ஜாக்கெட்டில் கடவுள்!



களைகட்டும் ஆரி வேலைப்பாடுகள்

- ஷாலினி நியூட்டன்

ஒரு பெண்ணுக்கு எப்படிப்பட்ட டிசைனில் ப்ளவுஸ் தைத்தால் அவருக்கு பிடிக்கும்? அல்லது ஒரு பெண்ணை திருப்தியடைச் செய்ய எந்த டிசைனில் ப்ளவுஸ் தைக்க வேண்டும்? இப்படி ஒரு கேள்வி கேட்டால் ‘ஹைப்போதெடிக்கல் குவெஸ்டீன்’ என கோரஸாக சொல்லிவிடுவார்கள் டிசைனர்கள். காரணம், ஒருவருக்கும் பதில் தெரியாது! இதன் காரணமோ என்னவோ, விதவிதமான வேலைப்பாடுகளும், டிசைன்களும் மார்க்கெட்டில் நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாக நுழைந்தவண்ணம் இருக்கின்றன. அந்த வகையில் இதோ பக்தி ஸ்டைல் ப்ளவுஸ்கள்!

‘அட... என்ன இது? ப்ளவுஸில் மகாலக்ஷ்மி, கிருஷ்ணர்..?’ ஆச்சர்யத்துடன் டிசைனர்களைப் பிடித்தோம். கணபதி முதல் குழலூதும் கண்ணன் வரை இருக்கும் டிசைன்ஸ் அனைத்தையும் குவித்தார்கள். ‘‘ப்ளவுஸ் மட்டுமல்ல... க்ராப் டாப், மிடி, கவுன்கள் என எல்லாவற்றிலும் இந்த கடவுள்களை டிசைன் செய்து கொண்டிருக்கிறோம். இது பார்க்க பளிச்சென ஏதோ கிருஷ்ணரோ, முருகனோ ஒட்டி வைத்தாற்போல்  இருக்கும். ஆனால், இவை நுணுக்கமாக செய்யப்பட்ட ஆரி வேலைப்பாடுகள்...’’ என்றார் காஸ்ட்யூம் டிசைனர் கீதா (Mabyo Fashions).
அதென்ன ஆரி வேலை? என்று கேட்டதும் படபடவென சொல்ல ஆரம்பித்தார்.

‘‘ஒரிசாவின் பழங்காலத் தையல் கலை. ஜமிக்கி, கண்ணாடி, கற்கள், கோல்டன் ஜரிகைகள் கொண்டு செய்வதுதான் ஆரி வேலை. தமிழகத்தில் முறைப்படி இதை செய்ய ஆட்கள் கிடையாது. எனவே நாங்களே ஒரிசாவில் இருந்து இதற்காக பிரத்யேகமான நபர்களை அழைத்து வந்து இங்கே தங்க வைத்திருக்கிறோம். பெரும்பாலும் இவர்கள் குடும்பத்தோடு இந்த வேலைக்காகவே இங்கு வந்து வீடு பிடித்து தங்கியிருப்பார்கள். நாங்கள் துணியில் இந்த டிசைன் வேண்டும் என பேட்டர்னாக வரைந்தோ அல்லது ட்ரேஸிங்கோ எடுத்துக் கொடுத்து விடுவோம்.

அதன்பிறகு இவர்கள் ஒருவரோ இருவரோ இணைந்து ஒவ்வொரு பாகமாக கண்ணாடி, ஜர்தோஸி, ஜமிக்கி, கற்கள் வைத்து இதை தைப்பார்கள். ஒரு சில டிசைன்களை ஐந்து பேர் இணைந்து கூட ஒரே நேரத்தில் தைப்பார்கள். ஏன், இதிலேயே இந்த ஆலிலை கிருஷ்ணர் மற்றும் கிருஷ்ணரும் ராதையும் இணைந்திருக்கும் டிசைன்களுக்கு சுமார் நான்கு பேர் கைகோர்த்து பகுதி பகுதியாக செய்திருக்கின்றனர். எங்களிடம் பத்துபேர் இந்த ஆரி வேலைக்கு மட்டும் இருக்கிறார்கள். அனைவருமே ஒரிசாகாரர்கள். ஆரி வேலைக்கு மட்டும் தனியாக மேற்பார்வைக்கு ஆள் வைத்திருக்கிறோம்...’’ என்று கீதா நிறுத்த, சுஷ்மிதா தொடர்ந்தார்.

‘‘எங்களிடம் ஆட்கள் நிறைய பேர் இருப்பதால் சிம்பிள் டிசைன் எனில் இரண்டு நாட்களிலும், கொஞ்சம் அதீத வேலைகள் எனில் மூன்று நான்கு நாட்களிலும் முடித்துக் கொடுப்போம். சிலர் கடவுள் படங்களை முதுகிலோ அல்லது உடையிலோ போட விரும்ப மாட்டார்கள். அவர்களுக்கு தேர், பூக்கள், மயிலிறகு, கதகளி, ஏன், சர்ச் டிசைன்கள் கூட  போட்டுக் கொடுப்போம். இதோ லேட்டஸ்ட் ட்ரெண்ட் ‘ஜிமிக்கி கம்மலும்...’ இருக்கு. இந்த ஜிமிக்கி கம்மல் எம்போஸ் ஆன சிலை போல் இருக்கும். இங்கே நடராஜர் டிசைனில் அவரின் உடை கூட நூலில் தைத்திருப்போம்.

அதாவது நல்ல பெயிண்டிங்கில் கலர் கொடுத்தால் எப்படி அந்த டார்க் லைட் ஷேடோக்கள் வருமோ அப்படி நூல் எம்பிராய்டரியில் கொண்டு வந்திருப்போம். ஒரு சிலர் டிசைன்கள் இல்லாத ப்ளைன் புடவைகளைக் கொடுத்து அதில் ஆரி வேலைகள் செய்து வாங்கிக் கொள்வார்கள். குறைந்தது ரூ.2000ல் தொடங்கி ரூபாய் ஒரு லட்சம் வரை ஆரி வேலைப்பாடுகள் செய்கிறோம். நடிகர்களும், விஐபிகளும் விலையுயர்ந்த கற்களை ஆரி வேலைப்பாடுகளுடன் சேர்த்து பதித்துத் தரச் சொல்வார்கள்.

பாகிஸ்தானில் இந்த ஆரி வேலைப்பாடுகள் செய்த திருமண உடைகளின் ஆரம்ப விலையே லட்சம்தான்! அதற்கேற்ப உடைகளும் அவ்வளவு கனமாக பார்க்கவே மனதைக் கவரும்படி இருக்கும். மெட்டீரியல், டிசைன் உள்ளிட்டவற்றை நாங்கள் கவனித்தாலும் உடையின் அழகைத் தூக்கி நிறுத்துபவர்கள் இந்த ஆரி பணியாளர்கள்தான். ஆரி டிசைன்ஸை எல்லா மெட்டீரியல்களிலும் போட்டுவிட முடியாது. கனமான கற்கள், ஜர்தோஸிகளைத் தாங்கும் அளவுக்கு துணி தரமாக இருக்க வேண்டும். புதிதாகவே இருப்பினும் ஒருமுறை நனைத்துவிட்டே இந்த டிசைன்களைத் தைக்க ஆரம்பிப்போம். இல்லையேன்றால் தைத்து முடித்து துணி சுருங்கினால் பட்ட பாடெல்லாம் வீணாகிவிடும்.
 
அதேபோல் ஒரு டிசைன் முடிவாகிவிட்டாலும் கடவுள் படங்களைப் போடும் முன் வாடிக்கையாளர்கள் குடும்பத்தாரோடு பேசி உறுதிப்படுத்திய பிறகுதான் அதை உடைகளில் கொண்டு வருவோம். ஏனெனில் ஒருமுறை டிசைன் செய்துவிட்டால் அதில் மாற்றமே செய்ய முடியாது.  எத்தனை நாட்களுக்குத்தான் மாங்கா, மயில் என அரதப்பழசான டிசைன்ஸையே அணிவது? வாடிக்கையாளர்களுக்கு போரடிக்காதா? அதனால்தான் இப்போது கடவுள்களின் அணிவகுப்பை தங்கள் உடைகளில் கேட்கிறார்கள்...’’ என சுஷ்மிதா கண்சிமிட்ட, அதை ஆமோதிக்கிறார் கீதா. மொத்தத்தில் பெண்களை அழகுபடுத்த மட்டும் ஒரு அண்டர்க்ரவுண்ட் உலகமே இயங்கிக்கொண்டிருக்கிறது. நல்லா வருவீங்க பாஸ்!

மாடல்கள்: பவித்ரா, அவந்திகா
உடைகள் டிசைன்: கீதா, சுஷ்மிதா (Mabyo fashions)
மேக்கப்: ஜெயந்தி
குமரேசன் & பத்மினி முகிலன் (Pro bridal Studio)
ஸ்பெஷல் கிரெடிட்: ஷிவ்