இளைப்பது சுலபம் - வெஜ் பேலியோவில் எடை குறைப்பது எப்படி?



அனுபவத் தொடர் - 4

இந்த உலகில் நான் செய்யக் கூடிய கர்மாக்கள் என்று நான்கு இருந்தன. சாப்பிடுவது. தூங்குவது. எழுதுவது. படிப்பது. இந்த நான்கைத் தவிர நாற்பத்தி ஐந்து வயதுவரை வேறு எதையும் செய்த நினைவில்லை. இதனாலேயே எனது தேகமானது சர்க்கரை வள்ளிக் கிழங்கை சாக்லெட்டால் மெழுகிவிட்டாற்போல மொழுங்கென்று இருக்கும். உடம்பை அசைக்காத உத்தமன் என்பதால் சிறு வயது முதல் காயங்கள் ஏதும் பட்டதில்லை.

வாழ்நாளில் கொசுக்களுக்கு அளித்ததற்கு அப்பால் வேறு எந்த விதத்திலும் நான் ரத்தம் இழந்ததில்லை. ஓடியாடி என்ன வாவது சாகச முயற்சியில் ஈடுபட்டிருந்தால் சின்னதாக ஏதேனும் காயம் பட்டு ரத்தம் வந்திருக்கும். நானோ எடுத்து வைக்கும் அடியையெல்லாம் எருமை நிகர்த்த அடிகளாகவே வைப்பேன். அட, சமையலறையில் நாலு காய் நறுக்கியாவது சற்று ரத்த சேதம் பார்த்திருப்பேனா என்றால் கிடையாது. சாப்பிடத் தெரியுமே தவிர, சமையல் எப்பேர்ப்பட்ட ஒரு அசகாயப் பணி என்பதையே அறியாத அப்பாவியாகவும் படுபாவியாகவும் ஒருங்கே இருந்தேன்.

இப்பேர்ப்பட்டவன் தன் வாழ்நாளில் யாருக்கும் ரத்ததானம்கூடச் செய்ததில்லை என்பதைச் சொல்ல வேண்டாம் அல்லவா? தவமிருந்து பெற்று வளர்த்த பெண்ணையே எனக்குத் தொண்ணூற்றொன்பது வருட திருமண லீசுக்குக் கொடுத்த பரோபகாரப் பெண்மணி மரணப் படுக்கையில் இருந்தபோது, ஏகப்பட்ட லிட்டர்கள் ரத்தம் வேண்டும் என்று ஆசுபத்திரியில் சொன்னார்கள்.

நல்லவனான நான், உட்கார்ந்த இடத்தில் இருந்தபடிக்கு நண்பர்களுக்கு போன் செய்து விவரம் சொல்லி எப்படியோ நாலைந்து ஜீவாத்மாக்களின் ரத்தத்துக்கு ஏற்பாடு செய்தேனே தவிர, என்னால் அன்று ரத்தம் கொடுக்க முடியாமல் போய்விட்டது. வாழ்நாள் முழுதும் சொல்லிக்காட்ட மனைவிக்கு என்னத்தையாவது மிச்சம் வைக்க வேண்டாமா? எல்லாம் அந்த நல்லெண்ணம்தான்.

கிடக்கட்டும். இவ்வாறாக ரத்தம் காணாத ரத்தத்தின் ரத்தமாகவே வாழ்ந்து வந்தவனை முதல் முதலில் ஒரு ரத்தப் பரிசோதனை செய்யச் சொன்னார் சென்ற அத்தியாயத்தில் நாம் சந்தித்த அதே டாக்டர். ‘எதற்கு ரத்தப் பரிசோதனையெல்லாம்? உணவை மாற்றப் போகிறேன். அவ்வளவுதானே?’

‘யோவ், இத்தனை காலம் நீ சேர்த்து வைத்த சொத்துபத்து எத்தனை என்று தெரிய வேண்டாமா? நாளைக்குக் கொழுப்பு சாப்பிட்டு ஹார்ட் அட்டாக் வந்துவிட்டது என்று சொல்லிவிடுவாய். உண்மையில் எடைக் குறைப்பைக் காட்டிலும், உன் ஹார்ட் அட்டாக் ரிஸ்க் ரேட் எவ்வளவு என்று தெரிந்துகொண்டு அதைக் குறைக்கத்தான் இந்த டயட்டே!’ என்றார் மருத்துவமாமணி. இந்தக் காவியத்தின் பாயிரத்திலேயே பார்த்தோம், இதயமே ஒரு பெரும் கொழுப்புப் பந்தாக இருக்கும்போது, கொழுப்பு சாப்பிட்டால் ஒன்றும் கொலை பாதகம் நேராது என்று.

அப்படியென்றால், மாரடைப்பு ஏன் வருகிறது?

ரொம்ப டெக்னிகலாக விவரிக்கவெல்லாம் எனக்கு வக்கில்லை. எளிமையாக இப்படிச் சொல்வேன். கொழுப்பால் ஒருவருக்கு மாரடைப்பு ஏற்படுவதில்லை. நமது ரத்த நாளங்களில் உண்டாகும் காயமே (இதை இன்ஃப்ளமேஷன் என்பார்கள்) மாரடைப்புக்குக் காரணம். காயமே இது பொய்யடா என்று கண்டுகொள்ளாமல் விட்டால் தீர்ந்தது கதை. இதயத்தின் உட்பகுதிகளில் ஏற்படுகிற இந்தக் காயம்தான் மாரடைப்பு முதல் மண்டையைப் போடுவது வரை நிகழும் சகலமான கெட்ட சம்பவங்களுக்கும் காரணம்.



அப்புறம் கொழுப்பால்தான் மாரடைப்பு என்று ஏன் சொல்கிறார்கள்?

 விஷயம் என்னவென்றால், ரத்த நாளங்களில் உண்டாகியிருக்கும் மேற்படி காயங்களை ஆற்றுவதற்காக நல்ல, உயர்தரக் கொழுப்பு மருந்தை எல்டிஎல் என்கிற ஒருவிதப் புரத கேப்ஸ்யூலுக்குள் ஏற்றி அனுப்புகிறது கல்லீரல். எல்.டி.எல். என்றால் கெட்ட கொழுப்பு என்று உலகம் சொல்லும்.

நம்பாதீர். அது கொழுப்பே அல்ல. புரதம்தான். கெட்டது மல்ல; அதையும் நம்பாதீர். கூரியர்க்காரன் கருப்பாயிருந்தாலென்ன? சிவப்பாயிருந்தாலென்ன? தபால் ஒழுங்காகப் பட்டுவாடா ஆனால் பத்தாதா? கல்லீரலில் இருந்து கிளம்பி, இதயத்தை நோக்கிப் பயணம் செய்யும் இந்த கூரியர் டப்பா, போகிற வழிக்குப் புண்ணியமாக நிறைய ஹார்மோன்களைச் செழிப்படைய வைத்துக்கொண்டே போகிறது.

பத்தாத குறைக்கு உணவின் மூலம் நாம் உள்ளே அனுப்புகிற விட்டமின்கள், மினரல்கள் போன்றவற்றை அனைத்து செல்களுக்கும் பகுத்துக் கொடுக்கிற திருப்பணியையும் இதுவேதான் செய்கிறது. இத்தனை நல்ல மனம் கொண்ட எல்.டி.எல்., தனது சேவையின் உச்சமாக, இதய நாளங்களுக்குள் உண்டாகியிருக்கும் காயங்களை ஆற்றும் விதமாக, தான் சுமந்து செல்லும் நற்கொழுப்பை அதன்மீது பூசுகிறது. எதற்காக? காயங்களால் மாரடைப்பு வந்துவிடக் கூடாதே என்பதற்காக.

அதையும் மீறி எப்படி மாரடைப்பு வருகிறதென்றால், பூசுகிற கொழுப்பு போதாமல் மேலும் மேலும் காயங்கள் பெருகிக்கொண்டே இருப்பதால்தான். வாழ்நாளில் ஒரு சொட்டு ரத்தம்கூடச் சிந்தாமல், எந்தக் காயமும் படாமல் வாழ்ந்தவன் நான் என்று சொன்னேன். என்னையறியாமல் என் இதயத்துக்குள் எத்தனையோ காயங்கள் ஏற்பட்டிருக்கலாம் என்று டாக்டர் சொன்னார்.

அதுசரி, ஏமாற்றங்கள், நம்பிக்கை துரோகங்கள், சொந்த சோகம், வாடகை சோகம் என்று இதயம் காயமுறக் காரணங்களா இல்லை? அதில்லையப்பா. இந்தக் காயம் வேறு. இத்தனை வருஷ காலமாக நீ சாப்பிட்டு வந்த உணவினால் உண்டான காயங்கள் இவை என்றார் டாக்டர். என்ன அக்கிரமம் இது? அன்னம் அமுதமல்லவா? அரிசி நம் உயிரல்லவா? பருப்பும் பயிறும் பலவித எண்ணெய்களும், விருப்பமுடன் புசிக்கும் விருந்துணவு வெரைட்டிகளும் நம் வாழ்வை வண்ணமுற வைப்பவை அல்லவா?



என்றால், அறிவியல் சற்று வேறு விதமாக ஒரு கருத்தைச் சொல்லுகிறது. நாம் சாப்பிடுகிற சர்க்கரையோ, அரிசியோ, கோதுமையோ, மைதா மாவோ, சோளமோ, டப்பாக்களில் விற்கப்படுகிற பிராண்டட் எண்ணெய்களோ தன்னாலான சத்தும் ருசியும் கொடுப்பதோடு நிற்பதில்லை. பொதுக்கழிப்பிடச் சுவர்களில் தன் கையெழுத்தைப் போட்டுச் செல்லும் விடலைப் பையன்களைப் போல இதய நாளங்களில் கீறல்களை ஏற்படுத்திவிட்டே போகின்றன.

இந்தக் கீறல் என்கிற காயத்தை ஆற்றத்தான் கொழுப்பைக் கொண்டுபோய் அங்கே பூசுகிறது உடலியற்கை. நீ பாட்டுக்குப் பூசு; நான் பாட்டுக்குக் கீறுகிறேன் என்று தொடர்ந்து காயம் ஏற்பட்டுக்கொண்டே இருக்கிறபோது, கொழுப்பு மேலும் மேலும் பூசப்படுகிறது. அதுவும் எத்தனை லேயர்தான் தாங்கும்? ஒரு கட்டத்தில் ரத்த ஓட்டம் தடைபட ஆரம்பிக்கிறது. விளைவு, மாரடைப்பு.

ஆஹா, கொழுப்பு ஜாஸ்தி; அதனால் மாரடைப்பு என்று சொல்லிவிடுகிறோம். இப்போது சொல்லுங்கள். கொழுப்பா காரணம்? அத்தனைக் கொழுப்பு அங்கே சென்று படிவதற்கு வழிசெய்த உள்காயங்கள் அல்லவா காரணம்? அந்தக் காயத்தின் தோற்றுவாயான உணவு முறையல்லவா மூலக் காரணம்? ‘அதனால்தான் ரத்தப் பரிசோதனை அவசியம் என்கிறேன். உன் காயம் சிறு காயமா பெருங்காயமா என்று முதலில் பார்த்துவிட வேண்டும்’ என்றார் டாக்டர்.

(தொடரும்)

-பா.ராகவன்


பேலியோ கிச்சன்

பொங்கல் பானைக்குக் கட்டுகிற பசு மஞ்சள் இருக்கிறதில்லையா? அதை ஒரு துண்டு எடுத்துக்கொண்டு தோல் சீவி, சிறு சிறு துண்டுகளாக்கிக்கொள்ளுங்கள். இதோடு நாலு மிளகு, இரண்டு துளசி இலை, இரண்டு பல் பூண்டு, ஒரு சிறு வெங்காயம் சேர்த்து நாலு குத்து குத்தி நசுக்குங்கள். இரவு உணவுக்குப் பின் இதை அப்படியே எடுத்து வாயில் போட்டு மென்று விழுங்கிவிடுங்கள். விடாமல் தினசரி இதைச் செய்து வருவது இதயத்துக்கு நல்லது. ரத்தக்குழாய் உள்காயங்களை இது கணிசமாகச் சரி செய்யும்.