பெண் காவலர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்களா?



‘மிக மிக அவசரம்’ ஆக கேட்கிறார் சுரேஷ் காமாட்சி

-மை.பாரதிராஜா

‘‘சார்ர்ர் ப்ளீஸ்... என்னை விட்டுடுங்க...’’ விசும்பலுடன் கண்களில் நீர்திரள நிற்கிறார் பெண் காவலரான ஸ்ரீப்ரியங்கா. ‘‘நீ அழகா இருக்கறது உன்ட்ற தப்பு. அதுவும் என் ஸ்டேஷனுக்கே வந்த பாரு... அது அதவிட ரொம்ப தப்பு!’’ யூனிஃபார்மில் நிற்கும் அந்த பெண் போலீஸின் கழுத்துக்குக் கீழே தன் பார்வையை வீசி முறைப்பு காட்டுகிறார் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துராமன்.

பெண் காவலர்கள் சந்திக்கும் பிரச்னைகளை சொல்லும் ‘மிக மிக அவசரம்’ படத்தின் டீஸர் அது. மணிவண்ணன் இயக்கி நடித்த ‘நாகராஜ சோழன் எம்.ஏ., எம்.எல்.ஏ.’, ‘கங்காரு’ படங்களை தயாரித்த சுரேஷ் காமாட்சி, இப்போது ‘மிக மிக அவசரம்’ படத்தின் மூலம் இயக்குநராகவும் அறிமுகமாகிறார்.

‘‘இயக்குநர் வேலை எனக்கு புதுசு இல்லை. மம்மூட்டி நடிச்ச ‘மறுமலர்ச்சி’யைத் தயாரிச்ச பங்கஜ் புரொடக்‌ஷன்ல உதவி இயக்குநராகத்தான் என் கேரியர் தொடங்குச்சு. அப்புறம் பொழைப்புக் காகமலேசியா போயிட்டேன். திரும்பி சென்னை வரும் போது, சீமான் அண்ணன்கிட்ட படம் பண்ற ஆசையை சொன்னேன்.

‘மணிவண்ணன் அப்பாவோட ஐம்பதாவது படத்தை நீ தயாரிச்சா நல்லா இருக்கும்டா தம்பி’னு அண்ணன் சொன்னார். அந்தப் படம் சத்யராஜுக்கும் இருநூறாவது படமாகவும் அமைஞ்சது. இப்படித்தான் தயாரிப்பாளரானேன். அடுத்து தயாரிச்ச ‘கங்காரு’வில் நல்ல பெயர் கிடைச்சது. நான் இயக்குநரா அறிமுகமாகிற இந்த ‘மிக மிக அவசரம்’ல சீமான் அண்ணனையும் இயக்கினது இரட்டிப்பு சந்தோஷம்...’’ திருப்தியாக பேசுகிறார் சுரேஷ் காமாட்சி.



எப்படி வந்திருக்கு உங்க முதல் படைப்பு?

சினிமாவில் எனக்கு நட்பு வட்டம் அதிகம். நண்பர் ‘புதிய கீதை’ ஜெகன்நாத் சொன்ன இந்தக் கதை பிடிச்சுப் போச்சு. அதையே திரைக்கதையாக்கினேன். இயக்குநர் சேரன் சார்ல ஆரம்பிச்சு, என் நண்பர்கள் அத்தனை பேர்கிட்டேயும் இந்தப் படத்தோட ஸ்கிரிப்டை அனுப்பி கருத்து கேட்டேன். யாருமே கரெக்‌ஷன்ஸ் சொல்லலை. மனசார பாராட்டினாங்க.

இந்தியாவிலேயே தமிழக காவல்துறையில்தான் அதிக பெண் காவலர்கள் பணிபுரியறாங்க. மறைந்த முதல்வர் ஜெயலலிதா பெண்களுக்கு எதிரான குற்றங்களைக் கட்டுப்படுத்தவும், வரதட்சணைக் கொடுமையை ஒழிக்கவும் பெண் காவலர்கள் மட்டுமே பணியாற்றும் காவல் நிலையங்களை தமிழகம் முழுக்க கொண்டு வந்தாங்க. அவங்க எதிர்பார்த்தது நடந்ததா என்பது விஷயமல்ல.

இன்னிக்கு பெண் போலீஸின் நிலை என்ன? அவங்க படுற கஷ்டங்கள் எத்தனை எத்தனை? பொதுமக்களை பாது காக்கத்தான் அவங்க வந்தாங்க. ஆனா, இங்க அவங்களுக்கே பணியிடங்கள்ல பாதுகாப்பு இல்லை என்பது போல நிறைய சம்பவங்கள் பார்க்கிறோம். கேட்கிறோம். அப்படி உண்மையில் நடந்த ஒரு சம்பவத்தை அடிப்படையா வைச்சு இந்த கதையை எழுதியிருக்கிறார் ஜெகன்நாத்.

இயக்குநர் மகேந்திரன் சார், இதோட டீஸர் பார்த்துட்டு ரொம்பவே பாராட்டினார். சேரன் சார், ‘படத்துல பாடலே இல்லை. நான் ஒரு தீம் சாங் எழுதித் தர்றேன். படத்துல சேர்த்துக்கோ காமாட்சி’னு சந்தோஷமா சொல்லி, ஒரு பாடல் எழுதிக் கொடுத்தார். இப்படி எல்லார்கிட்டேயும் படம் ஒரு பாஸிட்டிவ் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கு.



அதென்ன ‘மிக மிக அவசரம்’?

பெண் காவலர் வாழ்க்கையில் ஒருநாள் நடக்கற சம்பவங்கள்தான் படம். அவங்களுக்கு அப்படி ஓர் இறுக்கமான, அசவுகரியமான உடை தேவையா? விடுதலைப்புலிகள் படையில் ஆண்களும் பெண்களும் சரிசமமா ஒண்ணா தங்கியிருந்தாங்க. அவங்களிடையே பெண்கள் மீதான பாலியல் சீண்டல்கள் எதுவும் நிகழ்ந்ததில்லை. அதுக்கு மிக முக்கியமான காரணம், அந்த வீராங்கனைகள் அணிந்திருந்த உடைதான்.

பெண் போலீஸா ப்ரியங்கா நடிச்சிருக்காங்க. ஜோதிகா, நயன்தாரா மாதிரி முழுக்க முழுக்க ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள ஒரு கதை இது. அருமையா நடிச்சிருக்காங்க. அவங்களுக்கு ரீ என்ட்ரி கொடுக்கற படமா இது அமையும். அவங்க தவிர சீமான் அண்ணன், இ.ராமதாஸ், ‘வழக்கு எண்’ முத்துராமன், ‘கோரிப்பாளையம்’ ஹரீஷ், ‘சேதுபதி’ லிங்கா, ‘ஆண்டவன் கட்டளை’ அரவிந்த், இயக்குநர் சரவண சக்தி​, பத்திரிகையாளர் வீ.கே சுந்தர், வெற்றிக்குமரன்னு கதைக்கான கேரக்டர்கள் படத்திற்கு பலமா இருக்கும்.

பாலபரணி ஒளிப்பதிவு பிரமாதமா வந்திருக்கு. இஷான் தேவ்வின் பின்னணி இசை பேசப்படும். படத்துல டெக்னிகல் விஷயத்திலும் கவனம் செலுத்தியிருக்கேன். ‘எபிக் வெப்பன் ஹீலியம் 8கே சென்சார்’ என்ற லேட்டஸ்ட் கேமராவை பயன்படுத்தியிருக்கேன். இதன் 8கே ரெசலூஷன் புது அனுபவத்தை கொடுக்கும்.

சமீபத்தில் நடந்த திரையரங்க மூடல் பத்தி பொதுமக்கள் யாரும் கவலைப்பட்டாதாக தெரியலையே... கவனிச்சீங்களா?

‘இப்ப டிக்கெட் விலையெல்லாம் அதிகரிச்சிடுச்சு. இனிமே ஹீரோக்கள் அவங்க சம்பளத்தை குறைச்சிக்கணும். அப்பதான் படத்தோட பட்ஜெட் குறையும். படம் சரியா போகலைனாலும் தயாரிப்பாளர் போட்ட முதலீடு அவர் கையை கடிக்காம தப்பிச்சுக்க முடியும்’னு தியேட்டர்காரங்க சொல்றாங்க.



ஆனா, கோடிகள்ல சம்பளம் வாங்குற ஹீரோக்கள், ‘முதல்ல அவங்கள தியேட்டர் பார்க்கிங் கட்டணத்தை குறைக்க சொல்லுங்க. கேண்டீன்ல அதிக லாபம் வச்சு விக்கிறதை கம்மி பண்ணச் சொல்லுங்க. மக்கள் அதைப்பத்திதான் பேசுறாங்க’னு பதிலடி கொடுக்கறாங்க. டிக்கெட் விலை இப்படி எகிறிப்போனால், ஃபேமிலியா தியேட்டர்களுக்கு வர்றவங்க எண்ணிக்கை காணாமல் போயிடும். ஒரு டிக்கெட் விலை நூத்தி எழுபது, நூத்தி எண்பதுனு இருந்தா, தமிழ் ராக்கர்ஸைத்தான் தேடிப்போவாங்க.

மறைந்த இயக்குநர் மணிவண்ணன் பத்தி மறக்க முடியாத அனுபவம்?

நிறைய விஷயங்கள்ல அவரைப் பார்த்து பிரமிச்சேன். ஸ்பாட்டுல எப்பவும் சுறுசுறுப்பா இருப்பார். அவரைச் சுத்தி 250 பேராவது இருக்கணும். அப்பதான் அவர் ஒர்க் அட்மாஸ்ஃபியர் மூட்ல இருப்பார். ஸ்பாட்டுல ரெண்டே ரெண்டு பேர் இருந்தா, ‘இன்னிக்கு என்ன சண்டேவா?’னு கேட்டு கலாய்ப்பார்.

ஸ்பாட்டுல உட்கார்ந்துதான் அன்றையஷாட்டுக்கான டயலாக் எழுதுவார். ‘நாகராஜசோழன்’ ஆரம்பிக்கும் போது அதோட பட்ஜெட் கம்மி. ஆனா, படத்தை முடிக்கும்போது பட்ஜெட் கொஞ்சம் எக்ஸ்ட்ராவாகிடுச்சு. ஆனாலும் மணிவண்ணன் சார் இயக்கியிருந்ததால்தான் லாபத்திற்கு விற்க முடிஞ்சது. அவரோட ஒர்க் பண்ணினது கோல்டன் மொமென்ட்ஸ். அந்த அனுபவம் ‘மிக மிக அவசர’த்தில் உதவியிருக்கு!