கும்ப லக்னம் - கூட்டு கிரகங்கள் சேர்க்கைகிரகங்கள் தரும் யோகங்கள் - 111

ஜோதிடரத்னா கே.பி.வித்யாதரன்

நண்பர்களாயினும் உறவினராயினும் தேடித்தேடி உதவி செய்வார்கள். வாழ்வின் சகல விஷயங்களையும் அனுபவித்து விடுவார்கள். வெடித்துச் சிரித்தாலும் எப்போதும் உள்ளழுத்தத்தோடுதான் உரையாடுவார்கள். எவ்வளவு திறமையோடு இருந்தாலும் சரியான தூண்டுதல் இல்லாமல் வெளிப்படுத்த முடியாமல் திணறுவார்கள். எதிரிகள் கூட தனக்குத் தகுதியானவராக இருக்க வெண்டுமென்று விரும்புவார்கள். சரியோ தவறோ எந்த முடிவெடுத்தாலும் அதிலிருந்து மாற மாட்டார்கள். சர்வ சாதாரணமாக சூழலைப் பொறுத்து பொய்யை பொருந்தச் சொல்லி சமாளிப்பார்கள். இளைய சகோதரர்களுக்கு என்னவிதமான உதவிகளைச் செய்தாலும் சட்டென்று உறவுகளை முறித்துக் கொள்வார்கள்.

மனதிற்குப் பிடித்தவராக இருந்தால் அள்ளிக் கொடுப்பார்கள். இவர்களின் லக்னாதிபதியான சனியே, பன்னிரெண்டாம் இடமான மகரத்திற்கும் அதிபதியாக வருவதால் மறுபிறவி இல்லை என்கிற அளவுக்கு தீவிரமாக ஆன்மிகத்தில் ஈடுபடுவார்கள். யாரேனும் புகழ்ந்தால் சொத்தையே கூட எழுதி வைக்கும் அளவுக்கு புகழுக்கு மயங்குவார்கள். இவர்களின் மனம் சொல்வதை விட மனசாட்சி என்ன சொல்கிறதோ அதைக் கேட்டால் பெரும் புகழைப் பெறுவார்கள். ஏனெனில், லக்னாதிபதியான சனியே மனசாட்சிக்குரிய கிரகம்தான். இவர்களின் வாழ்வை மாற்றும் வல்லமை கொண்ட முக்கிய கிரகங்களாக புதன், சுக்கிரன், சனி போன்றவை வருகின்றன.

இந்த மூன்று கிரகங்களும் இவர்களின் சொந்த ஜாதகத்தில் எங்கிருந்தாலும் சரிதான். நன்மையையே செய்வார்கள். இப்படிப்பட்ட கும்ப லக்னத்தில் பிறந்த பெரும் பிரபலங்களின் ஜாதகத்தை கொஞ்சம் பார்ப்போம். ஒன்றுக்கும் மேற்பட்ட கிரகங்கள் ஒன்றிணையும்போது ஏற்படும் ரசவாதத்தையும் அறிந்து கொள்ளலாம்.  ராமகிருஷ்ண பரமஹம்சரின் ஜாதகத்தை முதலில் எடுத்துக் கொள்வோம். கும்ப லக்னத்திலிருந்து ஐந்தாம் இடத்தில் குரு அமர்ந்திருக்கிறார். இது பூர்வ புண்ணிய ஸ்தானமும் ஆகும். இங்கு குரு அமைந்தால் பெரும் ஞானநிதியோடு விளங்குவார்கள்.

மேலும், குரு வக்ரமடைந்திருப்பதால் இடையறாத ஒரு தேடலோடே இருப்பார்கள். வக்ரமடைந்தால் இயல்பை விட இன்னும் தீவிரமாகவே தேடுதலில் ஈடுபடுவார்கள். லக்னத்திலேயே ஆத்மகாரனாகிய சூரியனும், மனோகாரனாகிய சந்திரனும், புத்திகாரனாகிய சந்திரனும் கூட்டுக் கிரகங்களாக இணைந்திருக்கின்றனர். இந்த அம்சத்தினாலேயேதான் ஞானியாக மட்டுமல்லாது பெரும் உபதேசக் கருத்துக்களை எளிமையான மொழியில் மக்களின் மனதில் பதிய வைத்தார். 12ல் செவ்வாய் இருந்ததால்தான் தூங்கியும் தூங்காத நிலையான அறிதுயிலில் ஆழ்ந்திருந்தார்.

நான்கில் ராகு இருந்ததாலேயே தன்னுடைய உபாசனை தெய்வமாக காளியை வழிபட்டு ஞானப் பெரும்பேறு நிலையை அடைந்தார். சந்திரன் குருவின் நட்சத்திரத்தில் அமர்ந்திருந்து அதை குரு பார்ப்பதாலேயே உலக குருவாகவும் விளங்க முடிந்தது. லக்னாதிபதியான சனி ஜோதி நட்சத்திரமான சுவாதியில் அமர்ந்ததால்தான் அம்பிகையின் திவ்ய தரிசனத்தைக் கண்டார். இவ்வாறு கிரகங்களும் ஞானியர் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. உடலெடுத்த ஞானியின் அனுபூதி நிலையென்பது எல்லாவற்றையும் கடந்ததாகும். அனுபவ நிலை என்பது எதனோடும் ஒப்பிட முடியாததாகும்.

ஆனாலும், நம் பொருட்டு உடலெடுத்து வரும்போது எல்லாவற்றிற்கும் கட்டுப்பட்டதுபோல லீலைகளை ஞானிகள் நிகழ்த்திக் காண்பிக்கின்றனர். அந்த கட்டுப்பாட்டிற்குள் கிரகங்களும் அடக்கம். நடிகர் திலகம் சிவாஜி கணேசனும் கும்ப லக்னத்தில் பிறந்தவர்தான். கலைக்குரிய சுக்கிரன் துலாம் ராசியில் ஆட்சி பெற்றிருக்கிறான். பூர்வ புண்ணியாதிபதியான புதனும் உடன் அமர்ந்திருப்பது என்பது பெரும் யோகம். இரண்டு திரிகோண கிரகங்களும், ஒரு கேந்திரமும் ஒன்றாக இருப்பது விசேஷம். இது மிகப்பெரிய ராஜயோகத்தை அளிக்கும்.

ஆறுக்குரிய சந்திரன் பன்னிரெண்டாம் வீட்டில் அமர்ந்ததாலேயே தனக்கு இணை தானே என்று இருக்க முடிந்தது. லக்னாதிபதியான சனியோடு ஞானகாரகனான கேது இணைந்திருக்கிறார். இவ்வாறு சனியோடு இருக்கும் கேது நல்ல வழிக்கு கொண்டு செல்லும். மேலும், சனியும் கேதுவும் விருச்சிகத்தில் அமர்ந்து அந்த வீட்டதிபதியான செவ்வாய் ஐந்தாமிடத்தில் அமர்ந்ததாலேயே பெரும் புகழும் பணமும் கிட்டியது. மூன்றில் குரு அமர்ந்ததாலேயே இவரின் தமிழ் உச்சரிப்பு எல்லோரையும் வசீகரித்தது. நீளமான வசனங்களைத் தங்கு தடையின்றி பேச முடிந்ததற்குக் காரணமே குருபகவான்தான்.

மேலும், குரு வக்ரமாகி யோகாதிபதியான சுக்கிரனின் நட்சத்திரத்தில் அமர்ந்ததாலேயே பெரும் கூட்டத்தை தன்னுடைய வசீகர வளையத்திற்குள் காலாகாலத்திற்கும் வைத்திருக்க முடிந்தது. அடுத்ததாக தொழிலதிபர் விஜய் மல்லையாவின் ஜாதகத்தைப் பார்ப்போம். இவரின் ஜாதகத்தில் கும்ப லக்னத்திலிருந்து ஏழாம் இடமான சிம்மத்தில் குரு வக்ரமாகி அமர்ந்திருக்கிறார். இங்கிருந்து லாப ஸ்தானமான தன்னுடைய சொந்த வீடான தனுசில் அமர்ந்திருக்கும் மூன்று முக்கிய கிரகங்களான சூரியன், புதன், சுக்கிரன் போன்றவற்றை குரு ஐந்தாம் பார்வையாக பார்க்கிறார்.

இதனால்தான் பெரும் செல்வத்திற்கு அதிபதியாக வளர முடிந்தது. சந்திரனுக்கு எட்டில் குரு இருந்தால் அது சகடையாகும். உச்சத்தை தொட்டு மீண்டும் கீழே இறக்கிவிடும் அமைப்பு இது. லக்னாதிபதி சனியோடு ராகு சேர்ந்து அந்த வீட்டதிபதியான செவ்வாய் சுகவாசி கிரகமான சுக்கிரனின் வீட்டில் நிற்பதால் சுகபோகமான வாழ்க்கை எப்போதும் இருக்கும். ஆனால், இப்போது அவருக்கு தசாபுக்திகளின் அமைப்பு சரியாக இல்லாததால், அதாவது சனிதசை நடப்பில் 2022 வரை இருப்பதால் அதற்குப் பிறகு தொந்தரவுகள் நீங்கும். சனி பகை வீட்டில் இருப்பதால் சில இறக்கங்களை சந்திக்கிறார். மேலும், ராகுவோடு சேர்ந்த சனியின் கிரகண தோஷ அமைப்பும் எதிர்மறையான பலன்களைத் தருகின்றன.

அதாவது எந்த அளவுக்கு புகழ் இருக்குமோ அந்த அளவுக்கு பிரச்னைகளும் இருக்கும். சனியோடு ராகு பத்தில் அமர்ந்ததாலேயே ஆல்கஹால் வியாபாரத்தில் பெரும் வெற்றி பெற்றார். இவரின் ஜாதகத்தில் லாப ஸ்தானத்தில் இருக்கும் சூரியன், புதன், சுக்கிரன் மூன்றும்தான் இவரை இன்னுமேகூட சொகுசான வாழ்க்கையை வாழச் செய்கிறது. நான்காவதாக பிரபல நடிகரான அமிதாப் பச்சனின் ஜாதகத்தை எடுத்துக் கொள்வோம். மிக முக்கியமான சூட்சும ஸ்தானமான எட்டாமிடத்தில் சூரியன், புதன், செவ்வாய், சுக்கிரன் போன்ற நான்கு கிரகங்களும் கூட்டாக அமர்ந்து பிரபல யோகத்தை அளித்திருக்கின்றன.

இதில் எட்டாமிடமான கன்னியின் வீட்டதிபதியான புதன் வக்ரமடைந்திருக்கிறார். சுக்கிரனும் இங்கு நீசமடைந்து நீசபங்க ராஜயோகத்தை தந்திருக்கிறார். குரு கடகமான ஆறாம் வீட்டில் உச்சமடைந்திருக்கிறார். இவ்வாறு தனாதிபதி ஆறில் உச்சமடைந்தும், லக்னத்திற்கு ஆறாமிடத்தில் மறைந்ததாலும் சந்திரனுக்கு பத்தில் குரு இருப்பதாலுமே கஜகேசரி யோகத்தையும் பெற்றிருக்கிறார். லக்னாதிபதி சனி நான்கிலும், கலை, காவியத்திற்குரிய கிரகமான சந்திரனின் நட்சத்திரமான ரோகிணியில் கேந்திரம் பெற்று அமர்ந்திருப்பதாலேயே நீடித்த உலகப் புகழைப் பெற முடிந்தது. லக்னத்திலேயே கேது அமர்வதால் இயல்பிலேயே கம்பீரத் தோற்றத்தோடு திகழ முடிகின்றது.

ஐந்தாவதாக அமெரிக்காவின் 16வது அதிபதியான ஆபிரஹாம் லிங்கனின் ஜாதகத்தையும் பார்ப்போம். லக்னத்திலேயே சூரியனும் புதனும் இணைந்து புதாத்திய யோகத்தை தந்திருக்கிறது. அடுத்ததாக மீனத்தில் குருவும் சுக்கிரனும் இணைந்து பெரும் புகழையும் மக்களிடத்தில் நீங்கா நினைவையும் ஏற்படுத்தியிருக்கிறார்கள். ஒரு நாட்டையே பெரும் வளர்ச்சிக்கு கொண்டு செல்ல முடிந்திருக்கிறது. மூன்றில் அமர்ந்த கேதுவும், அந்தக் கேதுவை செவ்வாய் பார்ப்பதாலேயே எடுத்த முயற்சியில் பின்வாங்காது, எத்தனை சோதனைகளையும் கடந்து பெரும் வெற்றியாளராக திகழ முடிந்திருக்கிறது. லக்னாதிபதியான சனி 10ல் கேந்திர பலம் பெற்றதாலேயே வரலாற்றுப் பக்கங்களில் தனக்கென்று ஒரு இடத்தை தக்க வைத்துக் கொள்ள முடிந்தது.

12ல் சந்திரன் இருப்பதால் தூங்காமல் தூங்கி, வாழ்வின் சகல கஷ்டங்களில் சிக்கி கடக்கவும் செய்தார். ஒன்பதாம் இடத்தில் செவ்வாயும் ராகுவும் இருந்ததால் உலக மக்களிடையே அவரின் வாழ்க்கை பெரும் மதிப்புக்குரியதாகவும் எழுச்சியை தருவதாகவும் அமைந்தது. கூட்டுக் கிரகங்கள் எப்போதுமே நேர்மறைப் பலன்களையே கொடுக்கும் என்று சொல்ல முடியாது. கிரக யுத்தங்களின் காரணமாக அவ்வப்போது எதிர்மறை பலன்களையும் அளித்தபடிதான் இருக்கும். ஆனாலும், கூட்டுக் கிரகங்கள் உள்ள ஜாதகர் சமூகத்தில் அதிக தாக்கத்தை ஏற்படுத்துவார்கள்.

இவ்வாறு எதிர்மறை பலன்கள் ஏற்படும்போது குன்றிப் போகாது எழுச்சியுற ஆலயங்களின் நல்ல அதிர்வலைகள் நிச்சயம் கிரகங்களை சமனப்படுத்தி ஜாதகரை மேலேற்றிவிடும். அப்படிப் பார்த்தால் கும்ப லக்ன கூட்டுக் கிரகச் சேர்க்கை அமையப்பெற்றோர் செல்ல வேண்டிய ஆலயம் கும்பகோணம் கும்பேஸ்வரர் கோயிலே ஆகும். இங்குள்ள இறைவனே கும்ப வடிவில்தான் அருளுகிறார். அதுவும் அமுதக் கலச கும்பம். இத்தலத்திலுள்ள அம்பாளின் திருநாமம் மங்களாம்பிகை ஆகும். மந்திர பீடேஸ்வரி என்றும் இந்த அம்பாள் அழைக்கப்படுகிறாள். ஏனெனில், சகல மந்திரங்களும் இந்த அம்பாளின் திருவுருவத்தில் நிலைபெற்றதாக தல புராணம் கூறுகின்றது.

(கிரகங்கள் சுழலும்)

ஓவியம்: மணியம் செல்வன்