சம்மரில் ஒரு ஜாலி ட்ரிப்!



-ப்ரியா

ஒரு வட கிழக்கு இந்தியப் பயணம்!

கோடை விடுமுறை என்றாலே பலருக்கும் ஊட்டி, கொடைக்கானல்தான் நினைவுக்கு வருகிறது. வட இந்தியா என்றால் சிம்லா, டார்ஜிலிங்கைச் சொல்வார்கள். வசதியானவர்கள் வெளிநாட்டுக்குப் பறந்துவிடுகிறார்கள். ஆனால், இந்தியக் கண்டத்திலேயே நாம் இன்னும் காணாத எத்தனையோ அழகான இடங்கள் உள்ளன.

வடகிழக்கின் ஏழு சகோதரிகள் என்று வர்ணிக்கப்படும் மாநிலங்களில் அருணாச்சலபிரதேசம், நாகலாந்து, மணிப்பூர், அசாம், மேகாலயாவுக்கு ஒரு ஜாலி ட்ரிப் அடித்துவிட்டு வந்திருக்கிறார் சென்னையைச் சேர்ந்த அமுதா. ‘‘கோடைவிடுமுறையில் ஊர் சுற்றுவதுதான் எங்கள் ஹாபி...’’ என்று சொல்லும் அமுதாவின் சில்லிடும் அனுபவங்கள் இங்கே… 

அற்புதமான அருணாச்சல பிரதேசம்!
அருணாச்சல் மலைப் பகுதியில் அமைந்துள்ள ஊர்தான் தவாங்க். இங்கு செல்ல செலாபாஸ், பலுக்பாங்க் என்ற இடங்களைக் கடக்க வேண்டும். இதில், செலபாஸ் கடல் மட்டத்தில் இருந்து 13,700 அடி உயரத்தில் உள்ளது. இது ஒரு சாலை வழி என்பதுதான் ஸ்பெஷல். நாங்கள் இரவு போம்டிலாவில் தங்கிவிட்டு மறுநாள் காலை தவாங்குக்குக் கிளம்பினோம்.

ஒரு மலையை ஏறி மறுபக்கம் இறங்கினால் தவாங்க். இது, கிட்டத்தட்ட சீனாவின் எல்லைப்பகுதி என்று சொல்லலாம். முன் அனுமதி பெற்றுத்தான் இங்கு நுழைய முடியும். இங்கு ஆசியாவிேலயே மிகப்பெரிய மடம் உள்ளது. தலாய்லாமா பிறந்த இடமும் இதுதான். இதைத் தவிர போர் நினைவிடம் ஒன்றும் உள்ளது. மிகச் சிறிய ஊர் என்பதால், ஆங்காங்கேதான் வீடுகள் மற்றும் கடைகள் கண்ணில் தென்பட்டன. மற்றபடி, அங்கு சாலை எங்கும் ராணுவ முகாம்கள்தான்.

நாகலாந்தின் பூச்சி, புழு ஸ்நாக்ஸ்
அடுத்து நாகலாந்து. இங்கு செல்லவும் அனுமதி பெற வேண்டும். நாங்கள் சென்றது கொஹீமா. இங்கு, பெரிய தேவாலயம் ஒன்றுள்ளது. இதைத் தவிர, இரண்டாம் உலகப் போரில் ஈடுபட்டு நாட்டுக்காக உயிர் துறந்தவர்களுக்கான நினைவிடம். நாகலாந்தில் மறக்க முடியாத காட்சி ஒன்றைக் கண்டோம்.

மாலை நேரத்தில் எல்லாருடைய கையிலும் பொட்டலம் ஒன்று இருந்தது. அது என்ன தெரியுமா? சின்னச் சின்ன புழு, பூச்சிகள், வண்டுகளை எல்லாம் எண்ணெய்யில் வறுத்து மசாலாக்கள் போட்டுத் தருகிறார்கள். பகோடா போல் இதை அனைவரும் கொறித்துக்கொண்டு சுற்றுவதைப் பார்த்தபோது வயிறு கலங்கியது.

மயக்கும் மணிப்பூர்
மணிப்பூரில் உள்ள இம்பாலுக்குச் சென்றோம். மணிப்பூர் என்றாலே அங்கு நடக்கும் அரசியல் கலவரங்கள்தான் நினைவுக்கு வரும். ஆனால், இந்த ஊர் இயற்கையின் அற்புதம். இங்கு, லோக்டக் ஏரி, தேசிய மிதக்கும் பூங்கா மற்றும் இமா மார்க்கெட் மிகவும் பிரபலம். லோக்டக் ஏரியில் ஆங்காங்கே புல்வெளி இருக்கும்.

அந்த ஏரியைச் சுற்றிப் பார்க்க ஒரு படகில் அழைத்துச் சென்றனர். படகோட்டி எங்களை ஒரு புல்வெளி மேல் இறக்கிவிட்டார். நாங்கள் முதலில் அது தரை என்றுதான் நினைத்தோம். ஆனால், இறங்கிய பிறகு எங்களின் காலில் ஜில்லென்று தண்ணீர் பட்டபோதுதான் உணர்ந்தோம், அந்தப் புல்வெளி ஏரியில் மிதந்துகொண்டிருப்பது. இது பம்டிஸ் (Phumdis) எனும் ஒருவகைத் தாவரம்.

இந்த ஏரியில் இருந்து 10 கி.மீ தொலைவில் உள்ளது தேசிய மிதக்கும் பூங்கா. ஷாங்காய் மான்தான் இங்கு ஸ்பெஷல். அந்தப் பூங்காவைச் சுற்றிலும் எட்டு அடி உயரத்துக்குப் புல் முளைத்திருந்தது. இடையே நீரிலேயே ஓர் ஒற்றையடிப்பாதை. அதில் பயணித்து பூங்காவுக்குள் சென்றோம். சுமார் 100 ஏக்கர் பரப்பளவுள்ள அந்தப் பூங்கா முழுதுமே நீரின் மீதுதான் மிதந்துகொண்டுள்ளது!

மணிப்பூரின் மற்றொரு சிறப்பு இமா மார்க்கெட். இமா என்றால் அம்மா என்று அர்த்தம். பெண்களால் நடத்தப்படும் மார்க்கெட் இது. ஆண்கள் இங்கு வேலைக்கு நியமனம் செய்யப்படுகிறார்களே தவிர கடையை நிர்வகிக்க முடியாது. இந்த மார்க்கெட்டில் இல்லாத பொருட்களே கிடையாது.

வீட்டுக்குத் தேவையான சின்ன குண்டூசி முதல் மளிகை சாமான்கள் மற்றும் மீன் வரை அனைத்தும் கிடைக்கும். இங்கு 50 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் பாரம்பரிய உடையை அணிகிறார்கள். 20 வயது பெண்கள் எல்லாரும் ஜீன்ஸ்-டாப்தான். இவர்கள் எல்லாரும் வைஷ்ணவர்கள். அதை வெளிப்படுத்த தங்கள் மூக்கின் நடுவில் இருந்து நெற்றி வரை சந்தனத்தில் நாமம் போட் டிருக்கிறார்கள்.

அசத்தும் அசாம்
மணிப்பூரில் இருந்து எங்களின் பயணம் அசாமை நோக்கிச் சென்றது. பிரம்மபுத்ரா நதி ஓரத்தில் அமைந்துள்ளது காசிரங்கா தேசிய பூங்கா. இந்தக் காடு காண்டாமிருகத்தின் மிகப் பெரிய சரணாலயம். நாங்கள் விடியற்காலையில் இதைச் சுற்றிப் பார்க்கச் சென்றோம். உள்ளே 100 அடி தூரத்தில் காண்டாமிருகங்கள் கூட்டம் கூட்டமாகத் தங்கள் குட்டிகளுடன் சென்றதைப் பார்த்தது ஒரு பரவசமான அனுபவம். இங்கு காவலர் ஒருவர் நம்முடன் வருகிறார். கொம்புக்காக காண்டமிருகத்தை அழிக்கும் கூட்டம் இங்கு அதிகமாம். அதற்குத்தான் இந்த ஏற்பாடு.

மேகங்கள் தவழும் மேகாலயா
எங்களின் அடுத்த பயணம் மேகாலயா. ஷில்லாங் மிகவும் பசுமையான நகரம். இங்கு உள்ள வேர்ப்பாலம் மிகவும் பிரபலம். இரண்டு ஊர்களை இணைக்கும் பாலம் இது. 80 வருடங்களுக்கு முன்பு இரண்டு மரங்களின் வேர்களை இணைத்து அமைக்கப்பட்ட பாலமாம். சிரபுஞ்சி அருகே, மாவாலாங் என்ற கிராமம்தான் ஆசியாவிலேயே மிகவும் சுத்தமான கிராமம்.

100 வருடங்களாக இதனைப் பராமரித்து வருகிறார்கள். ஊர் முழுக்கச் செடி கொடிகள் இருந்தாலும், சாலையில் எந்த ஒரு இலையையும் பார்க்க முடியாது. சின்னக் குழந்தைகள் கூட கையில் துடைப்பத்துடன் சுத்தம் செய்கிறார்கள். 12 வருடங்களுக்கு முன்புதான் இங்கு சாலையே அமைக்கப்பட்டதாம்.

யும்காட், கண்ணாடி போல் தெளிவான ஆறு. மரகதப் பச்சை நிறத்தில் இருக்கும் தண்ணீரின் கீழே 18 அடி ஆழத்தில் தரை துலக்கமாய் தெரிவதைப் பார்ப்பது அற்புதமான அனுபவம். இந்த ஆற்றின் ஆரம்பம் இந்தியா முடியும் இடமான பங்களாதேஷ்.

ராஜா ராணி திரிபுரா!
பதினான்கு நாள் பயணத்தை முடித்துவிட்டு கவுஹாத்திக்கு சென்றோம். அங்கு வாடகைக்காக வாங்கி இருந்த காரை கொடுத்துவிட்டு, திரிபுராவுக்கு 12 மணி நேர ரயில் பயணம். ராஜா ராணி கதை போல் 4 மலைகள், ஆறுகள் மற்றும் குகைகளைக் கடந்து தர்மா நகரை அடைந்தோம். அங்கு உனகோடி, பழமையான சைவத் தலம்.

உனகோடி என்பது வங்காள மொழியில் ஒரு கோடிக்கு ஒன்று குறைவு என்று அர்த்தமாம். இங்குள்ள பாறைகளில் சிவன், பிள்ளையார், பெருமாள்... என பல சிற்பங்களைச் செதுக்கியுள்ளனர். கி.பி 7-9 நூற்றாண்டுகளில் இவை செதுக்கப்பட்டிருக்கலாம் என்கிறார்கள். ஆனால் எந்த ஆட்சியில் இதனைச் செதுக்கினார்கள் என்று தெரியவில்லை.

அடுத்து திரிபுரசுந்தரி கோயில். 61 சக்தி பீடத்தில் இதுவும் ஒன்று. அம்மனின் வலது பாதம் விழுந்த இடம். இங்குள்ள பெரிய பழைய மாளிகையை அருங்காட்சியமாக மாற்றி யமைத்துள்ளனர். இந்தியாவில் நான் பார்த்ததில் இதுதான் மிகப் பெரிய அருங்காட்சியகம். கடைசியாக அகர்த்தலாவில் இருந்து சென்னைக்கு விமானம் ஏறி எங்களின் பயணத்தை முடித்துக் கொண்டோம்!