மை நேம் இஸ் மாறவர்மபாண்டியன்!- திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார்

எனக்கு மாஸிவ் ஹார்ட் அட்டாக் வருவதற்கான அறிகுறிகள் போல முகம் வியர்த்து, தோள்பட்டைகளில் வலி பரவியது. ஒரு கண்ணாடி டம்ளரில் குளிர்ந்த தண்ணீர் எடுத்துக் கொடுத்தார். குடித்தேன். வலி சற்றுக் குறைந்தாற்போல இருந்தது. ‘‘பயப்படவே வேண்டாம் தம்பி. இது ரொம்ப ஈஸி. இங்கிருந்து பஸ் பிடித்து விருதுநகர் போய் திரும்புவதை விடவும் சுலபம்...’’ ‘‘சுலபமாகவே இருக்கட்டும் சார். போகப்போறது விருதுநகர் இல்லையே. கி.பி.201ல மனிதர்கள் எப்படி இருப்பாங்க; என்ன மொழி பேசுவாங்க எதுவும் எனக்குத் தெரியாதே?
கி.பி. 2017ல வசிக்கிற ஒரு மனிதன், கி.பி. 201ல போய் உயிரை, கியிரை விட்டுட்டா... என்ன ஆவறது? இன்னிக்கு உயிரோட இருக்கிற மனுஷன், போன மாசம் இறந்தான்னு சொன்னா... அது இயற்கைக்கே முரணா இருக்காதா?’’ ‘‘டைகர்னு பேர் வெச்சிக்கிட்டு இப்படி பயப்படலாமா?’’ ‘‘டைகர்னு நானா சார் செலக்ட் பண்ணி பேர் வெச்சிக்கிட்டேன்? எங்க அப்பா, அம்மா வெச்சதுக்கு நான் என்ன பண்ணமுடியும்?’’

‘‘உன் உயிருக்கு நான் கேரண்டி. இப்பவே எழுதித் தர்றேன். அது மட்டுமில்லை. நான் சொல்ற வேலையை மட்டும் நீ செஞ்சா... இந்த டைம் மெஷின் பேட்டன்ட் ரைட்ஸ் உன் பேர்ல எழுதித் தர்றேன்!’’‘‘டைம் மெஷினின் காப்புரிமை எனக்கே எனக்கா...?’’ லேசாய் மனதுக்குள் சபலம் தட்டியது. எனது முக மாற்றம் சாமியப்பனிடம் நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்க வேண்டும். நாற்காலியை இழுத்துப் போட்டுக் கொண்டு அருகே நெருங்கி வந்து அமர்ந்தார். ‘‘டைகர், விஷயம் ரொம்ப சிம்பிள். இதோ பார் புஸ்தகம்...’’ புரட்டியவுடன் தூசி பறந்து தும்மல் போடுகிற அளவுக்கு படு பாடாவதி நூல் ஒன்றை எடுத்து நீட்டினார். ‘‘மும்பையில நண்பர் கொடுத்தது இது. கி.பி.201ல, ரொம்ப குறுகிய காலம் மட்டும், அதாவது வெறும் நாலே மாசம் மட்டும் மதுரையை ஆண்ட பாண்டிய மன்னன் மாறவர்ம பாண்டியன்.

சரித்திரப் புஸ்தகங்கள்ல அவனைப் பத்தி அவ்வளவா பதிவு செய்யப்படலை. அவனோட அமைச்சரவையில ஆஸ்தான ஜோதிடரா இருந்தவர் காஷ்யேபச்சந்திர மச்சாடனன். ரொம்பப் பெரிய வானவியல் நிபுணர். மாறவர்ம பாண்டியனும் வானவியல் ஆராய்ச்சிகள்ல அளவு கடந்த ஆர்வம் காட்டினான். மன்னனும், ஆஸ்தான ஜோதிடரும் சேர்ந்து நாள்பொழுதெல்லாம் ஆராய்ச்சி, ஆராய்ச்சினு நாளைக் கடத்துனாங்க...’’‘‘அப்படி என்ன ஆராய்ச்சி புரபஸர்?’’ ‘‘சொன்னா ஆச்சரியப்படுவ. அவங்க கண்டுபுடிக்க நினைச்ச விஷயம் பயோ-கிளாக்.

உயிர் கடிகாரம்னு இப்ப நாம ஆச்சரியமா பேசறோம் இல்லையா? அப்பவே அதுபத்தி அவங்க ஆராய்ச்சி பண்ணியிருக்காங்க. அந்த ஆராய்ச்சி சக்ஸஸ் ஆச்சுனா, மனிதனோட ஆயுளை இன்னும் அதிகப்படுத்த முடியும். போர்க்காலங்களில் படுகாயமடைஞ்சு உயிருக்குப் போராடுற வீரர்களைப் குணப்படுத்தி, நூறு வருஷம் முழு ஆரோக்கியத்தோட அவங்களைப் பாதுகாக்க முடியும். ஆரோக்கியமான போர் வீரர்கள், புத்திசாலியான அறிவுஜீவிகள் ஆண்டாண்டு காலமானாலும் உடல்நலம், மனநலம் குன்றாம தேஜஸோட இருக்க முடியும். அதுக்கான ஆராய்ச்சியில ஏறக்குறைய வெற்றியடைஞ்சிட்டாங்க மன்னனும், ஆஸ்தான ஜோதிடரும்...’’

‘‘அப்புறம் என்ன ஆச்சு?’’ ‘மாறவர்மபாண்டியனோட ஆராய்ச்சி விஷயம் எதிரி நாடுகளுக்கு தெரிஞ்சு போச்சு. சூழ்ச்சி பண்ணி, அவனோட அமைச்சர் சுந்தரகனகேந்திரனை தங்கள் பிடிக்குள்ள கொண்டு வந்தாங்க. அடுத்த அரசனா ஆக்குறோம்னு உறுதி கொடுத்த எதிரி நாட்டு மன்னர்கள், மன்னன் மாறவர்மபாண்டியனையும், ஆஸ்தான ஜோதிடர் காஷ்யேபச்சந்திர மச்சாடனனையும் உணவில விஷம் வைச்சுக் கொன்னுட்டாங்க. அதோட அரும்பாடுபட்டு அவங்க கண்டுபிடிச்ச பயோ-கிளாக் ஆய்வுகள் அடங்கிய ஓலைச்சுவடிகளையும் தீவைச்சு எரிச்சிட்டாங்க. சரித்திரத்தில இப்படி ஒரு மன்னன் வாழ்ந்த விஷயமோ, அவன் உயிர் கடிகாரம் கண்டுபிடிச்ச தகவலோ வராம இருட்டடிப்பு செஞ்சு வரலாற்றை மறைச்சுட்டாங்க...’’

‘‘கேட்கவே ரொம்பவும் பிரமிப்பா இருக்கு புரபஸர். சரி, இப்ப நான் என்ன பண்ணணும்?’’ ‘‘கி.பி. 201க்கு போகணும். மன்னன் மாறவர்ம பாண்டியன் கொல்லப்படற தினத்துக்கு ஒரு பத்து நாள் முன்னால போய் இறங்கணும். காஷ்யேபச்சந்திர மச்சாடனனின் பயோ-கிளாக் கண்டுபிடிப்பு அடங்கிய ஓலைச்சுவடியோட பைனல் காப்பியை அப்படியே பத்திரமாக எடுத்து வந்து கொடுத்தாப் போதும். இதுக்கு நீ ரொம்ப கஷ்டப்பட வேண்டியதில்லை. நேரா கி.பி. 201க்கு போய் இறங்குற. மன்னன் மாறவர்ம பாண்டியனை சந்திச்சு, வெளிநாட்டில இருந்து வர்ற ஒரு விஞ்ஞான நிபுணர்னு உன்னை அறிமுகப்படுத்திக்கோ. அவனோட ஆய்வுப்பணியில உன்னையும் ஈடுபடுத்திக்கோ. இதோ இந்த குறிப்புகளை கையில வெச்சிக்கோ.

இதைப் படிச்சி, இதில இருக்கிறதைப் பேசினாலே போதும்; அவங்களை நீ சமாளிச்சிடலாம். ஓலைச்சுவடியை திருட வேண்டாம். பாத்துட்டாங்கனா கழுத்தை சீவிடுவாங்க. நீ சொன்ன மாதிரியே, 2017காரன், 201ல் செத்துத் தொலைஞ்சிடுவ. அவங்க அசந்த நேரம் பார்த்து, அவங்ககிட்ட இருக்கிற பயோ-கிளாக் ஓலைச்சுவடிகளை இந்த மைக்ரோ கேமிராவில அப்படியே படம் புடிச்சிட்டு, அடுத்த நிமிஷம் நீ திரும்பி வந்திடலாம். இதை மட்டும் செஞ்சிட்டா... டைம் மெஷினோட பேட்டன்ட் ரைட்ஸ் உனக்கு வந்திடும். பயோ-கிளாக் ஆய்வை வெற்றிகரமாக முடிச்சி, அடுத்த வருஷம் நோபல் பரிசை நான் வாங்கிடுவேன்!’’

‘‘எல்லாம் சரி புரபஸர். டைம் மெஷின் இவ்ளோ பெரிசா இருக்கே. இதை எங்க கொண்டு போய் நிறுத்தறது? இதை யாரும் டேமேஜ் பண்ணிட்டா நான் மாட்டிக்குவனே?’’ ‘‘நோ டைகர். டைம் மெஷினோட முழு பகுதியும் உன்னோட வராது. இது கன்ட்ரோல் ரூம் மாதிரி. இங்க நான் இருந்து உன்னோட பயணத்தை கண்காணிப்பேன். இதோ பாரு... டிரான்ஸ்மிஷன் நேவிகேட்டர். இதுல காலத்தை செட் பண்ணிகிட்டு, உன்னோட சட்டையில மாட்டிகிட்டா போதும். நீ செட் பண்ணின காலத்தில போய் இறங்கிடலாம். அங்க வேலை முடிஞ்சதும், திரும்பவும் வரவேண்டிய வருடத்தை இதுல லோட் பண்ணினா முடிஞ்சது வேலை...’’

சொன்னபடியே அவர் கொடுத்த டிரான்ஸ்மிஷன் நேவிகேட்டர் என்கிற சாதனம், பழைய மாடல் பட்டன் செல்போன் சைஸில் ரொம்பக் குட்டியாக, கையடக்கமாக இருந்தது. அவரே அந்த சாதனத்தை இயக்கி, கி.பி.201 என்று காலத்தை பதிவு செய்தார். பிறகு, அதை எனது கையில் கொடுத்தார். ‘‘பத்திரமா போயிட்டு வா டைகர். ஆல் தி பெஸ்ட்!’’டிரான்ஸ்மிஷன் நேவிகேட்டரை சட்டையில் பொருத்தியபடி, குஷன் நாற்காலியில் நன்றாகச் சாய்ந்து அமர்ந்து கொண்டேன். புரபஸர் சொல்லித் தந்தவாறு, கண்களை இறுக மூடிக் கொண்டேன். அப்படியே எவ்வளவு நேரம் உட்கார்ந்திருந்தேன் என்று தெரியவில்லை.

இயந்திரம் ஒருவேளை இயங்கவில்லையோ? இப்படி சும்மாவே எத்தனை நேரம்தான் உட்கார்ந்திருப்பது? எதுக்கும் ஒரு வார்த்தை புரபஸரைக் கேட்டு விடலாம் என முடிவு செய்து கண்களைத் திறந்தால்.... கி.பி. 201! என் கண்களையே என்னால் நம்பமுடியவில்லை. மதுரைதானா இது..? பிளாட்பாரக் கடைகளும், டிராபிக் நெரிசலும், ஜனசந்தடியும், ஈவ்-டீசிங் சமாச்சாரங்களும் நிறைந்த நான்மாடக்கூடல் வீதிகளா இவை? ஆள் அரவமற்றிருந்த வீதிகள். ஆங்காங்கே அபூர்வமாக ஓரிருவர்.... நாடக நடிகர்கள் போல ஆடையணிந்து நடந்து சென்று கொண்டிருந்தனர்.

கருப்பு - வெள்ளை சினிமா போல, ‘‘யாரங்கே?’’ என்று கைதட்டி ஒரு காவலரை அழைத்து, மன்னரைப் பார்க்கவேண்டும் என்று விஷயம் சொன்னேன். அடுத்த நிமிடம் அழைத்துச் செல்லப்பட்டேன். விஷயம் கேள்விப்பட்டதும் மாறவர்ம பாண்டியனும், காஷ்யேபச்சந்திர மச்சாடனனும் நேரில் வந்து என்னை அழைத்துச் சென்றார்கள். எனது ஆய்வு பற்றி விசாரித்தார்கள். புரபஸர் எழுதிக் கொடுத்த குறிப்புகளை கையில் வைத்துக்கொண்டு படித்தேன். பிரமித்தார்கள். தனியாக எனக்கு ஒரு அறை அமர்த்திக் கொடுத்தார்கள் (நான் ஏ.ஸி.தான் அவய்லபிள்!).அடுத்தநாள் அவர்கள் ஆய்வு அறைக்கு என்னையும் அழைத்துச் சென்றனர். தங்கள் கண்டுபிடிப்புகளைப் பற்றி எனக்கு விளக்கினார்கள்.

நான் முகமெல்லாம் ஆச்சரியம் அப்பிக் கொண்டு அதைக் கேட்டேனே தவிர, அவர்கள் சொல்வது சுத்தமாக எனக்குப் புரியவில்லை. உயிர் கடிகாரம் என்றால், அதை எந்தக் கையில் கட்டிக் கொள்வது என்று கேட்கும் ரகமல்லவா நான்? வந்த வேலையென்னவோ... அதில் கருத்தாக இருந்தேன். மதிய விருந்து வேளையின் போது, மன்னனுக்கும், ஆஸ்தான ஜோதிடனுக்கும் தெரியாமல் ஓலைச்சுவடி முழுவதையும் புரபஸர் கொடுத்தனுப்பிய மைக்ரோ கேமிராவில் படம் பிடித்து விட்டேன்.

அப்பாடா... சக்ஸஸ். கேமிராவும், கையுமாக உடனே கிளம்பிப் போய் புரபஸரை சந்திக்க வேண்டியது மட்டும்தான் பாக்கி. மனதெல்லாம் சந்தோஷமாக இருந்தது. எவ்வளவு பெரிய சாதனை பண்ணியிருக்கிறோம் என எனக்கு நானே சிலிர்த்துக் கொண்டேன். மாறவர்ம பாண்டியனும், காஷ்யேபச்சந்திர மச்சாடனனும் எனக்காக ஸ்பெஷலாகத் தயாரித்து அளித்த விருந்தை ஒரு பிடி பிடித்தேன். அசைவச் சாப்பாடு என்றால் சாப்பாடு... அப்படி ஒன்றை இந்தக் காலத்தில் நீங்கள் யாரும் சாப்பிட்டிருக்கவே முடியாது. ஆடு, கோழி, மீன் என்று சகல பிராணிகளும், வகை வகையாக, ருசி ருசியாய் சமைத்து அடுக்கப்பட்டிருந்தன.

ஒரு டிபன் கேரியர் எடுத்து வந்திருந்தால், கொஞ்சம் பார்சல் கட்டிக் கொண்டு போயிருக்கலாம் என எனது மனது வருத்தப்பட்டது. அளவுக்கதிகமாக அள்ளி அமுக்கியதில், அடிவயிறு லேசாய் வலிப்பது போல இருந்தது. அதனால் என்ன...? 2017க்குப் போனதும், ஒரு ‘ஜெலுசில்’ போட்டுக் கொண்டால் சரியாகி விடும்! விருந்து இடைவேளையில் எனது பாக்கெட்டில் இருந்த லேட்டஸ்ட் ரக ஆண்ட்ராய்ட் செல்போனை எடுத்து மன்னன் மாறவர்ம பாண்டியனிடம் காட்டினேன். டவர் சுத்தமாக கிடைக்கவில்லை. என்றாலும், அதிலிருந்த இளையராஜாவின் எம்பி 3 ரிங் டோன்கள், பாடல்கள், டாக்கிங் டாம் கேம்ஸ் மன்னனையும், ஜோதிடரையும் ரொம்பவே கவர்ந்து விட்டன.

டாக்கிங் டாமுடன் அவ்வளவு சந்தோஷமாக, ஆச்சர்யமாக போட்டி போட்டுக் கொண்டு பேசினார்கள். ருசியாக விருந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த போது, ஒரு ஏவலாள் உடலை வில்லாக வளைத்து குனிந்து, மன்னனை வணங்கி நின்றான்.‘‘வந்த விஷயம் என்ன... சொல்!’’ என்றான் மாறவர்ம பாண்டின். ‘‘அமைச்சர் சுந்தரகனகேந்திரன் தங்களைப் பார்க்க வந்திருக்கிறார் மன்னா...’’ ‘‘முக்கிய விருந்தினருடன் இருக்கிறேன். இப்போது பார்க்கமுடியாது. மாலையில் வரச்சொல்!’’ ‘‘இல்லை மன்னா. விஷயம் மிக முக்கியமாம். உங்களை உடனே பார்த்தாகவேண்டுமாம்...’’சிறிதுநேரம் யோசித்த மாறவர்ம பாண்டியன், ‘‘சரி வரச்சொல்.’’ என்று கையசைத்தான்.

அடுத்த சில நிமிடங்களில் நம்மூர் கட்டாய ஹெல்மெட் போல, ஒரு கிரீடம் அணிந்து அமைச்சர் சுந்தரகனகேந்திரன், உள்ளே கம்பீரமாக நுழைந்தான். மன்னனுக்கு அருகேயிருந்த நாற்காலியில் அமர்ந்தான். மன்னன் மாறவர்ம பாண்டியன், ஜோதிடர் காஷ்யேபச்சந்திர மச்சாடனனுடன் எனக்கு அவ்வளவாக புரிபடாத செந்தமிழில் நிறைய, நிறையப் பேசினான். அவர்கள் பேச்சில் லேசாய் அனலடிப்பதை மட்டும் உணரமுடிந்தது. நான் விருந்து மேட்டரில் மும்முரமாக இருந்ததால், அவர்கள் பேச்சில் அக்கறை போகவில்லை.

சிறிது நேரம் பேசிவிட்டு, முறுக்கி திருகப்பட்ட மீசைக்குக் கீழே, உதட்டில் விஷமப் புன்னகையுடன் எழுந்து நின்ற சுந்தரகனகேந்திரன் மன்னனையும், ஜோதிடரையும், அவர்களுடன் கோழித் தொடையைக் கடித்த படி அமர்ந்திருந்த என்னையும் பொத்தாம் பொதுவாகப் பார்த்தபடியே சொன்ன, கீழ்க்கண்ட ஒரே ஒரு பாரா மட்டும் எனக்கு சட்டென புரிந்தது. சாப்பிட்ட அசைவ உணவுகள், அடிவயிற்றைக் கலக்கியது. ‘‘ஒன்றுக்கும் உதவாத இந்த ஜோதிடனோடு சேர்ந்து கொண்டு வெட்டியாக ஆராய்ச்சி, ஆராய்ச்சி என்று ஆட்சியையே கோட்டை விட்டு விட்டீர்கள் மன்னா. இனி நீங்கள் கவலைப்பட்டோ, திருந்தியோ பயனில்லை.

நீங்கள் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் இந்த அறுசுவை அசைவ விருந்தில் நஞ்சு கலக்கப்பட்டு விட்டது. எழுந்து வந்து என்னைத் தாக்க உங்கள் மனம் நினைத்தாலும் இனி உடல் உங்களுடன் ஒத்துழைக்காது. அப்பேர்ப்பட்ட மிகக் கடுமையான நஞ்சு அது. இப்போதே அடிவயிறு வலித்திருக்குமே..? அடுத்த சில வினாடிகளில் நீங்கள் இருவர் மட்டுமல்ல.... புதிதாக வந்திருக்கும் இந்த அப்பாவி அரச விருந்தாளியும் சேர்ந்து மரணபுரி செல்லப்போகிறீர்கள் மன்னா. பாண்டிய தேசத்தின் புதிய மன்னனாக இன்னும் சிறிதுநேரத்தில் நான் முடிசூட்டிக் கொள்ளப்போகிறேன். வரட்டுமா..?’’  

டயமண்ட் புதுசு!
ரஷ்யாவின் யாகுட்டியா பகுதியிலுள்ள சுரங்க நிறுவனத்தில் 27.85 கேரட்டில் மாஸ் சைஸ் வைரம் கண்டறியப்பட்டுள்ளது. அரிய வைரமாக அல்ரோஸா வைர கூட்டமைப்பினால் மதிப்பிடப்பட்டு வரும் இந்த வைரமே அதன் ஏல ஹிஸ்டரியில் மிகப்பெரிய வைரமாம்.

பாடிபில்டர் துறவி!
தாய்லாந்தில் பழனி படிக்கட்டாய் உடலை வைத்திருக்கும் துறவி ஒருவரின் படம் வைரலாகி வருகிறது. துறவிகளுக்கான ஆரோக்கிய உணவுப்பொருட்களை தானம் கேட்கும் சோஷியல் தள பதிவு அவருடையது. ஆரோக்கிய விழிப்புணர்வுக்கான மனிதர், இப்போதுதான் பௌத்தத்தில்சேர்ந்திருக்கிறார் என தாறுமாறு கமெண்டுகள் க்யூ கட்டுகின்றன.

சைக்கிள் ரேஸில் கங்காரு!
ஆஸ்திரேலியாவில் அடிலெய்ட் ஹில்ஸில் சைக்கிள் ரேஸ் நடைபெற்றது. அதில் சைக்கிள் வீரர்கள் மும்முரமாய் பெடல் மிதித்து சைக்கிள் ஓட்ட, அவர்களின் இடதுபுறம் கங்காரு ஒன்றும் அவர்களுடன் அரை கி.மீ. ஓடிவந்த காட்சி வீடியோ, இணையத்தில் ஜாலி வைரலாகியுள்ளது.

ட்ரெயினில் சாகசவீரன்!
ஆஸ்திரேலியாவின் பெர்த்திலுள்ள மிட்செல் ப்ரீவே வழித்தடத்தில் 70 கி.மீ., வேகத்தில் வந்த ட்ரெயினைப் பார்த்த மக்களுக்கு செம ஷாக். ட்ரெயின் எஞ்சினில் வைப்பரைப் பிடித்தபடி ஒருவர் நின்று கொண்டிருந்ததுதான் காரணம். உடனே காவல்துறை ரயிலை நிறுத்தி சாகச வீரனைக் கைது செய்து கடமையாற்றியுள்ளது.