கவிதை வனம்



பயண இலக்குகள்

இருசக்கர வாகனத்தில் நான்
ஆகாயத்தில் ஒரு காக்கை
சாலையில் பேருந்து
வேறு வேறு திசைக்கோட்டில் பயணித்தோம்
என் இலக்கு தெரிகிறது எனக்கு
காக்கையின் இலக்கும்
பேருந்தின் இலக்கும் தெரியவில்லை
ஆகாய காக்கை
என் மேல் மோதி
பேருந்தின் முகப்பில் தூக்கி
எறியப்படும் வரை
தெரிந்திருக்கவில்லை
வெவ்வேறு பயணங்களின் இலக்கு
ஒரு விபத்தாகவும் இருக்கும் என்று

- இளந்தென்றல் திரவியம்



கவித்துளிகள்

* அறுந்த செருப்பில்
மெல்ல நடக்கிறது
தைப்பவனின் வாழ்க்கை

* கண் திறக்கப்பட்டது
கண்கள் மூடிய
புத்தர் சிலைக்கு
கை நிறைய பணம்

* வாங்க முடியவில்லை
விற்ற வாழ்க்கையை
மது நிரம்பிய கோப்பை
தீர்ந்துபோனது
வாழ்க்கை

* தோலுரித்து தொங்கவிடப்பட்ட
பசித்த ஆட்டின் வாயில்
பாதிகடித்த இலைகள்

- கோவை.நா.கி.பிரசாத்