விஜயனின் வில்கே.என்.சிவராமன் - 47

‘‘அதான பார்த்தேன்...’’கீ போர்டை தட்டியபடி கிருஷ்ணன் கூவினான். அதன் வழியாக அங்கு நிலவி வந்த அமைதியைக் கிழித்தான். இதற்கு முன்பாகவே, ‘வெயிட்... நான் என்ன சொன்னாலும் கண்டுக்காத...’ என ஐஸ்வர்யாவுக்கு words வழியே சமிக்ஞை அளித்திருந்தான். எனவே அவள் அதிரவில்லை. என்றாலும் ஆதியையும் கார்க்கோடகரையும் போலவே அவன் என்ன சொல்லப் போகிறான் என்பதை ஆர்வத்துடன் கவனிக்க ஆரம்பித்தாள். ‘‘எதைப் பார்த்த..?’’ பரபரப்புடன் கிருஷ்ணனின் அருகில் வந்தார் கார்க்கோடகர். புருவங்கள் முடிச்சிட ஆதியும் அவனை நெருங்கினான். ‘‘உங்க உடம்புலேந்து எடுத்த ரேகையைத்தான்...’’ அலட்சியமாக சொன்ன கிருஷ்ணன், மானிட்டரை விட்டு எழுந்தான்.

‘‘கண்டுபிடிச்சிட்டியா..? யாரோடது..?’’ ‘‘பெரியவரே... முதல்ல சில விஷயங்களை சொல்லிடறேன்...’’ முன்னுரைக்கான பூடகத்துடன் ஆரம்பித்தான். ‘‘நம்ம நாட்டுல கைரேகை ஜோதிடம் பிரபலம். பஞ்ச பாண்டவர்கள்ல ஒருத்தர்... நகுலனா சகாதேவனா... யாரோ ஒருத்தர்... ஜோதிடத்துல புலினு படிச்சிருக்கோம்...’’ ‘‘இப்ப இதெல்லாம் அவசியமா..?’’ கார்க்கோடகர் பற்களைக் கடித்தார். ‘‘அவசியம்தான் பெரியவரே... சொல்ல வந்ததை முடிச்சுடறேன். அப்புறம் கேள்வி கேளுங்க...’’ நிதானமாக குறுக்கும் நெடுக்கும் நடந்தபடியே பேச ஆரம்பித்தான்.

‘‘இப்படி நம்ம நாட்டுல மட்டுமில்ல... நதிக்கரை நாகரீகம் கோலோச்சிய எல்லா நாடுகள்லயும் கைரேகைகள் குறித்த ஆராய்ச்சி காலந்தோறும் நடந்துகிட்டே இருந்திருக்கு. குறிப்பாக சீனாவுல. பழங்கால சீனாவை ஒருவகைல இப்போதைய பயோமெட்ரிக் சிஸ்டத்துக்கு பிதாவா சொல்லலாம்... காலப்போக்குல... துல்லியமா சொல்லணும்னா சமூக உற்பத்தி வளர வளர இந்த பயோமெட்ரிக் சிஸ்டமும் பலவகையா வளர்ந்திருக்கு. முகத்தை வைச்சு... குரலை வைச்சு... உள்ளங்கையை வைச்சு... இப்படி...’’‘‘சுத்தி வளைக்காம விஷயத்துக்கு வா க்ருஷ்...’’‘‘வரேன் ஆதி... என்ன அவசரம்..? இந்த பயோமெட்ரிக்கோட ப்ளஸ் என்னன்னா... ஒவ்வொரு ரேகையும், முக அமைப்பும், குரலும் யூனிக்கா இருக்கும்.

அதாவது ஒருத்தரோட ரேகையும், குரலும், முகமும் அவருக்கு மட்டும்தான் சொந்தம். இன்னொருத்தருக்கு அது மாதிரி இருக்காது. பொதுப்படையா சில பிரிவுகளுக்குள்ள பலரும் அடங்கலாம். ஆனா, அந்த பொதுப்படையையும் தாண்டி எல்லார்கிட்டயும் தனித்துவம் உண்டு...’’‘‘...’’‘‘அதனாலதான் ஒரு கைரேகையை சாதாரணமா பார்க்கிறப்ப வெறும் ரேகைகளை மட்டும் யாரும் கணக்குல எடுத்து பார்க்கிறதில்லை. ரேகையோட விரலோட வளைவு, அளவு, நீளம், உள்பாகத்துல இருக்கிற மேடு, பள்ளம், நகம்னு பலதரப்பட்ட விஷயங்களை கணக்குல எடுத்துக்கறாங்க...’’ ‘‘அப்படி இந்த ரேகையோட தனித்துவம் என்ன..? இது யாருக்கு சொந்தம்..?’’ கார்க்கோடகரின் குரலில் எரிச்சல் வழிந்தது.

‘‘உங்க கேள்விக்கு பதில் சொல்றதுக்கு முன்னாடி இன்னொரு விஷயத்தை சொல்லணும்...’’ கிருஷ்ணனின் பீடிகை அங்கிருந்தவர்களை தாக்கியது. குறிப்பாக ஐஸ்வர்யாவை. என்ன சொல்ல வருகிறான்? மேற்கொண்டு அவன் பேசியது அனைவரது சிந்தனைகளையும் அறுத்து எரிந்தது. ‘‘தமிழ்ல கரி... ஆங்கிலத்துல கார்பன்... இப்படி சொல்லப்படுகிற பொருளோட வேறுபட்ட வடிவங்கள்ல ஒண்ணுதான் கிராபீன் (Graphene)...’’ கார்க்கோடகர் நிலைகொள்ளாமல் தவித்தார். ஆனால், ஆதியின் முகம் பளிச்சிட்டது. காரணம், ஐஸ்வர்யாவின் முகம் விரிந்ததுதான். எனில், கிருஷ்ணன் ஏதோ முக்கியமான கண்டுபிடிப்பை நிகழ்த்தியிருக்கிறான். அதை ஐஸ்வர்யா ஸ்மெல் செய்திருக்கிறாள். என்னவாக அது இருக்கும்..? அதற்கும் கிராஃபீனுக்கும் என்ன தொடர்பு?

தன் பார்வையை கிருஷ்ணனின் மீது பதித்தான். அது வீண்போகவில்லை. கிருஷ்ணனின் ஒவ்வொரு சொல்லும் இடியாக அங்கிருந்தவர்களின் மனதில் இறங்கின.‘‘இந்த கிராபீன் உலகத்துலயே ரொம்ப மெல்லிய பொருள். அதே நேரத்துல உலகிலேயே இதுதான் உறுதியானது. அதாவது எஃகை விட நூறு மடங்கு. இத்தனைக்கும் மூன்று மில்லியன் கிராபீன் அடுக்குகளை ஒண்ணு மேல ஒண்ணு வைச்சாலும் அதனோட தடிமன் வெறும் ஒரு மில்லிமீட்டர்தான் இருக்கும். அவ்வளவு மெல்லிசு. ஆனா, அவ்வளவு உறுதி...’’‘‘கிருஷ்ணா... எதுக்கு இப்படி ஜாங்கிரி பிழியற..?’’ பொறுக்க முடியாமல் கார்க்கோடகர் கத்தினார்.

‘‘உஷ்... அமைதியா இருங்க. அவன் சொல்ல வர்றதை சொல்லி முடிக்கட்டும்... நீ சொல்லு க்ருஷ்...’’ ஆதி ஊக்கப்படுத்தினான். தலையசைத்தபடி கிருஷ்ணன் தொடர்ந்தான். ‘‘இந்த கிராபீன் தாமிரம் போல மின்சாரத்தை கடத்தும். இப்படிப்பட்ட உலோகத்தை வைச்சுதான் தென்கொரியா உல்சன் தேசிய அறிவியல் தொழில்நுட்பக் கழகத்துல பணியாற்றுகிற ஹ்யுன்ஹ்யுப் கோ (Hyunhyub Ko) என்கிற விஞ்ஞானி ஒண்ணை கண்டுபிடிச்சிருக்கார். இவரு பொருளறிவியல் (Material Science) நிபுணராகவும் இருக்கறதுனாலதான் இது சாத்தியமாச்சு...’’
கார்க்கோடகர் எதையோ சொல்ல வந்தார்.

அதற்குள் ஆதி முந்திக் கொண்டான். ‘‘என்ன பொருளை கண்டுபிடிச்சார்?’’ ‘‘பலவகையான தொடு உணர்வுகளைக் கொண்ட செயற்கைத் தோல்!’’ மூவரிடமும் அசைவில்லை. ஏதோ புரிந்தது போல் இருந்தது. சந்தேகத்தை தீர்த்துக் கொள்ள கார்க்கோடகர் கேட்டார், ‘‘எதுக்கு இந்த செயற்கைத் தோல் பயன்படும்..?’’‘‘அதுக்கு முன்னாடி இந்த செயற்கைத் தோலைப் பத்தி நீங்க தெரிஞ்சுக்கறது நல்லது. பொதுவா தோலுக்கு இருக்கிற தொடு உணர்வு இதற்கும் உண்டு. அதுமட்டுமில்ல...’’

‘‘இழுக்காம விஷயத்துக்கு வா...’’கார்க்கோடகரின் படபடப்பைப் பார்த்து கிருஷ்ணன் சிரித்தான். என்றாலும் சொல்ல வந்ததை சொல்லி முடித்தான். ‘‘காதுகள் மாதிரி இந்த செயற்கைத் தோலுக்கு கேட்கும் திறனும் உண்டு...’’‘‘அதுக்கும் நாம ஆராய்ந்து கொண்டிருந்த கைரேகைக்கும்..?’’‘‘தொடர்பிருக்கு ஆதி. மனிதத் தோலோட கட்டமைப்பை காப்பியடித்துதான் சோதனைச் சாலைல இந்த மின்னணு செயற்கைத் தோலை தயாரிச்சிருக்கார். இதுக்கு முன்னாடியே செயற்கைத் தோல் உருவாக்கப்பட்டிருக்கு. ஆனா, அதெல்லாம் தொடு உணர்வுல ஒருசில திறன்களைத்தான் பெற்றிருந்தது. இது அப்படியில்ல...’’

நிறுத்திய கிருஷ்ணன் அனைவரையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு தொடர்ந்தான். ‘‘இந்த கிராபீன் உலோகத்துல உருவாக்கப்பட்ட செயற்கைத் தோலை செயற்கையான விரல்ல பொருத்தலாம்!’’ ஊசி விழுந்தால் ஓசை கேட்கும் அளவுக்கு அங்கு அமைதி நிலவியது. மூச்சு விடவே அங்கிருந்தவர்கள் பயந்தார்கள். ‘‘அப்படீன்னா இ...து... செயற்கை ரே...கை...னு சொல்றியா..?’’ கார்க்கோடகரின் குரல் நடுங்கியது.

(தொடரும்)

ஓவியம் : ஸ்யாம்