மகாத்மா காந்திக்கு முன்பே அகிம்சையை போதித்தவர்!- கிங் விஸ்வா

வால்டன் குளத்தின் கரையில், ஆடைகளைத் துறந்த நிலையில் புல்லாங்குழல் வாசித்தவாறு ஆரம்பிக்கிறது ஹென்றியின் காலைப்பொழுதுகள். அப்படியான ஒரு காலைப்பொழுதிற்குப் பிறகு, ஆறாண்டுகளாக வரி செலுத்தவில்லை என்று அவரைக் கைது செய்ய வருகிறார்கள். ‘எனது ஷூவை தைத்துக்கொண்டு வந்தபிறகு கைது செய்கிறீர்களா?’ என்று கேஷுவலாகக் கேட்கிறார் ஹென்றி. பனி படர்ந்த மரக்கிளையின் மீது ஒரு குருவி அமர்ந்திருக்கிறது. அதை, குனிந்து, தனது கால்களுக்கிடையே தலையை வைத்து பார்க்கிறார், ஹென்றி. அடுத்த நொடியே தரையில் மல்லாந்து படுத்து பறக்கும் அந்தக் குருவியைப் பார்த்தவாறே இயற்கையுடன் ஒன்றிப்போகிறார்.

மகாத்மா காந்திக்கு முன்னரே அஹிம்சை வழியில் அரசாங்கத்தை எதிர்க்கும் சட்டமறுப்பு இயக்கத்தை தோற்றுவித்தவரும், பகவத் கீதையின் சாராம்சத்தை மேற்கத்திய கொள்கைகளுடன் ஒப்பிட்டுப் பேசியவருமான ஹென்றி டேவிட் த்ரோவ்-வின் இருநூறாவது பிறந்தநாள் இந்தாண்டு ஜூலை மாதம் வந்தது. அதைக் கொண்டாடும் வகையில் அமெரிக்காவில் அவரது வாழ்க்கை வரலாற்றை கிராஃபிக் நாவல் வடிவில் வெளியிட்டார்கள். உண்மையில், இது பிரெஞ்சு மொழியில் 2012ம் ஆண்டே வெளியான நாவலின் மொழிபெயர்ப்புதான்.

கறுப்பினத்தவருக்கு ஆதரவாக வன்முறையில் இறங்கிய ஜான் ப்ரௌனுக்கு தனது ஆதரவை தெரிவிப்பதில் இருந்து, இயற்கையைக் கொண்டாடுதல், அடிமைத்தனத்திற்கு எதிர்ப்பு, அராஜக அரசாங்கத்தை எதிர்த்தல் என்று ஹென்றியின் வாழ்க்கையின் மிக முக்கியக் கட்டங்களை 90 பக்கங்களில் அறிமுகம் செய்யும் இந்த கிராஃபிக் நாவலில், ஹென்றியையும் அவரது கொள்கைகளையும் கொண்டாடி இருக்கிறார்கள் என்றுதான் சொல்லவேண்டும். உருவகங்களும் கருத்துகளும்: மிகவும் எளிமையான ஓவிய பாணியில் பல குறியீடுகளை தன்னகத்தே கொண்டிருப்பதுதான் இந்த கிராஃபிக் நாவலின் சிறப்பு.

காட்டின் நடுவே ஹென்றியும் செவ்விந்தியர் ஒருவரும் இரவில் தங்குகிறார்கள். தங்களைச் சுற்றி பாம்புகள் இருக்கிறது என்று ஹென்றி உணர்கிறார். செவ்விந்தியரை பாடச் சொல்ல, அவரது பாடலின் இசை, பாம்புகளுக்கு இறக்கை முளைத்ததைப் போல இருப்பதாக வரைகிறார் ஓவியர் டேனியல். அதைப்போலவே, நாவலின் இறுதியில், ஹென்றியின் பார்வையிலிருந்து ஒரு பறவை விலகிச் செல்வதைப் போல வரைந்து, அவரது முடிவைத் தெரிவிக்கிறார்கள்.

விமர்சனங்களும், சர்ச்சைகளும்: ஹென்றியைப் பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டவரான பேராசிரியர் மைக்கேலின் முன்னுரை இடம்பெற்றிருப்பதால், அனைத்து தரவுகளும் முறையாக சரிபார்க்கப்பட்டிருக்கும் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால், ஹென்றி காஃபி குடிப்பது போல, அவரது புத்தகமான ‘வால்டென்’ வெற்றி பெற்றதற்கு அவரைப் பாராட்டுவது போலவும், போராளி ஜான் ப்ரௌனை அவர் சந்தித்துப் பேசியது போலவும் காட்சிகள் உள்ளன. ஹென்றியின் வாழ்க்கை வரலாற்றை முழுமையாகப் படித்தவர்கள் அவர் காஃபி குடிக்க மாட்டார் என்பதை அறிவார்கள்.

வால்டென் மொத்தமாக இரண்டாயிரம் பிரதிகள் விற்கவே பல ஆண்டுகள் ஆன நிலையில், அதை எப்படி வெற்றியென்று கொண்டாடினார்கள் என்பதும் தெரியவில்லை. அதைப்போலவே, ஜான் ப்ரௌனை ஹென்றி சந்தித்ததற்கு எந்த ஆதாரங்களுமே இல்லை. ஹென்றியைப் பற்றி விமர்சிக்கும்போது, அவர் சொன்ன கருத்துகள் அனைத்துமே நாமறிந்தவையே. அவர் புதுமையாக எதையும் சொல்லவில்லை. ஆனால், நாம் ரசிக்கும்படியாக அவற்றைச் சொன்னார் என்று குறிப்பிடுவார்கள். அதைப்போலவேதான் இந்த கிராஃபிக் நாவலும் இருக்கிறது.

ஹென்றி டேவிட் த்ரோவ் 1817 - 1862 (44) 
கவிஞர், கட்டுரையாளர், ஓவியர், அடிமைத்தனத்துக்கு எதிரான போராளி, சட்டமறுப்பு செய்து, வரி செலுத்துதலை எதிர்த்தவர், விமர்சகர் & வரலாற்றறிஞர். ஹென்றி இவை அனைத்தையும் பிரதிபலிப்பவர். அரசாங்கத்திற்கு எதிராகக் குரல்கொடுத்து, சாத்வீகமான அறப்போராட்டம் நடத்துவதை ஆரம்பித்த முன்னோடியான இவர், இயற்கையைக் கொண்டாடியவர். காலத்தைக் கடந்த இவரது கருத்துகளிலிருந்து (நமது அனுபவத்தைப் பொருத்து) வாழ்க்கை முழுவதற்குமான பாடங்களைப் பெறலாம்.

ஓவியர் டேனியல் அலெக்ஸாந்த்ரோ  (பிரான்ஸ், 47) 
ஓவியக்கல்லூரிகளில் பயிலாமல், சுயமாக ஓவியம் கற்றவரான டேனியல் சமூக வலைத்தளங்களை முறையாக பயன்படுத்துவதற்கு சரியான உதாரணமாவார். ஓவியங்களைத் தொடர்ந்து தனது வலைப்பூவில் இவர் பதிந்து வர, அதிலிருந்த நேர்த்தியைக் கண்ட ஒரு பிரெஞ்சு பதிப்பாளர் வனவிலங்குகளைப் பற்றிய ஒரு காமிக்ஸ் புத்தகத்தை வரைய இவரை அணுகினார். மூன்றாண்டுகள் இப்படியே இருந்தவரை, பெருமளவில் பேசவைத்தது அல்ஜீரிய யுத்தத்தைப் பற்றிய இவரது முதல் கிராஃபிக் நாவலே. அதன் பின்னர் தொடர்ச்சியாக பல படைப்புகளின் மூலம் பேசப்பட்டு வருகிறார் டேனியல்.

ஸ்நிப்பெட்ஸ்
Thoreau  A Sublime Life (ஆங்கிலம்).
எழுத்தாளர்: மக்ஸிமிலிய(ன்) லுஹுவா.
ஓவியர்: டேனியல் அலெக்ஸாந்த்ரோ.
பதிப்பாளர்: NBM Publishing, USA, மே 2016. 88 பக்கங்கள், முழு வண்ணம். பெரிய சைஸ், ஹார்ட் பவுண்ட் புத்தகம்.
விலை: ரூ.1253
கதை: சட்டமறுப்பு இயக்கத்தின் தந்தையாகக் கருதப்படுபவரும், டால்ஸ்டாய், காந்தி, மார்ட்டின் லூதர் கிங் போன்ற சமூகப் போராளிகளின் வரிசையில் முக்கியமானவருமான ஹென்றி டேவிட் த்ரோவ்-வின் வாழ்க்கை வரலாறு.
அமைப்பு: முக்கியமானவர்களின் வாழ்க்கை வரலாற்றை பதிப்பிக்கும்போது அதில் இரு வகையுண்டு. ஒன்று, வழக்கமான வாழ்க்கை வரலாறு (பயோக்ராஃபி), மற்றொன்று அவர்களது வாழ்க்கையைக் கொண்டாடும் ஹகியோக்ராஃபி.
த்ரோவ்-வின் வாழ்க்கை வரலாறு ஏறக்குறைய ஹகியோக்ராஃபியைத் தொட்டுச் செல்கிறது. அவரது வாழ்க்கையை முழுமையாகச் சொல்லாமல், மிக முக்கியமான 16 ஆண்டுகளை மட்டும் விவரிக்கிறது.
ஓவிய பாணி: இயற்கையைக் கொண்டாடுபவரின் வாழ்க்கை வரலாறு என்பதாலேயே ஒரு கட்டுப்பாடற்ற முறையைக் கையாண்டுள்ளார் ஓவியர் டேனியல். கதாசிரியர் லுஹுவாவும் அடிப்படையில் ஒரு ஓவியர் என்பதால், வசனங்களுக்கு முக்கியத்துவம் தராமல், காட்சிகளைக் கொண்டும் குறியீடுகளாலும் கதையை நகர்த்துகிறார். சில இடங்களில் காணப்படும் ஓவியங்களின் பலவீனத்தை, அற்புதமான வண்ணக்கலவையின் மூலமாக சமன் செய்கிறார் லுஹுவா.

எழுத்தாளர் மக்ஸிமிலிய(ன்) லுஹுவா (பிரான்ஸ், 32)
அடிப்படையில் ஓவியராக ஆரம்பித்து, கதாசிரியராகவும் மாறிய இவர், நீட்ஷே, காகெய்ன், த்ரோவ், லூயி அகஸ்தே என முக்கியமான கிராஃபிக் வாழ்க்கை வரலாறுகளைப் படைத்துள்ளார். இவரது இஸ்ரேலிய - பாலஸ்தீனிய சுற்றுப்பயணங்களின் முடிவில், இவர் உருவாக்கிய கிராஃபிக் நாவல்களால் கொதிப்படைந்த இஸ்ரேலிய அரசு, இவரை பத்தாண்டுகளுக்கு இஸ்ரேலுக்குள் வர தடை விதித்துள்ளது. ஐரோப்பாவின் தலைசிறந்த கிராஃபிக் நாவல்களுக்கான ‘அங்குலேம்’ விருதுகளுக்கு இவரது படைப்பை பதிப்பாளர் அனுப்பி, அது தேர்வானபோது, ‘‘எனது படைப்புகள் விருதுகளில் போட்டியிடுவதற்கல்ல!” என்று சொல்லி, மறுத்துவிட்டார்.