ஊஞ்சல் தேநீர்



யுகபாரதி - 34

விஞ்ஞான அறிவு இலக்கியத்திற்கு விரோதமானதென்னும் மாயையைப் போலவே இலக்கிய அறிவும் விஞ்ஞானத்திற்கு விரோதமானதென்னும் மாயை நிலவுகின்றது. ஆனால், அண்ணன் ஐங்கர நேசன் போன்றவர்கள் விஞ்ஞானத்தைக்கூட இலக்கிய அறிவிலிருந்து பார்க்கப் பயின்றிருப்பது வியப்பளிக்கிறது.

இனம், மொழி, பண்பாடு, கலாசாரம், உரிமை இவற்றின் ஊடாகவே அறிவியலை அணுகவேண்டும் என்பதுதான் அவருடைய எண்ணங்களும், பார்வைகளும். அறிவியல் என்பது அறத்தின் பாற்பட்டு செயல்படும்வரை சிக்கலில்லை. அதே அறிவியல் அறத்திற்கு எதிராகப் போகும் போதுதான் சங்கடம். அந்த சங்கடத்தின் விலை, ஜப்பானின் கியூஷூ தீவிலுள்ள மினமாட்டாவாகவும், இந்தியாவின் மத்தியப் பிரதேசத்திலுள்ள போபாலாகவும் ஆகிவிடுகிறது.

‘விலை உயிரென்றால் விஞ்ஞானம் ஏன்?’ என்ற கேள்வியைத்தான் உலகெங்கிலுமுள்ள சூழலியவாதிகள் எழுப்புகிறார்கள். வளர்ச்சி எனும் பெயரில் பெருமுதலாளிகளின் பேராசைகளுக்கு வளைந்துகொடுக்கும் அரசுகளை அவர்களால் ஒருபோதும் ஆதரிக்க முடிவதில்லை. இழப்பீடுகளாலும் இன்னபிற நிவாரணங்களாலும் ஒரு மனித உயிரைக்கூட மரணத்திலிருந்து காப்பாற்ற முடியாதபோது விஷப் பரீட்சையான விஞ்ஞானத்தை வைத்துக்கொண்டு விளையாடாதீர்கள் என்றே அவர்கள் கெஞ்சுகிறார்கள்.

அரச பயங்கரவாதமென்பது ஆயுதங்களால் மட்டுமல்ல, அடிப்படை ஜீவாதார பிரச்னைகளில் ஏற்படுத்தும் அச்சுறுத்தலே என்றுதான் அவர்கள் சொல்கிறார்கள். ஒரு நாடு தன்னுடைய மக்களுக்கு விசுவாசமில்லாமல் வியாபாரிகளுக்கும் பெருமுதலாளிகளுக்கும் விசுவாசமாயிருந்தால் என்ன நேரும் என்பதைத்தான் இப்போது பார்த்து வருகிறோம்.

பசுவைக் காப்பதற்காக மனிதர்களைக் கொல்கிறார்கள். மனிதர்களைக் காப்பதாகச் சொல்லிக்கொண்டு பூசாரிகளையும் சாமியார்களையும் ஆட்சிக் கட்டிலில் அமர்த்துகிறார்கள். அண்ணன் ஐங்கரநேசனின் கட்டுரைகளின் வாயிலாக அறிவியலை எந்த அளவுக்குப் புரிந்துகொள்கிறோமோ அதே அளவுக்கு அரசியலையும் புரிந்துகொள்ளலாம்.



சிங்கள பேரினவாதத்தை எதிர்த்து அவர் எழுதிய எழுத்து கள் புத்த மதத்தின் மீது வைத்த கேள்விகளாகவும் பார்க்கப்படுகின்றன. ‘புலிகள் அழியலாமா’ எனும் கட்டுரையில், ‘‘காட்டு ராஜாவாகக் கர்ஜித்துக் கொண்டிருந்த சிங்கத்தை அழிவின் குகைக்குள் அடைத்துவிட்டு, புலியை தேசிய விலங்காக முடிசூட்டி அழகு பார்த்துக்கொண்டிருக்கும் இந்தியா, விரைவிலேயே புலியையும் அழிவின் குகைக்குள் தள்ளிவிடுமென்றே தெரிகிறது...’’ என எழுதியிருப்பார்.

உண்மையில், இக்கட்டுரையை வாசிக்கத் தொடங்கியபோது சிங்கத்தை தேசிய விலங்காகக் கொண்ட ஒரு நாட்டுக்கும், புலியை தேசிய விலங்காகக் கொண்ட இன்னொரு நாட்டுக்கும் இடையே நிகழ்ந்து வரும் வல்லாதிக்க போட்டியைக் குறிப்பதாகப்படும். இரண்டு குறியீடுகள் வழியே அரசியலை முன் வைக்கிறாரோ என நினைத்து அக்கட்டுரையை வாசிக்கத் தொடங்கினால் அது முழுக்க முழுக்க காட்டுயிர்கள் பற்றிய கவலையாயிருக்கும்.

‘‘இந்திய கானகங்களில் வாழுகின்ற புலிகள் பற்றிய அண்மைக்கால கணக்கெடுப்பு களைப் பார்த்தால், புலிகளுக்கு ராஜயோகம் இருப்பதாகத் தெரியவில்லை. உலகிலுள்ள ஆறாயிரம் புலிகளில் மூவாயிரத்து எழுநூறு புலிகள் இந்திய கானகங்களில் இருப்பதாக இந்தியா பெருமைப்பட்டுக் கொண்டிருந்தது. ஆனால், இந்திய காட்டுயிர் நிறுவனம் தனது ஆய்வறிக்கையில் ஆயிரத்து ஐநூறுக்கும் குறைவான புலிகளே இருப்பதாக அறிவித்திருக்கிறது...’’ என கட்டுரையை வளர்த்துக்கொண்டு போவார்.

ஆரம்பப் புள்ளியிலிருந்து இறுதிவரை அந்தக் கட்டுரை எதைக் குறித்து எழுதப்பட்டது என்பதை பூடகமாக சொல்லிக்கொண்டு போய், புலிகளின் ராஜாங்கம் என்று நம்பப்படும் இந்தியாவிலேயே அதன் இருப்பு கேள்விக்குறியாகி வருவதை ஆய்வறிக்கை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்துள்ளது என முடித்திருப்பார். ‘Project Tiger’ எனும் புலிகள் பாதுகாப்புத் திட்டத்தை எழுபதுகளில் இந்திராகாந்தி தொடங்கியதிலிருந்து சமீப காலம்வரை புலிகளின் நிலை என்னவாக இருக்கிறது என்பதை அக்கட்டுரை பேசும்.

அழிந்துவரும் புலிகள் குறித்து தீவிர அக்கறை காட்டிய உலகத் தலைவர்களில் முதன்மையானவர் இந்திராகாந்தியே என்றிருப்பார். 1978ல் ஆயிரத்து எண்ணூறாக இருந்த புலிகளின் எண்ணிகை, இந்திராகாந்தியின் விசேஷ கவனத்தாலும் செயற்கரிய திட்டத்தாலும் 1988ல் நான்காயிரத்து ஐநூறாகப் பெருகிய புள்ளிவிபரத்தை சொல்லியிருப்பார். அதே சமயம், 1984ல் இந்திரா காந்தியின் படுகொலை புலிகளுக்குப் பெரும் பின்னடைவாக அமைந்ததென்றும் கூறியிருப்பார்.

நானறிந்தவரை சூழலியல் குறித்து எழுதியவர்களில் அரசியலை உட்செறித்து எழுதியவர் அண்ணன் ஐங்கரநேசன் மட்டுமே. இலங்கையின் கள அரசியல் நிலவரத்தையும் இந்தி யாவின் அரசியல் கள அணுகுமுறையையும் நன்கு அறிந்திருந்த அவர், அவற்றின் ஊடாக எழுதிய அத்தனை சூழலியல் கட்டுரைகளும் குறிப்பிட்டுச் சொல்லத்தக்கனவே. யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியிலும், சென்னை கிறித்தவக் கல்லூரி யிலும் கல்வி பயின்றவர் என்பதால் தமிழர்கள் வாழும் இரண்டு முக்கிய பிரதேசங்கள் குறித்தும் அவரால் சிந்திக்க முடிந்திருக்கிறது.

உயிர்வாழ்தலில் ‘உண்ணுவதும் உணவாவதும், வலிந்தவை பிழைப்பதும், நலிந்தவை அழிவதும்’ இயற்கையின் நியதி என்பதால் பரிணாமப் பாதையெங்கும் இனங்களின் மறைவும் தவிர்க்கமுடியாதது என ‘ஏழாவது ஊழி’யில் எழுதியிருப்பார். காலம் நெடுகிலும் புவியியல் சரித்திரம், ஒரு மில்லியன் ஆண்டுவரைதான் ஓர் இனம் வாழ்ந்துள்ளது எனக் குறித்திருக்கிறது. அல்லது ஒரு ஆண்டில் மில்லியனில் ஓர் இனத்தை காலம் களையெடுக்கிறது.

இந்தக் களையெடுப்பிலிருந்து தப்பிக்கவே ஒவ்வொரு இனமும் போராடி வருகின்றது. அறிவியலாலும் அரசியலாலும் தங்களைத் தற்காத்துக்கொள்ள நிகழ்த்திவரும் போராட்டமே வாழ்க்கை. இந்த வாழ்க்கையில் பழையன கழிதலும் புதியன புகுதலும் பூமியின் சமநிலையைப் பேணி வருகிறது. தற்போது தரையில் வாழும் எந்த பெரிய விலங்கைவிடவும் மனிதர்கள் நூறு மடங்கு பெருகியிருக்கிறார்கள்.



புதிய உயிரினங்கள் வாழவும் பெருகவும் வழிவிடாத மனிதர்கள், காலத்தின் களையெடுப்பைத் தடுத்துக்கொண்டிருக்கிறார்கள். அதன் விளைவே இயற்கையில் ஏற்பட்டுவரும் மாற்றங்கள். இந்த இயற்கையை ஒரு காலம்வரைதான் தடுத்தாட்கொள்ள முடியும், ஒரேயடியாகத் தடுத்தால் உலகத்திலுள்ள அத்தனை இனங்களும் தரைமட்டமாகிவிடும் என்பதுதான் சூழலியலாளர்கள் சொல்லி வருவது.

கூடங்குளம், கதிராமங்கலம், நெடுவாசல் என்று தமிழகத்தில் தற்போது எழுந்துள்ள சூழலியல் பிரச்னைகள் அனைத்தையுமே இந்த விதத்தில்தான் அணுகவேண்டியுள்ளது. பன்னாட்டு நிறுவனங்களுக்கான எதிர்ப்பாகவோ அரசின் வளர்ச்சித் திட்டங்களுக்கான முட்டுக்கட்டையாகவோ ஆட்சியாளர்களும் ஆளும் அரசின் ஆதரவாளர்களும் கொடிபிடித்தாலும்கூட இந்தப் போராட்டங்கள் ஓய்ந்துவிடக் கூடாது என்பதே என் விருப்பம்.

இனமும் மொழியும் ஓர் மனிதனின் அடையாளமென்றால், இயற்கையே ஆதாரம். ஆதாரத்தை அழிக்கக்கூடிய அரசையும் நிறுவனங்களையும் அனுமதிக்க ஆரம்பித்தால் வாழ முடியாது என்பதல்ல பிரச்னை, பூமியே இல்லாமல் போகும் என்பதுதான் நிதர்சனம். அண்ணன் ஐங்கரநேசன் போன்றவர்கள் அதை வலியுறுத்தவே தங்களை வருத்திக்கொள்கிறார்கள். ‘கேட்குமா தவளைச் சத்தம்’, ‘வாழைகள் வாழுமா’, ‘நீல நஞ்சு’, ‘முற்றுகையில் மழைக்காடுகள்’, ‘காணாமல் போகும் கடற்குதிரைகள்’, ‘தந்திர விதைகளும் தற்கொலை விவசாயிகளும்’ என அவர் எழுதிய அத்தனை கட்டுரைகளுமே உயிர் நேசத்தையும் மானுட விடுதலையையும் கோருகின்றன.

பத்திரிகையாளராகப் பணிபுரிந்த காலத்தில் அண்ணன் ஐங்கரநேசன் எடுத்த நேர்காணல்களை ‘வேர் முகங்கள்’ என்னும் தலைப்பில் சாளரம் வெளியிட்டிருக்கிறது. ஈழத்திலும் தமிழகத்திலும் உள்ள கலை இலக்கிய ஆளுமைகளோடு அவர் நடத்திய உரையாடல்கள் ‘ஏழாவது ஊழி’ நூலுக்கு சற்றும் சளைத்ததல்ல.

ஓர் ஆளுமையிடம் உரையாடுவதற்கு அந்த ஆளுமை குறித்த தகவல்களை அனைத்து மட்டத்திலிருந்தும் சேகரித்திருக்கிறார். நாளதுவரை அந்த ஆளுமையின் நடவடிக்கைகளையும் ஏற்கனவே அந்த ஆளுமை அளித்த நேர்காணல்களையும் தேடித்தேடிக் கண்டடைந்து வாசித்த பிறகே கேள்விகளைத் தயாரித்திருக்கிறார். இல்லையென்றால், எப்போதோ ஒருமுறை ‘‘சத்யஜித்ரேயின் படங்கள் கட்டுரையைப் போல இலக்கணமாக இருக்கின்றன’’ என்ற பாரதிராஜாவிடம், ‘‘கலைப் படங்களுக்கான உங்கள் வரையறை என்ன?” வென்று கேட்டிருக்க முடியாது.

பாரதிராஜாவும் கலைப் படங்களுக்கான வரையறையாக சாந்தாராமின் படங்களை உதாரணமாகச் சொல்லியிருக்க வாய்ப்பில்லை. பாலசந்தரைவிட சினிமா மொழியை நன்கு புரிந்துகொண்ட நீங்கள், ஏன் பாலசந்தர் அளவுக்கு பல்வேறுபட்ட கதைகளைக் கையாளவில்லை எனக் கேட்கவும், அதற்கு பாரதி ராஜா, “அடிமட்ட வாழ்விலிருந்து வந்த நான், ஒரே பாய்ச்சலில் மேலே வந்துவிட்டேன்.

எனவே, இடைப்பட்ட நடுத்தர வர்க்கத்து வாழ்வை என்னால் தொட முடியவில்லை” என பகிர்ந்துகொள்ளும் சூழல் ஏற்பட்டிருக்காது. ஓர் ஆளுமை குறித்து வாசகர்கள் அறிந்துகொள்வதைவிட அந்த ஆளுமையே அறிந்து கொள்ளத்தக்க கருத்துகளை உள்ளடக்கியுள்ள அவருடைய நேர்காணல்கள் பத்திரப்படுத்தத் தக்கவை.

குறிப்பாக, ஈழப் போராட்டக் களத்தில் ஒரு கையில் எழுதுகோலும் மறுகையில் துப்பாக்கியுமாயிருந்த புதுவை இரத்தினதுரையிடம் அவர் நடத்திய நேர்காணல் நெகிழ்வானது. ‘‘பொதுவாக போராட்டக் களத்திலிருந்து வெளிப்படும் கவிதைகள் கவிதைகளே அல்ல என்று தமிழ்நாட்டு சிறுபத்திரிகைகள் கூறுவது குறித்து என்ன நினைக்கிறீர்கள்?’’ என்ற கேள்விக்கு, இரத்தினதுரை அளித்திருந்த பதில் கண்ணீர்விட வைத்தது.

(பேசலாம்...)   

ஓவியங்கள்: மனோகர்