நாக கன்னி, 6 தலை பாம்பு, மோகினிப் பிசாசு...இதெல்லாம் இப்ப வந்தா எப்படி இருக்கும்? அதுதான் இந்தப் படம்!

- நா.கதிர்வேலன்

‘‘ஒரு கதைக்காக சில ஆரம்பப் புள்ளிகள் கிடைக்கும். அது சினிமாவாக மாறுவதற்கு அதற்கான பின்னல்கள் சரிவர அமைய வேண்டும். ரசிகர்கள் கதைக்குள் பயணிக்கிறபோது எதை அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும், கதையில் அவர்களை இழுத்து வைப்பதற்கான வழிமுறைகள் என்ன என்றெல்லாம் யோசிப்பேன். அந்தவகையில்தான் ‘இது வேதாளம் சொல்லும் கதை’யை உருவாக்கியிருக்கிறேன். வெறும் த்ரில்லராக இல்லாமல் இதில் பலதரப்பட்ட உணர்வுகளையும் கொண்டு வந்து காட்ட முடிந்தது.

கேரக்டர்களின் எமோஷனலும், புதிய கருவைக் கொண்டு வந்து தருகிற முயற்சியும் இந்தக் கதையின் முக்கிய அம்சம். பயம், த்ரில், திகில், இசை, பயன், கேரக்டர்களின் ஃபீலிங்ஸ் என நிறைய இடங்கள் இருக்கு. இதுதான் ‘இது வேதாளம் சொல்லும் கதை.’ நிச்சயம் தமிழுக்குப் புதுசு என சொல்லிக்க முடியும். முற்றிலும் தமிழ் சமூகத்திற்கு பிடித்தமானதாக இருக்கும் என நம்புகிறேன்...’’தெளிவாகப் பேசுகிறார் அறிமுக இயக்குநர் ரதீந்தரன் ஆர்.பிரசாத். ஹாலிவுட்டில் பணிபுரிந்த அனுபவமும், தேர்ந்த நுண்ணறிவும் கொண்ட அனுபவசாலியாக முதல் படம் செய்கிற தீவிரத்தில் இருக்கிறார்.

தலைப்பே வித்தியாசமாக இருக்கு...
நம்மோட பாட்டி சொன்ன கதைகள் ஞாபகம் இருக்கிறது. ஆனாலும், சிலதை நாம் மறந்திருக்கலாம். அதற்கான மீட்டெடுப்பை செய்து பார்த்து அதன் பின்னணியில் படம்  எப்படியிருக்கும்னு நினைச்சோம். தொன்மம், நாட்டுப்புறக்கதைகள் இப்பவும் நம்மகிட்டே எக்கச்சக்கமாய் இருக்கு. இங்கிலீஷ்காரர்கள் ‘சிண்ட்ரெல்லா,’  ‘ட்ராகுலா,’ ‘வேம்பயரை’ நினைவுகூர்ந்து படங்கள் செய்துகிட்டே இருக்காங்க. இன்னும் அவர்களுக்கு அதன்மேல் பிரமிப்பு தீர்ந்து போகலை. அவ்வளவு விஷயங்கள் தீராதபடிக்கு வந்துகிட்டே இருக்கு. 

நம்மகிட்டேயும் புனித தேவதைகள், துர்தேவதைகள்னு நிறைய இருக்கு. நம்முடைய கதைகளும் கொஞ்சமும் மேல்நாட்டினருக்கு குறைஞ்சதில்லை. அதில் இருக்கிற அதீதத்தன்மையை வைச்சுக்கிட்டு, அதை புறம் தள்ளிவிட முடியாது. நம்மகிட்டேயும் நாக கன்னி, ஆறு தலை பாம்பு, மோகினிப் பிசாசு, வேதாளம், விக்ரமாதித்தன்னு ஏராளம் இருக்கு. நாம் பார்க்காததால் அவைகள் இல்லையென்றும் சொல்லி விட முடியாது.

ஓர் ஓவியத்தின் மூலமாக எல்லா மன நோய்களையும் தீர்க்க முடியும்னு சொல்றாங்க. ஓர் இசையின் மூலமாக எல்லா மனிதனயும் அறியமுடியும். சாவை இசையில் முன்னுணர முடியும்னு நம்பிக்கை இருக்கு. கடவுளைத் தாண்டியும் கலை ஒரு விநாடி மேலே இருக்கிறது. இந்த தொன்ம கேரக்டர்கள் ஒருத்தன் வாழ்க்கையில் தினப்படி  வந்து போனால் எப்படியிருக்கும்? அதுவும் வேதாளம் சொல்லும் கதை.

ஹீரோ...
அஸ்வின் திறமையான நடிகர். அவருக்கான இடம் இன்னும் பெரிதாக கிடைக்கலை என்பதில் எனக்கு பெரிய வருத்தம் இருக்கு. ஒரு கேரக்டரில் வந்து சேர்ந்து கொள்வதற்கு அவரிடம் நல்ல கட்டமைப்பு இருக்கு. என் ஆர்ட்டிஸ்ட்ஸ் எல்லோரையும் நாலு மாதத்திற்கு ஒரு ஆக்டிங் ஒர்க்‌ஷாப்புக்கு உட்படுத்தினேன். அதில் அஸ்வினும், குரு சோமசுந்தரமும் ரொம்பவும் ஆர்வமாக கலந்துக்கிட்டாங்க. ராத்திரி வரைக்கும் ஒர்க்‌ஷாப்பில் இருந்துட்டு, அப்படியே தூங்கிப் போய் காலையில் எழுந்து அப்படியே தொடருவாங்க. இதில் அஸ்வின் வீடியோ கேம் டிசைனராக வருகிறார். அவர் உருவாக்கிய ஒரு தொன்மம் சார்ந்த வீடியோ கேம் பெரும் வெற்றி பெறுகிறது.

அதைத் தொடர்ந்து அவருக்கு வரும் சோதனைகள், பயங்கள், பின்தொடர்கிற சிக்கல்கள்னு படம் போகும். இந்தப் படத்துக்காக மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், அரியானா, தெலுங்கானா, வட இந்தியா முழுமையும் பெரும் பயணம் போனோம். நிறைய இடங்களில் தேனீர் கூட கிடைக்காது. காடு மலைகள் ஏறி படம்பிடித்த இடங்களும், அதனால் கிடைத்த அமானுஷ்யமும் அவ்வளவு அருமையாக வந்திருக்கு. குரு சோமசுந்தரத்தின் உச்சபட்ச நடிப்பு அருமையாக இருக்கு. நிறைய ஆர்ட்டிஸ்ட்ஸ் இருக்காங்க...

ஐஸ்வர்யா ராஜேஷ் இன்னிக்கு இருக்கிற ஆர்ட்டிஸ்ட்டில் அபூர்வ ரகம். அவங்க நடிச்சுக்கிட்டு இருக்கும்போதே கேமரா போகிற திசையை அவர்களால் உணர முடியுது. இத்தனைக்கும் அவரால் ஒர்க்‌ஷாப்பில் கலந்துக்க முடியலை. நானும் அவங்களால் இந்த ரோலை சுலபமாக பண்ண முடியுமான்னு நினைச்சேன். ஒரு குறையும் வைக்கலை. ஹாலிவுட் ஸ்டண்ட் ஆக்டர் Greg Burridge வில்லனாக நடிக்கிறார். இவர் ‘Dracula untold’, ‘Harry potter’ செய்தவர். பாலிவுட் ஆக்டர் அபே தியோலை அறியாதவர்கள் இல்லை. ‘Dev d’யில் அசத்தியவர். அவரே இதில் முக்கிய வேடத்தில் நடித்து, படத்தை என்னோடு சேர்ந்து தயாரிக்கிறார்.

அவர் தமிழில் நடிக்கிற முதல் படம் இதுதான். இந்தக் கதைதான் அவ்வளவு பெரிய நடிகரை கதையோடு சேர்த்திருக்கிறது. படம் முழுக்க லைவ் ஆடியோ ரிக்கார்டிங்கில் வந்திருக்கு. அபே உட்பட இந்தப் படத்தில் நடிக்கிற நடிகர்கள் எல்லாரும் தமிழ் கற்றுக் கொண்டது பெருமையாக இருந்தது. Roberto Zazzara, இத்தாலியன் கேமராமேன். அவரே இந்தப் படத்தின் ஒளிப்பதிவை கையாண்டிருக்கிறார். மேக்கப்பிற்கான சில அபூர்வ இடங்கள் இருக்கின்றன. பட்டணம் ரஷீத்தின் உழைப்பு ரொம்பவும் பேசப்படும். கனிகா குப்தா, லெஸ்லி திரிபாதினு இரண்டு பேரை அறிமுகப்படுத்தியிருக்கிறோம்.

இசை...
திகில் படத்திற்கு பின்னணி அமைப்பது கடினமான பணி. மற்ற வகை படங்களை விட இதில் உழைப்பு அதிகம் அமைய வேண்டும். ஜிப்ரான் இதில் பிரமாதப்படுத்தியிருக்கிறார். ஒரு அமானுஷ்ய, திகில் படத்திற்கு தேவையான அத்தனை விஷயங்களையும் கவனித்து இசை அமைத்திருக்கிறார். Roberto பற்றி இன்னும் கொஞ்சம் சொல்ல வேண்டியிருக்கிறது. நான் காலையில் படப்பிடிப்புத்தளத்திற்கு வரும்போது இந்தக் காட்சி இவ்விதம்தான் படமாகும் என மனதில் கணக்குப் போட்டிருப்பேன். ஆனால், Roberto அதற்கு கூடுதல் சுவாரஸ்யம், அழகு, திகில், முக்கியத்துவம் வரும்படி ஏதோ ஒரு மேஜிக் செய்திருப்பார். சினிமா மாறிவிட்டது.

படங்களின் உண்மைத்தன்மையை மக்கள் புரிந்துகொள்கிறார்கள். அவர்கள் எந்நாளும் நல்ல தன்மையுள்ள படங்களை புறக்கணித்தது கிடையாது. சினிமா என்ற கலையின் அதிகபட்ச சாத்தியங்கள் எல்லாவற்றையும் பயன்படுத்த வேண்டும் என்பதில்தான் எனக்குக் குறி. சினிமா ரசனைக்கு மக்களை குறை சொல்ல முடியாது. அவர்கள் எங்கே நல்லது நடந்தாலும் ஆதரிக்கிறார்கள். நாம்தான் அவர்களைச் சென்றடைய வேண்டும். நாங்கள் அவர்களை சென்றடைவோம் என்பது என் தீராத நம்பிக்கை.

ஆர்.பிரசாத்