காப்புரிமையை மீறினால் காப்பு!சட்டம் சொல்வது என்ன?

- இளங்கோ கிருஷ்ணன்

சினிமா பாடல் வரிகளை உல்டா செய்து காதலிக்கு கடிதம் எழுதுவது; யாரோ எழுதிய கவிதையை தன்னுடைய கவிதை என்று தோழிகளிடம் காட்டி காலரைத் தூக்கிவிட்டுக்கொள்வது போன்ற சேட்டைகளை செய்யாதவர்கள் குறைவு. இவை எல்லாம் சுகமான பொய்கள்; இனிமையான ஃபோர்ஜரிகள். ஆனால், யாரோ ஒருவர் உருவாக்கியதை; யாரோ ஒருவர் தன் நேரத்தைத் தொலைத்து, உறக்கம் தொலைத்து, உழைப்பைக் கொட்டி, உயிர் கொடுத்த ஒரு படைப்பை நோகாமல் தனதே போல் சொந்தம் கொண்டாடுவதும்; அதன் மூலம் பொருளாதார லாபம் அடைவதும் எவ்வளவு பெரிய குற்றம்?

அந்தக் குற்றத்தைத்தான் எந்த கூச்சமும் இல்லாமல் இங்கு சிலர் செய்து கொண்டிருக்கிறார்கள். அடுத்தவர் உழைப்பைச் சுரண்டுவதும் திருடுவதும் மோசடி மட்டும் அல்ல; அது ஒரு பெரிய சமூக துரோகம். ஒரு முதிர்ச்சியுள்ள சிவில் சமூகம் இதைப் பார்த்துக்கொண்டிருக்காது. ஆனால், இங்கு நடப்பது என்ன? காப்புரிமைச் சட்டம் முதல் எத்தனையோ சட்டங்கள் இருந்தாலும் கவிதை, கதையில் தொடங்கி புத்தகங்கள், வார, மாத இதழ்கள் வரை சகலஅடுத்தவர் படைப்புகளையும் திருட்டுத்தனமாய் காசாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

டெக் யுகத்து மோசடிகள்
ஸ்மார்ட் போன்கள் வந்த பிறகு மனித வாழ்க்கை அடியோடு மாறிவிட்டது. இன்று செல்போன்களை பேசுவதற்கு மட்டும் பயன்படுத்துவதில்லை. ஏதேனும் தகவல் தெரிய வேண்டும் எனில் கூகுளில் தேடுவது முதல் சினிமா பார்ப்பது, புத்தகம் படிப்பது என சகலமும் நடப்பது செல்போனில்தான். அப்படிப்பட்ட செல்போனில்தான் காப்புரிமை சட்டங்களைக் காற்றில் பறக்கவிடும் குற்றங்களும் தீயாய் நடந்து கொண்டிருக்கின்றன. இன்று, வாட்ஸ் அப், ஃபேஸ்புக், பிளாக் போன்ற சோஷியல் மீடியாக்களில் நாள்தோறும் எண்ணற்ற செய்திகள் பகிரப்படுகின்றன.

இதில் எத்தனை செய்திகள் பதியப்பட்டவர் தன்னுடைய சுய முயற்சியால் கண்டடைந்தது; அவருக்குச் சொந்தமானது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. அதிலும் இந்த வாட்ஸ் அப் என்னும் செயலி ஃபார்வேர்டு மெசேஜ் குப்பைகளை நாள்தோறும் பெருக்கிக் கொண்டேயிருக்கிறது. யாரோ யாருக்கோ அனுப்பிய ஒரு செய்தியை, படைப்பை, பெயரை நீக்கிவிட்டு தன்னுடையது போல எல்லோருக்கும் அனுப்புவது; செய்தியின், படைப்பின் உண்மைத்தன்மை என்ன என்று தெரியாமலே பரப்புவது போன்றவை எல்லாம் இன்று அதிகரித்திருக்கின்றன.

நாள்தோறும் ஆயிரக்கணக்கான புத்தகங்கள் அதன் ஆசிரி யருக்கோ அல்லது பதிப்பாளருக்கோ தெரியாமல் ஊரறிந்த ரகசியமாக இணையவெளி எங்கும் பகிரப்படுகின்றன. கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள், நாவல்கள் மட்டும் அல்ல, ‘குங்குமம்’, ‘ஆனந்த விகடன்’, ‘குமுதம்’ போன்ற வார இதழ்களும் சிற்றிதழ்களும்கூட இப்படி பிடிஎஃப் (PDF) வடிவில் ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு சட்டத்துக்குப் புறம்பான முறையில் பகிரப்படுகின்றன. புத்தகமோ, இதழோ அதற்குப் பின் நூற்றுக்கணக்கானவர்களின் உழைப்பு இருக்கிறது.

ஓர் இதழ் என்றால் அதற்கு பங்களிப்பு செய்யும் நிரூபர்கள் முதல் ஆசிரியர் குழு, மார்க்கெட்டிங், ஏஜெண்டுகள் என நூற்றுக்கணக்கானவர்களின் நேரத்தையும் மூலதனத்தையும் எடுத்துக் கொண்டுதான் ஓர் இதழ் வாசகரின் கைக்கு வருகிறது. இப்படி இருக்கும்போது இவர்கள் இந்த நூல்களை பிடிஎஃப் ஆக்கி சட்டத்துக்குப் புறம்பாக வாட்ஸ் அப்பிலும், ஃபேஸ்புக்கிலும், இணையதளங்களிலும் பகிர்கிறார்கள். சிலர் இதை சட்டத்துக்குப் புறம்பாக விற்கவும் செய்கிறார்கள்.

காப்புரிமைச் சட்டம் என்ன சொல்கிறது?
இந்தக் குற்றத்தைத் தடுக்க முடியுமா என்று வழக்குரைஞர் என்.ரமேஷைக் கேட்டோம். ‘‘இந்தியாவில் அறிவுசார் சொத்துகளுக்கான காப்புரிமை (Intellectual property rights) என்பது 1957ம் ஆண்டு முதல் அமுலில் உள்ளது. அதற்கு ஒரு நூற்றாண்டுக்கு முன்பே புத்தகங்களை பதிவு செய்யும் நடைமுறை இங்கு இருந்தது. நம்முடைய காப்புரிமைச் சட்டம் 1957 (Copyrights Act 1957) சில தெளிவான வழிகாட்டுதல்களைச் சொல்கிறது.

இதன்படி ஒருவரின் படைப்பாற்றல், கற்பனைத்திறன், சிந்தனைத்திறன் ஆகியவற்றின் வழியே உருவாக்கப்படும் இலக்கியப்படைப்போ, இசைப்படைப்போ, சினிமாவோ அதன் ஆசிரியர் அல்லது உருவாக்கியவருக்கே சொந்தமானது. இதற்கு மற்றவர்கள் எந்த வகையிலும் உரிமை கோர முடியாது. இப்படி உருவாக்கப்படும் படைப்பைத் தனியாகப் பதிவு செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. பதிவு செய்ய வேண்டும் என்று விரும்பினால் காப்பிரைட் அலுவலகம் சென்று பதிவு செய்யலாம்.

இப்போது இதன் இணையதளத்திலேயே பதிவு செய்யும் வசதியும் உள்ளது. இது, இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் கீழ் வருகிறது. ஒரு படைப்பு அல்லது நூல் அல்லது பத்திரிகை அது பிரசுரமானது முதலே காப்புரிமைச் சட்டத்தின் கீழ் வந்துவிடுகிறது. எனவே, ஒவ்வொரு படைப்பையும் தனியாகப் பதிவு செய்ய வேண்டும் என்று கட்டாயமில்லை. ஒரு பத்திரிகை என்று எடுத்துக்கொண்டால் அது சில லட்சங்களில் அல்லது கோடிகளில் செலவு செய்து ஊழியர்களைப் பணியில் அமர்த்தி, செய்திகளைச் சேகரித்து, அச்சிட்டு, விநியோகிக்கிறது.

இதில், நூற்றுக்கணக்கானவர்களின் உழைப்பும், அர்ப்பணிப்பும் உள்ளன. இதன் முழுமையான உரிமை அந்தப் பத்திரிகைக்கும் அதில் பங்களிப்பு செய்த படைப்பாளிக்குமே உள்ளது. எனவே, அவர்களின் அனுமதி இல்லாமல் யாரும் ஒரு பத்திரிகையை விநியோகிப்பதோ, விற்பதோ, பிடிஎஃப், ஜெராக்ஸ், ஸ்கேன் என எந்த வகையிலும் நகல் எடுப்பதோ, பகிர்வதோ சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம். ஒரு பத்திரிகையை ஒருவர் வாங்குவதன் மூலம் அதைப் படிப்பதற்கான லைசென்ஸை மட்டுமே பெற்றவராகிறார். மற்றபடி அந்தப் பிரதியை மிஸ்யூஸ் செய்ய முடியாது.

இது மட்டும் அல்ல; நாளிதழ்களில் வேறு ஏதேனும் நோட்டீஸ் வைத்துக்கொடுப்பதுகூட சட்டப்படி தவறானதுதான். ஆனால், இதைப் பற்றிய சட்ட விழிப்புணர்வு இல்லாமல்தான் ஏஜெண்டுகளேகூட நடந்துவருகிறார்கள். இன்றைய டெக்னாலஜி உலகில் எல்லா பத்திரிகைகளுமே ஆன்லைனில் உள்ளன. ஒருவர் சந்தா செலுத்துவதன் மூலம் குறிப்பிட்ட இதழை பிடிஎஃப்பாக டவுன்லோட் செய்துகொள்ள முடியும். இப்படி டவுன்லோட் செய்யப்படும் இதழ்கள் தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றைத் தன்னுடைய வாட்ஸ் அப் மூலமாக மற்றவர்களுக்கு அனுப்புவது, தன்னுடைய இணையதளம் அல்லது பிளாக்கில் அனைவரும் பயன்படுத்துவதும் படியாகப் பகிர்வது போன்ற குற்றங்களைச் சிலர் செய்கிறார்கள்.

இதனால், குறிப்பிட்ட நிறுவனத்தின் பத்திரிகை சர்க்குலேஷன் பாதிக்கப்படுகிறது. இது ஒரு தொழிலையே முடமாக்கும் முயற்சி. சமீபத்தில் சென்னையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், பிரான்சில் உள்ள ஒருவரின் உதவியோடு ‘மேக்னெட்.காம்’ என்ற இணையதளம் மூலமாக வணிக இதழ்களை டவுன்லோட் செய்யும் வசதியை ஏற்படுத்தியிருந்தார். அவரைத் தேடிக் கண்டுபிடித்து சட்டரீதியான நடவடிக்கை எடுத்தோம். இப்போது, சில பேமெண்ட் வாட்ஸ் அப் குரூப்புகள் வந்துள்ளன. இந்த குரூப்பில் உறுப்பினராக வேண்டும் என்றால் மாதம் ஆயிரம் ரூபாய் வரை பணம் கட்ட வேண்டும்.

இதில் உள்ள அட்மின்களுக்கு என்ன வேலை தெரியுமா? தமிழில் வருகிற தினசரிகள், வார இதழ்கள், மாத இதழ்கள், காலாண்டிதழ்கள் போன்றவற்றை ஒரே ஒரு சந்தா கட்டி வாங்கி, டவுன்லோடு செய்து அதைத் தங்களுடைய குரூப்பில் உள்ள நூற்றுக்கணக்கான உறுப்பினர்களுக்குப் பகிர்வதுதான். இதில் என்ன கொடுமை என்றால் இந்த குரூப்பின் அட்மின் ஒருவர் வேறு சில குரூப்களுக்கும் அட்மினாக இருந்தால் அந்த குரூப்களிலும் இது பகிரப்படும். ஒருவரிடம் நாளிதழ், வார, மாத இதழ்களை வாசிக்க மாதம் ஒன்றுக்கு ரூபாய் ஆயிரம் வசூலித்தால் இவர்களின் மொத்த வருமானம் எவ்வளவு?

யாரோ ஒருவர் கோடிக்கணக்கில் முதலீடு செய்து இதழ் நடத்தினால் ஒரே ஒரு மென்பிரதியை சொற்ப தொகைக்குப் பெற்றுக்கொண்டு லட்சக்கணக்கில் ஒருவர் சம்பாதிப்பார் என்றால் இது எவ்வளவு பெரிய மோசடி? கிட்டத்தட்ட திருட்டு டிவிடிக்கு இணையான ஃபோர்ஜரி இது. இன்னும் சிலர் இந்த இதழ்களுக்கு இடையே தங்களது சொந்த கருத்துகளைக் கொண்ட நோட்டீஸ்களை இணைப்பது, இதழ்களின் செய்திகளை டெக்னாலஜியைப் பயன்படுத்தி மாற்றியமைப்பது போன்றவற்றிலும் ஈடுபடுகிறார்கள்.

சிலர் இந்த இதழ்களின் செய்திகளைப் போலியாக உற்பத்தி செய்கிறார்கள். உதாரணமாக, புகழ் பெற்ற ஓர் இதழில் கருத்துக் கணிப்பு நடத்தியது போலவும் அதில் ஓர் அரசியல் கட்சியின் தலைவர் முதல்வராக வரவேண்டும் என்று மக்கள் தேர்ந்தெடுத்திருப்பது போலவும் தகவல் ஒன்று வாட்ஸ் அப்பில் வேகமாகப் பரவியது. இதில், அந்த இதழின் பக்கம் போலவே போலியாக வடிவமைக்கப்பட்ட இமேஜும் இருந்தது. அந்தக் குறிப்பிட்ட அரசியல் கட்சியின் தொண்டர்கள் அதை உற்சாகமாகப் பகிர்ந்துகொண்டிருந்தார்கள்.

பிறகு, அந்த இதழ் இதை ஆதாரபூர்வமாக மறுத்தது. இப்படி பொய்யான செய்திகளைப் பரப்புவதும் காப்புரிமைச் சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம்தான். இது டெக்னாலஜி யுகம். தகவல்கள் பரவுவதைத் தடுக்க முடியாது. ஆனால், ஒருவருக்குச் சொந்தமான ஒரு படைப்பை அவரின் அனுமதியின்றி முறையின்றி பயன்படுத்துவது சட்டரீதியாகத் தவறு என்பதை அனைவரும் உணர வேண்டும்...’’ என அழுத்தம்திருத்தமாக சொல்கிறார் வழக்குரைஞர் என்.ரமேஷ்.

காப்புரிமைச் சட்டத்தின் வரலாற்றுப் பாதை

1867ல் புத்தகங்களைப் பதிவு செய்யும் நடைமுறை இந்தியாவில் கட்டாயமாக்கப்பட்டது. மதராஸ் ராஜதானி என்ற ஒருங்கிணைந்த தென்னிந்தியாவில் வெளியிடப்படும் நாளிதழ்கள், புத்தகங்கள், வார, மாத இதழ்கள் போன்றவற்றை சென்னையில் உள்ள பதிவாளரிடம் பதிவு செய்ய வேண்டும். மூன்று மாதங்களுக்கு ஒரு முறை இந்தப் பட்டியல் கெஜட்டில் வெளியிடப்படும் நடைமுறையும் இருந்துள்ளது.

இதுதான் காப்புரிமைச் சட்டத்துக்கான முன்னோடி வடிவம். பிறகு 1950ல் யுனெஸ்கோ மாநாடு நடந்தபோது ஒரு தீர்மானம் எடுக்கப்பட்டது. இதன்படி, மத்திய அரசு Central Reference Library என்றோர் அமைப்பை ஏற்படுத்தி இந்தியாவில் வெளியாகும் புத்தகங்கள், இதழ்களைப் பதிவு செய்யும் முயற்சியில் இறங்கியது.

இதன் தொடர்ச்சியாக 1957ல் காப்புரிமைச் சட்டம் இயற்றப்பட்டது. இந்தச் சட்டத்தின் விதிமுறைகள்படிதான் இன்றளவும் இந்தியாவில் அறிவுசார் சொத்துரிமைகள் செயல்படுகின்றன. இதன்படி, ஒரு படைப்பின் உரிமை என்பது படைப்பாளர் இறக்கும் வரை அவரிடமும், அவரது மரணத்துக்குப் பிறகு 60 ஆண்டுகள் அவரின் வாரிசுகளிடமும் இருக்கும்.