தொடுறா பாக்கலாம்...



கர்ஜிக்கும் ‘இப்படை வெல்லும்’

‘‘கொஞ்ச நேரம் மழையை பார்த்திட்டு பேசுவோமா? மழை தெருவை மட்டுமல்ல... மனசையும் கழுவிப்போகுது. எனக்கென்னவோ மழையைப் பார்த்திட்டு இருக்கும்போது யாரும் யாருக்கும் கெடுதல் செய்ய முடியாதுனு தோணுது. அந்த சின்னச் சின்ன செடிகளுக்குச் சந்தோஷத்தைப் பாருங்க... சிரிச்சுக்கிட்டு நிற்குது. மழை ஒரு அதிசயம் இல்லையாண்ணா..?’’ சொல்லிவிட்டு ஜன்னல் விட்டுத் திரும்பி, ‘இப்படை வெல்லும்’ படத்தைப் பற்றிப் பேச ஆரம்பிக்கிறார் இயக்குநர் கௌரவ் நாராயணன்.

‘இப்படை வெல்லும்’ படத்தை எப்படி எதிர்கொள்ளலாம்..? ஒரு பக்கம் ஹீரோ, ஹீரோயின், சூரி. மற்றொரு பக்கம் டேனியல் பாலாஜி, ஆர்.கே. சுரேஷ். இன்னும் அடுத்த கட்டமாய் ரவிமரியா, எம்.எஸ்.பாஸ்கர், ஸ்ரீமன். இதில் யாரால் யாருக்கெல்லாம் பிரச்னைகள் வருது, அதை யார் எவ்விதம் கடந்து போகிறார்கள் என்று கதை கிளை பரப்பி நிக்கும்.

ஹீரோ உதயநிதி 15 இன்ச் ஆயுதத்தை நம்புறதைவிட 1300 கிராம் மூளையை நம்பி செயல்படுகிறவராக வருகிறார். டிரெய்லரில் எனக்கு கிடைச்ச வரவேற்பு ரொம்பவும் மகிழ்ச்சியாக இருந்தது. படத்தைப் பார்க்கணும்னு ஆசை மேலோங்கி நிற்கிறது என்ற பொருள்படி சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி, பாண்டிராஜ், அறிவழகன், தனஞ்செயன்னு குவிந்த பாராட்டுகள் ரொம்பவே இதம். இன்னிக்கு ட்ரெண்டிங்கில் முதல் இடத்தில் ‘இப்படை வெல்லும்’ நிற்கிறதும் இன்னும் சந்தோஷம்.

எப்படி இதில் வந்து சேர்ந்தார் உதயநிதி..?
அவ்வளவு பொருத்தமாக வந்து கதையில் உட்கார்ந்தார் உதய். ஆக்‌ஷன், த்ரில்லிங் காமெடியில் இருக்கிற கதையில் அவருக்கான இடத்தில் அருமையாக வந்து நின்றார். பாடி லாங்வேஜ் மாத்தி, கொஞ்சம் வெயிட் போட்டு, வழக்கமான டப்பிங் பேசுகிற விதத்தில் மாற்றம் செய்து... நான் சொன்னதெல்லாம் கேட்டு செய்துகொண்டே வந்தார். கதைக்கான மெனக்கெடலை அவர் எப்போதும் குறைத்துக் கொள்வதே இல்லை. எல்லோரையும் முந்திக் கொண்டு ஓடுகிறார் உதய்.

உழைக்க சளைக்காத ஆளுங்ககிட்டே வேலை பார்க்கிறது ரொம்ப சௌகரியமா இருக்கும். ரொம்ப மேன்லியாக உதய் இதில் இருக்கிறார். மெச்சூர்டு ஆர்ட்டிஸ்ட்டுக்கான முழு இடம் அவருக்கு இதில் கிடைக்கும். பத்துப் பேரை பறந்து பறந்து அடிக்கிற மாதிரி கேரக்டர் அமைக்கலை. உலகத்திலேயே இல்லாத பலசாலி மாதிரியெல்லாம் காட்டலை. ஒரு பாட்டுகூட இப்படி வருது. ஹீரோயிசத்திற்கு இதில் முழுக்க விடை கொடுத்திருக்கோம். அந்தப் பாட்டு இப்படி ஆரம்பிக்கும்...

‘தொடுறா பாக்கலாம்...
ஆறு அடி இல்லை
ஆத்திரம் இல்லை
ஆயிரம் யானையின்
ஆற்றலும் இல்லை
தொடுறா பாக்கலாம்...
துணிஞ்சவனும் இல்லை
பயில்வானும் இல்லை
ஆனால் எவனுக்கும்
சளைத்தவன் இல்லை
தொடுறா பார்க்கலாம்...’

இப்படி சொல்லும் ஓர் இடம் வருது. இதில் உதய் கேரக்டரின் இடங்கள் புரிபடும். எந்த மமதையும், அலட்சியமும் இல்லாமல் எளிமையாக இருக்கிறார். இப்படியே இருக்கணும். ஒரு சகோதரத்துவம் பேச்சுல இருக்கு. எனக்கு அவரை வைச்சு படம் எடுத்ததில் சந்தோஷம்.

மஞ்சிமா மோகன் எப்படி..?
பிரமாதமான ஆர்ட்டிஸ்ட். இதில் பெண்கள் ஆண்களுக்கு சளைத்தவர்கள் இல்லைன்னு இரண்டு பேர் மூலமாகச் சொல்லியிருக்கேன். அதில் மஞ்சிமா ஒருத்தர். ராதிகா மேடம் இன்னொருத்தர். இந்தியாவின் முதல் பஸ் டிரைவர் கேரக்டரில் வருகிறார். அவர்களின் மனவலிமை யாருக்கும் குறைந்ததில்லைன்னு ஒரு பாடல் கூட இருக்கு.

சூரியும் உதயநிதிக்கு செட்டாகி விட்டார்...
மூணு ஹீரோக்கள் சப்ஜெக்ட்னுகூட இந்தப் படத்தைச்  சொல்லலாம். அந்த அளவுக்கு உதயநிதி, மஞ்சிமா, சூரி கேரக்டர்களில் வலு இருக்கு. அவர் ஹீரோவோட பாட்டு பாடிக்கிட்டு திரிகிறவர் இல்லை. பி அண்ட் சியில் மட்டுமே சூரி அருமையாக வெளிப்படுகிறார் என்பதை உடைச்சு எறிந்திருக்கார். அவர் சீரியஸாக இருக்கிற இடமெல்லாம் சிரிப்பு அள்ளும். டைரக்டருக்கு வலு சேர்க்க, எல்லோருக்கும் போய்ச் சேர்க்க ஸ்டார் ஆக்டர்கள் தேவை. எனக்கு அந்த வகையில் எல்லாமே அமைஞ்சது. ரிச்சர்ட் எம்.நாதன் எடுத்துக்கிட்ட சிரமம், ஆர்வம் குறைந்து மதிப்பிடவே முடியாது. கேமராவைக் கையில் தூக்கிக்கிட்டு அவர் ஓடியதெல்லாம் பெரும் உழைப்பு.

பாடல்கள் எப்படி வந்திருக்கு..?
இமான் இன்னிக்கும், என்னிக்கும் ஃபிரஷ்ஷா இருக்கார். எப்பவும் சுலபமா அவரை அணுகலாம். காக்க வைக்காமல், சொன்ன தேதிக்கு பரபரன்னு பாடல்களை முடித்துக் கொடுக்கிறார். பாடல்கள் முதல் வரிசை ரசிகன் வரைக்கும் ரசனையில் மனதைத் தொடணும்னு நினைக்கிறார். இதில் த்ரில்லர் வகையில் அவருக்கு எக்கச்சக்க வேலையிருக்கு. அதை அருமையாக செய்து முடித்திருக்கிறார். குடிக்கற, சிகரெட் பிடிக்கற காட்சிகள் இல்லாமல் Disclaimer இன்றி முதல்தடவையாக படம் வந்திருக்கு.

ரஜினிகாந்த நடிக்கிற ‘2.0’வை தயாரிக்கிற லைக்கா நிறுவனம்தான் இந்தப் படத்தையும் தயாரிக்கிறாங்க. அவ்வளவு பெரிய பிரமாண்டத்துக்குப் பின்னாடி இந்த மாதிரி சிறிய கதை படங்களையும் கொண்டுபோய்ச் சேர்க்கணும்ங்கிற அவங்களுடைய அக்கறையைப் பாராட்டணும். நான் கேட்ட படத்துக்கான எந்த விஷயத்தையும் முகம் சுழிக்காம கொடுத்தாங்க.

அதனால் படம் நான் நினைச்சபடி வந்திருக்கு. மத்ததெல்லாம் எல்லாம் வல்ல ரசிகர்களின் கையில் இருக்கு. நீட்டி முழக்கக் கூடாது. முகத்துக்கு நேரா நீதி சொல்லக்கூடாது. ‘பட் பட்’னு கதையும், ட்விஸ்ட்டும் சேர்ந்தே வரணும். இதையெல்லாம் படத்தில் இருக்குறமாதிரி கவனத்தில் வைச்சிருக்கேன். நிச்சயமாக எல்லோரும் ரசிச்சு, சிரிச்சு விரும்புற விதத்தில் படம் இருக்கும்.

- நா.கதிர்வேலன்