விஜயனின் வில்



கே.என்.சிவராமன் - 36

‘‘இல்ல...’’ அழுத்தம்திருத்தமாக சொன்னான் ஆதி. ‘‘அவ தாரா இல்ல...’’ ‘‘உன்னை விட எனக்கு அவளை நல்லா தெரியும்!’’ ஐஸ்வர்யா சட்டென்று இடைமறித்தாள். ‘‘இரு ஐஸ்...’’ அவளைத் தடுத்துவிட்டு ஆதியின் பக்கம் கிருஷ்ணன் திரும்பினான். ‘‘எப்படி அவ்வளவு உறுதியா சொல்ற?’’

‘‘இங்க நடந்துட்டு இருக்கறதை வைச்சுதான்... இப்ப நாம எங்க இருக்கோம்? சுத்திலும் பாருங்க. உலூபி தாயாரோட ராஜ்ஜியத்துலயோ இல்ல நம்மை அவங்க அடைச்சாங்களே... அந்த சிறைலயோ இல்ல. அப்படீன்னா இது எந்த இடம்?’’ அவனைத் தொடர்ந்து மற்ற இருவரும் சுற்றிலும் பார்த்தார்கள். இருட்டாக இருந்தது. காலம், இடம், நேரம்... எதுவும் தெரியவில்லை.

‘‘கார்க்கோடகரோட எல்லைலதான் இருக்கோம். அதாவது நம்மை அவர் விழுங்கினாரே... அதுக்கும் வெளியிடத்துக்கும் மத்தில...’’ ‘‘ஆனா...’’ ‘‘இரு க்ருஷ்... கருடனுக்கும் கார்க்கோடகருக்கும் இதோ சண்டை நடக்குதே... அது எந்த இடத்துல நடக்குதுனுதானே கேட்க வர்ற?’’ நிறுத்திய ஆதி நிதானமாக கருடனுக்கும் கார்க்கோடகருக்கும் இடையில் புகுந்து வெளியேறினான். தாரா என்று ஐஸ்வர்யா சொன்ன பெண்ணை வலம் வந்தான். ஐஸ்வர்யாவையும் கிருஷ்ணனையும் நெருங்கி நின்றான்.

‘‘புரியுதா..? கார்க்கோடகரைத் தவிர மத்த இரண்டு பேர் பார்வைக்கும் நாம தெரிய மாட்டோம். ஏன்னா, இப்பவும் நாம கார்க்கோடகரோட வயித்துக்குள்ளதான் இருக்கோம்...’’ ‘‘பட்... மத்தவங்களுக்கு தெரியாம நாம மட்டுமே உணர்ற மாதிரி ஏன் நம்மை அவர் துப்பினார்?’’ ‘‘இறந்தும் உயிர் வாழற அவர், ஒருவேளை இந்தத் தாக்குதல்ல, தான் மறைஞ்சுட்டாலும் நாம மூணு பேரும் உயிர் பிழைக்கணும்னுதான் ஐஸ்...’’ ‘‘சுத்தமா எதுவும் புரியலை...’’

‘‘கண்டவர் விண்டிலர் விண்டவர் கண்டிலர்னு தமிழ்ல ஒரு பழமொழி உண்டு. அதுதான் இப்ப இங்க அரங்கேறுது. நடக்கறது எல்லாமே நம்ம கற்பனைக்கு அப்பாற்பட்ட விஷயங்கள். தர்க்கபூர்வமா எதையும் விளக்கவோ நிரூபிக்கவோ முடியாது. சாட்சியா நிற்க மட்டுமே முடியும். அதோ அந்தப் பொண்ணு மாதிரி...’’ ‘‘இப்பவாவது சொல்லு. அவ யாரு?’’ ஐஸ்வர்யா படபடத்தாள்.

‘‘சரஸ்வதி!’’ ‘‘தெய்வமா?’’ ‘‘இல்ல, நதி. மறைஞ்சு போன  நதி!’’ ‘‘கொஞ்சம் புரியறாப்போல சொல்லு ஆதி...’’ ‘‘கருடனும் நாகமும் யாரு? அண்ணன் தம்பிங்க. அதாவது பங்காளிங்க. இந்த சகோதர சண்டையை காலம் காலமா சரஸ்வதிதானே வேடிக்கை பார்த்துட்டு இருக்கா?’’ ‘‘...’’ ‘‘ராமாயணமும் மகாபாரதமும் நம்ம நாட்டோட இதிகாசங்கள் மட்டுமில்ல... அந்தக்கால நில அமைப்பை துல்லியமா படம் பிடிச்சுக் காட்டற படைப்புகள் கூட.

ராமாயணத்தை எடுத்துப்போம். அது வடக்குலேந்து தெற்கு வரைக்குமான புவியியலை விவரிக்குது. மகாபாரதம்? அது கிழக்கு மேற்கு நிலத்தை புட்டுப் புட்டு வைக்குது. ஒண்ணு தெரியுமா... புத்தருக்கு ஞானம் கிடைச்சது கயாவுல. ஆனா, அந்த இடத்துல அவர் தன்னோட முதல் பிரசங்கத்தை செய்யலை. மாறா பல கி.மீ.நடந்து வந்து சாரநாத்ல பேசினார். ஏன்..?’’ ‘‘...’’ ‘‘பிகாஸ், வடக்கும் தெற்கும் கிழக்கும் மேற்கும் சந்திக்கிற மைய இடம் வாரணாசி. அங்கேந்து கூப்பிடும் தொலைவுல இருக்கிற இடம்தான் சாரநாத்..!’’

‘‘...’’ ‘‘இப்ப பேசப்படற இந்திய தேசத்தை விட்டுடுவோம். அதுக்கான அர்த்தம் வேற. ஆனா, வரலாற்றுக் காலத்துக்கு முன்னாடிலேந்தே இந்த ஒட்டுமொத்த நிலப்பரப்பும் ஏதோ ஒரு புள்ளில ஒரு மாதிரி ஒண்ணாதான் இருந்திருக்கு. மறுக்கலை. பல தேசங்களா நாம பிரிஞ்சு இருந்தோம். புராண காலத்துலயே 56 தேசங்களா இந்தியா சிதறியிருந்தது.

ஆனா, வணிகப் பாதைகள் எல்லாத்தையும் இணைச்சிருக்கு. அந்தப் பாதை வழியா கலாசாரமும், பண்பாடும், இலக்கியமும், கலையும் எல்லா தேசங்களுக்குள்ளயும் ஊடுருவி கலந்திருக்கு...’’ ‘‘...’’ ‘‘புத்தர் இதை உணர்ந்திருக்கார். அதனாலதான் எல்லா தேச வணிகர்களும் ஒன்று கூடுற சாரநாத்துல தன் முதல் பிரசங்கத்தை நிகழ்த்தினார். ஒரே நேரத்துல ஆயிரக்கணக்கான மக்கள் கூடுற இடம் அந்தக் காலத்துல அது மட்டும்தான். மட்டுமில்ல... அந்த ஆயிரக்கணக்கான பேரும் எப்பவும் நகர்ந்துகிட்டே இருக்கிறவங்க.



தாங்க பார்க்கிற, கேள்விப்படற எல்லா சம்பவங்களையும் போற இடங்கள்ல எல்லாம் சொல்லிக்கிட்டே இருப்பாங்க. நினைவுல வைச்சுக்கிட்டே இருப்பாங்க. உண்மைல புத்தர் கெட்டிக்காரர். அதனாலதான் சாரநாத்தை தேர்ந்தெடுத்தார்...’’ ‘‘இதுக்கும் சரஸ்வதி நதிக்கும்...’’ ‘‘தொடர்பிருக்கு க்ருஷ்.

அதுமட்டுமில்ல... இன்னொரு விஷயத்தையும் நாம கவனிக்கணும்...’’ ‘‘என்ன ஆதி..?’’ ‘‘உலூபி!’’ ‘‘வாட்..?’’ ‘‘நினைவுல இருக்கா ஐஸ்... குருஷேத்திரப்போர்ல சிகண்டிங்கிற அரவாணியை கேடயமா பயன்படுத்தி பீஷ்மரைக் கொன்னாரு அர்ச்சுனன். இதைக் கேள்விப்பட்ட கங்கை, ‘என் மகனை நீ கொன்னதால உன் மகன் கையாலயே நீ கொல்லப்படுவாய்’னு சாபமிட்டாங்க...’’

‘‘இதைக் கேள்விப்பட்ட உலூபி, கங்கா தேவிகிட்ட மன்னிப்பு கேட்டாங்க. அப்ப, ‘சாபமிட்டது சாபமிட்டதுதான். தன் மகன் பாப்ருவாஹணன் கையால அர்ஜுனன் கொல்லப்படுவான். ஆனா, இதுக்கு ஒரு பரிகாரம் சொல்றேன். அப்படி நடந்ததும் ம்ரிதாசஞ்சீவனி மூலிகையை வைச்சு அர்ச்சுனனை காப்பாத்திடு’னு ஒரு ஆப்ஷனை கங்கா தேவி கொடுத்தாங்க.

அப்படித்தான் அர்ச்சுனனை உலூபி காப்பாத்தினாங்க. அதே ம்ரிதாசஞ்சீவனி மூலிகைதான் நம்மையும் இப்ப காப்பாத்தப் போகுது... இதெல்லாம் ஏற்கனவே நம்ம மூணு பேருக்கும் தெரியுமே ஆதி... எதுக்காக அதை இப்ப சொல்ற..?’’ ‘‘சொல்லலை ஐஸ்... நினைவுபடுத்தறேன்...’’ ‘‘அதுதான் ஏன் ஆதி?’’‘‘ஏன்னா, கங்கா தேவிக்கு முன்னாடியே இந்தியாவுல கோலோச்சுனவங்க சரஸ்வதி!’’ ‘‘...’’ ‘‘பங்காளி சண்டைக்கு ரத்த சாட்சி அவங்கதான்!’’ ‘‘...’’ ‘‘கங்கையை அவங்களுக்கு பிடிக்காது.

தான் அழிஞ்சதும் தன் இடத்துக்கு வந்தவ  என்கிற கோபம் சரஸ்வதிக்கு இப்பவும் கங்கா தேவி மேல இருக்கு!’’ ‘‘...’’ ‘‘அப்படிப்பட்ட சரஸ்வதி இங்க இப்ப வந்திருக்காங்கன்னா...’’ ‘‘ஏன் நிறுத்திட்ட ஆதி... சொல்லு...’’ கிருஷ்ணனும் ஐஸ்வர்யாவும் உலுக்கினார்கள். ‘‘Code பிரேக் ஆகப் போகுது..!’’ ‘‘எந்த code?’’ ‘‘நவகிரகமும் எட்டு திசையில் நான்கு மூலையில் ஒன்றுமில்லை நவரத்தினமும் ஒன்றுமில்லை அதிசயமே உலகம் திரிசூலமே நான்காவது லூகாஸ் பஞ்சபூதம்..!’’  
                         

(தொடரும்)

ஓவியம் : ஸ்யாம்