கிரகங்கள் தரும் யோகங்கள்கும்ப லக்னம் சனி குரு சேர்க்கை தரும் யோகங்கள்

- ஜோதிடரத்னா கே.பி.வித்யாதரன்

ஆழமான கிரகமான சனியோடு, அறிவுக்குரிய கிரகமான குரு சேரும்போது செறிவார்ந்த விஷயங்கள் தாமாக இவர்களிடத்தில் கொட்டும். ஆறாம் அறிவையும் தாண்டி யோசிப்பார்கள். ஒன்றே செய்.. நன்றே செய்.. இன்றே செய்.. என்பதுபோல எதையும் மனதில் நினைத்தவுடனே அந்த வினாடியே செய்து முடிப்பார்கள். முண்டியடித்து முதல் வரிசையில் உட்காருவது எப்போதும் பிடிக்காது. வெற்றியானாலும், தோல்வியானாலும் இவர்கள் எடுக்கும் முடிவே இறுதியானது. ஆளை எடைபோடுவதில் அசகாய சூரர்கள். சிறு சிறு கேள்விகள் கேட்டு திகைக்க வைப்பார்கள்.

இவர்கள் கைகள் அவ்வப்போது அபிநயம் பிடிக்கும். மிகுந்த சிற்றின்பப் பிரியர்கள். விலங்கைக்கூட மனிதர்களைப்போல நண்பனாக பாவிப்பார்கள். இவர்கள் பார்வையில் எப்போதும் ஒரு கனிவு இருக்கும். எங்கு உட்கார்ந்தாலும் காலை ஆட்டிக் கொண்டேயிருப்பார்கள். மேலே சொன்னவை பொதுவான பலன்கள். இனி, ஒவ்வொரு ராசியிலும் லக்னாதிபதியான சனியும் குருவும் தனித்து நின்றால் என்ன பலனென்று பார்ப்போமா?

கும்ப லக்னத்திலேயேஅதாவது ஒன்றாம் இடத்திலேயே சனியும் குருவும் இருந்தால் இவர்களில் பலர் சாதுக்கள், சந்நியாசிகளைப் போல பேசுவதுண்டு. அரசியலில் மிகுந்த ஆர்வம் உண்டு. ராஜதந்திரத்தால் நாடாளும் யோகத்தை எட்டிப் பிடிப்பார்கள். உறவினர்கள், நண்பர்கள் என்று எல்லோரிடமும் தன்மையாகப் பேசுவார்கள். அடுத்தவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று முழுமையாகக் கவனிப்பார்கள். பொய் சொன்னால் கோபத்தால் பொங்கியெழுவார்கள். எந்த நியதிப்படி வாழ்கிறோமோ அதை அவ்வளவாக மாற்ற விரும்பமாட்டார்கள்.

எவ்வளவு பெரிய நிலைமையில் இருந்தாலும் நான் என்ன செய்துவிட்டேன் என்பதுபோன்று சாதாரணராக இருப்பார்கள். பல நேரங்களில் அபத்தமாகப் பேசி அவஸ்தைப்படுவார்கள். இரண்டாம் இடமான மீனத்தில் சனியும் குருவும் சேர்ந்திருந்தால் ஆரம்பக் கல்வியில் மந்தமாகப் படித்துவிட்டு உயர் கல்வியில் சிறப்பாகச் செயல்படுவார்கள். கண்ணில் அழுத்தம் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். சரியாகத் தூங்கி ஓய்வு எடுப்பது அவசியம். பள்ளியில் மதிப்பெண்கள் குறைந்தாலும் கவலைப்பட வேண்டாம்.

கல்லூரியில் வெளுத்துக் கட்டுவார்கள். பள்ளியிறுதி படிக்கும்போதே ஸ்பேஸ் கிராப்ட், பைலட் ஆவது பற்றிய விஷயங்களை காதில் போட்டு வையுங்கள். கனிம வளங்கள், புவியியல் சம்பந்தமான படிப்புகளை படிக்க வைத்தால் மிகவும் சிறப்பாக வருவார்கள். மூன்றாம் இடமான மேஷத்தில் சனியும் குருவும் சேர்ந்திருந்தால் தற்போதைய உலக நடப்பு குறித்துப் பேசாமல், ஐம்பது வருடத்திற்கு முன்புள்ளதையே பேசும் குணம் இருக்கும். காதில் சீழ் வடியும் தொந்தரவு இருக்கும்.

ஒற்றை காதில் வளையம் மாட்டிக் கொண்டு அலைவார்கள். இவர்கள் எதிரே பெற்றோர் அடிக்கடி சண்டை போட்டுக் கொண்டிருக்கக் கூடாது. இதனாலேயே ஹாஸ்டலை அதிகம் விரும்புவார்கள். இவர்களுக்குப் பிறகு பிறக்கும் உடனடி சகோதரரோ அல்லது சகோதரியோ மிகப் பெரிய அளவில் சாதிப்பார்கள். போகத்திலும் சுவையான உணவிலும் நாட்டம் அதிகமிருக்கும். நான்காம் இடமான ரிஷபத்தில் சனியும் குருவும் இணைந்திருந்தால் தயங்கித் தள்ளாடியாவது வீட்டை வாங்கி விடுவார்கள். வடக்கு, வடகிழக்கு திசையிலேயே வீட்டை வாங்கிப் போடுங்கள்.

பள்ளி, கோயில், வங்கி அதிகாரிகள் குடியிருப்பு, குடிசை மாற்று வாரியக் குடியிருப்பு போன்ற இடங்களுக்கு அருகில் வீடு அமைந்தால் நல்லது. கும்ப லக்னக்காரர்களுக்கு வீட்டு யோகத்தைத் தருபவர் ரிஷபச் சுக்கிரன் ஆவார். ஓட்டப்பந்தயம், கால்பந்து போன்ற விளையாட்டுகளில் சிறிய வயதிலிருந்தே ஈடுபாடு காட்டுவார்கள். கொஞ்சம் அதீத பிடிவாத குணத்தோடு இருப்பார்கள். தாய் வழிச் சொத்துகள் இவருக்கு வந்து சேரும். பொதுவாகவே வாகனங்களை கையாளும்போது கவனம் தேவை. ஐந்தாமிடமான மிதுனத்தில் சனியும் குருவும் சேர்ந்திருந்தால் பூர்வீகச் சொத்து இழப்பு ஏற்படும். விருப்பத்திற்கு மாறாக வாரிசுகள் மணம் புரிந்து கொள்வார்கள்.

வேதங்களில் சொல்லப்பட்டுள்ள ஜோதிடம், வானவியல் குறித்து ஆராய்ச்சியில் ஈடுபடுவார்கள். புத்திரனுக்குரிய குருவே புத்திர ஸ்தானத்தில் அமர்வதால் தாமதமாக வாரிசுகள் உருவாகும் வாய்ப்பும் உண்டு. இவர்கள் பிள்ளைகள் நல்ல பாடகராகவோ, பாடல் எழுதுபவராகவோ, இயக்குனராகவோ புகழ் பெறுவார்கள். குருவானவர் அரசாங்கத்தால் கிடைக்க வேண்டிய அத்தனை கௌரவங்களையும் கிடைக்கச் செய்வார். நிறைய அரசியல்வாதிகளைத் தெரிந்து வைத்திருப்பார்கள். மந்திரங்களின் மகத்துவம் அறிந்தவராக இருப்பார்கள்.

ஆறாம் இடமான கடகத்தில் சனியும் குருவும் சேர்ந்திருந்தால் வீண்பழி, சண்டை சச்சரவு ஏற்பட்டு நீங்கும். இவர்கள் கடன் வாங்கவே கூடாது. முக்கியமாக கிணறு, ஆறு, நீச்சல் குளம் போன்றவைக்கு அருகே நின்று வெகுநேரம் விளையாடிக் கொண்டிருக்காதீர்கள். மனசுக்குப் பிடித்தவர்களாக இருந்தால் அள்ளிக் கொடுப்பார்கள். இரவு நேரப் பயணங்களில் பக்கத்து சீட்டுக்காரரோடு தேவையில்லாமல் பேசக்கூடாது. சிறிய கடன்களை அடைக்க மறப்பார்கள். இதனால் வெளிஇடங்களிலும் அலுவலகங்களிலும் நட்பை இழப்பார்கள்.

தங்க நகையை மட்டும் அடகு வைக்கக் கூடாது. ஏனெனில், தங்கத்திற்குரிய குருவோடு சனியும் சேருவதால் நகை மூழ்கிப் போகும் அபாயம் உண்டு. குருவும் சனியும் சேர்ந்திருந்தால் ஆட்சியாளர்களுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபடுவார்கள். ஏழாம் இடமான சிம்மத்தில் சனியும் குருவும் இருந்தால் குரு பார்க்க கோடி நன்மை என்பது மகாவாக்கியம். இவர்கள் ஜாதகத்தில் கிரகங்கள் நீச்சமாகவும், வக்கிரமாக இருந்தாலும், எவ்வளவு பலவீனமானாலும் இந்த இடத்திலிருந்து குரு பார்த்துவிட்டால் போதும், நல்லதே நடக்கும்.

வாழ்க்கைத் துணைவர் கடந்த காலத் தவறுகள், பழைய குப்பைக் கூளங்களை கிளற மாட்டார்கள். ‘‘பரவாயில்லை, ஏதோ சூழ்நிலை சந்தர்ப்பம்’’ என்று மறக்கச் செய்வார்கள். தலையைப் பிடித்துக் கொண்டாலே மாத்திரையும் கையுமாக நிற்பார்கள். இவர்களையும் மீறிப் பேசிவிடுவார்கள். பத்து நிமிஷம் கழித்து, ‘‘நான் தப்பா பேசியிருந்தா மன்னிச்சுடுங்க. மூடு சரியில்லை’’ என்பார்கள். ‘‘கல்யாணம் முடிச்சதுலேர்ந்து மடமடன்னு முன்னுக்கு வந்துட்டாரு. லைஃபே டேர்ன் ஆயிடுச்சு’’ என்று வாழ்க்கையின் மடை மாறும். எட்டாமிடமான கன்னியில் சனியும் குருவும் இணைந்திருந்தால் கொஞ்ச நாட்கள் வெளிநாட்டில் இருந்துவிட்டு மீண்டும் இங்கு வருவார்கள்.

பயணம் செய்து கொண்டேயிருப்பார்கள். தத்துவ ஞானம் மிக்கவர்களாக இருப்பார்கள். மரபு, கலாச்சாரம், பாரம்பரியத்தை விட்டுக் கொடுக்கவே மாட்டார்கள். யாரையும் நம்பி எந்தப் பொருளையும் இவர்கள் ஒப்படைக்கக்கூடாது. இன்ப நினைவுகளை மறந்துவிட்டு எதிர்காலத்தில் சோகமான விஷயங்கள் நடந்துவிடுமோ என்று பயப்படுவார்கள். ஷேர் மூலமாக உச்சத்தில் சென்று அமருவார்கள். இந்த அமைப்பில் காதால் கேட்டதை வைத்துக்கொண்டே தேர்வு எழுதி வெற்றிபெறும் மாணவர்கள் உண்டு.

ஒன்பதாம் இடமான துலா ராசியில் சனியும் குருவும் சேர்க்கை பெற்றிருந்தால் தந்தை தன் ஒட்டுமொத்த வியாபாரத்தையும் இவரிடம் கொடுத்து விட்டு ஒதுங்கிக் கொள்வார். ஆனாலும், நம்பிக்கையற்றும் இருப்பார். எதிரிகளை வீழ்த்துவதை விட்டுவிட்டு முன்னேற்றம் மட்டுமே முக்கியம் என்றிருப்பார்கள். தந்தையாரின் தவறைக்கூட தட்டிக் கேட்டு மாற்றுவார்கள். பத்தாம் இடமான விருச்சிகத்தில் சனியும் குருவும் இணைந்திருந்தால் எந்தத் துறையில் வேலை பார்த்தாலும், அந்தத் துறையில் நிலவும் அன்றாட நவீன வளர்ச்சிகளை கற்றுத் தெளிவார்கள்.

அலுவலகத்திலோ அல்லது அரசாங்கத்திலோ ‘மே ஐ ஹெல்ப் யூ’ என்று ஒரு போர்டு இருந்தால் அங்கு உங்களைத்தான் உட்கார வைப்பார்கள். உங்கள் திறமையும், அர்ப்பணிப்பு குணமும், அடுத்தடுத்து புகழையும் பதவி உயர்வையும் பெற்றுத் தரும். ஆனால், நீடிக்க முடியாதபடி எதிர்ப்புகளும்,போராட்டங்களும் உத்யோகத்தில் தொடர்ந்து கொண்டே இருக்கும். ஆடிட்டிங், வங்கித் துறை, சிபிஐ துறை, வழக்கறிஞர், வானிலை ஆய்வு மையம், நகைக்கடை, ரசாயனம், மருந்துக் கூடம், விளையாட்டுத் துறை, புத்தகம் எழுதுதல், டிடெக்டிவ் ஏஜென்ஸி என்று சில துறைகளில் தடம் பதித்து புகழ் பெறுவார்கள்.

பதினோராம் இடமான தனுசு ராசியில் சனியும் குருவும் சேர்ந்திருந்தால் மூத்த சகோதர, சகோதரி வகையில் மிகுந்த உதவி செய்பவர்களாகவும் அனுகூலமாகவும் இருப்பார்கள். சொந்த சகோதரரே இவர்களிடம் வேலை பார்த்து ஆதரவாக இருந்து முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்வார். பன்னிரண்டாம் இடமான மகர ராசியில் சனியும் குருவும் சேர்ந்திருந்தால் ஆன்மிகத்தில் மிகத் தீவிரமாக ஈடுபடுவார்கள்.  நவீன கல்வியோடு சாஸ்திரப் பயிற்சியும் அடுத்த தலைமுறைக்கு வேண்டுமென்பார்கள்.

அறிஞர்களையும், ஆன்மிகவாதிகளையும் ஆழம் பார்ப்பதற்கு இவர்களைத்தான் அனுப்ப வேண்டும். சனி  குரு சேர்க்கை பெற்றவர்கள் ஆன்மிகத்தையும், தன்னலமற்ற தியாகத்தையும் ஒருசேரக் காட்டும் அமைப்பாகும். இருந்தாலும் சில ராசிகளில் அமரும்போது பகையோ அல்லது நீசம் அடையும்போது சற்றே எதிர்மறை பலன்களை அளிக்கத்தான் செய்யும். எனவே, பொதுவாகவே இந்த அமைப்பை பெற்றவர்கள் புதுக்கோட்டை நகரத்தின் மையத்தில் அமைந்துள்ள புவனேஸ்வரி அம்மனையும், அதே கோயிலில் ஜீவசமாதி கொண்டுள்ள ஜட்ஜ் சுவாமிகளையும் தரிசித்து வருதல் நல்லது.

(கிரகங்கள் சுழலும்) 

ஓவியம்: மணியம் செல்வன்