COFFEE TABLE- குங்குமம் டீம்

மெமரி கார்டு
இதோ உலகிலேயே அதிகமான ஸ்டோரேஜ் கொண்ட மெமரி கார்டு வந்துவிட்டது. இனிமேல் உங்களின் ஸ்மார்ட்போனில் உள்ள வீடியோவையும், புகைப்படத்தையும் நீக்க வேண்டியதில்லை. உங்களுக்கு விருப்பமான அனைத்து திரைப்படங்களையும் ஸ்மார்ட்போனிலேயே சேமித்துக் கொள்ளலாம். ஆம்; இந்த மெமரி கார்டு 400ஜிபி ஸ்டோரேஜ் கொண்டது. சான்டிஸ்க் நிறுவனம் இதை அறிமுகப்படுத்தியுள்ளது. ‘SanDisk Ultra 400GB microSDXC Card’ என்று அழைக்கப்படும் இதில் 100MBps வேகத்தில் தரவுகளையும், வீடியோக்களையும் பரிமாறிக்கொள்ளலாம். உங்கள் கம்ப்யூட்டரிலிருக்கும் 1200 புகைப்படங்களை ஒரே நிமிடத்தில் இந்த மெமரி கார்டுக்கு மாற்றிக்கொள்ள முடியும் என்பது இதன் சிறப்பு.  இதன் விலை ரூ.16,000.

போட் பேபி
டிராவல் குயின் அமலாபாலுக்கு படகில் செல்வதென்றால் ரொம்பவே இஷ்டம். அதுவும் தன் சொந்த தேசமான கேரளாவிற்குச் சென்றால் நகரத்துப் பரபரப்பை மறக்கடிக்கச் செய்யும் படகு பயணத்துக்கே முன்னுரிமை கொடுக்க விரும்புவார். சமீபத்தில் அப்படி பயணம் செய்தபோது, ‘At times I need to run away from the craziness of the city life and needless speculations. For now I am preferring a boat ride, atleast no allegations of breaking the law or should I double check with my well wishers’ என சமூகவலைத்தள பக்கங்களில் இங்கிலீஷில் ஃபீலாகியிருக்கிறார்.

மீண்டும்...
இந்தியாவின் 100 பெரும் பணக்காரர்களின் பட்டியலை ‘ஃபோர்ப்ஸ்’ பத்திரிகை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டும் முதல் இடத்தைப் பிடித்திருக்கிறார் ரிலையன்ஸ் நிறுவனத்தின் முகேஷ் அம்பானி. அவரின் சொத்து மதிப்பு 38 பில்லியன் டாலர். (ரூ.2 லட்சம் கோடி!) இரண்டாவது இடத்தை விப்ரோ நிறுவனத்தின் அசிம் பிரேம்ஜி பிடித்திருக்கிறார்.

அவரின் சொத்து மதிப்பு சுமார் 1 1/4 லட்சம் கோடி ரூபாய். அம்பானியின் சொத்துமதிப்பு ரஷ்யாவிலிருந்து பிரிந்த அசர்பெய்ஜான் நாட்டின் ஒரு வருட வருமானத்துக்குச் சமம். பிரேம்ஜியின் சொத்துமதிப்பு ஆப்கான் நாட்டின் ஒரு வருட வருமானத்துக்குச் சமம்! இந்த 100 பெரும் பணக்காரர்களின் மொத்த சொத்து மதிப்பு மட்டுமே சுமார் 479 பில்லியன் டாலர்; அதாவது சுமார் ரூ.27 லட்சம் கோடி! இது இந்தியாவின் அன்னிய செலாவணியைவிட அதிகமானது!

அந்தரத்து அதிசயம்!
வழக்கமாக நாம் பார்க்கும் ஒன்றை வித்தியாசமான கோணத்தில் படம் பிடித்தால், அது எல்லோரையும் கவர்ந்திழுக்கும் என்பதற்கு உதாரணம் இந்த வீடியோ. அமெரிக்காவின் மேற்கு வர்ஜீனியாவில் உள்ள மலைகளுக்கிடையில் பாய்ந்து செல்கிறது ஜார்ஜ் நதி. அந்த ஆற்றுப்பாலம் அங்கே வெகு பிரபலம். அந்தப் பாலத்தில் வாகனங்கள் செல்வதை ஹெலிகாப்டரில் இருந்து டாப் ஆங்கிளில் படம்பிடித்து ஃபேஸ்புக்கின் ‘our magical world’ பக்கத்தில் ‘west virginia, united states’ என்ற தலைப்பில் பதிவிட, ஒரே நாளில் 5 லட்சம் பேர் பார்த்து வைரலாக்கியுள்ளனர். ‘அந்த பிரிட்ஜ்ல கார் டிரைவ் பண்ண பிடிக்காது. அந்த பாலத்தில் ஆற்றை கடக்கணும்னு நினைச்சாலே நெஞ்சுக்குல நடுங்குது...’ என ஹாரர் கமென்ட்டுகளும் ஆயிரக்கணக்கில் குவிந்துள்ளன.

விளையாட்டு சுறா!
நியூசிலாந்தைச் சேர்ந்த ஆராய்ச்சி நிறுவனம் ஒன்று பசிபிக் பெருங்கடலில் வாழும் உயிரினங்களின் அன்றாட நடவடிக்கைகளை ஆராய்ந்து வருகிறது. இதற்காக தண்ணீர் புகாத வீடியோ கேமராக்களை கடலுக்குள் பொருத்தியுள்ளது. விளைவு... சுமார் நான்கு மீட்டர் நீளமுள்ள வெள்ளை சுறா மீன் ஒன்று அந்த கேமராவுடன் விளையாடுவது பதிவாகியுள்ளது. அந்த கேமராவை சுறா மீன் எதுவுமே செய்யவில்லை என்பது ஆச்சர்யம்.

இந்தக் காட்சியை இணையத்தில் பதிவிட, லட்சக்கணக்கானோர் பார்த்து வைரலாக்கிவிட்டனர். ‘‘சுறாவின் கூர்மையான பற்களைப் பார்த்தவுடன் முதலில் பயம்தான் வரும். ஆனால், இந்த வீடியோவை பார்த்தவுடன் சுறாவுடன் விளையாடத் தோன்றுகிறது!’’ போன்ற பாசிட்டிவ் கமென்ட்டுகளும் வருகின்றன.