ஊஞ்சல் தேநீர்யுகபாரதி - 45

ஒருவரைப் பார்த்தவுடன் பிடிப்பது வேறு, பார்க்கப் பார்க்கப் பிடிப்பது வேறு என்பதுபோல அஸ்வகோஷ் என்கிற இராசேந்திரசோழன் மாமா, பார்க்கப் பார்க்க அல்ல, படிக்கப் படிக்க பிடித்துப்போனார்.முதலிலேயே அவருடைய கட்டுரை நூல்களைப் படிக்காமல் கதைத் தொகுப்புகளை வாசித்திருந்தால் ஆரம்பத்திலேயே பிடித்துப் போயிருப்பாரோ என்னவோ! அவருடைய கதைகள் இறுக்கமும் அடர்த்தியும் கொண்டவை என்று முன்பே சொல்லியிருக்கிறேன். ஆனாலும், கதாபாத்திரங்களின் குரலாக அவை அமைந்திருந்ததால் அவருடைய கட்டுரை நூல்களைவிட கதைத் தொகுதிகள் எளிய புரிதலுக்கு ஏற்புடையதாக இருந்தன.

‘புற்றில் உறையும் பாம்பு’களையோ, ‘கோணல் வடிவங்க’ளையோ இன்றைய புரிதலில் வேறாக அர்த்தப்படுத்திக்கொண்டாலும், அன்றைக்கும் அவை ஏதோ ஒருவிதத்தில் புரிந்திருக்கும் என்றே நம்புகிறேன். இப்போதுகூட அவருடைய நூல்களின் தலைப்பைச் சொன்னால் தலை சுற்றுகிறது. “ ‘மிதிபடும் மானுடம் மீட்பின் மனவலி,’ ‘பின் நவீனத்துவம் பித்தும் தெளிவும்,’ ‘இந்தியம் திராவிடம் தமிழ்த்தேசியம்,’ ‘சாதியம் தீண்டாமை தமிழர் ஒற்றுமை,’ ‘அணுசக்தி மர்மம் - தெரிந்ததும் தெரியாததும்,’ ‘அணுஆற்றலும் மானுட வாழ்க்கையும்’ ” போன்ற நூல்களின் தலைப்பை வாசித்தாலே அவர் எவை எவை குறித்தெல்லாம் சிந்தித்திருக்கிறார் என யூகிக்கலாம்.

அவர் எழுதியவை அத்தனையுமே அவசியமானவைதான். ஆனாலும், ஒரு நல்ல சிறுகதை எழுத்தாளர் ஏன் இதையெல்லாம் எழுதப் புகுந்தார் என்பதுதான் யோசனைக்குரியது. உலகையும் அரசியலையும் உள்வாங்கிக்கொள்ளாமல் எழுதக்கூடிய எந்த எழுத்துமே ஜீவனற்றவை எனச் சொல்லவே அவர் இவ்வளவையும் எழுதியிருக்கிறார். இத்தனை ஆண்டுகளாக அவர் காலத்தை விரயம் செய்து எழுதிய நூல்களின் வாயிலாக அவருடைய எழுத்தாளர் அடையாளம் பின்னுக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. இராசேந்திரசோழன் இலக்கியத்திற்கு அளித்த பங்களிப்பைவிடவும் இதர சிந்தனைப் போக்குகளுக்கு செய்த பங்களிப்பே அதிகம் என்பதாக ஆகிவிட்டது.

உண்மையில், அதுகுறித்தெல்லாம் அவருக்கு எந்த விசனமும் இல்லை. இதையே தன்னுடைய ‘பரிதாப எழுத்தாளர் திருவாளர் பரதேசியார் பண்டித புராணம்’ எனும் குறுநாவலில் சுய எள்ளலாக வெளிப்படுத்தியிருக்கிறார். “ஒருகாலத்தில் ஒரு லட்சிய வேகத்தில் காலராக் கண்டவன் பேதி மாதிரி நமது பண்டிதரிடமிருந்து தொடர்ந்து வெளிப்பட்டுக்கொண்டிருந்த எழுத்துகள் கொஞ்சநாள், மலச்சிக்கல் கண்ட மாதிரி இறுகி இடைபட்டு ஓர் இடைவெளிவிட்டுப் போயிருந்ததில் முன்னே மாதிரி இப்போது தனக்கு எழுதவருமா என்பது அவருக்கே சந்தேகமாயிருந்திருக்கிறது.

எழுதியே தீருவது என்றோ அல்லது சும்மாவாவது எதையாவது எழுதிப் பார்க்கலாமே என்றோ உட்கார்ந்தால்கூட அன்னாருக்கு முன்னே மாதிரி எழுத வருவதில்லை என்று தெரிகிறது” என அக்குறுநாவலில் அவரே அவரை சுய எள்ளல் செய்திருப்பார். திடீரென்று எழுத்து வறண்டு போனாலோ அல்லது எழுத முடியாத அளவுக்கு மென்டல் பிளாக் வந்தாலோ இப்போதும் நான் எடுத்து வாசிக்கும் குறுநாவல் அது. ஒரு எழுத்தாளனின் அக மற்றும் புறச் சிக்கல்களை அத்தனை பகடியுடன் விவரித்த வேறு ஒரு படைப்பை இதுவரை என்னால் கண்டடைய முடியவில்லை. விழுந்து விழுந்து சிரித்தேன் என்போமே அப்படியான சிரிப்பை வரவழைக்கக்கூடிய எழுத்துகள் அவை.

அந்தக் குறுநாவலைப் படிக்கும்போது சிரிப்பு வரவேண்டுமானால் கொஞ்சமாவது உங்களுக்கும் எழுத்து குறித்தோ, எழுத முடியாமல் போகும் சிக்கல் குறித்தோ தெரிந்திருக்க வேண்டும். குடும்பஸ்தனாகிவிட்ட ஓர் எழுத்தாளன், தன் கதையையோ, காவியத்தையோ எழுத என்ன பாடுபடுகிறான் என்பதே அக்குறுநாவலின் மையம். அதுவும் அவன் கொள்கை கோமானாக தன்னை நிறுவிக்கொள்ள ஆசைப்படுபவனாக இருந்துவிட்டால் அவ்வளவுதான். ஒருவரிகூட எழுத முடியாமல் தவிக்கும் நிலையில் அவன் ஏற்கனவே வாங்கிவைத்த பெயருக்கு களங்கம் வராதிருக்க என்னென்ன செய்கிறான் என்பதை அக்குறுநாவலில் விளாசியிருப்பார்.

கதை நெடுக பண்டிதத் தமிழ் வாடை அடித்தாலும், வாசிக்க வாசிக்க சுவாரஸ்யம் கொடுக்கும் சொல்லாட்சிகள் நிறைந்திருக்கும். அதிலும் பண்டிதரின் இல்லக்கிழத்தியிடம் எடுக்கப்பட்டுள்ள நேர்காணல் தனிரகம். நானறிய நவீன தமிழ் இலக்கியப்பரப்பில் வெளிவந்த முதல் பகடி இலக்கிய நூலாக இதைக் கருதலாம். தொண்ணூறுகளின் பிற்பகுதியில் அலைகள் வெளியீட்டகம் வெளியிட்ட அக்குறுநாவல் பற்றி ‘புதிய பார்வை’ இதழில் கவிஞர்.கல்யாணராமன் எழுதியிருந்தார். அதன்பின் கல்யாணராமனும் பேராசியரியராகி அவருமே தொடர்ந்து எழுதாதவராகப் போனாரென்பது பிற்சேர்க்கையாக சொல்லப்படவேண்டியது.

இராசேந்திரசோழன் எழுத்தின் பல தளங்களிலும் இயங்கியவர். ஆசிரியர் பணியின் ஊடே இலக்கிய ஈடுபாடும் அரசியல் ஈடுபாடும் கொண்டிருந்த அவர், 1970 முதல் 1985 வரை மார்க்சிஸ்ட் கட்சியின் ஆதரவாளராக இருந்தவர். அதன் பிறகு அக்கட்சியின் போக்குகள் மற்றும் நிலைப்பாடுகள் பிடிக்காமல் ஒத்த கருத்துடைய தோழர்களுடன் விலகி, ‘தமிழ்த்தேச பொதுவுடமைக்கட்சி’ என்கிற அமைப்பில் தன்னை இணைத்துக் கொள்கிறார். இதில் ஓர் இருபதாண்டு காலம். பிறகு அக்கட்சியிலிருந்தும் வெளியேற வேண்டிய நிலை.

பொதுவாக தலைமையின் ஜனநாயகமற்ற சர்வாதிகாரப் போக்குகளை அவரால் எந்தக் கட்டத்திலும் ஏற்க முடிந்ததில்லை. அவர் தன்னை ஒரு சுதந்திர எழுத்தாளராகக் கருதுவதில்லை. அவரளவில் கொள்கைகளைப் பற்றுக்கோடாக வைத்துக்கொண்டே பயணித்திருக்கிறார். ஆனாலும், அந்தப் பற்றும் வெறும் கோடாகத் தெரியும் தருணங்களில் அவரால் அதை ஏற்கவோ ஜீரணிக்கவோ முடியாமல் போயிருக்கிறது. சிறுகதை, நாவல், குறுநாவல் என்பதுடன் ஒருகட்டத்தில் அவர் எழுதியளித்த நாடக ஆக்கங்களை, ‘அஸ்வகோஷ் நாடகங்கள்’ என்னும் தலைப்பில் மங்கை பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது.

அவரே சொல்வதுபோல, “நாடகம் என்பது நடிக்கப்படுவதற்காக எழுதப்படுகிறதே தவிர படிக்கப்படுவதற்காக எழுதப்படுவதில்லை. நடிப்பதற்கான பிரதி, படித்து நுகர்வதோடு மட்டுமே நின்றுவிடுமானால் அதற்கு இலக்கியத் தகுதி கிட்டுமே அன்றி நிகழ்த்துக்கலைக்கான தகுதி கிடைக்காது.” செஞ்சுடர் கலா மன்றம் சார்பிலும் தமிழ்க்  கலை இலக்கிய பேரவை சார்பிலும் அவருடைய நாடக ஆக்கங்கள் அத்தனையுமே மேடையேறின. ஒரு நாடகக்காரருக்கு நேரும் சகல சவால்களையும் எதிர்கொண்டு அவர் நிகழ்த்திக்காட்டிய ‘நாளை வரும் வெள்ளம், வெளியாரை வெளியேற்றுவோம், வட்டங்கள், விமோசனம், நாமிருக்கும் நாடு’ போன்றவை குறிப்பிடும்படியானவை.

தற்போது அந்நாடகப் பிரதிகள் புத்தகமாக்கப்பட்டாலும், நிகழ்த்தும்படியான சூழலை நினைத்து மட்டுமே பார்க்க முடிகிறது. 1978இல் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நடத்திய இரண்டாவது மாநாட்டில், நண்பகல் இடைவேளையில் ‘சகஸ்மாலா’ என்னும் நாடகம் நடத்தப்பட்டிருக்கிறது. புற சாதனங்கள் ஏதுமன்றி ஒரு பத்து நடிகர்கள் தங்கள் குரல் , உடல் அசைவுகளை வைத்துக்கொண்டு, உலகை உலுக்கிய சுரங்க விபத்தை அதிர்ச்சியூட்டும் விதத்தில் சித்திரித்திருக்கிறார்கள். அந்த சித்திரிப்பை உள்வாங்கிக்கொண்ட நொடியிலிருந்து தானுமே அப்படியான ஆக்கங்களை உருவாக்க எண்ணியிருக்கிறார். அதுமட்டுமல்ல, அவருடைய கதைகளில் மிகுதியாக வெளிப்பட்டவை உரையாடல் தொனி என்பதால் நாடகப் பிரதிகளை உருவாக்குவதில் அவருக்கு எந்தச் சிரமமும் இருக்கவில்லை.

அத்தோடு அதே ஆண்டு திண்டுக்கல்லை அடுத்த காந்தி கிராமத்தில், தில்லி தேசிய நாடகப்பள்ளி நடத்திய பத்து வார கால தீவிர பயிற்சிப் பட்டறையிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டுள்ளார். Theatre என்னும் ஆங்கிலச் சொல்லுக்கு நேரடியான தமிழ்ச்சொல்லாக ‘அரங்க ஆட்டம்’ என்னும் சொல்லைத் தேர்ந்து கொடுத்தவர் அஸ்வகோஷே. நிகழ்த்துக் கலை குறித்து அவர் எழுதியுள்ள ‘அரங்க ஆட்டம்’ என்னும் நூலை நாடகக் கலைஞர்கள் தங்கள் கையேடாகக் கருதலாம். உலகப் புகழ்பெற்ற நாடகப் பிரதிகள் தமிழில் எத்தனையோ மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. என்றாலும், நாடகத் தோற்றம் குறித்தோ நாடக நாட்டிய சாஸ்திரம் குறித்தோ வெளிவந்ததில்லை.

வங்கம், மராத்தி, இந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலுள்ள நாடகங்களை ஒப்பிட்டு, அதிலிருந்து தமிழ் நாடக முறைகள் எந்தெந்த விதத்தில் உடன்பட்டும், முரண்பட்டும் நிற்கின்றன என்பதை மிக விரிவாகவே எழுதியிருக்கிறார். அந்நூலில் எழுபதுகளில் அறிமுகமான நவீன நாடகப் போக்குகள் தமிழ்ச் சூழலில் எப்படியான தாக்கங்களை ஏற்படுத்தின என்பதை விவரித்திருக்கிறார். குறிப்பாக ந.முத்துசாமியின் ‘கூத்துப்பட்டறை,’ அ. மங்கையின் ‘மெளனக்குரல்,’ இளைய பத்மநாபன், வீ.அரசுவின் ‘பல்கலை அரங்கு,’ பிரளயனின் ‘சென்னைக் கலைக்குழு,’ பத்திரிகையாளர் ஞாநியின் ‘பரீக்‌ஷா,’ கே.ஏ.குணசேகரனின் ‘தன்னானே,’ மு.ராமசாமியின் ‘நிஜ நாடகக்குழு’ ஆகியவற்றை அந்நூலில் குறிப்பிட்டிருக்கிறார்.

அதேபோல புதுவையை மையமாக வைத்து இயங்கிவரும் ஆறுமுகம், ராஜு, வேலுசரவணன் பற்றியும் தஞ்சை தமிழ்ப்பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த நாடகத்துறைப் பேராசிரியர் செ.ராமானுஜம் பற்றியும் பதிவு செய்திருக்கிறார்.  ‘அரங்க ஆட்டம்’ நூல் எத்தகைய தனித்துவமுடையது என்பதை திரைக் கலைஞர்கள் பலருக்கு பயிற்சியளித்துவரும் தம்பி சோழன் என்னைவிட நேர்த்தியாக விளக்குவார். இராசேந்திரசோழனின் எழுத்துகளில் உள்ள முக்கிய அம்சம் என்னவென்றால், அவரே அவர் எழுத்துகள் குறித்து நூலின் முன்னும் பின்னும் எழுதிவிடுவதுதான். இது முழுமையாக வந்திருக்கிறது, இதை நான் இன்னும் சிறப்பாக செய்திருக்கலாம் என அவரே வாக்குமூலம் கொடுத்துவிடுவார்.

சிலசமயத்தில் அந்த வாக்குமூலத்திலிருந்து நாம் வேறுபடலாம். அல்லது மாறுபடலாம். ஏறக்குறைய பனிரெண்டு நாடகப் பிரதியை வழங்கியுள்ள அவர், தன்னுடைய நாடகங்களில் ‘விசாரணை’ மற்றும் ‘வட்டங்கள்’ மட்டுமே முழு நிறைவை அளித்ததாகச் சொல்லியிருக்கிறார். அந்நாடகங்கள் கட்டமைப்பிலும் வெளிப்பாட்டிலும் தீவிரமுடையவை எனச் சொல்லும் அவர், ஏனைய நாடகங்கள் அந்தந்த நேரம் சார்ந்தும் பயன் சார்ந்தும் எழுதப்பட்டவை என்கிறார். என்னளவில், இந்த தீர்மானங்களையும், முடிவுகளையும் அவர் அறிவிக்க வேண்டியதில்லை.

கதையானாலும் கட்டுரையானாலும் அவர் சொல்லியதற்கு அப்பாலும் விடுபட்டுப் போனவற்றை நேர்மையாகச் சொல்லிவிட எத்தனிக்கிறார். ஒரே நேரத்தில் எழுத்தாளனும், விமர்சகனும் அவரை உண்டு இல்லை என பண்ணிவிடுகிறார்கள். “அறிவை ஜனநாயகப்படுத்துவதொன்றே அதிகாரத்தை முறியடிக்கும்” என நம்பும் அவர், தன்னுடைய படைப்புகளில் வெளிப்படும் அதிகாரத்தையும் விமர்சனத்தால் வீழ்த்திவிட விரும்புகிறார்.படைப்பை அனுபவப் பாத்திகளில் நடாமல் விவாதத்தளத்தில் வைப்பதிலேயே குறியாக இருக்கிறார்.

கிணற்றில் வீசிய கல்லாக சில நிமிடம் சிற்றலைகளை ஏற்படுத்திவிட்டு பின் அமைதியாவதை படைப்பென்று கருதக்கூடிய மனநிலை அவருக்கு வாய்க்கவில்லை. அதே சமயத்தில் அவருடைய படைப்புகள் குறித்த பெருமிதங்களும் அவருக்கு இல்லாமல் இல்லை. அவ்வப்போது தனக்கு திருப்தியும் நிறைவுமளிக்கும் ஆக்கங்களை அவரே நினைவுபடுத்துகிறார். முழுத் தொகுப்பாக வெளிவந்துள்ள அவருடைய சிறுகதைகளில் தென்படும் ஏற்ற இறக்கங்கள் பற்றி அவரே பின்னுரையாக எழுதியிருப்பதை விமர்சன உரையென்றுதான் கொள்ள வேண்டும்.

(பேசலாம்...)

ஓவியங்கள்: மனோகர்