ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்



குங்குமம் விமர்சனக்குழு

அதர்வாவின் தீவிர காதல் பயணமே ‘ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்.’ தன் வீட்டின் மாடியில் குடியிருக்கிற அதிதி, கல்லூரி மாணவி ரெஜினா, ஊட்டி பிரணீதா, அனாதை இல்லத்தில் வளர்கிற ஐஸ்வர்யா ராஜேஷ் என அடுத்தடுத்து காதலித்துக் கொண்டேயிருக்கிறார் அதர்வா.  ஒரு கட்டத்தில் தன் முன்னாள் காதலிகளுக்கு திருமணப் பத்திரிகை கொடுக்கப் புறப்படுகிறார். சிரிப்பும், களிப்புமாக ஆரம்பிக்கிற அவரது பயணம் என்னவானது என்பதே மீதிக் கதை.



உதடுகளைக் கடித்துக்கொண்டே, ரெஜினாவை திரும்பித் திரும்பி பார்க்கும் தவிப்பும், மேல் வீட்டு மாணவியிடம் வழியும் இடமும், அச்சு அசல் காதல் மன்னன் அதர்வா. ரெஜினாவின் கிறக்கம், பிரணீதாவின் ஏக்கம், அதிதியின் வெட்கம் என கிளுகிளுப்பில் ஷிப்ட் வைக்கிறார்கள். இன்னொரு ஹீரோ மாதிரியே வருகிறார் சூரி.

பாடல் காட்சிகளில் மின்னுகிறார் ஒளிப்பதிவாளர்  சரவணன். இனிமை சேர்க்கும் இமானின் இசை பின்னணியிலும் கச்சிதம். சொல்லி வைத்த மாதிரி எல்லாப் பெண்களையும் ஏமாந்த ஏக்கத்தில் காட்டுவது நம்பும்படியாக இல்லை. இளைஞர்களுக்கு பிடிக்கலாம்.