... துணிக்கடை பொண்ணு!
‘உள்குத்து’ காதல் கலாட்டா
‘‘சென்சார் இந்தப் படத்துக்கு யு/ஏ சர்டிஃபிகேட் கொடுத்தாங்க. ஆக்சுவலா படத்துல அதுமாதிரி எந்த கன்டன்ட்டும் இல்லை. ஸோ, ‘யு' சர்டிஃபிகேட்டுக்கு விண்ணப்பிச்சோம். பொதுவா பெரிய படங்களுக்கு இப்படி பிரச்னை வந்தா, மறுநாளே கேட்ட தணிக்கை சான்றிதழை எளிதா கொடுத்துடுவாங்க. ஆனா, சின்னப் படங்களுக்கு அப்படி சாத்தியமில்லைனு புரிஞ்சுக்கிட்டோம். சென்சாரால மூணு மாதங்கள் தாமதமாச்சு. கடந்த மே மாசம் படம் ரிலீஸ் ஆகியிருக்கணும். அந்த டைம்ல ‘பாகுபலி’ வந்திடுச்சு. எங்களுக்கு தியேட்டர்ஸ் கிடைக்கல.
 அப்புறம் ஃபைனான்ஸ் பிரச்னை. இப்படி பல போராட்டங்களை கடந்து ஒரு நல்லபடம் இப்பதான் திரையை எட்டிப் பார்க்கப் போகுது. அதுவும் ஆண்டு இறுதில. நினைக்கும்போதே நிம்மதியா, சந்தோஷமா இருக்கு...’’ மென்சிரிப்பும் நம்பிக்கையும் மின்ன பேசுகிறார் ‘உள்குத்து’ படத்தின் இயக்குநர் கார்த்திக் ராஜு. இதற்கு முன் தினேஷை வைத்து ‘திருடன் போலீஸ்’ விளையாடிய இயக்குநர் இவர்.‘‘‘திருடன் போலீஸ்’ க்ளைமாக்ஸ் எடுக்கும்போதே அப்பட தயாரிப்பாளர்கள்கிட்டயும் தினேஷ்கிட்டயும் ‘உள்குத்து’ கதையை சொல்லிட்டேன்.
அவங்களுக்குப் பிடிச்சிருந்தது. உடனே படத்தை ஆரம்பிச்சுட்டோம். உள்ள ஒண்ணை வைச்சுகிட்டு வெளில ஒண்ணை பேசற மனிதர்கள் பத்தின படம் இது. சின்னச் சின்னதா படத்துல பன்னிரண்டு ஆக்ஷன் ப்ளாக்குகள் இருக்கு. ஸோ, நடிக்கவும் செய்கிற ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன், ஒரு இயக்குநர் மாதிரி ஒர்க் பண்ணியிருக்கார்...’’ நிதானமாக பேசுகிறார் கார்த்திக் ராஜு.

எப்படி வந்திருக்கு படம்? யதார்த்தமான இயல்பான ஒரு கதை. ரொம்ப நல்லா வந்திருக்கு. மீன் மார்க்கெட்டில் மீன்களை க்ளீன் செய்து கொடுக்கிற தினேஷ், அதே ஊர்ல துணிக்கடைல சேல்ஸ்கேர்ள் ஆக இருக்கிற நந்திதா. இவங்க இரண்டு பேரையும் சுத்தி நடக்கிற விஷயங்கள்தான் படம்.‘அட்டகத்தி’க்கு பிறகு இரண்டு பேரும் சேர்ந்திருக்காங்க. படம் முழுக்க பால சரவணன் இருப்பார். சாயாசிங், ஜான்விஜய், ஸ்ரீமன், சரத்லோகித், செஃப் தாமுனு நிறைய ஆர்ட்டிஸ்ட்கள்.
 ‘குக்கூ’ பி.கே.வர்மா ஒளிப்பதிவும், ஜஸ்டின் பிரபாகரன் இசையும், சவுண்ட் என்ஜினியர் உதயகுமாரின் ஆடியோ மிக்ஸிங்கும் பேசப்படும். ‘திருடன் போலீஸி’ல் காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்தது மாதிரி இதுல சென்டிமெண்ட் டச் ஒண்ணு வைச்சிருக்கேன். நிச்சயமா கூட பிறந்த அக்கா, தங்கச்சியை இன்னும் அன்பா அக்கறையா பார்த்துக்கணும்னு தோணும்!
- மை.பாரதிராஜா
|