கருப்பன்- குங்குமம் விமர்சனக்குழு

கிராமத்தில் மாடு பிடிக்கும் ஒருவனுக்கு வந்து சேர்ந்த திருமண உறவும், அதனால் ஏற்பட்ட பகையுமே ‘கருப்பன்’. மாடு பிடி வீரனாக சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார் விஜய் சேதுபதி. மீதி நேரம் குடியும், உடல்நிலை இல்லாது இருக்கும் தாய் மீது அன்பை பொழிவதுமாக வாழ்க்கை கடக்கிறது. எங்கேயும் பிடிபடாமல் உலவி வரும் தன் காளையை பிடிக்கும்படி, பசுபதியாலேயே வற்புறுத்தப்படுகிறார். கூடவே காளையைப் பிடித்தால் தங்கை தான்யாவை கட்டித் தருவதாக பசுபதி சொல்ல... போட்டி நடக்கிறது.
சொன்னது போலவே காளையைப் பிடித்து, தான்யாவையும் கைப்பிடிக்கிறார் சேதுபதி.

இதனால் வெறுப்புற்ற தாய்மாமா பாபி சிம்ஹா கோபம் அடைய, அடுத்தடுத்து சிக்கல்கள் ஏற்படுகின்றன. எல்லாவற்றையும் மீறி குடும்ப வாழ்க்கையை சேதுபதி எப்படி தக்க வைத்துக் கொண்டார் என்பதே கதை. ஒரிஜினல் கிராமத்து மாடுபிடி வீரனாகவே மாறிவிட்டார் சேதுபதி. ஆகப் பழைய, பழகிய கதையில் சந்தேகமே வராமல் பொருந்துகிறார். புதிய களம், கணிக்க முடியாத திரைக்கதை என கொஞ்சமும் மெனக்கெடாமல் குடும்ப சினிமா எடுப்பதில் டைரக்டர் பன்னீர்செல்வத்திற்கு அதிகம் உதவியிருக்கிறார். அபூர்வமாக கிடைத்துவிட்ட மனைவியை சீராட்டுவதில் பின்னி எடுக்கிறார்.

வெளியே கோபத்தையும், வீரத்தையும் காட்டிவிட்டு வீட்டில் பாசமும் காதலுமாக மாறிக் கொள்வதில் பறக்கிறது விஜய் சேதுபதியின் கொடி. தான்யா உயரத்திலும், அழகிலும், அடங்கிய நடிப்பிலும் ஈர்க்கிறார். ஆனாலும் ரவிச்சந்திரனின் பேத்தி என சொல்லிக் கொள்ளும் அளவுக்கு இடம் தரவில்லை. ஆனாலும் அன்பும், பாந்தமும் வலம் வரும் இடங்களில் அவர் அழகே! மாடு பிடித்த நேரம் போக மற்ற நேரமெல்லாம் சிங்கம் புலியோடு சேர்ந்து காமெடி அதகளம் செய்கிறார் சேதுபதி. இருவரின் காம்பினேஷனும், பக்க வாத்தியமும் சத்யராஜ் - கவுண்டமணியை நினைவுபடுத்துகிறது.

அதிலும் டாஸ்மாக் பாரில் இருவரும் சேர்ந்து ஆடும் சிவாஜி, எம்ஜிஆர், அஜித், விஜய் பாடல்கள் காமெடி களேபரம். பாபி சிம்ஹா வழக்கம்போல. அவரது பாத்திரம் கவனப்படுத்தவில்லை. வீட்டிலேயே வளர்ந்தும், தன் அக்காள் மகளிடம் காதலை வெளிப்படுத்தாமல் இருப்பதும், திடீரென வில்லனாவதும் நம்பும்படியாக இல்லை. ஆனாலும் கூட இருந்துகொண்டே கழுத்தறுக்கும் பாணியில் கை தேர்ந்த நடிப்பு. பசுபது வழக்கம்போல நேர்த்தி. அம்மா ரேணுகாவை அவ்வப்போது அட்மாஸ்ஃபியர் ஏரியாவில் காட்டுவதோடு சரி.

மற்றபடி அவர் இருக்கிற இடமே தெரியவில்லை. பழகிய திரைக்கதை ஆங்காங்கே தரைதட்டி நிற்கும்போது சேதுபதியின் டயலாக் டெலிவரிகளில் கப்பல் அழகாக கரை சேர்கிறது. கிராமத்துக் களத்தில் சக்திவேலின் காமிரா விளையாடுகிறது. இமானின் பின்னணி இசை பரபரப்பைக் கூட்டுகிறது. இமான் - யுகபாரதி கூட்டணியில் பாடல்கள் கவர்கின்றன. ராஜசேகரின் சண்டைக்காட்சிகளில் அவ்வளவு யதார்த்தம். கதையில் இன்னும் கொஞ்சம் புதுமை சேர்த்திருந்தால் சுவாரஸ்யம் கூடியிருக்கும்.