காட்ஃபாதர்யுவகிருஷ்ணா - 31

மிக சாதாரணமான போக்கிரியாகத்தான் பாப்லோ, தன் வாழ்க்கையை ஆரம்பித்தார். அவர் இவ்வளவு உயரத்துக்குச் செல்வார்; உலகின் டாப் 10 பணக்காரர்களில் ஒருவராக அவரை ‘ஃபோர்ப்ஸ்’ பத்திரிகை மதிப்பிடும்; அவரை அரசியலுக்கு வருமாறு மக்கள் அழைப்பார்கள் என்றெல்லாம் அவருடைய இளமைப் பிராயத்தில் யாருமே நம்பியிருக்க மாட்டார்கள்.

பாப்லோவுக்கு மட்டும்தான்தான் பிறந்ததிலிருந்தே ‘காட்ஃபாதர்’ என்கிற நம்பிக்கை இருந்து கொண்டிருந்தது. பகையாளிகளால் ஓயாத வன்முறை. இருபத்து நான்கு மணி நேரமும் பிசினஸ் டென்ஷன். தன்னை நம்பி வாழும் பல்லாயிரக் கணக்கானோரின் வாழ்வு பாதுகாப்பை வேறு உறுதி செய்ய வேண்டும். பாப்லோ விரும்பிய காட்ஃபாதர் அந்தஸ்துக்கு உயர்ந்தபோது, அவரது மூளைக்குள் இதுபோல எப்போதும் காய்ச்சல் அடித்துக் கொண்டே இருக்குமென்று அவர்கூட எதிர்பார்க்கவில்லை.

உலகின் டாப் ஒன் மாஃபியாவாக விளங்கிய பாப்லோ எஸ்கோபார், தன்னுடைய பிரச்னைகளை எப்படி சமாளித்தார் என்பதை நாமும் தெரிந்து வைத்துக் கொண்டால் தப்பு ஏதுமில்லை. மேற்குறிப்பிட்ட கந்தாயங்களில் இருந்தெல்லாம் ரிலாக்ஸ் ஆக என்னென்ன செய்ய முடியும் என்கிற வழிகளைக் கண்டுபிடிப்பதிலேயே பாதிநாள் போனது. அதிவேக கார் பந்தயங்களில் கலந்துகொள்வது, விமானத்தில் சாகஸம் புரிவது, கால்பந்து விளையாடுவது உள்ளிட்ட பொழுதுபோக்குகளில் தீவிரமாக ஈடுபட்டு தன்னுடைய உள்ளக் கொதிப்புகளை சமனப்படுத்திக் கொண்டிருந்தார்.

அவருடைய ஆருயிர்த் தோழன் குஸ்டாவோ, தன்னுடைய நண்பனுக்கு இதெல்லாம் போதாது என்பதை உணர்ந்தார். உலகிலேயே எவரும் வசிக்காத ஒரு சொர்க்கத்தை நண்பனுக்காக உருவாக்க வேண்டும் என்பதில் ஆர்வமாக இருந்தார். மெதிலின் நகர நினைவே பாப்லோவுக்கு கொஞ்சம்கூட வராமல் ஓரிடத்தில் இருக்க முடிந்தால், அதுவே அவருக்கான ஆகப்பெரிய ஆசுவாசமாக இருக்குமென்று கருதினார்.

மெதிலின் மனிதர்கள், பிரச்னைகள் கொஞ்சமும் எட்டாத தூரத்தில் ஹசீண்டா நேப்போல்ஸ் என்கிற இயற்கை எழில் கொஞ்சும் இடத்தை இதற்காகத் தேர்ந்தெடுத்தார் குஸ்டாவோ. 1970களின் இறுதியில் அங்கே 7,500 ஏக்கர் நிலம் பாப்லோவுக்கான பிரத்யேக உபயோகத்துக்காக வாங்கப்பட்டது. நிலம் என்று சொல்லக்கூடாது. தனி தீவு. அதாகப்பட்டது, 18 கிரவுண்டு என்றால் ஒரு ஏக்கர் என்பது நமக்குத் தெரியும்.

7,500x18 என்பதை கால்குலேட்டரில் கணக்கு போட்டுப் பார்த்தால், சென்னைக்கு வெகு அருகில் செய்யாரிலோ, வந்தவாசியிலோ அரை கிரவுண்டு நிலம் வாங்கவே நாக்கு தள்ளிக் கொண்டிருக்கும் நமக்கெல்லாம் வயிறு எரியத்தான் செய்யும். அதற்கு என்ன செய்வது. அவர் பாப்லோ ஆயிற்றே. எதையுமே பிரும்மாண்டமாக செய்வதுதானே அவரது ஸ்டைல்? மூன்று அத்தியாயங்களுக்கு முன்பு, பாப்லோ, தான் முதன்முதலாக வாங்கிய piper cub-type விமானத்தையே நுழைவாயிலாக தன்னுடைய மாளிகைக்கு முன்பாக நிறுவினார் என்று வாசித்தது நினைவிருக்கலாம்.

அந்த மாளிகை இருந்த இடத்தைப் பற்றித்தான் இப்போது பேசிக் கொண்டிருக்கிறோம். பாப்லோவுடைய கனவுப் பிரதேசத்தில் ஓர் அழகிய ஆறு ஓடவேண்டும் என்று எதிர்பார்த்தார். அப்படியே அமைந்தது. இங்கே, போயிங் விமானங்களே வந்து செல்லக்கூடிய அளவுக்கு நீண்ட ரன்வே இருந்தது, சரக்கு போக்குவரத்துக்கு பதினைந்து விமானங்கள் இரவும் பகலுமாக வந்து சென்றன என்பதையெல்லாம் ஏற்கனவே வாசித்திருக்கிறோம்.

அந்த 7,500 ஏக்கரையும் அப்படியே இரு பாதியாகப் பிரித்திருந்தார். ஒரு பகுதி, தன்னுடைய சொகுசு மாளிகைக்கு. அடுத்த பகுதி, போதைத் தொழிற்சாலைகள் மற்றும் அதில் பணிபுரிபவர்களுக்கான குடியிருப்புகள். அடிப்படையில் பண்ணை வைத்து விவசாயம் செய்த பாப்லோவின் அப்பா, கால்நடைகளைக் கண்ணும் கருத்துமாக வளர்த்து வந்தவர்.  எனவேதானோ என்னவோ நேப்போல்ஸ் முழுக்கவே பசுக்களும், காளைகளும் ஆங்காங்கே மேய்ந்துகொண்டிருக்கும்.

நேப்போல்ஸ் தீவு முழுக்கவே எலுமிச்சை மரங்கள் நன்கு வளர்ந்து, மஞ்சள் நிற பழங்கள் காய்த்து காண்பதற்கு ரம்மியமாக இருக்கும். தவிர்த்து, வெப்ப மண்டல நாடுகளில் வளரக்கூடிய பழ மரங்கள் அத்தனையுமே, தன் தீவில் இருக்க வேண்டுமென்று பாப்லோ விரும்பினார். இதையெல்லாம் தவிர்த்து, இன்னொரு ஸ்பெஷலும் உண்டு.

தன்னுடைய வீட்டில் ஓர் விலங்குப் பண்ணை (zoo) இருக்க வேண்டுமென்று யாராவது விரும்புவார்களா? பாப்லோ விரும்பினார். அவருக்கு சின்ன வயதிலிருந்தே விலங்குகளின் மீது பிரியம் உண்டு. விலங்குப் பண்ணை என்றால் சும்மா கிளி, குரங்கு, மான் என்றில்லை. நம்மூர் வண்டலூர் விலங்குப் பண்ணை மாதிரியே பக்காவான பண்ணை. அங்கே காண்டாமிருகம், நீர்யானை, ஒட்டகச்சிவிங்கி, நெருப்புக்கோழி, யானை, டால்பின், வரிக்குதிரை, குரங்கு என்று எல்லாவகை விலங்குகளுக்குமே இடஒதுக்கீடு உண்டு.

பாப்லோ, ஆசையாக ஆஸ்திரேலியாவிலிருந்து கங்காரு கூட வரவழைத்திருந்தார். அந்த கங்காருவோடு அவ்வப்போது ஃபுட்பால் விளையாடுவாராம். கொலம்பியாவில் எந்த சர்க்கஸ் குழு வந்தாலும், அவர்களிடமிருக்கும் விலங்குகளை பாப்லோவின் ஆட்கள் விலைக்கு கேட்பார்கள். கொடுக்க மறுப்பவர்கள், உருப்படியாக ஊர் போய் சேர்ந்ததாக வரலாறு இல்லை.

இது தவிர்த்து அமெரிக்காவில் இருந்த ஏஜெண்டுகள் மூலமாகவும் பல்வேறு விலங்குகளை உலகம் முழுக்கவும் இருந்து வாங்கி  தன்னுடைய பண்ணைக்கு கொண்டு வந்தார். தன்னிடம் எந்த விலங்கு இருந்தாலும் ஆண், பெண் இரு பாலினமும் இருக்க வேண்டுமென்பதில் உறுதியாக இருந்தார். அவற்றுடைய பாலியல் தேவை, இனப்பெருக்கம் உள்ளிட்ட விஷயங்களில் எந்த குறைபாடும் இருந்துவிடக் கூடாது என்று உத்தரவே போட்டிருந்தார்.

இந்த விலங்குப் பண்ணையை கவனித்துக் கொள்ள கொழுத்த சம்பளத்துக்கு ஏராளமான பணியாளர்களும் (விலங்குகளை இவரிடம் இழந்த சில சர்க்கஸ் முதலாளிகள்கூட இங்கே கூண்டு கழுவிக் கொண்டிருந்தார்கள்), விலங்கு மருத்துவர்களும் இருபத்து நான்கு மணி நேர சேவைக்கு தயாராக இருந்தார்கள். பறவைகள் மீது பாப்லோவுக்கு ஸ்பெஷல் அட்ராக்‌ஷன். குறிப்பாக ஒரு கிளி. அதற்கு சின்சோன் என்று செல்லமாகப் பெயரிட்டிருந்தார்.

விலங்குப் பண்ணையில் இருந்த அனைத்துக்குமே கொலம்பியாவின் பிரபலமான கால்பந்து வீரர்களின் பெயர்களை வைப்பது பாப்லோவின் வழக்கம். அந்த சின்சோன், பாப்லோ நேப்போல்ஸ் வரும்போது எப்போதும் கூடவே இருக்கும். அவர் தூங்கும்போதும்கூட தலைமாட்டிலேயே இருக்கும். பாப்லோ சரக்கு அடித்தால் சின்சோனும் லைட்டாக ஒரு ‘கட்டிங்’ போடும் வழக்கம் கொண்டிருந்தது.

ஒரு நாள் இரவு, பாப்லோ தூங்கிக் கொண்டிருந்தபோது சின்சோன் அந்த விபரீதத்தைச் சந்தித்தது. எப்படிப்பட்ட வீரனும் அஞ்ச நடுங்கும் பாப்லோவின் பெட்ரூமுக்கு காட்டுப்பூனை ஒன்று சந்தடியில்லாமல் வந்தது. சின்சோன் என்கிற அந்தக் கிளியின் வனப்பு, காட்டுப்பூனையின் நாக்கை நமநமக்க வைத்தது. காட்டுப்பூனையின் அன்றைய டின்னர், சின்சோன்தான்.

இந்த விபரீதத்துக்குப் பிறகு பூனை இனத்தையே பாப்லோ வெறுக்க ஆரம்பித்தார். நேப்போல்ஸ் முழுக்க பூனையே இருக்கக்கூடாது என்று ஆணையிட்டார். அங்கிருந்த நூற்றுக்கணக்கான பூனைகள், இரவோடு இரவாக பாப்லோவின் கொலைவெறிப் படையினரால் வேட்டையாடப்பட்டன. பூனை மட்டுமல்ல, பூனைகளின் மூதாதையர் என்று சொல்லப்படும் புலி, சிறுத்தைகளுக்குக் கூட நேப்போல்ஸ் விலங்குப் பண்ணையில் தடை விதித்து விட்டார் பாப்லோ. ஏன், சிங்கம் கூட அவருக்கு பூனையை நினைவுபடுத்தியது என்பதால், காட்டுராஜாவுக்கே நேப்போல்ஸ் காட்டில் நோ வேகன்ஸி.

ஒரு தனி மனிதர் இதுபோல பெரிய zoo ஒன்றை நம் நாட்டில் மட்டுமல்ல, வேறு எந்த நாட்டிலுமே வைத்திருக்க சட்டபூர்வமாக உரிமையில்லை. சட்டத்தை உடைப்பதுதானே பாப்லோ எஸ்கோபாரின் ஸ்பெஷாலிட்டியே. அவர் கொலம்பியாவின் சட்டங்களை இந்த விதத்திலும் சுக்குநூறாக உடைத்தார்.

(மிரட்டுவோம்)

ஓவியம்: அரஸ்