கர்ப்பப்பை பிரச்சனைகளைத் தீர்க்கும் மூலிகை நாப்கின்!



சாதித்த திருச்சி பெண்

பேராச்சி கண்ணன்

சுயதொழில் செய்து முன்னேறிய எத்தனையோ பெண்களின் கதைகளைப் படித்திருப்போம். ஆனால், வள்ளி இன்னும் சுயதொழிலில் பெரிதாக வரவில்லை. என்றாலும், எல்லோரையும் பேச வைத்திருக்கிறார் அவரது வித்தியாசமான முயற்சியால்!

அப்படி என்ன செய்தார்? சானிட்டரி நாப்கினை கையால் தயாரித்து விற்பனை செய்து வருகிறார். அவ்வளவுதானா? ஆச்சரியத்தைக் குறைக்காதீர்கள். இந்த நாப்கினை மூலிகை கலந்து தயாரிப்பதுதான் அவரின் தனிச்சிறப்பு! மட்டுமல்ல, இந்த மூலிகை நாப்கின் மாதவிலக்கு காலங்களில் பெண்களுக்கு வரும் பல பிரச்சனைகளைத் தீர்க்கவே, எல்லோரும் அவரை மெச்சுகின்றனர். திருச்சி அருகே முசிறியில் வசிக்கும் அவரிடம் பேசினோம்.

‘‘அந்தரப்பட்டினு ஒரு குக்கிராமம். வறுமையான குடும்பம். கோரை அறுக்குற வேலை பார்த்துகிட்டே பிளஸ் டூ வரை படிச்சேன். இந்த நேரத்துல இரண்டாம் தாரமா வாக்கப்பட்டதால, 20 வயசுலயே கிராமத்தைவிட்டு வர வேண்டிய சூழல். ரொம்ப கஷ்டம். இதுக்கிடையில மூணு குழந்தைகள் பிறந்தாங்க...’’ முன்கதையை விவரித்துவிட்டு தொடர்ந்தார்.

‘‘வீட்டு வேலைக்குப் போகலாம்னு பார்த்தாலும் குழந்தைகள வச்சிட்டு முடியலை. அப்ப, முசிறியில இருந்த ‘சிறியா’ தொண்டு நிறுவனத்தை அணுகினேன். அங்கிருந்த மேடம், ‘உனக்கு 5 ஆயிரம் ரூபாய் தர்றேன். ஏதாவது தொழில் செய்’னு ஊக்கப்படுத்தினாங்க. ஸ்கூலுக்கு முன்னாடி மிட்டாய் கடை, முறுக்கு வியாபாரம், டீக்கடைனு எதுவும் செட் ஆகலை. அப்புறம் அதே தொண்டு நிறுவனம் இலவச தையல் பயிற்சி கொடுத்து, மிஷின் வாங்க கடனும் கொடுத்தாங்க.



அதை வச்சு கிழிஞ்ச துணிகளைத் தைச்சிட்டு இருந்தேன். அந்த வருமானத்துல குடும்பத்தைச் சமாளிச்சேன். அந்நேரம் எஃப்.எம்.ல ஒரு பெண், ‘குழந்தைகள ஸ்கூலுக்கு அனுப்பியபிறகு சும்மா இருக்கேன். சுயதொழில் செய்ய யாரை அணுகணும்’னு கேட்டாங்க. எஃப்.எம்ல இருந்தவங்க திருச்சி மகளிர் தொழில் முனைவோர் சங்க அட்ரஸும், அதன் இயக்குநர் மணிமேகலை மேடத்தின் நம்பரும் கொடுத்தாங்க. அந்த மேடம்தான் என் வாழ்க்கைப் பாதையையே மாத்தினாங்க...’’ என்கிற வள்ளி நாப்கின் கதைக்குள் வந்தார்.

‘‘அங்கதான் கையால நாப்கின் தயாரிக்கும் பயிற்சி எடுத்துகிட்டேன். அப்புறம், பேங்க்ல 15 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கி வேலையை தொடங்கினேன். ஸ்கூல், காலேஜ், வீடுகள்னு லேடீஸ்கிட்ட இலவசமா நான் தயாரிச்ச நாப்கினைக் கொடுத்து பரிசோதனை செஞ்சேன். அவங்க சொல்ற குறைகளை ஒரு நோட்டுல எழுதி வச்சு சரி பண்ணிட்டே இருந்தேன். இதுக்குப்பிறகு காசுக்கு வாங்க ஆரம்பிச்சாங்க. ஒரு பீஸ் 2 ரூபாதான்.

நிறைய டிமாண்ட் ஏற்பட்டதால மிஷின் பயிற்சி தேவையா இருந்துச்சு. அதையும் மணிமேகலை மேடம் கொடுத்தாங்க. கோவை முருகானந்தம்கிட்ட மிஷின் வாங்கி ஒரு மாசப் பயிற்சி எடுத்தோம். அந்த டைம்ல மூலிகைகள் பத்தின இன்னொரு பயிற்சியும் அங்க நடந்துச்சு. அதுலயும் கலந்துகிட்டேன். மெடிக்கல்ல மாத்திரை வாங்குறதை குறைச்சுகிட்டு மூலிகை வைத்தியம் மூலமா உடல் உபாதைகளை சரி பண்ணினேன்.

ஆனா, இது நாப்கினுக்கு கைகொடுக்கும்னு கனவுலயும் நினைக்கலை...’’ என்கிற வள்ளி, வறுமையில் வாழும் பெண்களுக்கு நாப்கின் தொழிலை கற்றுத் தரவும் ஆர்வமாக இருக்கிறார். ‘‘அப்புறம், தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் மூலமா கடன் வாங்கி பிசினஸை விரிவாக்கினேன். ஆனா, மெட்டீரியல் கிடைக்க தாமதம், மிஷின்ல வர்ற கோளாறுகள்னு கடன் அதிகமாகி மிஷினை திருப்பிக் கொடுக்க வேண்டிய நிலமை. பிறகு, கையால நாப்கின் தயாரிப்புக்கு மாறினேன்.



என் பிள்ளைகளும் சேர்ந்து வேலை பார்த்தாங்க. ஆனாலும், எதிர்பார்த்த மாதிரி போகலை. ஏதாவது புதுசா பண்ணணும்னு யோசிச்சேன். அப்பதான், மாதவிலக்கின்போது பெண்களுக்கு பல சிக்கல்கள் வர்றது தெரிஞ்சது. நாப்கின்ல மூலிகைகளை வச்சு இதுக்கு தீர்வு காணலாம்னு தோணுச்சு.

வேப்பிலை, துளசி, கற்றாழைனு நாம தினமும் பயன்படுத்துற மருத்துவப் பயனுள்ள மூலிகைகளைப் பயன்படுத்தி ஒரு ஜெல்லை ரெடி பண்ணினேன். ஆனா, இந்த மூலிகை ஜெல் ஈரமாகி பிரச்னையை ஏற்படுத்திடுச்சு. என்ன பண்றதுனு யோசிச்சப்ப பவுடரா மாத்தி அதை பஞ்சுகள் மேல தூவினேன். இந்த முறை ‘ஓகே’யாகி, வெள்ளைப்படுதல், கர்ப்பப்பை பிரச்சனைனு நோய்களுக்குத் தீர்வும் கொடுத்துச்சு.

எனக்குத் தெரிஞ்ச ஒரு பெண் கர்ப்பப்பை புற்றுநோயால ரொம்ப கஷ்டப்படுறாங்க. அவங்களுக்கு மாதவிலக்கு சமயம் கடுமையான துர்நாற்றம் எடுக்கும். என்னை அணுகி நாப்கின் கேட்டாங்க. இதை யூஸ் பண்ணினதுக்குப் பிறகு துர்நாற்றம் இல்லனு சொன்னாங்க. அப்புறம், அந்த டைம்ல வர்ற வயிற்றுவலி பிரச்சனையையும் சரிப்படுத்தியிருக்கு. காரணம், கற்றாழை உடல் வெப்பத்தை தணிச்சிருக்கு.

இப்ப, XL, XXL, டெலிவரி நாப்கின்னு மூணுவித நாப்கின்கள் பண்ணிக் கொடுக்குறேன். XL எட்டு பீஸ் 60 ரூபாதான். டெலிவரி டைம்ல யூஸ் பண்ற நாப்கின் பத்து பீஸ் நூறு ரூபா. ஒரு பெல்ட்டும் சேர்ந்து வரும். நான்கையால பண்றதால விலை ெகாஞ்சம் அதிகம். ஆனா, ஃபினிஷிங் நல்லாயிருக்கும். இப்போதைக்கு ஆர்டர் வந்தா பண்ணிக் கொடுத்திட்டு இருக்கேன்.

கேரளா, மும்பையிலிருந்து சிலர் ஆர்டர் கொடுக்குறாங்க. தைச்சு அனுப்புறேன். இங்க வீடுகளுக்கும் பண்றேன். இப்படி சின்னச் சின்ன ஆர்டர்னு வாழ்க்கை நகருது. இடவசதியும், கடனுதவியும் கிடைச்சா இந்தத் தொழிலை விரிவுபடுத்தலாம். அதுக்கு அரசு உதவினா நல்லாயிருக்கும்!’’ எனக் கோரிக்கையோடு முடித்தார் வள்ளி.