வரம்புக்கு மீறிய வாழ்க்கை அடிப்படை அறத்தையும் அன்பையும் கொல்கிறது...
‘ஆண் தேவதை’யின் அடிநாதம்
‘‘இப்போ மனிதம் சார்ந்த கதைகள் குறைவாக இருக்கு. சமூகத்தைவிட்டு அந்நியமான படங்களே நிறைய இருக்கு. நமக்குள்ளே இருக்கிற இயல்பான வாழ்க்கை, உறவுமுறைகள், சின்னச்சின்ன நெருக்கங்கள், பகைகூட விஷயமாக இப்ப இல்லை. ‘ஆண் தேவதை’யில் குடும்பம் சார்ந்த நுட்பமான அன்பையும், வலியையும் சொல்லியிருக்கேன். ரிலேஷன்ஷிப்பை நல்லா வச்சிருக்கிறது நம்மோட தேவை.
 அது உயிரோட இருக்கிற நதி. அதில் எப்பவும் வெள்ளம் ஓடிக்கிட்டே இருக்கணும். இந்தப் படத்தில் இருக்கிற காட்சிகள் எங்கேயும் இப்பவும் நடந்துகிட்டே இருக்கு. உலகத்தையே பறவை மாதிரி வலம் வந்தால் பத்தாது. கீழே குனிஞ்சு பார்க்கணும். அப்படி வாழ்க்கையைப் பார்த்ததால் வந்த பாடம்தான் ‘ஆண் தேவதை’ படம்...’’தெளிவாகப் பேசுகிறார் இயக்குநர் தாமிரா. ‘இரட்டைச்சுழி’யில் வெளியே தெரிய வந்தவர்.
‘ஆண் தேவதை’ங்கிற பெயரே வித்யாசப்படுது... நான் பண்பாட்டு, கலாசார வெளியில் படம் பண்ணணும்னு விரும்புவேன். வாழ்க்கை எவ்வளவு மாறினாலும் அதில் அடிப்படைப் பண்புகள் மாறிடக் கூடாதுன்னு நினைக்கிறேன். எதுவொண்ணுக்கும் ஆசைப்பட்டு என்னால் எப்பொழுதும் மூன்றாம் தர உணர்வுகளுக்குத் தீனி போட முடியாது. நமது குடும்பம், சூழல், தன்மை சார்ந்த அனுபவங்களிலிருந்து உருவாக்கிக் கொண்ட நியாயங்களை மட்டுமே என் படங்களில் முன் வைக்கிறேன். கார்ப்பரேட்டும், வணிகச் சந்தையும் நம்மை மாத்திட்டாங்க.
 முன்னாடி நம் பர்ஸில் இருந்த பணத்திற்கு தக்கபடி வாழ்ந்திட்டு இருந்தோம். அதுக்கேத்தபடி செலவழிச்சோம். இப்ப நமக்கு 10000 ரூபாய் சம்பளம்னா 20,000 ரூபாய்க்கு கடன் கொடுக்க ரெடியா இருக்காங்க. கார்டில் செலவழிக்கிறோம். அதனால் கணக்கு இல்லாமல் போச்சு. நமக்கு செலவழிக்க தகுதி 100ன்னா 1000 ரூபாய் செலவழிக்க தூண்டுறாங்க. வீடு, நகை, எல்லாம் நமக்கான கனவா சித்தரிக்கப்படுது. ஒட்டுமொத்தமா சம்பாதிக்கிறதை ஒட்டுமொத்தமான கடனுக்கு கொடுத்திடுறோம்.
நாம் வாழ்றதே கடனை அடைக்கிறதுக்குத்தான். இந்த ‘EMI’ வாழ்க்கையை பெருநகர வாழ்க்கை, தொலைக்காட்சி, நாற்கர சாலைகள் இணைப்பு எல்லாம் சேர்ந்து கொடுத்துவிட்டது. பெருநகரத்தில் கிடைக்கிற விஷயம் குக்கிராமத்தில் கூட கிடைக்குது. ஏற்றத்தாழ்வு இல்லை. வரம்புக்கு மீறிய ஒரு வாழ்க்கையை நோக்கி போறோம். அப்படியொரு வாழ்க்கை, அடிப்படை அறத்தையும், அன்பையும் எப்படி கொல்கிறது... இதுதான் ‘ஆண் தேவதை’.
சமுத்திரக்கனி இந்தக் கதையில் எப்படி பொருந்தியிருக்கார்..? இது உறவுகளை முன்னிறுத்துகிற கதை. ஒருத்தர்கிட்டே அன்பு செலுத்துறேன்னா, அதற்குப் பதிலாக வருகிற அன்பு இன்னும் நேர்த்தியாக இருந்தால் மனதை அள்ளும். கனியே அப்படிப்பட்ட நல்லியல்புகள் உள்ளவர்தான். அது அவர் கதாபாத்திரங்களில் பிரதிபலிக்கிறது. படத்திற்கு உழைக்கிறதில் அவர் எதுவும் மிச்சம் வைச்சுக்கிறதில்லை. அது அப்படியே பார்வையாளர்களுக்குச் சென்றடைகிறது. இப்ப கருத்துச் சொல்றதை பார்வையாளர்கள் அந்நியமாக பார்க்கிற மாதிரி தெரியுது. ஆனால் சமுத்திரக்கனி சொன்னால் ஏத்துக்கிறாங்க.
 ஆனால், இதில் அவர் எந்த கருத்தையும் சொல்லப் போறதில்லை. இதில் சமுத்திரக்கனி இளங்கோவாக ஒரு வாழ்க்கை வாழ்றார். அவருக்குள் நடக்கிற சில மாற்றங்களைக் கொண்ட பதிவு இது. இதன் நல்ல விஷயங்களை நாம் எடுத்துக்கலாம். சின்னச் சின்ன சண்டைகளை ஈகோ பெரிசாக்குது. இன்னிக்கு தீரவேண்டிய பிரச்னைகள் இன்னிக்கே தீருவதில்லை. அதே கோபத்தோட வெளியே போய், திரும்பி வந்து, கோபமும் மெளனமும் சேர்ந்து உறவில் இடைவெளி விழுது. வேலை செய்வதற்காக வாழ்றமா, வாழ்றதுக்காக வேலை பார்க்கிறமான்னு தெரியலை.
இப்ப வீடு என்னவா இருக்கணும்? வீடு வெறும் சிமெண்ட் கலவையால் ஆனதல்ல. கனவும், மகிழ்வும் கொண்டாட்டமா இருந்த வீடுகள் இப்ப refresh பண்ற இடமாகிவிட்டது. கனவுகளை அகலப்படுத்த ஓடிக்கிட்டே இருக்க வைக்குது. நாம் கவனிக்க வேண்டிய பிள்ளைகளை ப்ளே ஸ்கூலில் ஆயாக்கள் பார்த்துக்கிறாங்க. இந்த இடங்கள் வரும்போது படத்தில் சமுத்திரக்கனி அழகாகப் பொருந்துகிறார்.
நீங்கள் எப்பொழுதும் உறவுகளில் அக்கறைப்படுகிறீர்கள்! நல்லபடியாக வியாபாரம் ஆகி, வெற்றி பெறணும் என்ற நியாயமான ஆசைகள் போக சில சினிமாக்களில் நம்மையும் அடையாளம் காண ஆசை வரும். நாமளே நம்மை கொஞ்சம் தட்டிக் கொடுக்கறது மாதிரின்னு வைச்சுக்கங்களேன். இதில் சமுத்திரக்கனி இளங்கோ என்ற மனிதராக மட்டுமே வந்திட்டு போக, ரம்யா பாண்டியன் கதை நாயகியாக வர்றாங்க. ‘அடுத்து என்ன படம் பண்றீங்க?’னு கேட்டால், ‘ஆண் தேவதை’ ரொம்ப நம்பிக்கை தருது சார். காத்திருக்கேன். நிறைய பணத்திற்கும், நிறைய படத்திற்கும் ஆசைப்படலை...’னு சொல்றாங்க. அப்படிப்பட்ட இயல்பில் இருக்கிற பொண்ணு. கவின், மோனிகான்னு இரண்டு குழந்தைகள்.
கவின் என்னடான்னா கிளிசரின் இல்லாமல் அழுகிறான். கேமராமேன் விஜய்மில்டன் என் கால் நூற்றாண்டு நண்பன். அவரது உழைப்பு அப்படியே ஃபிரேமில் கண்கூடாத் தெரியுது. பக்ரூதீன், முஸ்தபா, குட்டி என்கிற இனிய நண்பர்களோடு சேர்ந்து நானும் தயாரிக்கிறேன். பொதுவாக ஒரு ஆல்பம் வரும்போது ஒரு பாடல்தான் முத்திரையா நிக்கும். இன்னொண்னு கொஞ்சம் கேட்க வைக்கும். வேறு ஒரு பாடல் சுமாரா வரும். ஆனால், ‘ஆண் தேவதை’யில் ஒவ்வொரு பாடலும் மனசுக்குப் பிடிச்சிருக்கு. ஜிப்ரான் ஒவ்வொன்றிலும் தனித்துவம் காட்டி விளையாடியிருக்கார். வினித் ஸ்ரீனிவாசன் இதில் ஒரு பாட்டு பாடியிருக்கார். மறைந்த கவிக்கோ அப்துல் ரகுமானின் கவிதை, அவர் கொடுத்திருந்த சம்மதத்தோட பாடலா மாறியிருக்கு.
ஏன் இந்த இடைவெளி? பொதுவாக இது நல்ல சினிமாவுக்கு உகந்த காலமில்லை. அதற்கான சூழல் இங்கே குறைவு. அளவா கொடுத்தா சென்டிமென்ட் மாதிரி மனுஷனுக்கு இஷ்டமானது எதுவும் கிடையாது. சென்டிமென்ட்டான்னு சிரிக்கிறவங்களுக்கும் சென்டிமென்ட் இருக்கு. அதைக்கூட இங்கே சரியா செய்யலை. டைரக்டர்னா படம் பண்ணிக்கிட்டே இருக்கணும்னு ஒரு கட்டாயமும் இல்லை. என்னப் பொறுத்தவரை சினிமாங்கிறது அருமையான கலை. அதை மனித உணர்வுகளைப் பக்குவப்படுத்தவே பயன்படுத்தணும். அதுதான் நீதி.
 பாருங்க, இங்கே திரை எழுத்தாளர்கள் என்கிற ஜெனரேஷன் இல்லை. புகழ்பெற்ற நாவலாசிரியர்கள் இதுக்கு வர்றாங்க. கலைமணி, கலைஞானம், ஆர்.செல்வராஜ், தூயவன் மாதிரியானவர்கள் ஒருத்தர் கூட இப்போ இல்லை. அதனால் டைரக்டர்கள் திரை எழுத்தாளராக மாறுகிற சூழ்நிலை வருது. இப்போதான் அருள் செழியன், கருந்தேள் ராஜேஷ், எம்.கே. மணினு ஒரு தலைமுறை உருவாகி வருது. இது நல்லது. சினிமாவில் என்னுடைய எண்ணம் என்னன்னா நம்மாலே இங்கே ரசனை கெட்டுடக்கூடாது. மனுசத்தன்மை குறைஞ்சு, நெஞ்சில் ஈரம் குறைஞ்சிடக்கூடாது. என் பர்சனல் படங்கள் அப்படி அமையத்தான் விருப்பம். அப்படிப்பட்ட விருப்பம் எனக்கு இருப்பதால் இப்படிப்பட்ட இடைவெளி வருவது காலத்தின் கட்டாயம்.l
- நா.கதிர்வேலன்
|