விஜயனின் வில்



கே.என்.சிவராமன்  - 43

‘‘மகாவிஷ்ணுவோட வாகனம்தானே கருடன்..?’’ ஐஸ்வர்யாவின் குரலில் அச்சம் முழுமையாகக் குடி கொண்டிருந்தது. ‘‘அதுக்கென்ன..?’’ ‘எதுக்கு இப்ப அதைக் கேட்கற..?’ என்பதையே வேறு வார்த்தைகளில் கிருஷ்ணன் கேட்டான். ‘‘அவரை நாம தொந்தரவு செய்யாமத்தானே இருக்கோம்..? அப்புறம் ஏன் நம்மை கருடனை... தப்பு கருடர்களை அனுப்பி இப்படி விரட்டறாரு..?’’ ஐஸ்வர்யாவுக்கு பதில் சொல்லாமல் கிருஷ்ணனும் ஆதியும் மவுனம் காத்தார்கள். சரியாகத்தான் வினவுகிறாள். விடை அளிக்கத்தான் முடியவில்லை.

‘‘தத்திகளை கூட வைச்சுக்கிட்டா இதுதான் பரிசா கிடைக்கும்...’’ நாக உருவத்தை உதறி தன் ஒரிஜினல் உடலை ஏற்றபடி கார்க்கோடகர் பற்களைக் கடித்தார். ‘‘காரியம் கை கூடி வர்ற நேரத்துல இப்படி பானையை உடைச்சுட்டீங்களே...’’‘‘கேமரால ஃப்ளாஷ் வந்ததை சொல்றீங்களா..?’’கேட்ட கிருஷ்ணனை முறைத்தார். ‘‘செய்யறதை செஞ்சுட்டு கேள்வி வேறயா..?’’வட்டமாக சுற்றி நின்ற கருடன்கள் மெல்ல மெல்ல அவர்களை நெருங்க ஆரம்பித்தன.

‘‘எப்படி இறந்தும் ‘உயிரோட’ நான் இருக்கேனோ அப்படித்தான் இந்த கருடன்களும்...’’ பறவைகளின் அசைவை கவனித்தபடியே கார்க்கோடகர் பேச ஆரம்பித்தார். ‘‘இதுங்களுக்கு நான்தான் தேவை. நீங்க இல்ல. அதனால...’’ ‘‘தப்பிக்கச் சொல்றீங்களா..?’’ ஆதி வெட்டினான். ‘‘இல்ல... பொசுங்கச் சொல்றேன்...’’ கார்க்கோடகரின் உதட்டில் இகழ்ச்சி தாண்டவமாடியது. ‘‘பரவால்ல. அப்படித்தான் நடக்கும்னா நடந்துட்டுப் போகட்டும். உங்களை இப்படியே விட்டுட்டு நகர மாட்டோம்...’’

‘‘விசுவாசத்தைக் காட்டறியா ஆதி..?’’ ‘‘நோ. நன்றிக் கடனை செலுத்தறேன்...’’ ‘‘அதுக்கான இடமல்ல இது...’’ ‘‘இடத்தைப் பார்த்து நன்றியை செலுத்த நான் ஒண்ணும்...’’ ‘‘சரி. நீ புத்திசாலிதான். ஒப்புக்கறேன்...’’ கருடன்களின் கால் அசைவை நோட்டமிட்டபடியே தன் உதட்டைப் பிரித்தார் கார்க்கோடகர். ‘‘அந்த புத்திசாலித்தனத்தையும் நன்றிக் கடனையும் வெளில போய் செலுத்து...’’‘‘முடியாது...’’‘‘சுத்த பைத்தியக்காரனா இருக்க. அதனாலதான் இன்னமும் அடியாளாவே உன்னை அந்த மாஸ்டர் வைச்சிருக்கான்... கிருஷ்ணா...’’

‘‘பெரியவரே...’’ நகராமல் குரல் கொடுத்தான் கிருஷ்ணன். ‘‘நான் சொல்ல வர்றதும் இந்த சூழலும் உனக்கும் ஐஸ்வர்யாவுக்கும் புரிஞ்சிருக்கும்னு நினைக்கறேன்...’’ ‘‘ம்...’’ ‘‘ஏற்கனவே நான் செத்தவன்தான்... தவிர காலம்காலமா கருடர்களோட நாங்க சண்டை போட்டுட்டு இருக்கோம். எங்க ப்ளஸ் மைனஸ் எப்படி அவங்களுக்குத் தெரியுமோ அப்படி அவங்களோட பலம் பல
வீனம் எங்களுக்குத் தெரியும்...’’‘‘ம்...’’

‘‘என்னைப் பத்தி கவலைப்படாம நீங்க ரெண்டு பேரும் இங்கேந்து கிளம்புங்க. முடிஞ்சா இந்த விசுவாசியையும் இழுத்திட்டுப் போ!’’ ‘‘...’’ ‘‘நீ ஊகிச்சு படம் எடுத்தது சரிதான்...’’ ‘‘...’’‘‘அந்த ரேகைகள் அர்ஜுனனோட வில்லை எடுக்கறதுக்கான சாவிதான்!’’ ‘‘...’’ ‘‘இடம் எங்க இருக்குனு வெளில நீங்க போனதுமே தெரிஞ்சுடும். என்னுடைய ஆட்கள் அதை தெரிய  வைப்பாங்க. எடுத்த படத்தை அவங்ககிட்ட காண்பிச்சா போதும். மத்ததை அவங்க பார்த்துப்பாங்க...’’

‘‘இது யாரோட கை ரேகை?’’ ‘‘அதை தெரிஞ்சுகிட்டு நீ என்ன செய்யப் போற கிருஷ்ணா..? உனக்குத் தேவை சாவி. போய் பூட்டைத் திற...’’ ‘‘நீங்க..?’’ ‘‘என் பங்காளிங்களை சமாளிச்சுட்டு வந்து சேருவேன்...’’ ‘‘எப்படி... நாங்க போகணும்..?’’ ஐஸ்வர்யாவின் கேள்வி மற்ற இருவரையும் நடப்புக்கு கொண்டு வந்தது. ‘‘பரவால்ல... நீயாவது காரியத்துல கண்ணா இருக்கியே...’’ உதட்டோரம் புன்னகையைக் கசியவிட்டார் கார்க்கோடகர். ‘‘ஒழுங்கா இருந்திருந்தீங்கனா நானே வெளில கொண்டுபோயிருப்பேன். இப்ப..? உங்க சமத்து!’’
‘‘என்ன சொல்றீங்க..?’’

‘‘புடலங்காய்க்கு உப்பில்லைனு! கேள்வி கேட்டு நேரத்தை வீணாக்காத கிருஷ்ணா... codeஐ பிரேக் பண்றதுதானே உன் வேலை... அதை செய்!’’ ‘‘கோட்?’’ ‘‘ம்... ‘நவகிரகமும் எட்டு திசையில் நான்கு மூலையில் ஒன்றுமில்லை நவரத்தினமும் ஒன்றுமில்லை அதிசயமே உலகம் திரிசூலமே நான்காவது லூகாஸ் பஞ்சபூதம்...’ நினைவுல இருக்குல்ல..?’’ ‘‘இது... இது...’’ ‘‘எல்லாத்துக்கும் இதுதான். வாசல் வேற வேற. பூட்டும் வேற வேற. ஆனா, சாவி? இதுமட்டும்தான்! கிளம்புங்க...’’ அதன்பிறகு கார்க்கோடகர் இவர்கள் பக்கம் திரும்பக் கூட இல்லை.

முரண்டு பிடித்த ஆதியை தன் தோளில் கிருஷ்ணன் போட்டுக் கொண்டான். ‘‘நாம அந்தரத்துல மிதக்கறோமா இல்ல பூமில நடக்கிறோமான்னு தெரியலை. ஆனா, நடக்கவும் ஓடவும் முடியுது. அது போதும். கார்க்கோடகர் இந்தப் பக்கமாதான் நம்மை கூட்டிட்டு வந்தார். அதனால இதே பக்கமா நேரா போவோம்...’’ ‘‘நேரா? திசையே தெரியலையே..?’’ ஐஸ்வர்யாவின் இமைகள் படபடத்தன. உண்மைதானே! ‘‘இருக்கட்டும். சந்தர்ப்பத்துக்கு ஏத்தா மாதிரி சமாளிப்போம். இப்ப இங்கேந்து வெளியேறணும்.

அதுதான் முக்கியம். வா...’’  கிருஷ்ணன் நடக்க, ஐஸ்வர்யா பின்தொடர்ந்தாள். திமிறலை ஆதி நிறுத்தியதும் அவனை இறக்கினான். சுற்றிலும் இருட்டு. பொட்டு வெளிச்சமில்லை. பாதையும் புரியவில்லை. எக்குத்தப்பாக யாரிடமாவது சிக்கிக் கொண்டால் ஆபத்து. உண்மை ஆதிக்கு உறைத்தது. எதுவும் பேசாமல் அவர்களைப் பின்பற்றி னான். எதன் மீதும் அவர்கள் முட்டிக் கொள்ளவில்லை. நடந்தார்கள். ஓடினார்கள். ஓடியபடியே இருந்தார்கள். அனுமார் வால் போல அவர்கள் சென்ற ‘திசை’0 நீண்டு கொண்டே சென்றது.

தன் கரங்களை இருபுறமும் கிருஷ்ணன் விரித்தான். பாறையோ... சுவரோ... எதுவும் தட்டுப்படவில்லை. அத்துவான வெளியா..? மெல்ல மெல்ல அச்சம் மூவரையும் சூழத் தொடங்கியது. பாதை முற்றுப் பெறுவதற்கான அறிகுறி ஒன்றும் தெரியவில்லை. ‘‘செல்போன் டார்ச் அடிச்சுப் பார்க்கலாமா..?’’ குரலை வைத்து கேட்டவன் ஆதி என்பது மற்ற இருவருக்கும் புரிந்தது. ‘‘ஏதாவது ஆபத்து வந்தா..?’’ ‘‘சமாளிப்போம். வேறென்ன செய்ய கிருஷ்... இப்படியே இன்னும் எவ்வளவு நேரம்... தூரம் ஓடறது..?’’ ‘‘ஆதி சொல்றது கரெக்ட்தான்...’’

தன் பங்குக்கு ஐஸ்வர்யாவும் ஆமோதித்தாள். ‘‘வாசல் எங்க இருக்குனு தெரிஞ்சாதானே வெளியேற முடியும்..?’’ கிருஷ்ணன் பதிலேதும் சொல்லவில்லை. இருளில் பழகிய வெளிச்சத்திலிருந்து அவன் தன் பாக்கெட்டில் இருந்து செல்போனை எடுப்பது கோடாகத் தெரிந்தது. கணத்தில் அந்தக் கோடு வெளிச்சமாக விரிந்தது. அவ்வளவுதான். சப்தநாடியும் ஒடுங்க மூவரும் அதிர்ந்து நின்றார்கள். காரணம், ஆளுயர முட்டை ஒன்று அவர்கள் முன்னால் அசையாமல் நின்றிருந்தது. அதன் மேல் ‘KVQJUFS’ என தெளிவாக எழுதப்பட்டிருந்தது!

(தொடரும்)

படங்கள் : ஸ்யாம்