நயன்தாரா அதர்வா அனுராக் காஷ்யப் ஒரு முக்கோண த்ரில்லர்!



‘இமைக்கா நொடிகள்’ சீக்ரெட்ஸ்

மை.பாரதிராஜா

‘‘விஜய் சாரோட ‘துப்பாக்கி’ல நான் அசோசியேட்டா  ஒர்க் பண்ணினேன். என்னோட ‘டிமான்டி காலனி’ வெளியானதும் விஜய் சார்கிட்ட இருந்து போன். ‘அஜய், உங்க படத்துக்கு நல்ல டாக் இருக்கு. கங்கிராட்ஸ்.கலக்குங்க!’னு சொல்லி சந்தோஷப்பட்டார். உடனே, விஜய் சாருக்கும், என் டைரக்டர் முருகதாஸ் சாருக்கும் ‘டிமான்டி’யை ஸ்கிரீன் பண்ணிக் காட்டினேன். படம் பார்த்துட்டு பத்து செகண்ட் என்னை கட்டிப்பிடிச்சு, ‘பின்னிட்டீங்க’னு ரெண்டு பேருமே பாராட்டினாங்க.

இப்ப ‘இமைக்கா நொடிகள்’ டீஸர் பார்த்துட்டு, ‘பெரிய ஸ்டார் காஸ்ட் இருக்கே... நல்லா மேனேஜ் பண்ணியிருக்கே’னு முருகதாஸ் சார் என் முதுகுல தட்டிக்கொடுத்தார். அந்த எனர்ஜி என்னை இன்னும் ஃப்ரெஷ்ஷா ஓட வச்சிருக்கு!’’ ஷூட்டிங் பரபரப்பிலும் உற்சாகமாக புன்னகைக்கிறார் ‘இமைக்கா நொடிகள்’ இயக்குநர் அஜய் ஞானமுத்து.

‘‘ஆக்சுவலா ‘டிமான்டி காலனி’க்கு முன்னாடியே உருவான ஸ்கிரிப்ட் இது. முதன் முதலில் அதர்வாகிட்ட இந்த ஸ்கிரிப்ட்டை சொல்லும்போது, படம் சின்ன பட்ஜெட்லதான் இருந்தது. அப்புறம் என் முதல் படத்தை முடிச்சிட்டு, இந்த ஸ்கிரிப்ட்டை மறுபடியும் ரீ-ஒர்க் பண்ணினோம். இதுல வர்ற சி.பி.ஐ. கேரக்டரை மெருகேற்ற மெருகேற்ற அந்த கேரக்டருக்கு நயன்தாரா மேடம்தான் ரொம்ப பொருத்தமா இருப்பாங்கனு எங்க எல்லாருக்குமே தோணுச்சு.

அவங்ககிட்ட கதையை சொன்னதும், ‘பண்ணலாம்’னு பச்சைக் கொடி காட்டினாங்க. அதோட மறுநாளே, ‘அஜய், என் கேரக்டர் லுக் இப்படி இருந்தா நல்லா இருக்குமா? இந்த காஸ்ட்யூம் ஓகேவா?’னு நயன் கேட்டாங்க. அப்பவே படத்து மேல எனக்கு நம்பிக்கை வந்திடுச்சு...’’ திருப்தியாகப் பேசுகிறார் அஜய் ஞானமுத்து.



‘இமைக்கா நொடிகள்’ டைட்டில்லேயே கதை இருக்கே..?

மேலோட்டமா பார்த்தா இது ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர். ஆனா, பொத்தாம் பொதுவா அப்படி சொல்லிட முடியாது. த்ரில், எமோஷன்ஸ், காதல்னு அத்தனை விஷயங்களும் படத்துல இருக்கு. சிட்டில தொடர்ந்து நடக்கற சைக்கோ கொலைகளை கண்டுபிடிக்கிற சி.பி.ஐ. அதிகாரி அஞ்சலி விக்ரமாதித்யனா நயன்தாரா வர்றாங்க. அவங்க தம்பியா அதர்வா நடிக்கறார். முக்கியமான கேரக்டர்ல பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப்.

இவர் இந்த கதைக்குள்ள வந்தது யதேச்சையா நடந்த விஷயம். எங்க டைரக்டரோட ‘அகிரா’வை பார்த்தேன். அதுல ஒரு ஆக்ட்டரா அனுராக் காஷ்யப் பின்னியெடுத்திருந்தார். மும்பை போய் கதையையும் கேரக்டரையும் சொன்னதும் இம்ப்ரஸ் ஆகிட்டார். படத்துல இவருக்கு ஸ்டண்ட் சீக்குவென்ஸ் உண்டு. பேஸிக்கா அனுராக் சார் ஒரு ரைட்டர். ஸ்டண்ட் காட்சிகள்ல நடிச்சு பழக்கம் இல்லை.

ஒரு சீன்ல நிஜமாவே தலை சுத்தி, கொஞ்சம் மூச்சுத் திணறல் வந்து சிரமப்பட்டார். யூனிட்ல எல்லாருமே பதறிட்டோம். ஆனா, உடனே கேரவன் போய், மெடிசின்ஸ் எடுத்துட்டு ‘ஓகே... டேக் கன்ட்னியூ பண்ணலாம்’னு வந்து நின்னார். ‘இதோ பாருங்க அஜய், நான் நடிகனா வந்துட்டேன். ஸோ, இதை நடிச்சுக் கொடுத்தே தீருவேன்’னு சொல்லி அந்த ஸ்டண்ட்டை பெர்ஃபெக்ட்டா பண்ணிக் கொடுத்தார். படத்துல விஜய் சேதுபதி சாரும் சின்னதா கேமியோ ரோல் பண்றார். திருப்புமுனையான ஒரு கேரக்டர். அவரோட போர்ஷனை இனிமேதான் ஷூட் பண்ணப் போறோம்.



நயன்தாரா லுக் க்யூட்டா இருக்கே..?

அந்த கிரெடிட் அவங்களுக்குத்தான் போய்ச் சேரணும். கேரக்டருக்கான லுக் மட்டுமில்ல, பாடி லேங்குவேஜ் முதற்கொண்டு சகலத்தையும் அவங்களே யோசிச்சு பார்த்துப் பார்த்து செய்திருக்காங்க. பெங்களூர் ஷெட்யூல் அப்ப, நயன் மேடம் ரோடு சீன்ல நடிக்க வேண்டி இருந்தது. அப்படி அவங்க நடந்தா பெங்களூருலயும் கூட்டம் கூடிடும். ஸோ, அது பாசிபிள் இல்லைனு எச்சரிச்சாங்க.

அதையும் மீறி ஷூட் பண்ணப் போனா... நிஜமாவே அவங்கள பார்க்க பெரிய க்ரவுடு. ஷூட் பண்ண முடியாம திரும்பிட்டோம். ஆனா, கதைக்கு அந்த சீன் அவசியம். மறுபடியும் மேடத்துக்கிட்ட கேட்டுப் பார்த்தோம். ‘க்ரவுடு இருந்தால் என்ன.. சமாளிச்சுக்கலாம்’னு சொல்லி அந்த கூட்டத்துக்கு மத்தியில நடிச்சுக் கொடுத்தாங்க.

அதேமாதிரிதான் அதர்வாவும். டெடிகேட்டட் ஆர்ட்டிஸ்ட். அவர் ஃபைனல் இயர் மெடிக்கல் காலேஜ் ஸ்டூடண்ட்டாகவும், காலேஜ் முடிச்சிட்டு டாக்டராகவும் வர்றார். அனுராக், நயன்தாரா, அதர்வா... இவங்க மூணு பேரையும் சுத்தி நடக்கற முக்கோண விளையாட்டுதான் படம். அதர்வா இதில் ரிஸ்க்கான நிறைய சீன்கள்ல நடிச்சிருக்கார். டீஸர்ல பார்த்த பெரிய பெரிய பில்டிங்ல தாவுறது தவிர, சைக்கிள் சேஸிங், ஆம்புலன்ஸ் சேஸிங்னு கலக்கியிருக்கார்.

அதர்வாவுக்கு ஜோடி ராஷி கண்ணா. அவங்களும் இதுல ஸ்டூடண்ட். தெலுங்கில் நிறைய படங்கள் பண்ணியிருக்காங்க. அவங்களுக்கு தமிழ் தெரியாது. ஆனாலும் மூணு நாளைக்கு முன்னாடியே டயலாக் பேப்பரை வாங்கிட்டு போய் மனப்பாடம் செய்துட்டு வந்து நடிப்பாங்க. ராஷியும், அனுராக்கும் ஸ்கிரீன்ல பேசும்போது, தமிழை அச்சு அசலா பேசுற மாதிரி உதடு அசையும்!



என்ன சொல்றாங்க உங்க டெக்னீஷியன் டீம்?

ஒரு விறுவிறுப்பான த்ரில்லர் படத்துக்கான பலமா எனக்கு டெக்னீஷியன்கள் அமைஞ்சிருக்காங்க. பட்டுக்கோட்டை பிரபாகர் சார் வசனம் எழுதியிருக்கார். என் படத்துல பாடல்களை விட, பின்னணி இசை அதிகம் ஸ்கோர் பண்ணணும்னு விரும்புவேன். ‘தனி ஒருவன்’ல ஹிப்ஹாப் தமிழாவின் பிஜிஎம் பிடிச்சிருந்தது. இந்தப் படத்துலயும் அவரோட பின்னணி இசை பேசப்படும்.

எடிட்டர் புவன் னிவாசன், ‘துப்பாக்கி’ல நான் ஒர்க் பண்ணும் போது அதுல அசோசியேட் எடிட்டரா இருந்தார். இதுல அவர் எடிட்டர். ஒவ்வொரு நாளும் நான் என்ன ஷூட் பண்ணப் போறேன்னு அவருக்குத் தெரியும். நான் இயக்குநரானதும் என் படத்துல ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவாளரா பணிபுரியணும்னு விரும்பியிருக்கேன். அந்தக் கனவு இந்தப் படத்துல நிறைவேறியிருக்கு!