பண்டிகை



குங்குமம் விமர்சனக்குழு

நேர்மையான வழியில் முன்னுக்கு வர நினைக்கும் இளைஞனின் வாழ்க்கை எப்படி பந்தாடப்படுகிறது என்பதே ‘பண்டிகை’. ஹோட்டல் ஊழியரான கிருஷ்ணா, வெளிநாடு சென்று பணம் சம்பாதிக்க நினைக்கிறார். நடுவில் நேர்ந்த ஒரு சண்டையில் அவரின் வேகத்தை சரவணன் கவனிக்கிறார். அதையே அவர் சொல்லும் இடத்தில் காட்டினால் அவருக்கு வேண்டியதைச் செய்வதாக ஆசை காட்டுகிறார்.



இடையில் ஜரூராக நடக்கிற கிரிக்கெட் பெட்டிங், எக்கச்சக்கமாக புழங்கும் பணம், கிருஷ்ணா என்னவானார் என்பதுதான் பரபரப்பு க்ளைமேக்ஸ். வீதிச்சண்டை தமிழ் சினிமாவுக்குப் புதுசு. தனித்து யோசித்திருக்கும் அறிமுக இயக்குநர் பெரோஸ் கவனம் ஈர்க்கிறார். அடர்த்தியும் அழுத்தமான பெர்ஃபார்மன்ஸும் தேவைப்படும் இடத்தில் கிருஷ்ணா. களத்தைப் புரிந்துகொண்டதில் அவர் நடிப்பு பல இடங்களில் ஆறுதல்.

இப்பொழுதெல்லாம் பெயரில் மட்டும் சந்தோஷத்தை வைத்துக் கொள்கிறார் ஆனந்தி. சரவணன் தன் கேரக்டரின் அழகை உள்வாங்கி நடித்திருக்கிறார். விக்ரமின் பின்னணி இசை செம த்ரில். அடித்துப் புரளும் சண்டைக்காட்சியில் அனல் தெறிக்க விடுகிறது அரவிந்தின் கேமரா. வித்தியாச கள அமைப்பில் நினைக்க வைக்கிறார்கள்.