அவளைத் தவிரஇரவை உறங்க வைத்து விட்டு
விடியும் வரை
கொட்டக் கொட்ட விழித்திருக்கும்
கொடுமையான பொழுதுகளைப்
பற்றிப் பேசத் தொடங்கி
புலம்பலையடைந்து
விம்மலை கடக்கும் போது
சின்னதாய் வெடித்து
கொஞ்சமாய் அழுது
ரகசியமாய் கண்களைத்
துடைத்து விட்டு
தொண்டையை செருமிக்கொண்டு
யாரும் பார்த்து விட்டார்களோ
என்ற பதற்றத்தில்
சுற்றும் முற்றும் தலையைச்
சுழற்றிப் பார்க்கிறாள்
அங்கே யாருமில்லை
அவளைத் தவிர.

இவ்விரண்டு காட்சிகளில்
ஏதோ ஒன்று
கனவென்பது மட்டும்
எல்லோருக்கும் தெரிகிறது
தெள்ளத் தெளிவாக
அது எதுவென்றுதான்
யாருக்கும் தெரியவில்லை
அவளைத் தவிர!

கடலின் கரை விளிம்பில்
அலைகளின் விரல்
தொட முடியாத
பொன்னிற மணற்பரப்பில்
வெண்ணிலா வெளிச்சத்தில்
தன்னந்தனிமையில் அமர்ந்து
தரையை மெழுகி எதையோ எழுதி
அழித்தபடி தனக்குத்தானே
குலுங்கிச் சிரித்தவள்
சட்டென்று சுதாரித்து
யாரும் பார்த்து விட்டார்களோ
என்ற வெட்கத்தில்
சுற்றும் முற்றும் தலையை
சுழற்றிப் பார்க்கிறாள்
அங்கேயும் யாருமில்லை
அவளைத் தவிர.