இளைப்பது சுலபம் - வெஜ் பேலியோவில் எடை குறைப்பது எப்படி?அனுபவத் தொடர் - 15

- பா.ராகவன்

ஒரு நடைமானி உங்களுக்குத் தரக்கூடிய ஆகப்பெரிய பரிசு, நிகரே சொல்ல முடியாத, அபாரமான தன்னம்பிக்கை உணர்ச்சி. இதை அனுபவித்துப் பார்த்துவிட்டே சொல்கிறேன். நான் அந்த நடையளவுப் பட்டையைக் கையில் கட்டிக்கொண்டு நடக்க ஆரம்பித்த முதல் நாள் மூவாயிரத்து ஐந்நூறு தப்படிகள் நடந்தேன். வாழ்நாளில் அதற்குமுன் நான் அவ்வளவு நடந்ததில்லை. ஒருவேளை வாழ்நாள் முழுதும் அதுவரை நடந்ததன் மொத்த எண்ணிக்கையாகவும் அது இருக்கக்கூடும். அப்படிப்பட்டவன், ஒரு மணி நேரத்தில் மூவாயிரத்து ஐந்நூறு தப்படிகள் நடந்திருக்கிறேன் என்பது எவ்வளவு பெரிய விஷயம்!

மறுநாள் என் இலக்கு நாலாயிரம் தப்படிகளாக இருந்தன. அடுத்த நாள் நாலாயிரத்து ஐந்நூறு. ஆனால், ஒவ்வொரு நாளும் நான் இலக்காக வைத்ததைக் காட்டிலும் குறைந்தது இருநூற்று ஐம்பது தப்படிகள் அதிகமாகவே நடந்தேன். எப்படியாவது ஒரு நாள் பத்தாயிரம் என்னும் கனவு எண்ணைத் தொட்டுவிட வேண்டுமென்கிற வெறி அப்போதுதான் உண்டாக ஆரம்பித்தது. கூடவே என்னால் எப்படி நடக்க முடிகிறது என்கிற வியப்பு கலந்த வினாவும் மனத்துக்குள் பூதாகரமாக எழுந்து நின்றது. தலைமுறை தலைமுறையாகப் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக நமது மூதாதையர் உண்டு வந்த அதே உணவைத்தான் நானும் உண்டு கொண்டிருந்தேன்.

உடல் உழைப்பு என்ற ஒன்று இல்லாத படியால் தருமமின்றி பருமன் கண்டேன். இப்போதும் உடல் உழைப்பு கிடையாதுதான். அதே உட்கார்ந்து பார்க்கிற உத்தியோகமே. ஆனால், உணவை மட்டும் மாற்றினேன். இதனால் மட்டுமே எப்படி நடக்க முடிகிறது? சூட்சுமம் இதுதான். கார்போஹைடிரேட் அதிகமுள்ள அரிசி, கோதுமை போன்ற தானிய உணவுகளின் அடிப்படை சுபாவம், நாம் உள்ளே அனுப்பும் உணவின் பெரும்பகுதியை சக்தியாக்கிச் சேமித்து வைப்பது. அதாவது, கொழுப்பாக்கிச் சேமிப்பது.

கொழுப்புணவின் அடிப்படை, உள்ளே போகும்போதே சக்தியாக உருப்பெற்று செலவாவது. ‘கொழுப்பாதல்’ என்னும் ப்ராசஸ் அங்கு இல்லையல்லவா? நேரடி சக்தி. நேரடி செலவு. நாம் உண்ணும் உணவில் இருந்து பெரும்பகுதி. அதனோடுகூட ஏற்கெனவே உடலுக்குள் சேமிக்கப்பட்டிருக்கும் ஸ்டாக் கொழுப்பில் இருந்து ஒரு பகுதி. இப்படித்தான் கொழுப்பு கரைய ஆரம்பிக்கிறது. சேமிப்புக் கொழுப்பு கரையும்போது உடல் லேசாகத் தொடங்குகிறது. உடல் லேசாகும்போது நடப்பது, ஓடுவது அனைத்தும் எளிதாகிவிடுகிறது!

எண்ணி ஒரு மாதம். நடைப்பயிற்சி என் மொத்த மனோபாவத்தை, சுபாவத்தை, நடவடிக்கைகளைத் தலைகீழாகப் புரட்டிப் போட்டது. நம்ப முடியாத அளவுக்கு நான் சுறுசுறுப்பாக இருப்பதாக உணர்ந்தேன். ஒரு வேலையைச் செய்து முடித்ததும் எப்போதும் வருகிற அடித்துப் போடும் களைப்பு இல்லை. பத்து நிமிஷம் படுத்து எழுந்திருக்கலாம் என்கிற உணர்வில்லை. என்னத்தையாவது கொறிக்கலாம் என்ற எண்ணமில்லை. அடுத்து என்ன செய்யலாம் என்று மனம் பரபரக்க ஆரம்பித்ததை விழிப்புடன் கவனித்தேன். இதே காலக்கட்டத்தில்தான் இன்னொன்றும் நிகழத் தொடங்கியது. அது, பசி குறைந்து போதல்.

அது நான் பேலியோ தொடங்கிய மூன்றாவது மாதம். சுமார் பதினாலு அல்லது பதினைந்து கிலோ இளைத்திருந்தேன். பயங்கர கிளுகிளுப்பாக இருந்தது. பார்க்கிறவர்கள் எல்லோரும் என்னவென்று விசாரிக்க ஆரம்பித்திருந்தார்கள். யாராவது அகப்பட்டால் நானும் இழுத்து உட்காரவைத்துப் பிரசங்கம் செய்யத் தொடங்கியிருந்தேன். அது ஒரு வியாதியாகவே ஆகிவிட்டிருந்ததை உணர முடிந்தது. ஆனால், மகிழ்ச்சியான வியாதி. நான் புதிதாக ஒன்றைக் கண்டடைந்திருக்கிறேன். ஓர் உணவு முறை. வாழ்க்கை முறையைத் தலைகுப்புறப் புரட்டிப்போடுகிற உணவு முறை. இதன்மூலம் என் வியாதிகள் சொஸ்தமாகின்றன. உடம்பு இளைக்கிறது. என் இளமை எனக்கு திரும்பக் கிடைக்க ஆரம்பித்திருக்கிறது. சாதனையல்லவா? சாகசமல்லவா?

முன்பெல்லாம் எனக்கு தினசரி ஐந்து வேளை பசி வரும். வரும் என்றால் மெதுவாகவெல்லாம் வராது. திடீரென்று ஒரு கணத்தில் வயிற்றுக்குள் ஒரு புரட்சி நிகழும். குப்பென்று உச்சந்தலையில் வியர்த்துவிடும். விரல்கள் நடுங்க ஆரம்பிக்கும். படபடப்பு கூடும். அடுத்த கணம் வயிற்றுக்குள் என்னத்தையாவது திணித்தால்தான் சரி. பத்து நிமிடம் தாமதமானாலும் முடிந்தது கதை. ரத்தக் கொதிப்பு எகிறிவிடும். இதனாலேயே கைவசம் எப்போதும் சில நொறுக்குத்தீனிகள் ஸ்டாக் வைத்திருப்பேன். உணவுக்குத் தாமதமானாலும் சிற்றுணவால் சற்றுச் சமாளித்துவிட முடியுமல்லவா? அதனால்.

ஆனால், இப்போது எனக்கு அத்தகைய பசி உணர்ச்சி மெல்ல மெல்லக் குறைந்ததைக் கண்டேன். சிறுதீனிகள் நின்றுபோயிருந்தன. பேலியோ அனுமதித்த சீஸ், கொய்யாக்காய் வகையறாக்களைக் கூட நான் அதிகம் தொடவில்லை. காலை பாதாம் சாப்பிட்டுவிட்டு, மதியம் காய்கறிகளுக்குப் போகவே இன்னும் சிறிது நேரம் தள்ளலாமா என்று தோன்றியது. என் பிரச்னை என்னவென்றால் மதிய உணவை நான் ஒரு மணிக்கு முடித்தே தீரவேண்டும். பசி காரணமல்ல. சாப்பிட்டுவிட்டு இரண்டு மணிக்காவது படுத்தால்தான் ஆறு மணிக்கு எழுந்து என் வேலையைத் தொடங்க சௌகரியமாக இருக்கும்.

எழுத்துப் பணியில் இருப்பவன் பெரும்பாலும் ராக்கோழி. அதுவும் நான் இயங்குவது சீரியல் துறை. முதல் நாள் இரவுதான் அடுத்த நாளுக்கான திட்டமே பெரும்பாலும் வகுக்கப்படும். அதன்பிறகு உட்கார்ந்து எழுத ஆரம்பித்தால் முடிப்பதற்குள் பாதி பொழுது விடிந்துவிடும். இப்படி இரவெல்லாம் கண் விழிக்க வேண்டுமென்றால் பகலில் சற்றுத் தூங்கினால்தான் முடியும். இங்கேதான் எனக்கு அந்தச் சிக்கல் வந்தது. எந்தச் சிக்கல்? போன அத்தியாயத்துக்கு முந்தைய அத்தியாயத்தின் இறுதியில் சொல்லியிருந்தேனே, அந்தச் சிக்கல்.
ராத்திரி சாப்பாட்டுக்குப் பிறகு சுழற்றியடிக்கிற தூக்கம். அதைக் கெடுத்துக்கொண்டு எழுதவேண்டியிருப்பதில் உள்ள மெடபாலிசப் பிரச்னைகள்.

என்ன செய்யலாம் என்று சிந்தித்துக்கொண்டிருந்தபோது இன்னொரு நண்பர் அறிமுகமானார். அவர் பெயர் சவடன் பாலசுந்தரன். என்னைப் போலவே பெரும் கனபாடிகளாக இருந்து பேலியோவுக்கு வந்து உடம்பிளைத்தவர். அதுவும் கொஞ்சநஞ்சமல்ல. முப்பது கிலோக்களுக்கு மேல். அவர் சொன்ன ஒரு வார்த்தை என்னை வெகுவாக யோசிக்கவைத்தது. பசித்தால் உண்ணவேண்டும் என்பது எவ்வளவு முக்கியமோ, அதே அளவு முக்கியம், பசிக்காதபோது உண்ணக்கூடாது என்பது! என்ன செய்யலாம்?

எளிது! உங்களுக்கு இரண்டு வேளை உணவு போதுமானதாகத் தோன்றுகிறதென்றால் மூன்றாவது வேளையை மறந்துவிடுங்கள். சாப்பிடாவிட்டால் சிறையில் வைத்துவிடுவேன் என்று யார் சொல்லுவது? அட, இது நன்றாக இருக்கிறதே என்று நினைத்தேன். ‘வாரியர்’ எனக்கு அறிமுகமானது இப்படித்தான். வாரியர் என்றால் விரதம். பேலியோவில் வாரியர் என்பதற்கு உண்ணாதிருப்பது என்று அர்த்தமில்லை. ஒரு நாளைக்குத் தேவையான மொத்தக் கலோரிகளை இருவேளை உணவிலேயே எடுத்துக் கொண்டுவிடுவது. அது பழகிவிட்டால் பிறகு ஒரே வேளை உணவு. ஆனால், முழு நாள் கலோரியும் அதில் கிடைத்தாக வேண்டும்! புரியவில்லை அல்லவா? விளக்குகிறேன்.

பேலியோ கிச்சன் - பட்டர் டீ
இது ஒரு காலை உணவு. முன்னூறு மில்லி அளவுக்கு இந்த டீயைக் குடித்துவிட்டுக் கிளம்பினீர்கள் என்றால் மதியம் இரண்டு, மூன்று மணி வரை பசிக்காது. படிக்கும்போது கொஞ்சம் கச்சாமுச்சாவென்று தெரியலாம். ஆனால், அருந்திப் பார்த்தால் விடமாட்டீர்கள். தேவை, முழுக் கொழுப்புப் பால் இருநூறு மில்லி. கொஞ்சம் வெந்நீர். டீத்தூள். முப்பது நாற்பது கிராம் வெண்ணெய். இரண்டு ஸ்பூன் செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெய். ரெகுலராக டீ போடுவது எப்படி என்று உங்களுக்குத் தெரியுமல்லவா? அதே முறைதான்.

டீயைப் போட்டு இறக்கி வைத்துவிட்டு அதில் முப்பது கிராம் வெண்ணெய் சேருங்கள். பிறகு இரண்டு ஸ்பூன் தேங்காய் எண்ணெயை ஊற்றுங்கள். நன்றாகக் கரையும் வரை கலக்கிவிட்டு அப்படியே கல்ப் அடித்துவிடவும். படு பயங்கர டேஸ்ட்டாக இருக்கும். வாசனைக்கு வேண்டுமானால் பெருமாள் கோயில் தீர்த்தப்பொடி போட்டுக் கொள்ளலாம். இது நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும். சர்க்கரை மட்டும் கூடாது. ஒரு சுறுசுறுப்பான காலைப் பொழுதுக்குத் தேவையான கொழுப்புச் சத்து, ப்ரோட்டீன் இரண்டும் இதிலுண்டு. செமையாகப் பசி தாங்கும்.

(தொடரும்)