மியூசியம்



அறிந்த இடம் அறியாத விஷயம்

பேராச்சி கண்ணன்

திப்பு சுல்தானின் பீரங்கி முன் புன்னகைத்தபடி கைகோர்த்து பேசிக் கொண்டிருக்கிறது இளம் காதல் ஜோடி. அவர்களின் அருகிலிருக்கும் பர்மா நாட்டு குட்டி பீரங்கியைத் தாண்டித் தாண்டி குதித்து விளையாடுகிறது ஒரு குழந்தை. சென்னை அருங்காட்சியகத்தில் அன்றாடம் அரங்கேறும் காட்சிகள் இவை. முதல் கட்டிடத்தின் இரண்டு பக்கமும் கற்சிலைகள். கால வாரியாகப் பிரித்து வைத்திருக்கிறார்கள்.

முதல் பிரிவில் பல்லவர் காலத்தின் கலைப்படைப்புகளை பறைசாற்றும் விஷ்ணு, யோக தட்சிணாமூர்த்தி, சூரியன், கணேசர் உள்ளிட்ட ஆறேழு சிலைகள். அதன் அடியில் பெயர், ஊர்ப் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன. அருகிலேயே குறிப்புகள். அதில், ‘இந்தக் காலத்திய சிற்பங்களில் தற்செயலாயிருக்கும் தன்மை முக்கியமானது’ என்ற வாக்கியம் வசீகரிக்கிறது.

இதனையடுத்து, முதல் கற்கால சோழர் வருகிறார். அதன் அருகில், ‘இந்த பீரியட் சிலைகளின் முகம் வட்டமாக மாறியிருக்கும். இயல்புத் தன்மை குறைவாகக் காணப்படும்’ எனக் குறிப்புகளைப் படித்து தன்  தெலுங்கு நண்பருடன் மாட்லாடுகிறார் ஒருவர். தொடர்ந்து, பிற்காலச் சோழர் காலம், விஜயநகர வம்ச காலம், நவீன காலம், ஹொய்சாளர் - காகதீயர் காலம், நொளம்ப சிற்பங்கள், கீைழச் சாளுக்கிய காலம் என வரிசை கட்டுகின்றன கற்சிலைகள்.

படியின் நடுவில் சூரியன் சிலை ஜொலிக்கிறது. பிறகு, செப்பேடுகள் பகுதி. சேர, ேசாழ, பாண்டியர், விஜயநகர செப்பேடுகளை இங்கே காணமுடிகிறது. விளக்கங்களை தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் வைத்திருக்கிறார்கள். ‘மன்னன் ஒருவனால் கோயில்களுக்கு வழங்கப்பட்ட நில தானத்தினையோ அல்லது மன்னனால் மெச்சப்படும் அளவுக்கு மதிநுட்பம் மிக்க பண்டிதர்களுக்கு வழங்கப்பட்ட தானத்தினையோ குறிப்பவை’ என்கிறது அங்கிருந்த விளக்கம் ஒன்று.

இந்த மாடிப்பகுதியின் இரண்டு பக்கத்திலும் கலிங்கத்தின் இடைக்காலமும், மேற்கு வங்கத்தைச் சார்ந்த பாலர் - சேனர் இடைக்காலமும் ஆக்கிரமித்துள்ளன. தவிர, பஜா குகை சிற்பங்களும், பிராமி, நாகரி எழுத்துகள் பொறிக்கப்பட்ட கற்களும் அழகூட்டுகின்றன. அங்கிருந்து இந்து சிற்பக் கூடத்திற்கு நகர்ந்தோம். வழியில் நினைவுக்கல், வீரக்கல், சதிக்கற்களை வைத்திருக்கிறார்கள்.



கணவன் இறந்தபிறகு உடன்கட்டை ஏறும் மனைவியின் நினைவாக வைக்கப்படுபவை சதிக்கற்கள். இங்கே தமிழகம், ஆந்திராவிலிருந்து எடுத்து வரப்பட்ட தெய்வச்சிலைகள் நிரம்பி வழிகின்றன. ஒவ்வொன்றின் கலை நுட்பமும் நேர்த்தியும் பிரமிக்கச் செய்கின்றன. அடுத்து அமராவதி சிற்பக் கூடம். கிமு 100ல் உள்ள புத்தர் சிலை, புத்த வழிபாட்டுச் சிற்பம், தாமரை வடிவம் என அமராவதி பகுதியிலிருந்து எடுக்கப்பட்ட ஆதிகால சிற்பங்கள் நம்மை அந்தக் காலத்துக்குள் அழைத்துச் செல்கின்றன.

தொடர்ந்து சமண சிற்பக் கூடத்திற்குள் நுழைகிறோம். இங்கே, மகாவீரர், தீர்த்தங்கரர், பார்சுவநாதரின் கற்சிலைகள் மெருகேற்றுகின்றன. சில இடங்களில் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்காக ப்ரெய்லி முறை குறிப்புகளும் இருக்கின்றன. அடுத்து விலங்கியல் பகுதி. இங்கே, இறந்த உயிரினங்களைப் பதப்படுத்திப் பாடம் பண்ணி வைத்திருக்கிறார்கள். பிரிட்டிஷ் காலத்தில் மக்களின் வரவேற்பிற்காக இந்த அருங்காட்சியகத்தினுள் உயிரற்ற விலங்கினங்கள் தவிர்த்து உயிருள்ள விலங்கினங்களையும் காட்சிக்கு வைத்திருந்தனர்.

இதனால், அன்றைய மெட்ராஸ்வாசிகள் உயிரற்ற இடத்தை செத்த காலேஜ் என்றும், உயிருள்ள விலங்கினங்கள் பகுதியை உயிர் காலேஜ் என்றும் அழைத்திருக்கிறார்கள். பிரமாண்டத் திமிங்கிலத்தின் எலும்புக்கூடு அச்சுறுத்தலுடன் வரவேற்கிறது. அதன் இடதுபுறம் ஆடு, குதிரைகளின் பற்கள். தவிர, யானையின் கால், மனிதன், குதிரை, எருது, பன்றியின் கால் எலும்புகள், மனிதக் குரங்கின் எலும்புக்கூடு என எல்லாமே காட்சிக்கு இருக்கின்றன.

பிறகு, ஊர்வன செக்‌ஷன். 29 விஷப் பாம்புகளும், 36 விஷமற்ற பாம்புகளும் கண்ணாடி பாட்டிலில் உறங்குகின்றன. இதன் எதிர்ப்புறம் பல்லி வகையினங்கள். திருநெல்வேலி, சேலம், நீலகிரி என ஒவ்வொரு பகுதியிலிருந்தும் கொண்டு வரப்பட்ட ஓணான்களைக் குறிப்புகளுடன் வைத்திருக்கிறார்கள். இதில், குன்னூரிலிருந்து பிடித்து வரப்பட்ட ‘பறக்கும் பல்லி’ சிலிர்க்க வைக்கிறது. மாணவர்
களுக்கு நிச்சயம் பயன்படும்.

இதற்கடுத்த அறையில், இரண்டு பேரைக் கொன்றுவிட்டு 1887ல் வடஆற்காடு மாவட்டத்தில் பிடிபட்ட கொம்பன் யானையின் எலும்புக்கூடு கம்பீரமாக நிற்கிறது. இங்கே நிறைய பேர் செல்ஃபி எடுத்துக் கொள்கிறார்கள். அங்கிருந்து மேல்மாடியிலுள்ள முதுகெலும்பற்றவை பகுதியில் பவளம், சிப்பிகள், நண்டு, இறால் என எல்லாவற்றையும் ரசித்துவிட்டு மணியைப் பார்க்கிறோம்.



அரைநாள் கடந்துவிட்டிருந்தது. அப்படியே அங்கிருந்த சேரில் ஆசுவாசப்படுத்திவிட்டு மானுடவியல் பக்கமாகத் தலை வைத்தோம். நுழையும் இடத்தில் மனித அச்சிலுள்ள தூக்கிலிடும் இரும்பு சட்டங்கள் தொங்குகின்றன. இடப்பக்கத்தில் உலக நாடுகளின் கற்காலம் வரவேற்கிறது.

கூடவே, பழங்கற்கால கற்கருவிகளும், கோடரிகளும் கண்ணாடிப் பேழையில் இளைப்பாறுகின்றன. இடை மற்றும் புதுக்கற்கால கற்கருவிகளையும் பார்க்கிறோம். பெருங்கற்கால ஆதிச்சநல்லூர் சுடுமண் மற்றும் வெண்கலப் பொருட்கள் கவருகின்றன. காப்பு, தட்டுகள், மூடி, கறுப்பு மட்கலங்கள், ஈமப்பேழைகள், பானைகள், சாம்பிராணிக் கூண்டுகள், கணையாழிகள் என அந்தக் காலத்தை கண்முன்னே கொண்டு வருகின்றன.

அவர்கள் பயன்படுத்திய அரிவாள்கள், மண்வெட்டிகள், கோடரிகள், ஈட்டிகள், இரும்பிலான போர்க் கருவிகள் அழகு சேர்க்கின்றன. பிறகு, அரிக்கமேட்டில் கண்டெடுக்கப்பட்ட 12 முக, 4 முக அகல்விளக்குகளைப் பார்த்தோம். அப்படியே வலப்புறமாகத் திரும்பியதும் மாடிக்குச் செல்லும் படிக்கட்டுகள் வருகின்றன. இதன் எதிரே போர்க் கருவிகள் வரிசையாக சுவரில் மாட்டப்பட்டுள்ளன.

அத்தனை நேர்த்தி யுடன் கூர்மையாக செய்யப்பட்ட கருவிகள். இதற்கடுத்த அறையில் பீரங்கிகளும், சங்கிலியில் பிணைக்கப்பட்ட குண்டுகளும், துப்பாக்கிகளும் ‘பாகுபலி’ படத்தை நினைவுபடுத்துகின்றன. வாள்கள், வெட்டுக்கத்திகள், கையுறை கத்திகள், குறுவாள்கள், கவசங்கள், அரசர்கள் பயன்படுத்திய நான்கடி உயர கையுறை வாள்கள் சிலிர்ப்பைத் தருகின்றன. அங்கிருந்து மாடியேறி இசைக்கருவிகள் பகுதிக்குச் சென்றோம். மீன், ஆமை, நாகம், மயில் என்று உயிரினங்களின் வடிவில் யாழ்கள்.

அதை எப்படி மீட்டிருப்பார்களோ... என யோசிக்கத் தோன்றுகிறது. குடிமரபியல் பகுதியில் தோடர், இருளர், படுகர் உள்ளிட்ட தமிழக மற்றும் வெளிமாநிலப் பழங்குடிகளின் உருவங்களையும், வீடுகளையும் தத்ரூபமாகக் காட்சிக்கு வைத்துள்ளனர். தொடர்ந்து மூன்றாவதாக உள்ள படிமக்கூடம் பகுதிக்கு வந்து சேர்ந்தோம். முழுவதும் குளிரூட்டப்பட்ட இந்த அறையில் தஞ்சை மாவட்டம் கண்கொடுத்தவணிதம் பகுதியிலிருந்து கிடைத்த கிபி 11ம் நூற்றாண்டு நடேசர் சிலை மத்திய பகுதியை அலங்கரிக்கிறது.

தூரத்திலிருந்து பார்ப்பவர்களுக்கு படிகம் போல மின்னுகிறது. இங்கே தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், காஞ்சிபுரம் பகுதிகளில் கிபி 10 முதல் 16ம் நூற்றாண்டு வரை கிடைத்த ஐம்பொன் சிலைகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. நாணயவியல் பகுதி செப்பனிடும் பணியில் உள்ளதாகத் தெரிவித்தனர் பணியில் இருந்தவர்கள். சிறுவர் அருங்காட்சியகத்திற்கு கன்னிமாரா நூலகத்தைத் தாண்டிச் செல்ல வேண்டும். இந்த கேலரியில் மூன்று தளங்கள் உள்ளன.



முதல் தளத்தில் ஒவ்வொரு மாநில மற்றும் பன்னாட்டு மக்களின் உருவங்கள், உடைகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. மேல்தளத்தில் அறிவியல் மற்றும் போக்குவரத்து விஷயங்களும், கடைசியில் குழந்தைகளுக்கான 3டி தியேட்டர் ஒன்றும் உள்ளன. நிறைவாக, சமகால ஆர்ட் கேலரி பில்டிங். இங்கே புதிய கற்காலக் கருவிகள் காணப்பட்டாலும் இறுதியில் நிறுத்தப்பட்டிருக்கும் ஆளுநரின் கோச்சு வண்டி ரம்மியம் கூட்டுகிறது.

‘நான்கு சக்கரங்களும் நான்கு இருக்கைகளும் கொண்ட இந்த வண்டியை 1952 வரை அன்றைய சென்னை மாகாண ஆளுநராக இருந்த பவனகர் மகாராஜா மாநில விழாக்களுக்குப் பயன்படுத்தினார்’ என்கிறது இங்கிருக்கும் குறிப்பு. இந்தக் கட்டிடத்தின் மேலே பொருத்தப்பட்ட ஓவியங்கள் பிரமிப்பூட்டுகின்றன. இவை, அருகிலுள்ள தேசிய ஆர்ட் கேலரி கட்டிடத்தில் இருந்தவை. அங்கு மறுசீரமைப்பு பணிகள் நடைபெறுவதால் சில ஓவியங்களை மட்டும் பார்வையாளர்களுக்காக இங்கே மாற்றியிருக்கிறார்கள்.

முதலில் சென்னையை ஆண்ட பிரிட்டிஷ் ஆளுநர்களின் ஓவியங்கள் வரிசையாக உள்ளன. இதில் கன்னிமாரா நூலக புதிய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டிய லார்டு கன்னிமாரா, ஜார்ஜ் ெபடரிக் ஸ்டான்லி ஆகியோரின் ஓவியங்கள் குறிப்பிடத்தக்கவை. ராஜா ரவிவர்மாவின் ஓவியங்கள் சில்லிட வைக்கின்றன.

தமிழகத்தின் பிரபல ஓவியர்களின் ஆயில், வாட்டர்கலர் பெயின்ட்டிங்குகளும் அள்ளுகின்றன. மொத்தமாக சுற்றி வருவதற்கு மாலையாகி விட்டது. அப்பொழுதும் அந்த காதல் ஜோடி பீரங்கியின் அருகில் புன்னகைத்தவாறே பேசிக் கொண்டிருந்தனர்.

படங்கள்: ஆ.வின்சென்ட் பால்

பொதுத் தகவல்கள்

* சென்னை எழும்பூரில் இருக்கும் இந்த மியூசியம் 16 ஏக்கர் பரப்பில் அமைந்திருக்கிறது. இதனுள் ஆறு அருங்காட்சியகக் கட்டிடங்களும், கன்னிமாரா நூலகமும், மியூசியம் தியேட்டரும் உள்ளது.

* தேசிய ஆர்ட் கேலரியில் மறுசீரமைப்புப் பணிகள் ரூ.11 கோடி செலவில் நடந்து வருகிறது. ‘திருடா திருடா’ படத்தில் ‘கொஞ்சும் நிலவு...’ பாடல் எடுக்கப்பட்ட கட்டிடம்.

* கொல்கத்தாவிற்கு அடுத்தபடியாக இந்தியாவின் இரண்டாவது பழமையான மியூசியம் இது.
* 54 காட்சிக்கூடங்கள் இருக்கின்றன. அவை எட்டு தலைப்புகளின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

* பெரியவர்களுக்கு 15 ரூபாயும், குழந்தைகளுக்கு 10 ரூபாயும், பள்ளிகளிலிருந்து சான்றுடன் வரும் மாணவர்களுக்கு 5 ரூபாயும் நுழைவுக் கட்டணமாக வசூலிக்கிறார்கள். ஸ்டில் மற்றும் வீடியோ கேமராவுக்கு முறையே ரூ.200 மற்றும் ரூ.500 கட்டணம்.

* உள்ளிருக்கும் மியூசியம் தியேட்டரில் அருங்காட்சியக விழாக்களை நடத்துகின்றனர். இந்த விழாக்கள் இல்லாத நாட்களில் பொதுமக்களுக்கு கலாசாரம் சார்ந்த நிகழ்ச்சிகளுக்காக மட்டும் வாடகைக்கு விடுகிறார்கள்.

* வெள்ளிக்கிழமை விடுமுறை. தவிர, சுதந்திர தினம், குடியரசு தினம், காந்தி ஜெயந்தி ஆகிய மூன்று நாட்கள் தேசிய விடுமுறை. தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை நாட்களில் கூட மியூசியம் திறந்திருக்கும்.

* தினமும் சராசரியாக 1000 பேர் பார்வையிடுவதாக சொல்கிறார்கள். காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்திருக்கும்.

வரலாறு

* கடந்த 1851ல் நுங்கம்பாக்கம் கல்லூரி சாலையில் முதல் முதலாக இந்த அருங்காட்சியகம் தொடங்கப்பட்டது. அங்கிருந்த மெட்ராஸ் கல்விக்கழகம் 1846ம் ஆண்டு அருங்காட்சியகம் வேண்டும் எனக் கோரிக்கை விடுத்ததால், கிழக்கிந்திய கம்பெனியின் ஒப்புதல் பெற்று அன்றைய மெட்ராஸ் ஆளுநர் சர்.ஹென்றி பாட்டிங்கர் அனுமதி அளித்தார்.

* மருத்துவரான எட்வர்ட் பால்ஃபோர் முதல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். மெட்ராஸ் கல்விக் கழகம் வழங்கிய 1,100 நிலவியல் மாதிரிகளுடன் மியூசியம் ஆரம்பிக்கப்பட்டது.

* 1854ம் ஆண்டு இப்போதைய பாந்தியன் சாலை கட்டிடத்திற்கு மாற்றப்பட்டது.

* அப்போது பால்ஃபோர் இதன் உள்ளேயே மிருகக்காட்சிச் சாலையை அமைத்தார். இதனால், மக்களின் வரவேற்பு அதிகரித்தது. பிறகு இந்த மிருகக்கூடம் பீப்பிள்ஸ் பார்க்கிற்கு மாற்றப்பட்டு பின் வண்டலூர் சென்றது.

* இனக்குழுக்கள் பற்றி, ‘Castes and Tribes of Southern India’ புத்தகத்தின் ஏழு ெதாகுதிகளை வெளியிட்ட எட்கர் தர்ஸ்டன், இந்த மியூசியத்தின் கண்காணிப்பாளராகப் பணியாற்றி பல விஷயங்களைப் புகுத்தினார்.