மொஹம்மத் அலி!கறுப்பினத்தவருக்கு அனுமதி இல்லை. அவர்கள் உணவகங்களில், திரையரங்குகளில் ஓரமாக ஓர் இடத்தில்தான் அமரவேண்டும் என நிறவெறி தலைவிரித்தாடிய சென்ற நூற்றாண்டின் அமெரிக்காவில்தான் இந்த கிராஃபிக் நாவல் ஆரம்பிக்கிறது. தன்னுடைய தொலைந்த சைக்கிளைப் பற்றிப் புகாரளிக்க செல்கிறான், 12 வயதான சிறுவன். ஆனால், அவரது ஏரியா காவலரான ஜோ மார்ட்டின் அருகில் உள்ள உடற்பயிற்சிக் கூடத்திலிருக்கிறார் என்று தெரிய வர, அங்கே செல்கிறார்.

அதுதான் காசியஸ் க்ளேவாக இருந்த அந்த 12 வயது சிறுவன் உலகமே பாராட்டிய மொஹம்மத் அலியாக மாறுவதின் முதல் கட்டம். அந்த உடற்பயிற்சிக் கூடத்தில் ஜோ மார்ட்டின் பலருக்கும் குத்துச் சண்டை பயிற்சியளித்துக்கொண்டிருக்க, தொலைந்த சைக்கிளைப் பற்றிக்கூடக் கவலைப்படாமல், அவரிடமிருந்து குத்துச்சண்டைப் பயிற்சியில் சேர விண்ணப்பத்தை வாங்குகிறார் அந்தச் சிறுவன்.

அடுத்த ஆறு ஆண்டுகளில், அமெச்சூர் குத்துச்சண்டை உலகில் 167 போட்டிகளில், 161ல் நேரிடையாக வென்று, தங்கக் கையுறை விருதுகளை தொடர்ந்து வெல்கிறார். ஜோ மார்ட்டினின் அறிவுரைப்படி, ரோம் ஒலிம்பிக்சில் பங்கேற்று, தங்கப் பதக்கமும் வெல்கிறார். திருப்புமுனை: ஒலிம்பிக் வெற்றியைக் கொண்டாட நண்பர்களுடன் ஓர் உணவகத்திற்குச் செல்கிறார் அந்த இளைஞர்.

ஆனால், அவர் ஒலிம்பிக் சாம்பியன் என்பது தெரிந்தும் அந்த உணவகத்தை விட்டு வெளியே அனுப்பப்படுகிறார். விளையாட்டு உலகிலேயே மிகப்பெரிய அங்கீகாரமான ஒலிம்பிக் தங்க விருதுகூட மனிதர்களின் நிறவெறிக்கு முன்பாக ஒன்றும் இல்லை என்பதை உணர்ந்து, அந்த மெடலை ஓஹையோ ஆற்றில் வீசியெறிகிறார்.

பிரிவினைவாத அரசியல்: கொஞ்சம் கொஞ்சமாக உண்மையை உணரும் அவரது கவனம் மால்கம் எக்ஸ், மார்ட்டின் லூதர் கிங் போன்ற தலைவர்களின் மீது பரவுகிறது. சுதந்திர நாடு என்ற போர்வையில் நடக்கும் செயல்கள், அமெரிக்க அரசாங்கத்தின் கொடூரமான பக்கங்கள் என்று இந்த கிராஃபிக் நாவல் விறுவிறுப்பாக நகர்ந்து, வியட்நாம் யுத்தத்திற்கு வருகிறது.

ஒவ்வொரு அமெரிக்கனும் கட்டாயமாகப் போரில் பங்கேற்க வேண்டிய சூழலில், அலி அந்த யுத்தத்தையே தவறு என்று சொல்லி போரில் பங்கேற்க மறுக்கிறார். அவரது குத்துச்சண்டை லைசென்ஸ் மறுக்கப்பட்டு அவரை குற்றவாளியாக்கிறது அரசாங்கம். அவர் இஸ்லாமிற்கு மாறியதால் ஏற்கனவே அவர் மீதிருந்த வெறுப்பு இப்படியாக பல வகைகளில் பரவுகிறது.

ஆதரவு இல்லாத ஓர் இளைஞர் அரசாங்கத்தையும், கோடிக்கணக்கான மக்களையும் எதிர்த்து எப்படி ஒரு சாம்பியனாக வருகிறார் என்பதையே இந்த 120 பக்க கிராஃபிக் நாவல் மிக அழகாக விளக்குகிறது. சதாம் ஹுசேனை நேரில் சந்தித்து, 12 பிணைக்கைதிகளை விடுவித்தது, நெல்சன் மண்டேலாவுடன் இணைந்து பணியாற்றியது, 1996ம் ஆண்டின் ஒலிம்பிக் பந்தத்தை ஏற்றியது... என்று பல விஷயங்களை இந்த கிராஃபிக் நாவலில் சொல்லி இருந்தாலும், உச்சகட்டமாக ஒரு காட்சியைச் சொல்லி இருக்கிறார்கள்.

ஒரு பல்கலைக்கழகத்தில் அவரைப் பேச அழைக்கிறார்கள். நிறவெறி, அரசாங்கத்தின் அடக்குமுறைகள், சமூக நீதியற்ற நிலையில், எதிர்காலத்தைப் பற்றிப் பயந்துபோய் இருக்கும் மாணவர்கள் இடையே அவர் இரண்டு வார்த்தைகளைக் கொண்ட ஒரு கவிதையைச் சொல்கிறார். ஆங்கிலத்திலேயே மிகச்சிறிய கவிதை என்ற பெருமைக்குரிய அந்தக் கவிதைதான் மொஹமத் அலியின் ஒட்டுமொத்த வாழ்க்கையையுமே சித்தரிக்கிறது. Me, We. இதுதான் அந்தக் கவிதை. இதுதான் மொஹம்மத் அலி.

- கிங் விஸ்வா

எழுத்தாளர் சிபில் டீடஸ் டிலெக்வா (46)

பாரம்பரியம் மிக்க ஓவியக் குடும்பத்தில் பிறந்த சிபில், ஆரம்பத்தில் இசைத்துறையில் முறையான பயிற்சி பெற்றார். குடும்பத்தினரின் ஓவிய ஆர்வம் இவரையும் பற்றிக்கொள்ள, 22 வயதில் சிற்பம், புகைப்படம் மற்றும் வீடியோ ஆகியவற்றில் பயிற்சி பெற்று, யுனிவர்சிடியில் ஓவியக்கலையில் பட்டமும் பெற்றார். 2005ம் ஆண்டு இவர் எழுதிய முதல் புத்தகம் விருதுகளையும் பாராட்டுகளையும் குவிக்க, முழுநேர எழுத்தாளராக மாறி இதுவரையில் நான்கு புத்தகங்களை எழுதி இருக்கிறார்.

ஸ்நிப்பெட்ஸ்

Muhammad Ali (ஆங்கிலம்)
எழுத்தாளர்: சிபில் டீடஸ் டிலெக்வா
ஓவியர்: அமெசையனி
பதிப்பாளர்: டார்க் ஹார்ஸ் பப்ளிகேஷன்ஸ்
விலை: ரூ.1,056; 128 பக்கங்கள்
கதை: இந்த நூற்றாண்டின் ஆகச்சிறந்த விளையாட்டு வீரராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மொஹம்மத் அலியைப் பற்றிய வாழ்க்கை வரலாறு என்றுதான் இந்தப் புத்தகம் அறிமுகமாகிறது. ஆனால், கடந்த நூற்றாண்டின் கோரமான பிரிவினைவாத அரசி யலையும், அதற்குப்பின்னால் இருக்கும் நிஜமான அரசியலையும் ஆவணப்படுத்துகிறது.

அமைப்பு: 12 வயது சிறுவனாக ஆரம்பித்து, பார்க்கின்சன் நோயால் பாதிக்கப்படுவது வரை மொஹம்மத் அலியின் வாழ்க்கை சம உரிமை, இஸ்லாம், நீதி & சுதந்திரம் என நான்கு பிரிவுகளில் சொல்லப்பட்டு இருக்கிறது. மேற்பார்வைக்கு இது சாதாரணமான தலைப்புகளாகவே தோன்றினாலும், மால்கம் எக்ஸ், மார்ட்டின் லூதர் கிங் போன்றவர்கள் காலத்தில் உருவான ‘நேஷன் ஆஃப் இஸ்லாம்’ இயக்கத்தின் கொடியில் இருக்கும் நான்கு இலட்சியங்களையே இது குறிக்கிறது. மிக நுண்ணிய, அதே சமயம் அழுத்தமான பல கலை, இலக்கிய, அரசியல் குறியீடுகளை தன்னகத்தே கொண்ட மிக மிக முக்கியமான புத்தகம் இது.

ஓவிய பாணி: முழுக்க முழுக்க கருப்பு வெள்ளையில் வரையப்பட்டு, அதன் பின்னர் நிறங்களை அவற்றின் அடர்த்தியைக் கருத்தில் கொண்டு சேர்க்கப்பட்ட இந்த ஓவியங்கள், ஓவியனின் நேர்த்திக்கும், போட்டோஷாப் முதலானவற்றைப் பயன்படுத்தும் லாவகத்திற்குமான அருமையான சான்றுகள்.

லாரி ஹோம்ஸுடன் மோதும்போது, தரையில் அலி விழுந்து கிடப்பது போல ஒரு காட்சியை அமெசையனி வரைந்திருப்பார். இது அமெரிக்காவின் சென்ற நூற்றாண்டின் மகத்தானதொரு ஓவியத்திற்கான மரியாதை என்பதைக் கூர்ந்து கவனித்தால்தான் தெரியும். போலவே லெராய் நெய்மன் (1975), அன்ட்ரியா மன்டெக்னா (1480) என பல மகத்தான ஓவியங்களை நமக்கு நினைவுபடுத்துகிறார் ஓவியர்.

ஓவியர் அமேசிங் அமெசையனி

புரூஸ்லீயின் படங்களையும், பிராங்க் மில்லரின் காமிக்ஸ்களையும் படித்து வளர்ந்த அமெசையனி, முறையாக ஓவியம் பயின்று, ஓவிய ஆசிரியராக மாறினார். அதன்பிறகு, ஆர்ட் டைரக்டர், கிராஃபிக் டிசைனர் என்று தொடர்ச்சியாக முன்னேறியவர், 2001ம் ஆண்டிலிருந்து காமிக்ஸ் துறையில் தடம் பதித்து வருகிறார். மிக விரைவில் இயக்குநராகப் போகும் இவரது படைப்புகள் இத்தாலி, பிரெஞ்சு, துருக்கி, ஜெர்மனி என பல மொழிகளில் வெளியாகி உள்ளன.