ரட்டன் பஜார்



மறுபக்கம்

‘‘எங்கிட்ட ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, வோட்டர் ஐ.டி... எல்லாமே இருக்கு. ஆனா, வீடு இல்ல! 38 வருஷமா இந்த பிளாட்ஃபார்ம்லதான் என் வண்டி ஓடுது...’’ மெலிதாக புன்னகைத்துக்கொண்டே பேசுகிறார் சேகர். இவரது ஆதார் கார்டு முகவரியில் ‘ரட்டன் பஜார் நடைபாதைவாசிகள்’ என்றுதான் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

பாரிமுனையில் கம்பீரமாக வீற்றிருக்கிறது ரட்டன் பஜார். சின்னதும் பெரியதுமான கடைகள் வரிசையாக நிற்கின்றன. பகல் நேரத்தில் விரைந்து கொண்டிருக்கும் வாகனங்களால் நிறைந்து கிடக்கிறது ரட்டன் பஜாரை ஒட்டிய சாலை. ஓரத்தில் நிறுத்தப்பட்டிருக்கும் கார்களுக்கும், கடைகளுக்கும் இடையில் இருக்கும் நடைபாதையில் இருநூறுக்கும் அதிகமான குடும்பங்கள் வசித்து வருகின்றன. அதில் சேகரின் குடும்பமும் ஒன்று.

எப்பொழுதும் பூட்டிக்கிடக்கும் கடைகளுக்கு முன் இருக்கின்ற சின்ன இடமும், படிக்கட்டுகளும்தான் நடைபாதை வாசிகளின் முக்கியமான அறை. அங்கே ஆளுயர பீரோக்கள், நாற்காலிகள், டீப்பாய்கள்... என்று வீட்டுக்குத் தேவையான பொருட்களை வைத்துக் கொள்கின்றனர். அங்கிருக்கும் மரங்கள்தான் அவர்களுக்குச் சுவர். அதில் ஆணியடித்து கடவுள் மற்றும் தங்களுக்குப் பிடித்த தலைவர்களின் படங்கள், காலண்டர், டியூப் லைட், முகம் பார்க்கும் கண்ணாடி, சட்டை... போன்றவைகளை தொங்க விட்டுள்ளனர்.

சமையலுக்கு விறகு அடுப்பைத்தான் நம்பியுள்ளனர். வெட்டவெளியான சிறு இடத்தில் மரப்பெட்டியாலும், பாலிதீன் கவர்களாலும் நான்கு பக்கமும் மறைத்து ஒரு வீடு போல செய்து அதில் வாழ்கின்றனர். வானம்தான் கூரை. பூமிதான் தரை. இந்த நடைபாதை வாசிகளின் வாழ்க்கையைத் தொலைவில் இருந்து பார்த்தால் துயரம். அருகில் போய் பார்த்தால்..?

‘‘பொறந்தது, வளர்ந்தது, கண்ணாலம் கட்டிக்கிட்டது, கொழந்தை பெத்துக்கிட்டது... எல்லாமே இந்த பிளாட்பாரத்துலதான். அப்பல்லாம் இந்த மாதிரி வண்டிக எதுவும் பெருசா இல்ல. எப்பவாவது குதிரை வண்டியோ, மாட்டு வண்டியோ கண்ணுல படும். சின்ன புள்ளையா இருந்தப்ப ரோட்டுக்கு நடுவுல ஒரு தண்டவாளம் இருந்துச்சு. அதுல டிராம் வண்டி ஓடும். என்னடா இது இவ்வளவு பெருசா கம்பளிப் பூச்சி மாதிரி ஊர்ந்து போயிட்டு இருக்குதுன்னு ஆச்சர்யமா பார்ப்பேன்.



முதல் தடவை பயமா இருந்துச்சு. அது வண்டினு தெரிஞ்சதும் அதுல போக ஆசை. அப்பாகிட்ட சொன்னா அடி விழும். கடைசி வரைக்கும் என் ஆசை நிறைவேறவே இல்ல. எனக்கு என்ன வயசுனு கூட தெரியாது. நாலைஞ்சு தலைமுறையைப் பாத்துட்டேன். என் கொள்ளுப்பேத்தியோட பொண்ணுக்குக் கூட கண்ணாலம் ஆகப்போகுது! இருக்குற வரைக்கும் யாருக்கும் தொந்தரவு இல்லாம சந்தோஷமா இருந்துட்டு போயிடணும்...’’ பாவனைகள் இன்றி பேசுகிற அந்தப் பாட்டிக்கு வயது நிச்சயம் எண்பதுக்கு மேல் இருக்கும்.

பாட்டியின் கைவிரல்களை மென்மையாகப் பற்றிக்கொண்டு வெள்ளந்தியாகச் சிரிக்கிறது மேல் சட்டை அணியாத ஒரு பெண் குழந்தை. அப்பொழுது தள்ளாடிக் கொண்டே நடைபாதையில் இருக்கும் டாஸ்மாக்கை நோக்கிச் செல்கிறார் ஓர் இந்தியக் குடிமகன். ‘‘இந்த இடத்துல டாஸ்மாக் வந்ததுல இருந்து ஒரே பிரச்சனைதான். பகல்ல ஆம்பிளைங்க வேலைக்குப் போயிருவாங்க. நாங்க பூ கட்டுறது, வீட்டு வேலைனு இங்கதான் இருப்போம். இந்த குடிகாரன்களோட தொல்லை தாங்க முடியாது.

திடீர்னு மேல கை வைப்பானுங்க. வேணும்னே இடிச்சிட்டு போவானுங்க. போதையில அப்படியே இங்க விழுந்து கிடப்பானுங்க. அடிச்சுக்குவானுங்க. எங்களால எதுவுமே கேட்க முடியாது. நைட்டாச்சுன்னா கொழந்தைங்கள பத்திரமா பாத்துக்கணும். இல்லன்னா யாராவது தூக்கிட்டுப் போயிடுவாங்க. சரியாவே தூங்க முடியாது. ஒவ்வொரு நாளும் வயித்துல நெருப்பைக் கட்டிக்கிட்டுத்தான் வாழ்ந்துட்டு வர்றோம்.

இதுக்கெல்லாம் எப்ப விடிவுகாலம் பொறக்கும்னு தெரியல...’’ இடுப்பில் கைக்குழந்தையை ஏந்திக் கொண்டே தன் கண்ணீர் கதையை தேவகி சொல்லும்போது மனது நம்மையும் அறியாமல் கலங்குகிறது. ‘‘இங்கிருக்குற எல்லா கொழந்தைங்களும் இஸ்கூலுக்குப் போறாங்க. முன்னாடி எல்லாம் ரோட் லைட் வெளிச்சத்துலதான் படிப்பாங்க. அப்ப ரொம்ப சிரமப்பட்டாங்க.

நான் பக்கத்துல இருக்குற கடையைக் கூட்டி சுத்தம் செய்வேன். அந்தக் கடை ஓனர் கிட்ட என் கஷ்டத்தைச் சொல்லி கரண்ட் கனெக்‌ஷன் வாங்கினேன். மாசம் மாசம் நாங்க யூஸ் பண்ற கரண்ட்டுக்கு பணம் கூட கொடுத்துடுறேன். இப்ப எங்க வீட்ல டி.வி, ஃபேன் கூட இருக்குது!’’ மகிழ்ச்சி பொங்க அந்தோணியம்மா சொன்னபோது பள்ளிக்குச் சென்றிருந்த குழந்தைகள் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். லேசாக குரைத்து அவர்களை வாஞ்சையுடன் வரவேற்றன செல்ல நாய்க்குட்டிகள்.



‘‘காலைக்கடனை பக்கத்துல இருக்குற கார்ப்பரேஷன் பாத்ரூம்ல முடிச்சிட்டு, கடைக்கு முன்னாடி பாலீதின் கவரை நாலாப் பக்கமும் கட்டி கொழந்தைகளும், பொம்பள புள்ளைகளும் குளிச்சிப்பாங்க. நாங்க கார்ப்பரேஷன் பாத்ரூம்லேயே குளிப்போம். ஒருநாள் விட்டு ஒருநாள்தான் தண்ணி லாரி வரும். இருக்குற எல்லா கொடத்துலயும் புடிச்சு வைச்சிப்போம். சமைக்கறது, குளிக்கறது, குடிக்கறது எல்லாமே இந்த தண்ணிலதான். இதுவரைக்கும் எந்த வியாதியும் எங்கள அண்டல.

என்ன சிரமம்னா கடை தொறக்குறதுக்கு முன்னாடியே சமைக்கணும். கொழந்தைகளை ஸ்கூலுக்கு அனுப்ப ரெடி பண்ணணும். மத்த எல்லா வேலைகளையும் பாத்தாகணும். நாங்களும் வேலைக்குக் கிளம்பணும். அதனால காலைல சீக்கரத்துலயே எல்லோரும் எந்திரிச்சிருவோம்...’’ பட்டியலிடுகிறார் பெயர் சொல்ல விரும்பாத அந்த நடைபாதை வாசி.

இவர்களில் பெரும்பாலான ஆண்கள் மீன்பாடி வண்டி ஓட்டுவது, கட்டிடவேலை... போன்ற கூலி வேலைக்குத்தான் செல்கின்றனர். உடலை ரணமாக்கும் கொசுக்கடி, தறிகெட்டு ஓடும் கார்களால் எப்போது வேண்டுமானாலும் உயிர் போகலாம் என்ற நிலைமை, வெளியே சொல்ல முடியாத பல இன்னல்கள்... இவற்றுக்கு மத்தியிலும் நடைபாதைவாசிகளின் இரவு வாழ்க்கை ரம்மியமானது; அழகானது.

நூற்றுக்கணக்கானோர் ஒரே இடத்தில் குடும்பம் போல குழுமி, உண்டு, உறங்கி, தொலைக்காட்சி பார்த்து, கதைகள் பேசி, குழந்தைகளுடன் மகிழ்வாக வாழ்க்கையை நடத்துகின்றனர். உடைந்துபோன மதுபாட்டில்கள், குப்பைகள், ஆங்காங்கே போதையில் விழுந்து கிடக்கும் குடிமகன்கள்... இவற்றுடன் ஆழமான அன்பும், அசலான மனிதர்களும், வாழ்க்கையும், மகிழ்ச்சியும் அந்த நடைபாதையில் நிறைந்து வழிகின்றன.      

-த.சக்திவேல்
படங்கள்: ஆ.வின்சென்ட் பால்