காணாமல் போகும் குழந்தைகளைக் கண்டுபிடிக்கும் அசத்தல் app!



சென்னை இன்ஜினியர்கள் சாதனை

-டி.ரஞ்சித்

‘‘இந்தியாவில் ஒவ்வொரு மணி நேரத்துக்கும் ஐந்து குழந்தைகள் காணாமல் போகிறார்கள். இதில் இரண்டு குழந்தைகளை உடனடியாகக் கண்டுபிடித்தாலும் மற்ற குழந்தைகளின் நிலை பரிதாபம்தான். சில குழந்தைகளை பல வருடங்கள் கழித்துதான் கண்டுபிடிக்க முடிகிறது. அப்பொழுது அந்தக் குழந்தைகளின் அடையாளம் முற்றிலுமாக மாறிப் போயிருக்கும். இதனால் குழந்தைகளை உரியவர்களிடம் ஒப்படைப்பதில் சிக்கல் ஏற்படுகிறது.

இதைத் தீர்த்து குழந்தைகளை உரியவர்களிடம் ஒப்படைக்கவே எங்களின் ஆப்!’’ உற்சாகத்துடன் பேசத் தொடங்கினார் விஜய் ஞானதேசிகன். நண்பர் இளங்கோவுடன் இணைந்து இந்த ஆப்பை உருவாக்கியிருக்கிறார். காணாமல் போய் பல வருடங்கள் ஆகியிருந்தாலும் கூட கண்ணிமைக்கும் நேரத்தில் ‘அந்தக் குழந்தை இதுதான்’ என்று துல்லியமாக அடையாளம் காண்கிறது இந்த ஆப்.

இதன் பெயர் ஃபேஸ்டேகர் (facetagr). முகஜாடையை அடையாளம் (face recognition) காணும் டெக்னாலஜி மூலம் இதை சாத்தியப்படுத்தியிருக்கிறார்கள். ‘‘காணாமல்போன குழந்தையைப் பற்றிய விவரங்களை பொதுமக்கள் தெரிவிக்க ‘http://khoyapaya.gov.in’ என்ற வலைத்தளத்தை அரசாங்கமே நடத்துகிறது. அதேபோல காணாமல்போன குழந்தை கண்டுபிடிக்கப்பட்டதா என்பதையும் அறிந்து கொள்ள  ‘http://trackthemissingchild.gov.in’ என்ற வலைத்தளத்தையும் நடத்துகிறது.

கண்டுபிடிக்கப்பட்ட குழந்தைகள் பற்றிய தகவல்கள் மாநில காவல்துறை மூலம் முதன்மை அறிக்கையாக பதியப்படுகிறது. கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம் குழந்தைகள் காணாமல் போயிருப்பதாகவும், சுமார் ஒண்ணேகால் லட்சம் குழந்தைகள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாகவும் இந்த இரு வலைத்தளங்கள் மூலமாகத் தெரிகிறது.

கண்டுபிடிக்கப்பட்ட குழந்தைகள் முறையாக பெற்றோர்களிடம் ஒப்படைக்கும் வரை மாநில அரசுகள் நடத்தும் பல்வேறு குழந்தைக் காப்பகங்களில் அவர்கள் தங்க வைக்கப்பட்டிருப்பார்கள். அரசின் இந்த இரண்டு வலைத்தளங்களின் மூலமாக சுமார் மூன்று லட்சம் குழந்தைகள் பற்றிய டேட்டாக்கள் கிடைக்கிறது.



ஆனால், இந்த மூன்று லட்சம் டேட்டாக்களையும் சரிபார்த்து, அடையாளம் காண்பது என்பது குதிரைக்கொம்புதான். அதுவும் இந்த 3 லட்சம் டேட்டாக்களும் புகைப்படங்கள், பெயர்கள், முகவரி, வயது, பாலினம் போன்ற தகவல்களாகத்தான் இருக்கும். ஒரு குழந்தை காணாமல் போனதிலிருந்து கண்டுபிடிக்கும் வரையிலான இடைவெளியைப் பொறுத்து மேலே சொன்ன தகவல்கள் திரிந்த நிலையில் இருக்கும்.

இதனால்தான் கண்டுபிடிக்கப்பட்ட குழந்தைகளை உரியவர்களிடம் சேர்க்க முடியாமல் அரசு திணறுகிறது. குழந்தையை உரியவரகளிடம் சேர்ப்பதில் இருக்கும் பிரச்னையை இந்த ஆப் நிச்சயமாகத் தீர்க்கும்!’’ என்று விஜய் சொல்ல இதிலுள்ள தொழில்நுட்பம் பற்றி இளங்கோ விவரித்தார்.

‘‘ஒருவரின் முக அடையாளத்தை வைத்து ஊர்ஜிதப்படுத்தும் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டது இந்த ஆப். இது செயற்கை அறிவு எனும் அறிவியல் முறைப்படி உருவாக்கப்பட்டது. இதன்படி ஒருவரின் முக ஜாடையை நம் கண்ணால் பார்க்கும் காட்சியாக மட்டும் பார்க்காமல் முகத்தின் கனபரிமாணங்களை வைத்து கண்டுபிடிக்கும்.

அதாவது ஒருவரின் முகத்தில் உள்ள கண், காது, நெற்றி, வாய், மற்ற பாகங்களின் நீளம், அகலம், வடிவம், கோணம் போன்று சுமார் 150க்கும் மேற்பட்ட பரிமாணங்களை வைத்து துல்லியமாகக் கணக்கிடும். பொதுவாக ஒருவருடைய கண்ணில் இருக்கும் கருவிழி அவர் பிறப்பு முதல் இறப்பு வரை மாறாது என்பார்கள். இந்த ஆப் கருவிழி தவிர மேலும் பல முக ஜாடைகளை வைத்து துல்லியமாக அடையாளம் காணும்.

கண்டுபிடிக்கப்பட்ட முடிவுகளை வைத்து ‘இந்த முகம் இந்தக் குழந்தைக்குச் சொந்தமாக இருக்கலாம்’ என்பதைச் சொல்லும். கண்டுபிடிக்கப்பட்டதில் இடைவெளி இருந்தால் கொஞ்சம் சரிபார்ப்பதில் நேரம் பிடிக்கும். ஆனால், அதிலுள்ள சாத்தியங்களை அரை நிமிடத்தில் சொல்லிவிடும். ஒருவேளை காணாமல்போன குழந்தையின் புகைப்படம் இல்லை என்றால் குழந்தையின் தாய், தகப்பன், அண்ணன், தம்பியின் புகைப்படங்களை வைத்தும் கண்டுபிடிக்கலாம்!’’ என்ற இளங்கோ, இந்த ஆப் பொதுமக்கள் கையில் இன்னும் புழக்கத்துக்கு வராததைப் பற்றியும் பேசினார்.

‘‘ரொம்பவும் சென்சிடிவான விஷயத்தை டீல் பண்ணும் ஆப் இது. இதில் பகிரப்படும் குழந்தைகளின் விவரங்களை சிலர் தவறான முறையில் பயன்படுத்தினால் எங்களின் நோக்கமே சிதறிவிடும். இதனால்தான் இதை காவல்துறையினரிடமும், அரசு சார்பான அமைப்புகளிடமும் முதலில் கொண்டுபோக நினைத்தோம்.



அண்மையில்கூட சுமார் 100 குழந்தைகளைப் பற்றிய அடையாளம் தெரிந்திருக்கிறது. இதை காவல்துறைக்குக் கொடுத்திருக்கிறோம். காணாமல்போய் கண்டுபிடிக்கப்பட்ட குழந்தைகளை உரியவர்களிடம் சேர்ப்பதில் தொழில்நுட்பம் தவிர மாநில அரசுகளுக்கிடையே நிலவும் நிர்வாக ஒருங்கிணைப்பின்மையும் இந்தப் பிரச்னையை சிக்கலாக்குகிறது.

இதற்காகத்தான் மத்திய அரசின் குழந்தைகள் நல அமைச்சகத்திலும் இந்த ஆப் பற்றி விவரிக்க உள்ளோம். ஒருவேளை பொதுமக்கள் காணாமல்போகும் குழந்தைகளைக் கண்டுபிடிக்க வேண்டுமென்றால் எங்களின் ‘findmymissing@facetagr.com’ அல்லது ‘vijay@facetagr.com’ என்ற இணைய முகவரியைத் தொடர்புகொள்ளலாம்...’’ என்று இளங்கோ முடிக்க அதை ஆமோதிக்கிறார் விஜய்.

படங்கள்: ஆர்.சி.எஸ்