காட்ஃபாதர் - போதை உலகின் பேரரசன்
யுவகிருஷ்ணா - 15
சப்தம் கேட்டு பால்கனிக்கு வந்து நின்றார் பாப்லோ. கேட்டில் ஒரு பெரியவர் செக்யூரிட்டிகளிடம் சண்டை போட்டுக் கொண்டிருந்தார். எங்கோ பார்த்த முகமாக இருக்கிறதே..? புருவத்தை சுருக்கியபடி பாப்லோ யோசித்தபோது - “பாப்லோ, என்னைத் தெரியலையா? உங்கப்பன் ஏபெலோட ஃப்ரண்டு!” பெரியவர் அடிவயிற்றிலிருந்து கத்தினார்.
அடையாளம் தெரிந்தது. அவர் வளர்ந்த என்விகாதோவில் வசிப்பவர் அந்த பெரியவர். அப்பாவுக்கு நெருங்கிய சகாவாகவும் இருந்தவர். அப்பாவுடன் ஒன்றாக ஊர் சுற்றியவர். ‘நதாய்ஸ்மோ’ இயக்கத்திலும் தீவிரமாக இயங்கியவர். “அவரை உள்ளே அனுப்பு. யாரு என்னன்னு விசாரிக்காம சண்டை போடுறதா?” செக்யூரிட்டிகளைக் கடிந்து கொண்ட பாப்லோ, அவராகவே இறங்கிவந்து பெரியவரை வரவேற்றார்.
“எப்படி இருக்கீங்க அங்கிள்?” “நல்லா இல்லை பாப்லோ. எல்லாரும் நாசமா போயிக்கிட்டிருக்கோம்!” இந்த பதிலை சத்தியமாக பாப்லோ எதிர்பார்க்கவில்லை. உதவி கேட்டு வருபவர்கள் எடுத்ததுமே இப்படி கதற மாட்டார்கள். சீரியசான பிரச்னையாக இருக்க வேண்டும். தோளைப் பிடித்து சோஃபாவில் அமர வைத்தார். குடிக்க தண்ணீர் கொடுத்தார். தொண்டைக்குழியில் நீர் காட்டாறாக இறங்கியதைப் பார்த்தபோது துக்கம் தொண்டையை அடைத்தது.
பெரியவரின் கரங்களை கெட்டியாகப் பிடித்தார். “நான் என்ன செய்யணும்?” “பணம் எதுவும் வேண்டாம் பாப்லோ...’’ ‘‘ம்...’’ ‘‘நம்ம ஊரையே ஒருத்தன் சீரழிச்சிக்கிட்டிருக்கான்...’’ ‘‘...’’ ‘‘குழந்தை, குட்டியெல்லாம் அவங்கிட்ட கொத்தடிமையா இருக்கு...’’ எஸ்கோபாரின் கண்களில் சிவப்பேற ஆரம்பித்தது. ‘‘புழு பூச்சிலேந்து மனுஷன் வரைக்கும் எல்லாரையும் ராவும், பகலுமா சித்திரவதை பண்ணிக்கிட்டிருக்கான்…” தன் உள்ளங்கையை பாப்லோ மடக்கி அழுத்தினார்.
நரம்புகள் புடைத்து எழுந்தன. பார்வையை மட்டும் பெரியவரின் முகத்திலிருந்து விலக்கவில்லை. இமைக்கவுமில்லை. கடவுளின் முன்னால் கையை விரித்து தன் சோகத்தை சொல்லி அழுவதுபோல் அந்தப் பெரியவர் தொடர்ந்தார். “டீகோ எகாவரியாவை தெரியுமில்லையா? இப்ப கொலம்பியாவோட பெரும் தொழிலதிபர்கள்ல அவனும் ஒருத்தன்.
அரசியல்வாதிங்க அத்தனை பேரும் அவன் கால்ல விழுந்து கிடக்காங்க. அவங்கிட்டே லஞ்சம் வாங்காத அதிகாரியே நம்ம நாட்டுலே கிடையாது...’’ ‘‘...’’ ‘‘டெக்ஸ்டைல் பிசினஸ் பண்ணுறான். அவனோட மில் எல்லாமே என்விகாதோவை சுத்திதான் இருக்கு...’’ ‘‘...’’ ‘‘ஆரம்பத்துலே தேனாட்டம் பேசினான். மில் வேலைக்கு ஆள் சேர்த்தான். நல்ல சம்பளம் கொடுக்கிறேன்னு சத்தியம் செஞ்சான்...’’ ‘‘...’’ ‘‘நம்ம ஆளுங்க மொத்தமா அவனோட மில்லுலே போய் சேர்ந்தானுங்க…” இதற்கு மேல் பெரியவரால் பேச முடியவில்லை.

பெரும் ஓலமாக கேவல் வெடித்தது. அவரை அப்படியே தன் மார்போடு பாப்லோ அணைத்தார். முதுகை நீவி விட்டார். கொஞ்சம் கொஞ்சமாக கேவல் அடங்கியது. விலகி தன் உள்ளங்கையால் கண்ணீரைத் துடைத்துக் கொண்ட பெரியவர் மூக்கை உறிஞ்சினார். ‘‘இதுக்கு அப்புறம்தான் தன் சுயரூபத்தை அவன் காட்டினான். ஆர்டர் அதிகம் வர வர நிறைய துணி தயாரிக்க வேண்டியிருந்தது.
இருக்கிற ஆட்களை வைச்சு சமாளிக்க முடியாது. புதுசா ஆள் எடுக்கணும். அந்தப் படுபாவி என்ன செஞ்சான் தெரியுமா..?’’ ‘‘...’’ ‘‘இருந்த ஷிப்ட்டை தூக்கிஎறிஞ்சான். நேரம் காலம் பார்க்காம எல்லாரையும் உழைக்கச் சொன்னான். இதுக்கு எக்ஸ்ட்ரா சம்பளமும் கொடுக்கலை...’’ ‘‘கம்யூனிஸ்ட் தோழர்கள் இதை எதிர்த்து கேட்கலையா?’’ ‘‘கேட்டதோட போராட்டம் நடத்தவும் ஏற்பாடு செஞ்சாங்க...’’ ‘‘ம்...’’ ‘‘ஆனா, ஆர்ப்பாட்டம் நடக்கறதுக்கு முன்னாடி தன்னோட கார்டெல் தாதா நண்பர்களை வெச்சு, எதிர்த்தவங்களை எல்லாம் போட்டுத்தள்ளிட்டான்...’’ ‘‘...’’ ‘‘இப்ப நிலமை என்ன தெரியுமா பாப்லோ... தொழிற்சாலைல வேலை பார்க்கிற பாதிப் பேருக்கு காசநோய் வந்திருக்கு.
எப்ப வேணாலும் அவங்க உயிர் போகலாம். அப்படி செத்தாங்கன்னா அவங்க வீட்டுலேந்து யாராவது அந்த இடத்துக்கு வரணும். வேலையைத் தொடரணும். வாரத்துக்கு மூணு நாள் ஊருக்குள்ள வண்டி வருது. எதிர்ல தென்படற குழந்தை குட்டிகளை எல்லாம் அப்படியே அள்ளிப் போட்டு ஃபேக்டரிக்கு போயிடறாங்க...’’ “நம்ம ஊரு பண்ணையாருங்க இதை தட்டிக் கேட்கலையா..?’’
“கிழிச்சாங்க. அவங்களும் இதுல கூட்டுதானே? பத்துக்குப் பத்து நிலம் வைச்சிருக்கிறவங்க கிட்டேந்தும் அதைப் பிடுங்கறாங்க. ஆடு, மாடுகளையும் ஓட்டிட்டுப் போயிடறாங்க. இப்படி ஊர் சொத்தையே பண்ணையாருங்க ஆட்டை போட டீகோதானே உதவியா இருக்கான்? அப்படிப்பட்டவனை எப்படி இவங்க எதிர்ப்பாங்க?’’ ‘‘...’’ ‘‘இது நம்ம என்விகாதோ ஊரோட நிலமை மட்டுமல்ல.
மகதலேனா சமவெளில இருக்கிற பல கிராமங்களோட நிலை இப்ப இதுதான். பள்ளிகளை எல்லாம் மூடிட்டு வர்றாங்க. பசங்களை எல்லாம் மில்லுக்கு வரச் சொல்றாங்க. என் பேரனைக் கூட...’’ பெரியவரால் அதற்கு மேல் பேச முடியவில்லை. உடைந்து போய் குலுங்கிக் குலுங்கி அழுதார். பாப்லோ எஸ்கோபாருக்கு ரத்தம் கொதித்தது.
“நான் ஒருத்தன் இங்க இருக்கிறதையே மறந்துட்டீங்களா? ஆரம்பத்துலயே எங்கிட்டே கொண்டு வர வேணாமா?” குரலை உயர்த்திய பாப்லோ சட்டென்று தணிந்தார். “கவலைப்படாதீங்க. நான் பார்த்துக்கறேன். தைரியமா போயிட்டு வாங்க...’’ பாப்லோ இப்படிச் சொன்னால் அதுவே சாசனமல்லவா? பெரியவர் கையெடுத்து கும்பிட்டார். நிம்மதியுடன் வெளியேறினார். அடுத்த நொடி பாப்லோ, தன் படையைக் கூட்டினார்.

“இதுவரைக்கும் நாம செஞ்ச அத்தனை வேலையுமே நமக்காக, நம்ம லாபத்துக்காக செஞ்சது. இந்த முறை செய்யப் போறது மக்களுக்காக. இதுல உங்களை எல்லாம் ரிஸ்க் எடுக்க வைக்கிறேன்னு தப்பா நினைக்காதீங்க. நான் வளர்ந்த ஊருக்காக, இதை நீங்க செஞ்சாகணும்னு கேட்டுக்கறேன். விருப்பமில்லாதவங்க விலகிக்கலாம்...” “என்ன எஸ்கோபார்... இப்படி பிரிச்சுப் பேசலாமா? நாமெல்லாம் ஒரே குடும்பம். விஷயம் என்னன்னு சொல்லுங்க…” என்விகாதோ ஊருக்கு டீகோவால் ஏற்பட்டிருக்கும் ஆபத்தை விளக்கினார்.
பச்சைக் குழந்தைகளைக் கூட கொத்தடிமைகளாக அள்ளிச் செல்லும் அநியாயம் அத்தனை பேரையும் சுட்டது. கொதித்துப் போய் ஒருவன் சொன்னான். “இந்த அநியாயத்தை செய்யுற ஒருத்தன்கூட உயிரோட இருக்கக்கூடாது பாப்லோ. பணத்துக்காக எந்த கீழ்த்தரமான நிலைக்கும் போகலாம்ங்கிற எண்ணம் எவனுக்குமே வரக்கூடாது!” பாப்லோ புன்னகைத்துக் கொண்டே சொன்னார்.
“அன்பு அல்லது அடி. இதுதான் நம்ம ஃபார்முலா. ஒவ்வொரு பண்ணையாரா போய் எச்சரிப்போம். டீகோவோட அவங்க எந்த டீலிங்கும் வெச்சிக்கக் கூடாது. சம்மதிச்சா விட்டுடலாம். இல்லேன்னா, அழித்தொழிப்புதான்!” “அழித்தொழிப்பா?” “யெஸ். இப்போ இந்தியாவில் இது நடந்துக்கிட்டிருக்கு. மக்களை வதைக்கிற பண்ணையார்களை அழித்தொழிக்கிற போர் இது.
அரசாங்கம் மக்களை கைவிட்டுட்ட நிலைல வேற வழியில்லாமே அதிகாரத்தை மக்களே கைல எடுத்திருக்காங்க!’’ அதன் பிறகு அன்பு அல்லது அழித்தொழிப்பு என்கிற ஸ்லோகனோடு மகதலேனா சமவெளி கிராமங்களுக்கு பாப்லோ குழுவினர் படையெடுத்தார்கள். “எவண்டா பாப்லோ?” என்று எகிறிய பண்ணையார்கள், இருந்த சுவடு தெரியாமல் அழித்தொழிக்கப்பட்டனர். மற்றவர்கள் பாப்லோவுக்கு பயந்துகொண்டு டீகோவுடனான உறவினை முறித்துக் கொண்டனர்.
ஆனால் - டீகோ மட்டும் பாப்லோ படையிடமிருந்து தப்பித்துக் கொண்டே இருந்தார். டீகோவுக்கு வெயிட்டாக ஸ்கெட்ச் போட்டிருந்தார் பாப்லோ. அவரே நேரடியாக இந்த ஆபரேஷனில் இறங்கினார். பலத்த பாதுகாப்பு ஏற்பாடு களோடுதான் டீகோ சுற்றிக் கொண்டிருந்தார். ஒருநாள் - வீட்டில் இருந்து கிளம்பிய டீகோவின் கார், தொழிற்சாலைக்கு வந்து சேரவில்லை. அவர் காருக்கு முன்னும் பின்னும் பாதுகாப்புக்கு வந்த வாகனங்களும் அப்படியே காற்றில் கரைந்துவிட்டதைப் போல காணாமல் போயின.
டீகோவின் வீட்டுக்கு போன் வந்தது. ஒரே வார்த்தைதான். “ஐம்பதாயிரம் டாலர். ரெண்டே நாளில் ரெடி பண்ணுங்க. இல்லேன்னா டீகோவோட எலும்புகூட கிடைக்காது!” குடும்பத்தினர் பதறிப் போனார்கள். சொன்ன நேரத்தில் பணயத்தொகை கைமாறியது. இருப்பினும் - டீகோ மட்டும் வீடு வந்து சேரவில்லை.
மிகச்சரியாக ஆறு வாரங்கள் கழித்து என்விகாதோவின் அருகில் அழுகிப் போன டீகோவின் உடல் கிடைத்தது. அவரை போஸ்ட்மார்ட்டம் செய்த மருத்துவர்கள், மிகக் கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டிருக்கிறார் என்றார்கள். டீகோவைக் கொன்றது எஸ்கோபார்தான் என்று நாட்டுக்கே தெரியும். எனினும், அவர் மீது கைவைக்க ஒருவருக்கும் தைரியமில்லை.
இந்த ஆபரேஷனில் பாப்லோ எஸ்கோபாருக்கு பெரியதாக ஏதும் லாபமில்லைதான். டீகோவுக்கு கிடைத்த பணயத் தொகை கூட அவரது கும்பலின் போக்குவரத்து மற்றும் டீ செலவுகளுக்கான கன்வேயன்ஸ் மாதிரிதான் உதவியது. என்றாலும் இந்த நிகழ்வே இருவிதமான எண்ணங்களுக்கு விதை போட்டது. ஒன்று, கொத்தடிமை முறையை எதிர்த்துப் போராடிய சமூக நீதிக் காவலனாக பாப்லோவைக் கொண்டாட வைத்தது. இது மக்களின் மனதில் பதிந்த பிம்பம்.
இன்னொன்று, கொலைக்கு அஞ்சாத மாபாதகன் என்ற தோற்றம். இது அரசாங்கமும், வன்முறை அமைப்புகளான கார்டெல்களும் பாப்லோ குறித்து எண்ணிய வடிவம். ஆனால் - எஸ்கோபார் மட்டும் இந்த இரண்டைக் குறித்தும் சட்டை செய்யாமல் மூன்றாவது உருவமாக மாறினார். அதுதான் ‘காட்ஃபாதர்’ இமேஜ்!
(மிரட்டுவோம்)
ஓவியம்: அரஸ்
|