ஊஞ்சல் தேநீர்



யுகபாரதி - 50

இடையிடையே சிறுகதைகளும் கவிதைகளும் எழுதிக்கொண்டிருந்த வாலியின் படைப்புகள் வாகீச கலாநிதி கி.வா.ஜெகந்நாதனால் பாராட்டப்பட்டன. நாடகத்துறையில் கால் பதிப்பதற்கு முன்பாக பத்திரிகையாளராகும் ஆசையும் அவருக்கு இருந்திருக்கிறது. இந்திய தேசிய ராணுவம் இளைஞர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்த காலம் அது. சுதந்திர இந்தியக் கனவை ஈடேற்றும் விதத்தில் அந்த காலகட்டத்தில் வெளிவந்த இதழ்களில் ஒன்றுதான் ‘மணிக்கொடி’.

‘மணிக்கொடி’ எழுத்தாளர்களில் ஒருவரான சிட்டியின் அறிமுகம் வாலிக்குக் கிடைக்கவே, எப்படியாவது ஒரு பத்திரிகையைக் கொண்டுவருவதென திட்டிமிட்டிருக்கிறார். பத்திரிகையின் பெயர் ‘நேதாஜி’. ஏற்கனவே அவருக்கிருந்த ஓவிய ஆர்வம் பத்திரிகை உருவாக்கத்திற்குப் பயன்பட்டிருக்கிறது. நண்பர்களின் ஒத்துழைப்போடு பத்திரிகை தயாராகிவிட்டது.

வெளியிட வேண்டுமே என்னும்போதுதான் ஸ்ரீரங்கம் ‘ராஜாஜி கல்ச்சுரல் அசோசியேஷன்’ ஆண்டு விழாவிற்கு எழுத்தாளர் கல்கி வரவிருக்கும் தகவலை அறிகிறார். உடனே, அவசர அவசரமாக எழுத்தாளர் எங்கே தங்கியிருக்கிறார் எனத் தெரிந்துகொண்டு, தயாரிக்கப்பட்ட கையெழுத்துப் பத்திரிகையுடன் கல்கியைச் சந்தித்து அழைப்பு விடுத்திருக்கிறார்.

எழுத்தாளர் கல்கியோ, ஏற்கனவே ஒப்புக்கொண்ட கூட்டங்கள் இருப்பதால் பத்திரிகையை வெளியிட வர இயலாது எனச் சொல்லிவிடுகிறார். எழுத்தாளர் கல்கி வந்து பத்திரிகையை வெளியிடப்போவதாக நண்பர்களிடம் ஜம்பமாகச் சொல்லிவிட்டு வந்த வாலியால், அந்த வருத்தத்தை தாங்கமுடியவில்லை. என்ன செய்வதென்றும் விளங்கவில்லை.

அதுமட்டுமல்ல, எழுத்தாளர் கல்கி வரப்போவதாக ஊரெல்லாம் தண்டோரோ வைக்காமலேயே தகவல் பரவியிருந்தது. இந்த நிலையில் தன்னால் அழைத்துவர முடியாமல் போனதென்றால் கேலி பேசுவார்களே என்னும் அச்சம் அவரை அரித்தது. மிகுந்த கசப்புற்ற வாலி, அன்று இரவு வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. ஸ்ரீரங்கம் காவிரிக்கரையில் போய் உட்கார்ந்துகொள்கிறார். சொன்னதை நடத்திக்காட்ட முடியாமல் போகையில், யார் முகத்தையும் அவருக்கு எதிர்கொள்ளத் துணிவில்லை.

ஒருவிதமான தோல்வி மனநிலை. அப்புறம் ஒருவழியாக தன்னைத்தானே சமாதானப்படுத்திக்கொண்டு வீட்டுக்குத் திரும்பினால், வீட்டு வாசலில் ஒரே கூட்டம். எழுத்தாளர் கல்கி வந்திருக்கிறார். கூடவே சின்ன அண்ணாமலையும் இன்னும் சிலரும். வர இயலாது எனச் சொன்னதால் மனம் உடைந்திருந்த வாலிக்கு, அந்தக் காட்சியை நம்பவே முடியவில்லை. தவிர, பத்திரிகையில், தான் எழுதியிருந்த கவிதையைப் பற்றியும் கல்கி குறிப்பிட்டுப் பேசியதில் கூடுதல் மகிழ்ச்சி.

‘கல்யாணப் பத்திரிகைக்குப் போகாமல் இருந்தாலும் கையெழுத்துப் பத்திரிகைக்குப் போகாமல் இருக்ககூடாது’ என கல்கி சொன்னதாக சின்ன அண்ணாமலை அப்போது தெரிவித்திருக்கிறார். கடும் பணிச்சுமைக்கு இடையிலும் எழுதவரும் புதியவர்களை ஆதரித்து அரவணைக்கும் பண்பை அவர் கல்கியிடமிருந்து பெற்றிருக்கிறார் எனக் கொள்ளலாம்.

வாலியைப் பொறுத்தவரை எடுத்துக்கொண்ட வேலையில் கண்ணும் கருத்துமாக இருப்பவர். முனைந்து, தான் செய்யும் ஒரு செயலில் தோற்றுவிடக் கூடாதென்பதில் எச்சரிக்கையுடன் காரியமாற்றுபவர். தன் எழுத்துகள் யாரைப்போய் சேர்கின்றன என்பதிலும், யாரைப்போய் சேர வேண்டும் என்பதிலும் தீர்க்கமான முடிவுகளை அவர் வைத்திருந்தர்.

1958ல் தொடங்கிய அவருடைய சினிமா பிரவேசம் இறுதி மூச்சு உள்ளவரை வெற்றிகரமான பயணமாகவே பார்க்கப்படுகிறது. எத்தனையோ இயக்குநர்கள், எத்தனையோ இசையமைப்பாளர்கள், எத்தனையோ நடிகர்கள், எத்தனையோ தயாரிப்பார்கள்... என அவர் சந்தித்த மனிதர்களையும் சவால்களையும் கணக்கிட்டால் ஆச்சர்யமாயிருக்கிறது. நெற்றியில் திருநீறும் குங்குமமும் இட்டுக்கொண்டு, திராவிட இயக்கத்தைச் சேர்ந்த பலர் இயக்கிய, நடித்த, தயாரித்த திரைப்படங்களுக்குப் பாடல்களை எழுதியிருக்கிறார். தன் அளவும் மாற்றாரின் அளவும் அவருக்குப் புரிந்திருந்ததுதான் அதிலுள்ள விசேஷம்.

அவர், காயப்படுத்துபவர்களைக் கடந்துபோகக்கூடியவர் அல்ல. எதிர்நின்று சவால்களை சமாளிப்பதையே விரும்பியிருக்கிறார். இயக்குநர்களும் உதவி இயக்குநர்களும் தன் பெயரில் ஆபாசமான வரிகளை எழுதி, தனக்கு அவப்பெயரை ஏற்படுத்தியபோதும் அதற்கான பொறுப்புகளை அவர் தட்டிக்கழிக்க எண்ணியதில்லை. கண்ணதாசன் காலத்தில் கண்ணதாசனைப் போலவே எழுதியவர் என்ற விமர்சனம் அவர்மீது உண்டு.

உண்மையில், அது விமர்சனமே இல்லை. அவர் பாடல்களை நன்றாக உள்வாங்கிக் கொண்டவர்கள் அப்படிச் சொல்வதில்லை. கண்ணதாசனை உயர்த்திச் சொல்வதற்காக வாலியைத் தாழ்த்தியதாகவே அதைப் பார்க்கமுடியும். வாலியேகூட அம்மாதிரியான விமர்சனங்களை ஆரோக்கியமாக எதிர்கொண்டே பதிலளித்திருக்கிறார். “திராவிட முன்னேற்றக் கழகம் அச்சமயத்தில் தமிழ் மீது தீராத பற்று கொண்டிருந்தது. எதுகையும் மோனையும் இல்லாத பாடல்களை மக்களுமே விரும்பவில்லை. எழுதிக்கொண்டிருந்த எல்லோருமே ஒரே மாதிரிதான் இயங்கினோம்.

அப்படி இருக்கையில், கண்ணதாசனைப் போல நான் எழுதியதாகச் சொல்லுவது சரியல்ல...” என்றிருக்கிறார். ‘சக்க போடு போடு ராஜா, உன் காட்டுல மழை பெய்யுது...’ என்னும் பாடலில் கண்ணதாசன் எங்கே தெரிகிறார் எனவும் கேட்டிருக்கிறார். ‘மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்...’, ‘நான் செத்துப் பிழைச்சவண்டா...’, ‘நான் ஆணையிட்டால்...’ போன்ற பாடல்களை கண்ணதாசன் பாடல்களாகக் கொள்ள முடியுமா, அவர் சந்தத்தை கையாண்ட விதமும் நான் சந்தத்தை கையாளும் விதமும் வேறாக இருக்கையில், ஆதங்கப்படாமலும் இல்லை.தஞ்சை ராமையாதாஸைப்போல சுதந்திரமான மனநிலையுடைய பாடலாசிரியராக தன்னை நிறுவிக்கொள்ள அவர் விரும்பினார். அவருடைய தனித்துவத்திற்கும் ஆளுமைக்கும் எத்தனையோ பாடல்களை உதாரணமாகச் சொல்லமுடியும்.

ஆனால், என் நோக்கம் அவர் பாடல்களை வியந்து எழுதுவதல்ல. ஒரு பாடலாசிரியராக அவர் வளர்ந்த விதமே. காலம் எதை விரும்புகிறதோ அதைத் தரக்கூடியவராக இருந்ததால்தான் ஆயிரக்கணக்கான பாடல்களை நான்கு தலைமுறைக்கு அவரால் அளிக்க முடிந்தது. முந்நூறு மொழிமாற்றுப் படங்களுக்குப் பாடல்களை எழுதியிருக்கிறார். பதினெட்டு மொழிகளைக் கற்று புலமையோடு இருந்த பாடகர் பி.பி.ஸ்ரீனிவாஸே, மொழிமாற்றுப் படங்களுக்கு பொருத்தமான வார்த்தைகளை எழுதக் கற்பித்தவர் என்று எழுதியிருக்கிறார்.

அவ்வப்போது வாலியை திரைத்துறையைச் சாந்தவர்களே விமர்சித்திருக்கிறார்கள். அதுவும் அவரை மேடையில் வைத்துக்கொண்டே. சில சமயம் சப்பைக் குதிரைகளும் கிண்டி ரேசில் ஜெயித்து விடுவது உண்டு. அப்படித்தான் இந்தப்படத்தின் பாடல்களும் என ‘கற்பகம்’ திரைப்படத்தின் வெற்றிவிழாவில் சின்ன அண்ணாமலை பேசியிருக்கிறார். ஆனால், காலகதியில் அதே சின்ன அண்ணாமலையின் ‘ஆயிரம் ரூபாய்’ படத்திற்குப் பாட்டெழுதும் வாய்ப்பு வாலிக்கு வந்திருக்கிறது.

தன்னை பூஷிப்பவர்களையும், தூஷிப்பவர்களையும் அவர் ஒரேமாதிரிதான் பார்க்கப் பழகியிருந்தார். தன்னைப் புரிந்துகொள்பவர்கள் பூஷிக்கிறார்கள். புரிந்துகொள்ளாதவர்கள் தூஷிக்கிறார்கள் என்பதைத் தாண்டி அவர் அதற்கு மதிப்பளித்ததில்லை. காலம் ஒரு திசையை நோக்கி நகர்கையில் படைப்பும் படைப்பாளனும் அந்தத் திசைநோக்கி நகரவில்லையெனில் தேங்கிவிடக்கூடும் என அவர் தெரிந்து வைத்திருந்தார்.

அதனால், அவர்போல் இவர் எழுதினார்; இவர்போல் இன்னொருவர் எழுதவில்லை என்பதெல்லாம் ரசிப்பவர்கள் ஏற்படுத்தும் பிம்பமே அன்றி, அதற்கும் எழுதுபவர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஒரே சமூகத்தின் காற்றையும் தண்ணீரையும் பயன்படுத்தும் இருவர் வேறுபட்டு சிந்தித்தால்தான் ஆச்சர்யமே. ஒரே மாதிரி சிந்திப்பது தவறில்லை.

(பேசலாம்...)

ஓவியங்கள்: மனோகர்