கரடி காதலன்!- ச.அன்பரசு

தட்டில் விழும் ஒரு ரூபாய், இரண்டு ரூபாய்க்காகக் கயிற்றில் இழுபட்டு, குழுமியிருக்கும் கூட்டத்துக்கு இடையில் நடு வீதியில் நடனமாடும் கரடியை பார்த்திருக்கிறீர்களா? கையில் ஐந்து ரூபாய் வைத்ததும் மந்திரித்த தாயத்தை வாயில் எடுத்து ‘ப்பூ’ என ஊதித் தரும் கரடி, சர்க்கஸ் சைக்கிளை கோமாளிக்குப் போட்டியாக ஓட்டிச்செல்லும் கரடி... என மனிதன் தன் பிழைப்புக்காக கரடியையும் விட்டுவைக்கவில்லை. எங்கோ நூற்றுக்கணக்கான கி.மீ.தொலைவுக்கு அப்பால் உள்ள தன் வனத்தை மனதில் சுமந்துகொண்டிருக்கும் கரடி எப்படி நடனமாடுகிறது?சைக்கிள் ஓட்டுகிறது?

இத்தகைய பயிற்சி பெற்ற கரடிகளை குட்டியில் இருந்தே உருவாக்க வேண்டும். தாய் கரடிக்குப் போக்குக் காட்டி, முடிந்தால் அதைக் கொன்றுவிட்டு குட்டியைக் கைப்பற்றிக் கொண்டுவருவது முதல் பணி. பின், அதன் நகங்களை நன்றாகக் கத்தரித்துவிட்டு, வாயில் உள்ள கோரைப் பற்களைப் பிடுங்கிவிட வேண்டும். மாட்டுக்கு மூக்கணாங்கயிறு போடுவது போல மூக்குக்கும் வாய்க்கும் இடையில துளையிட்டு கயிற்றைப் பிணைக்க வேண்டும். முகத்தில் உள்ள புண்ணை ஆறாமல் பார்த்துக்கொண்டால் கரடி நம் கட்டுப்பாட்டிலேயே இருக்கும். ஆடச் சொன்னால் ஆடும். ஓடச் சொன்னால் ஓடும்.

சைக்கிள் என்ன புல்லட்டே ஓட்டும். வனவிலங்குகளில் கரடி ஒரு முக்கியமான பேருயிர். புலிகள், யானைகள் போலவே கரடிகளும் வனத்தின் சூழலியலைக் காப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. மனிதன் தன் சுயநலத்துக்காக கரடியை வேட்டையாடும்போது வனத்தின் பல்லுயிர் சூழல் பாதிக்கப்படுகிறது. இந்நிலையில் ஓர் இளைஞர் கரடிகளுக்கு நேரும் இந்த அநீதிக்கு எதிராகத் தொடர்ந்து போராடி வருகிறார். அவர் பெயர் கார்த்திக் சத்தியநாராயணன். 1997ம் ஆண்டு தெருவில் வித்தை காட்டப் பயன்படுத்தப்படும் கரடிகள் குறித்த ஆய்வைத் தொடங்கிய கார்த்திக், 15 ஆண்டுகள் கடுமையாக உழைத்து 2009ம் ஆண்டு தன் ஆய்வை நிறைவு செய்தார்.

சுமார் 1,500 கரடிகள் குறித்த தகவல்களைத் திரட்டி தன் ஆய்வில் பதிவு செய்துள்ளார். ‘‘முதலில் அந்த இடத்தில் நுழையும்போது எதுவுமே கண்களுக்குத் தெரியவில்லை. கடும் இருட்டு. சிறிது பயமாகக்கூட இருந்தது. பிறகு, நிலவொளி வந்ததும் அதில் மான்கள், புலிகள் எல்லாம் குட்டையில் ஒன்றாக நீர் அருந்துவது காணக் கிடைக்காத அதிசயமாக என்னை மயக்கியது...’’ எனத் தன் பால்ய நினைவுகளை மெல்லிய குரலில் ரீவைண்ட்செய்கிறார் கார்த்திக். இந்த சம்பவம் நிகழ்ந்தது அவரின் 14 வயதில். தன் அம்மாவிடம் பொய் சொல்லிவிட்டு, தன் நண்பனான சந்தேஷ் காடூரோடு பைக்கில் சிட்டாகப் பறந்து பனர்கெட்டா தேசியப் பூங்காவுக்குச் சென்றபோது அவர் கண்ட அதிசயக் காட்சிதான் இது.

பள்ளிப்படிப்பை முடித்த பின் கல்லூரியில் வணிகப் படிப்புக்கு விண்ணப்பித்தார். முதலாம் ஆண்டு படிப்பின்போது, நியூயார்க் உயிரியல் சங்கத்தில் இந்தியக் காடுகளில் ஆய்வு செய்வதற்கான ஆய்வாளர் தேவை என்ற நியூயார்க் உயிரியல் சங்கத்தின் விளம்பரத்தை ஒரு நாளிதழில் கண்டார். ‘‘அந்த விளம்பரம்தான் என் காட்டுயிர் வாழ்வுக்கான அடித்தளம். வனம் பற்றி படித்த பலரும் விண்ணப்பிப்பார்கள் என்ற அவநம்பிக்கை கடைசிவரை மனதில் இருந்தது. விலங்குகளை ஒரு வாரம் அருகில் இருந்து கவனிப்பது ஆய்வின் பகுதி. இது ஏறத்தாழ தடய அறிவியல் போன்ற பணி. ஆனால், ஆச்சரியகரமாக எனக்கு அந்தப் பணி கிடைத்தது.

என் கல்லூரி ஆசிரியர்களின் ஆதரவுடன் ஆய்வை செய்தேன. பின் தில்லிக்குச்சென்று வைல்ட் லைஃப் எஸ்ஓஎஸ் நிறுவனத்தின் துணை நிறுவனராக சூழலியலாளர் சேஷமணியோடு இணைந்து செயல்படத் தொடங்கினேன். இந்தக் காலகட்டம் என் வாழ்வில் முக்கியமானது...’’ என அசைபோடுகிறார் கார்த்திக். 1995ம் ஆண்டு தொடங்கப்பட்ட வைல்டு லைஃப் எஸ்.ஓ.எஸ் என்ற அமைப்பு, கரடி மற்றும் யானைகளுக்கான காப்பகங்கள் ஆதரவற்ற தெரு விலங்குகளுக்கான ஃப்ரெண்டிகோஸ் என்ற தனிக் காப்பகமும் மருத்துவமனையையும் நடத்தி வருகிறது. தில்லியில் விலங்குகள் துன்புறுத்தப்பட்டால் அதை மீட்பதற்கான 24 மணி நேர ஹாட்லைன் எண்ணையும் 1999ம் ஆண்டு இவ்வமைப்பு அறிமுகப்படுத்தியது.

முள்ளெலி, ஆமை, பாம்பு, நரி, சிறுத்தை, புனுகுப்பூனை, மான், குரங்கு, மைனா உள்ளிட்ட ஏராளமான விலங்குகள் முறைகேடான வகையில் கடத்தப்படுவதையும் தடுத்திருக்கின்றனர். இப்போது, வனவிலங்குகள் மற்றும் சூழல்களுக்கான 49 திட்டங்களை மாநில அரசு மற்றும் தொண்டு நிறுவனங்களின் நிதி உதவியோடு இந்த அமைப்பினர் மேற்கொண்டு வருகின்றனர். கரடிகளைக் காட்டிலிருந்து பிடித்து வந்து நடனமாட பழக்குவதை கலந்தர் என்ற இஸ்லாமியப் பிரிவைச் சேர்ந்த மக்கள் ஒரு தொழிலாகவே செய்து வந்தனர். இவர்களுக்கான மறுவாழ்வு முயற்சிகளை வைல்டு லைஃப் அமைப்பு தீவிரமாகச் செய்து கரடிகளைக் காப்பாற்ற முனைந்தது.

‘‘வறுமை, சமூகப் புறக்கணிப்பு, கல்வியறிவின்மை, கரடிகளை விடுத்து வேறு தொழில் தெரியாத இக்கட்டான நிலைமையில் கலந்தர் மக்களைத் தண்டிப்பதில் எந்த நியாயமும் இல்லை. ஏனெனில், அவர்களைச் சிறைக்கு அனுப்பினாலும் மேலும் தீவிரமான குற்றவாளியாகவே மாறியிருப்பார்கள்...’’ எனக் கள யதார்த்தம் பேசும் கார்த்திக், வைல்டு லைஃப் நிறுவனத்தில் உள்ள 200 ஊழியர்களில் 80 பேருக்கு மேல் கலந்தர் மக்களுக்கே பணி வாய்ப்பளித்துள்ளார். 1999ம் ஆண்டு உத்தரப்பிரதேச அரசு உதவியுடன் ஆக்ரா அருகில் வாடகைக்குக் கிடைத்த நிலத்தில் வைல்டு லைஃப் எஸ்.ஓ.எஸ் நிறுவனம், கரடிகளுக்கான மறுவாழ்வு மையத்தைத் தொடங்கியது.

இங்கு கரடிகளைப் பாதுகாக்க எடுக்க வேண்டிய விழிப்புணர்வு நடவடிக்கைகளையும், அதற்கான நன்கொடைகளையும் பெறுவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டன. அதில் ஒன்றுதான் கரடிகளை வைத்துள்ள கலந்தர் இனத்தினர், தம் வசம் உள்ள கரடிகளை வனத்துறையிடம் ஒப்படைத்தால், அவர்களுக்கு மாற்றுத் தொழில் தொடங்கப் பண உதவி வழங்கும் திட்டம். இந்த முறையில், அழியும் நிலையில் உள்ள கரடிகளை வைத்திருந்ததற்காக வனத்துறை, கலந்தர் இன மக்களின் மீது எவ்வித வழக்கும் பதியாது என்பதுதான் ஒப்பந்த வாக்
குறுதி. 2002ம் ஆண்டில் முன்னா என்பவர் இந்தத் திட்டத்தின் வழியாக தன் வசம் இருந்த ராணி என்ற கரடியை வைல்டு லைஃப் நிறுவனத்திடம் ஒப்படைத்தார்.

அதன் பயனாக அவருக்கு மாற்றுத் தொழில் முயற்சிக்காக ரூ.50 ஆயிரம் வழங்கப்பட்டு வண்டியோட்ட பயிற்சி அளிக்கப்பட்டது. முதலில் தனிநபர் நிதி மூலமே செயல்பட்டு வந்த வைல்டு லைஃப் நிறுவனத்துக்கு இன்று, உலகில் பல்வேறு நாடுகளிலுள்ள தொண்டு நிறுவனங்களில் இருந்தும் கரடிகளைப் பாதுகாப்பதற்கான நிதி கிடைக்கிறது. இப்போது ஆக்ராவில் 160 ஏக்கரில் பரந்து விரிந்துள்ள வைல்டு லைப் காப்பகத்தில் 628 கரடிகள் பாதுகாக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன. 3,000 கலந்தர் இன மக்களுக்கு மறுவாழ்வு முயற்சிகளும் செயல்படுத்தப்பட்டுள்ளன. இதன் அடுத்த கட்டமாக இப்போது மதுராவில் யானைகளுக்கான காப்பகத்தையும் தொடங்கியுள்ளது வைல்டு லைஃப் அமைப்பு. ‘‘காட்டின் பேரரசனான யானையைப் பிச்சை எடுப்பது, சர்க்கஸ் உள்ளிட்ட வணிகச் சுரண்டலில் இருந்து மீட்க வேண்டியது அவசியம். எங்கள் அமைப்பின் அடுத்த லட்சியம் அவற்றை மீட்பதுதான்!’’ என்கிறார் கார்த்திக்.     

வைல்டு லைஃப் 
1995ம் ஆண்டு தொடங்கப்பட்ட வைல்டு லைஃப் அமைப்பு, இந்தியாவில் உள்ள ஒன்பது மாநில அரசுகளோடும் பல்வேறு உலகளாவிய அமைப்புகளோடும் இணைந்து உயிரியல் பன்மைச் சூழலுக்குப் பாடுபடுகிறது. இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவிலும் இந்த அமைப்புக்குக் கிளைகள் உள்ளன. இந்தியாவில் எட்டு இடங்களில் வைல்டு லைஃப் அமைப்புக்குக் காப்பகங்கள் உள்ளன.

சுற்றுச்சூழலுக்கான பிளான்மேன் விருது (2009), இந்திரா காந்தி பரியாவரன் புரஸ்கார் விருது (2010) ஆகிய அங்கீகாரங்களை இதன் துணை நிறுவனரான கார்த்திக் தன் 23 ஆண்டு காட்டுயிர் சேவை செயல்பாடுகளுக்காகப் பெற்றுள்ளார். 1,500க்கும் மேற்பட்ட பல்வேறு தெரு விலங்குகளுக்கு சிகிச்சை அளிப்பதில் தளர்வுறாமல் செயல்பட்டு வரும் முக்கியமான அமைப்பு இது.

உலகளவில் வனவிலங்குக் கடத்தல்
* கடந்த 10 ஆண்டுகளில் கொல்லப்பட்ட எறும்பு தின்னிகளின் எண்ணிக்கை - 1 மில்லியன்.
* அதிகம் வேட்டையாடப்படும் விலங்குகள் - எறும்புதின்னி, காண்டாமிருகம், யானை.
* தென் ஆப்பிரிக்காவில் காண்டாமிருகம் வேட்டை விகிதம்- 9000% 13 (2007), 1,175 (2015).
* தான்சானியா காடுகளில் வேட்டையாடப்பட்ட யானைகள் (2010 - 2013) - 6 யானைகள் (தினசரி) 15,217 (மிச்சமிருப்பவை).
* கடத்தல் துறைமுகங்கள் மலேசியா (மம்பாஸா, ஸான்சிபார், கேலங்), சிங்கப்பூர், ஹாங்காங், ஹைதி, மியாமி.