மானை புலி கொல்வது கூட தர்மம்தான்!-நா.கதிர்வேலன்

‘துப்பறிவாளன்’ படத்துக்காக துடிப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறார் மிஷ்கின். போஸ்டரில் தொப்பி அணிந்து புதுவிதமாக பார்க்கிறார் விஷால். தியானக்கூடம் போலிருக்கும் மிஷ்கினின் தனியறையில் நிகழ்ந்தது இந்த உரையாடல். வேறென்ன! கலா ரசனையும், சினிமாவின் மீதான காதலும், வாழ்க்கையின் மீதான பரிவுமாக எப்போதுமே அவரது உரையாடல் பொருள் மீறி அமையும்.

அன்றைக்கும் அவ்விதமே. ‘‘துப்பறியும் சாம்பு, ஷெர்லாக் ஹோம்ஸ், டேவிட் லாரன்ஸ், தமிழ்வாணன், சங்கர்லால் இவங்க என் ஆதர்ஷ புருஷர்கள். பார்க்கிறபோது ஒண்ணும் இல்லாத இடத்திலும் துப்பறிவாளனுக்கு எல்லாம் புரியும். நுண்ணறிவோடு இருக்கிறவன் அவன். இன்னைக்கும் ஷெர்லாக் ஹோம்சை சந்திக்கணும்னு கேட்டு போன் வருது.

221-B பேக்கர்ஸ் தெருவிற்கு ‘என் புருஷன் காணாமல் போயிட்டான், என் மகளை யாரோ கொன்னுட்டாங்க’னு கடிதங்கள் வருது. ஒரு கற்பனை கதாபாத்திரத்திற்கு இன்னும் உயிர் இருக்கு. திரைக்கதை கூட துப்பறிதல்தான். ஒரு மனுஷனைப் பத்தி கொஞ்சம், கொஞ்சமா தெரிஞ்சுக்கிறதுதான திரைக்கதை.

அவனை தள்ளி நின்னு பார்த்து, பிறகு பக்கத்தில் போய் தொட்டுப் பார்க்கிற வரைக்கும் அவன் பின்னாடியே திரைக்கதை போகும். பிறகு நான் அவனாகிறேன். இப்படி ஒரு துப்பறிவாளனை எழுதணும்னு எனக்கு எப்பவும் ஆசை. இதில் ‘அஞ்சாதே’க்குப் பிறகு ெகாடுஞ் செயல்களைச் செய்கிற மனிதர்களை கொஞ்சம் பக்கத்தில் போய்ப் பார்த்திருக்கேன். கிட்டத்தட்ட நரகத்தில் இறங்குவது மாதிரிதான். அப்படித்தான், அந்த மாதிரியான கதை...’’ அர்த்தத்துடன் புன்னகைக்கிறார்.

விஷால் இதில் வித்தியாசமாக காணப்படுகிறார்...
ஒன்பது வருஷத்திற்கு முன்னாடி விஷால் கூப்பிட்டு, ‘படம் பண்ணலாம் சார்’னு சொன்னார். இப்பதான் படம் பண்றோம். ஒரு கண்ணாடியைப் பார்க்கிறது மாதிரிதான் நான் அவனைப் பார்த்தேன். என்கிட்டே எவ்வளவு கோபம், திமிர், கருணை, சினிமாவை நேசிக்கிற தன்மை இருக்கோ அப்படியே அந்தப் பையனும் இருக்கான். என் தம்பி மாதிரியே  ஆகிட்டான்.

என்னை முழுக்க முழுக்க நேசித்து ஒர்க் பண்ணின ஒரே நடிகன் விஷால் மட்டும்தான். நான் நரேனைக் கூட சொல்லமாட்டேன். என் கதையின் நாயகனும், என் வாழ்க்கையில் கதாநாயகனாக நான் பார்க்கிறவனும் விஷால்தான். ஆறடி உயரம் மட்டுமல்ல, மனசும் அவ்வளவு உயரமா இருக்கு.

நல்லது பண்ணணும்னு, குழந்தை மாதிரி இந்த உலகத்தை மாத்திடலாம்னு 24 மணி நேரமும் யோசிக்கிறான. இப்படி யோசிக்கிறதில் அவன் உடல்நலம், தனித்த சந்தோஷம் பற்றி கவலைப்படுவதேயில்லை. அவன் நல்லாயிருக்கணும். என் மகளைவிட ஒரு படி மேலாக விஷாலை நேசிக்கிறேன்.

நீங்க எடுத்த ஃபைட் பத்தி ரொம்பவும் பேசிக்கிறாங்க...
ஒரு ஹீரோவுக்கு உடம்பு சொன்னபடி கேட்கணும். வேகம், உத்வேகம், மனுசனுக்குள்ளே ஒரு ஒரிஜினல் வீரம் இருந்தால் மட்டுமே அது கதாநாயக அந்தஸ்தோட இருக்கும். அதை விஷாலிடம் இதில் பார்க்கலாம். விஷாலுக்கு உடம்பில இவ்வளவு சக்தி இருக்கிறதுக்கு காரணம் மனதில் இருக்கிற சக்தி.

கயிறு, பல்டி, குட்டிக்கரணம், குரங்குத்தனம், டேபிள் மேலே விழுந்து சரி பாதியா உடைகிறது இந்த வேலையே இல்லை. ஆறு பேர் கத்தியை எடுத்திட்டு வரும்போது, தன்னையும் பாதுகாத்து, எதிரியையும் பந்தாடுகிற அருமையான இடங்கள். ஒரு காட்சியில் விஷால் அழுதிருக்கான். தியேட்டரே அழும். ஹீரோவுக்கு கணியன் பூங்குன்றன்னு பெயர் வைச்சிருக்கேன். 

கூடவே பிரசன்னா. என் மனசுக்குள் ஒட்டியிருக்கிற கலைஞன். இதில் விஷாலுக்கு நண்பர். சித்ரகுப்தன் மாதிரி இருப்பான், விஷால் நினைக்கிறதை சொல்கிறவனாக இருப்பான். அப்புறம் பாக்யராஜ் சார். கெட்டவர்தான். படத்தில் அவர் செய்கிற செயல்களை ஆடியன்ஸ் ஏத்துக்கவே முடியாது. படத்துக்கு அவர் முகத்தில் அழகு சேர்க்கிற பொட்டு மாதிரி இருப்பார். வினய் ஆறு அடி பூதமா வந்திருக்கான். ஆண்ட்ரியா ஆம்பிளைங்க பயப்படுகிற பொம்பிளையாக வர்றாங்க. நிறைவாக இருக்கு. இதில் அனு இமானுவேலுக்கும் முக்கியமான இடம் இருக்கு.

நல்ல படங்களை கண்டுகொள்வதற்கான பயிற்சி இங்கே வந்துவிட்டதா..?
ஒரு நல்ல புத்தகத்தை படிக்கக்கூட பயிற்சி இருக்கணும். கலை அப்படித்தான். எங்களுக்கு பிடிச்ச மாதிரி படம் வேணும்னு ஆடியன்ஸ் கேட்டால் அதுமாதிரி ஒரு மோசமான விஷயம் எதுவும் கிடையாது. நமக்கு பிடிச்ச மாதிரி சொல்றதுக்கு கலை செவி சாய்க்காது. நீங்க அதுக்கு பக்கத்தில் போய் நின்னு காத்திருக்கணும். 

கலை புதுப்பிக்கப்படுகிற விஷயம். இப்ப ‘பதேர் பாஞ்சாலி’யை இங்கே திரையிட்டால் ஓடாது. உலகத்தின் மிக முக்கியமான சினிமா இலக்கியத்தில் முதல் பத்துப் படங்களில் அது இருக்கு. இன்னிக்கு ‘பசி’யை பார்ப்பார்களான்னு சந்தேகமாக இருக்கு. வேகத்தோட போற வாழ்க்கையில் நாமளே அறியாமல் ‘ஜாலியா இருந்தா போதும்’னு ஒரு வார்த்தை ெசால்றோம்.

ஆனால், ஜாலியான விஷயமில்லை தியேட்டர். சினிமா பொய் கிடையாது. இருட்டில் காண்பிச்சாலும் அது உண்மை. அது ஒரு கருவறை; கருவறை எப்படி உங்களை எந்தப் பிரச்னையும் இல்லாமல் பார்த்துக்குமோ, தியேட்டரும் உங்கள் அறிவு, ஆத்மா கெடாமல் பார்த்துக்கணும். ஒரு ஐ.ஏ.எஸ்.ஆபீஸர் கிட்டே பாடத்திட்டம் பத்திப் பேசும்போது, 6வது படிக்கும்போதே வருஷத்திற்கு பத்து மிகச் சிறந்த படங்களை மாணவர்கள் பார்க்கணும்.

‘செவன் சாமுராய்,’ ‘பிக்பாக்கெட்’ மாதிரி பார்க்கணும். பரீட்சைக்கு அல்ல. வருஷத்திற்கு 10 படம் பார்த்தா ஐந்து வருடத்திற்கு 50 படம் பார்க்கலாம். அந்த ஐம்பது படங்களும் வாழ்க்கை முழுக்க விளக்கா இருக்கும்னு சொன்னேன். இன்னிக்கு கதை ெசால்ல படங்கள்தான் இருக்கு. கதை சொல்கிற பாட்டிகள் இப்ப கிடையாது. கத்தரிக்காயை, வெண்டைக்காயை உடைச்சு, முறிச்சு பார்க்கிறது மாதிரிதான் படத்தையும் பார்க்கணும்.

இன்னும் ‘தர்மம் வெல்லும்’ என்பதில் நம்பிக்கை இருக்கா..?
இதுதான் சத்தியம். நீதியும், நேர்மையும், சத்தியமும், தர்மமும் நம்ம மனசுக்குள்ளே இருக்கு. மரம் கூட நல்ல நீதியா நிற்கிறது. அது கூடு கட்ட இடம் தருது. குருவிகள் வந்து தங்கிப் போகுது. பல பேருக்கு உணவாகுது. நிழல் தருது. செத்துப் போன பிறகு மரத்தைக் கொடுத்து வீடு கட்டச் சொல்லுது. மனிதனை எரிக்கிற கட்டையைக் கூட தருது.

காட்டை பேலன்ஸ் செய்றது புலிதான். மானை அதிகமாக விட்டால் புல் அதிகமாகிடும். இவ்வளவுதான் புல், இவ்வளவுதான் மரம் இருக்கணும் என்கிறபோது இவ்வளவு புலி இருக்கணும் என்பதும் தர்மம். அதனால் புலி மானைக் கொல்வதுகூட தர்மம்தான். இயற்கை தர்மத்தில்தான் இயங்கிக்கிட்டே இருக்கு. மனிதன் அதில் ஒரு பகுதி. அதுதான் மூச்சு.