அண்ணா சாலை ஓர் ஏரிக்கரை! சென்னை நீர்நிலைகள் ஆய்வில் கண்டுபிடிப்பு- டி.ரஞ்சித்

சென்னை வெள்ளத்தின்போது சைதாப்பேட்டை பாலத்தில் நின்றுகொண்டு செல்ஃபி எடுத்தோம். முகநூலில் நம் வேதனைகளைப் பகிர்ந்து கண்ணீர் வடித்தோம். அப்போது அந்த மழை நீர் முழுவதும் கடலில் கலந்து வீணானது. விஷயம் இதுவல்ல... ‘இன்னும் 30 வருடங்களில் சென்னையின் மழை அளவு 5 சதவீதமாகக் குறையலாம்...’ என்கிறது சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் பருவநிலை மாற்றம் தொடர்பான துறை. மட்டுமல்ல, ‘சென்னையின் நீர்நிலைகள் மிகுந்த அவல நிலையில் இருப்பதால், மழை இல்லாத வருடங்களில் நீர்ப் பற்றாக்குறையால் மாநகரமே தத்தளிக்கும்...’ என்று எச்சரிக்கிறது அண்ணா பல்கலைக்கழகத்தின் புவியியல் துறை. இதுகுறித்து அந்தத் துறையின் பேராசிரியர் இளங்கோவிடம் பேசினோம்.

‘‘சில வருடங்கள் நன்றாக மழை இருக்கும். சில வருடங்கள் குறைவாக இருக்கும். எப்போதும் ஒரே சீராக மழை இருக்காது. ஆனால், நல்ல மழை இருக்கும் காலங்களில் ஏரி, குளம்... போன்ற நீர்நிலைகளில் அந்த மழை நீரை சேமித்து வைக்க முடியும். நீர்நிலைகளைச் சரியாகப் பராமரித்து, மழை நீரை சேமித்து வந்தால் சுமார் ஒரு கோடிப்பேர் வாழ்கின்ற சென்னை போன்ற மாநகரங்களின் நீர் தட்டுப்பாட்டைக் கூட நிறைவாக சமாளிக்க முடியும்...’’ என்கிற இளங்கோவுடன் அவரின் துறையைச் சேர்ந்த மாணவர்களும், ஆய்வாளர்களும் களத்தில் இறங்கி சென்னையின் நீர்நிலைகளைப் பற்றி ஆய்வு செய்து வருகின்றனர். அந்த ஆய்வில் கிடைத்த சில அரிய தகவல்களையும் அவர் பகிர்ந்து கொண்டார்.

‘‘மிகுந்த ஈடுபாட்டுடன் இந்த ஆய்வில் இறங்கினோம். 1893ம் ஆண்டுக்கான சென்னையின் வரைபடம் ஒன்று கிடைத்தது. நூறு வருடங்களுக்கு முன் சென்னையின் நீர்நிலைகள் எப்படி இருந்தது என்பதற்கான முக்கிய ஆவணம் அது. அந்த வரைபடத்தில் சென்னையில் 12 முதல் 15 நீர்நிலைகள் இருந்ததற்கான குறிப்புகள் உள்ளது. இது இப்போதைய மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் இருந்தது என்பது முக்கியமானது. உதாரணமாக இந்த 12 நீர்நிலைகளில் மிகப்பெரியது மைலாப்பூர் நுங்கம்பாக்கம் ஏரி. இது தேனாம்பேட்டை, அண்ணா மேம்பாலம் வழியாக நுங்கம்பாக்கம், வள்ளுவர் கோட்டம் வரை சென்றிருக்கிறது. இதன் பரப்பளவு சுமார் 4 சதுர கிலோ மீட்டர்.

அன்றைய காலத்தில் நிலப்பகுதிகளை ஆய்வு செய்ய செயற்கைக்கோள் போன்ற வசதிகள் இல்லை என்பதால் இந்த ஏரி எப்போது அழிந்தது என உறுதியாகச் சொல்ல முடியாது. இருந்தாலும் 1940களில் இந்த ஏரி அழிந்திருக்கலாம் என்று சொல்கிறார்கள். தேனாம்பேட்டையிலிருந்து ஏரி தொடங்குவதால், இப்போதைய அண்ணாசாலை அதன் கிழக்குக்கரையோரமாக இருந்திருக்கலாம் என்பதை நம்மால் யூகிக்க முடியும். இன்றைக்கும் சென்னையில் பல இடங்களில் ‘லேக் வியூ’ அதாவது ஏரிக்கரையோரம் எனும் அர்த்தத்தில் தெருப் பெயர்கள் இருப்பதைப் பார்க்கலாம். சென்னை மாநகராட்சிக்குள் இருந்த நீர்நிலைகள் குறுக்குவெட்டாக சென்றிருப்பதற்கான ஆதாரமாக இதை நாம் எடுத்துக் கொள்ளலாம்.

சென்னையில் ஒரு காலத்தில் சிறப்பாக இருந்த ஆறுகளான கூவம், அடையார் போன்றவை இன்று கழிவுகளைக் கொட்டும் குப்பைத்தொட்டிகளாக மாறிவிட்டன. நீர்நிலைகள் காணாமல் போனதற்கான முதல் காரணம் நகரமயமாக்கலும் அதன் ஆரம்பமான ரியல் எஸ்டேட் தொழிலும்தான். இதனால் எவ்வளவுதான் மழை பெயதாலும் அது வீணாக கடலில்தான் கலக்கும். மட்டுமல்ல, பம்புகள் கொண்டு நிலத்தடி நீரை தொடர்ச்சியாக உறிஞ்சுவதன் மூலம் கடல்நீரை நம் நிலங்களுக்குள் புகுத்துகிறோம். இதனால் நிலத்தடி நீரையும் நாம் பயன்படுத்த முடியாத சூழல் ஏற்படும். இதை வடசென்னையின் மீஞ்சூர், பொன்னேரி, கும்மிடிப்பூண்டியில் நாம் கண்கூடாகப் பார்க்க முடியும்.

இது சென்னையையும் விரைவாக பாதிக்கலாம்...’’ என்று எச்சரித்த  இளங்கோ,  நாம் செய்ய வேண்டியதைப் பட்டியலிட்டார். ‘‘ஒரு காலத்தில் சென்னையில் இருந்த ஏரிகள், குளங்கள், ஆறுகள்... என்ற மொத்த நீர்நிலைகளின் பரப்பளவு சுமார் 12 சதுர கிலோ மீட்டர். ஆனால், இன்று இதில் வெறும் 6 சதுர கிலோ மீட்டர்தான் உள்ளது. இப்போது நம்முடைய முக்கிய கடமை எஞ்சியிருக்கும் நீர்நிலைகளைப் பாதுகாப்பதும், காணாமல் போன நீர்நிலைகளை மீட்டெடுப்பதும்தான். இதற்காக அரசும், பொதுமக்களும், தனியார் அமைப்புகளும் உடனடியாக செயலில் இறங்க வேண்டும். இது மட்டும்தான் சென்னையின் நீர் தட்டுப்பாட்டை தடுக்கும் ஒரே வழி...’’ அழுத்தமாகச் சொல்கிறார் இளங்கோ.

படங்கள்: ஆர்.சி.எஸ்