குரங்கு பொம்மை- குங்குமம் விமர்சனக்குழு

கடத்திய சிலையிருக்கிற பை, அதைக் கொண்டு வருகிற பெரியவர், பொருளின் விலை அறிந்து திட்டம்போட்டு திருடும் மனிதர்கள், அவர்களின் சூழ்ச்சிகளும், சூதுகளும் தெரியாமல் பலியாகும் மனிதர்களே ‘குரங்கு பொம்மை’. சிலை கடத்துவதை முக்கிய தொழிலாகச் செய்து வருகிறவர் பி.எல்.தேனப்பன். கடத்துவதற்கு நிறைய யுக்திகளோடு மனிதர்கள் மீதான நம்பிக்கையும் முக்கியமாகப்படுகிறது. இந்தத் தடவை அபூர்வமான சிலையொன்று கிடைத்துவிட உயிர் நண்பன் பாரதிராஜாவிடமே கொடுத்து அனுப்புகிறார்.

ஏஜென்ட்டாக இருக்கிற குமரவேலுக்கு மனம் மாற, குணம் கோளாறாக விளைவுகள் மோசமடைகின்றன. இதற்கிடையில் சிலை என்னஆனது? கொண்டு சென்றவரின் கதி என்ன? மனம் மாறியவரின் நிலை என்ன? என பல ட்விஸ்டுகளுடன் அவிழ்கிறது திரைக்கதை. நச்சென்று பாத்திரங்களைக் கையாண்ட வகையிலும், தேர்விலும், விறுவிறுப்பு சேர்த்த பொறுப்பிலும் முதல் படத்திலேயே பிரமாதப்படுத்துகிறார் அறிமுக இயக்குநர் நித்திலன். சகஜமான குற்ற வாழ்க்கைக்குள் இருக்கிற விசுவாசம், துரோகம் ஆச்சரியப்படுத்துகிறது.

அதை அடிப்படையாகக் கொண்டு படத்தின் சின்னச் சின்ன விஷயங்களில் கூட டீடெயில் செய்திருக்கிறார் இயக்குநர். மிகவும் மென்மையான, சினேகம் நிரம்பிய மகனாக விதார்த். ஹீரோயிசத்தில் நுழைந்துவிடாமல், இயல்பில் மிளிர்கிறார். எளிய குடும்பத்தின் நாயகனாக, மிகை இல்லாத நடிப்பில் ஸ்கோர் செய்வது அழகு. ‘சாது மிரண்டால் காடு கொள்ளாது’ வகை நடிப்பும் காண முடிகிறது. இவருக்கும் டெல்னா டேவிஸுக்குமான காதல் புதுவகை. பக்கத்துவீட்டுப் பெண்ணிற்கு மேல் போகாத களையான முகத்தில் ஹீரோயின் கவர்கிறார்.

அப்பாவிச் சித்திரத்தை வெறும் முக பாவத்திலேயே காட்டுகிறார் பாரதிராஜா. படத்தின் ஆதார சுருதி இவரே. குமரவேலுவின் மாறிவிட்ட கொடூர குணத்தையும், நோக்கத்தையும் புரிந்துகொண்டு ‘என் மகனிடம் ஒரே ஒரு முறை பேசிட்டு வந்திடறேன்’  என தளும்பிய குரலில் விரல் நடுங்கி, குரல் நழுவி அழுவது ஆகச் சிறந்த சோகச் சித்திரம். கிரிக்கெட் மைதானத்திலிருந்து பையனைச் சுமந்து கொண்டு வருகிற பாசமுள்ள அப்பாவான குமரவேலின் மறுபக்கத்தை காண்பிக்கிறபோது அதிர்ச்சி!

கொஞ்சம் கொஞ்சமாக முடிவுகளை மாற்றிக் கொண்டு, பதறாமல், எதிராளியின் சைக்காலஜியை சிதைப்பதாகட்டும், திட்டங்களை மாற்றி வேகம் காட்டுவதாகட்டும்... கனகச்சிதம். கிடைப்பதை சுருட்டும் சுட்டி திருடன் கல்கி கலகலப்பு. கோயில் சிலைகளைத் திருடி, கடத்துபவராக பி.எல்.தேனப்பன் சூப்பர். அசப்பில் கேரள வில்லன்களின் தோற்றம் காட்டுகிறார். பார்வையில் பயமுறுத்தாமல், காட்டுக் கூச்சலில் முழக்கமிடாமல் அதிரடி என்டரி!

எதிர்காலத்தில் தல, தளபதிகளை சினிமாவில் எதிர்ப்பார் என எதிர்பார்க்கலாம். நா.முத்துக்குமாரின் நறுக்குத் தெறித்த வரிகள், அஜனீஷ் லோக்நாத்தின் இசையில் துள்ளலுடன் அள்ளுகிறது. உதயகுமாரின் கேமரா வேகத்திலும், நிதானத்திலும் தெளிந்த பயணம். அபினவ் சுந்தர் நாயக்கின் எடிட்டிங் கச்சித வகை. மடோன் அஷ்வினின் வசனங்கள் கதைக்கு துணை நிற்கின்றன. திரைக்கதை மெருகில் ரசிக்க வைக்கும் ‘குரங்கு பொம்மை’யைத் தூக்கிச் சுமக்கலாம்.