மாற்றுத் திறனாளிகளுக்கான நீச்சலில் உலக சாதனை!



-வெங்கட்

சோதனைகளை முறியடித்த ஓர் இளைஞனின் வெற்றிக் கதை

மகாராஷ்டிரா மாநிலம். 2010ம் வருடம். ரசிகர்களின் ஏகோபித்த கரவொலியில் ‘நைன்த் ஸ்டேட் லெவல் ஊஷு கராத்தே சாம்பியன்ஷிப்’ போட்டி நடக்கின்ற அரங்கம் அதிர்கிறது. அடி என்றால் அப்படியொரு அடி. இமை அசைக்கும் நொடியில் அடி வாங்கிய ஷாம்ஸ் ஆலம் நிலைகுலைந்து சுருண்டு விழுந்தார். முதுகும் தலையும் இணையும் பின்னங்கழுத்தில் விழுந்த அந்த ஒரு அடி அவரது வாழ்க்கையையே முற்றிலும் திருப்பிப் போடப் போகிறது என்பதை அப்போது அவர் அறியவில்லை.

எதிராளி வெற்றிச் சின்னத்தைக் காட்டிக் காட்டி அலுத்த பின்னும் அடி வாங்கிய ஷாம்ஸ் எழுந்திருக்கவில்லை. கராத்தேவில் எதிராளியிடம் அடி வாங்குவதும், கொடுப்பதும் அவருக்குப் புதிதல்ல. தேசிய அளவிலான கராத்தே போட்டியில் அதுவரை 40 தங்கங்களை ஷாம்ஸ் ஆலம் வென்றிருக்கிறார். ஆனால், அன்று? உடனடியாக மயங்கியிருந்த அவரை மருத்துவமனைக்குக் கொண்டு செல்கிறார்கள்.

டாக்டரின் அலட்சிய சிகிச்சை அவரை மாற்றுத் திறனாளியாக உருமாற்றி விடுகிறது. வீல் சேரே கதி என்று வாழ்க்கையே தலைகீழாக மாற... தான் வாங்கிய பிளாக் பெல்ட்டை ஏக்கத்துடன் பார்ப்பது மட்டுமே ஷாம்ஸ் ஆலமின் பொழுதாகிப் போனது... கண்ணீர் மல்க தன் நண்பன் ஷாம்ஸ் ஆலமைப் பற்றிச் சொல்கிறார் நவீன்.

‘‘15 நாள்ல சரியாகிடும். நீங்க மறுபடியும் நடக்கலாம்னு டாக்டர் சொன்னாங்க. நாலு மாசம் ஆகியும் எதுவும் நடக்கல. நான் திரும்பத் திரும்ப டாக்டர்கிட்ட போயிட்டே இருந்தேன். ‘ஆபரேஷன் ஃபெயிலியர் ஆகிடுச்சு. இனி உங்க கழுத்துக்கு கீழே இருக்கிற பகுதிகள் எதுவும் செயல்படாது’னு ஒருநாள் சொன்னாங்க. இடி விழுந்த மாதிரி இருந்துச்சு.

வாழ்க்கையே வெறுத்துப்போச்சு. என்ன செய்றதுன்னே தெரியல. எல்லாரும் என்னை பரிதாபமா பார்க்க ஆரம்பிச்சாங்க. என்னைப் பராமரிக்க ஓர் ஆள் தேவைப்பட்டுச்சு. என்னால எதுவும் செய்ய முடியாதுன்னு முடிவே பண்ணிட்டாங்க. ரொம்ப சின்ன வயசுல இருந்து கராத்தே கத்துகிட்டு இருக்கேன். அதை ரசிச்சு கத்துகிட்டேன்.

அதனால அது தந்த வலியை ஏத்துகிட்டேன். இதையே நினைச்சு கிட்டு இருக்கறதால எதுவுமே நடக்கப் போகறது இல்லைன்னு தெரிஞ்சுது. எல்லாத்தையும் மறந்துவிட்டு மும்பைல இருக்கிற மாற்றுத் திறனாளிகள் மறுவாழ்வு மையத்துல சேர்ந்தேன். அதுதான் என் வாழ்க்கையோட டர்னிங் பாய்ன்ட்...’’ புன்னகையுடன் பேச ஆரம்பிக்கிறார் ஷாம்ஸ்..

‘‘அந்த சென்டரோட ஆண்டு விழா நிகழ்ச்சில ராஜாராம் காஃஹ் கலந்துகிட்டு பேசினார். லண்டன் குளிர் நீர்ல 37 மைல் நீந்திய ஆசியாவின் முதல் மனிதர் அவர்தான். அவரும் என்னை மாதிரி ஒரு மாற்றுத் திறனாளிதான். அவரோட பேச்சைக் கேட்டதும் மிகப்பெரிய உத்வேகம் வந்தது. நாமும் ஏதாவது செய்யணும்னு தோணுச்சு.

அவரையே ரோல் மாடலா எடுத்துகிட்டு ‘நானும் நீந்தலாமா’னு அவர்கிட்டயே கேட்டேன். ‘ஏன் முடியாது’னு நம்பிக்கை கொடுத்தார்...’’ என்கிற ஷாம்ஸ் ஆசியாவின் சிறந்த நீச்சல் வீரராக மாறிய கதை சுவாரஸ்யமானது. ‘‘நேபாளம் பக்கத்துல இருக்கிற எங்க கிராமத்தை சுத்தி மூணு ஆறுகள் ஓடுது.

ஆத்துல தண்ணி அதிகமா சேர்ந்திடுச்சுனா போதும்... அதை திறந்து விட்டுடுவாங்க. நடக்கவே தெரியாத வயசுல அந்த வெள்ளத்துலதான் நீந்தவே கத்துகிட்டேன். இந்த அனுபவத்தை வைச்சுதான் தயாரானேன். வீல் சேர்ல என்னைப் பார்த்துட்டு ‘சூப்பர்வைஸர் இல்லாம நீங்க நீந்தக் கூடாது’னு சொன்னாங்க. அடம்பிடிச்சி, அசைக்க முடியாத காலோடும், பாதி அசையும் கையோடும் தண்ணிக்குள்ள தைரியமா இறங்கினேன். நீந்தினேன்.

100 சதவீதம் செயல்படாதுனு சொன்ன உறுப்புகள் கொஞ்சம் கொஞ்சமா செயல்பட ஆரம்பிச்சுது. செப்டம்பர் 2011ல ஸ்டேட் லெவல் சாம்பியன் ஷிப் போட்டி புனேல நடந்தது. அதுல வெள்ளியும், வெண்கலமும் வாங்கினேன். மாற்றுத் திறனாளி ஆனபிறகு நான் கலந்துகிட்ட முதல் சாம்பியன்ஷிப் போட்டி அது. அடுத்தடுத்து நடந்த போட்டிகள்ல உற்சாகத்தோட கலந்துகிட்டேன்.

ஜெயிச்சேன். 2014 இந்தியன் நேவி டேல மாற்றுத் திறனாளிகளுக்கான ஓப்பன் ஸீ ஸ்விம்மிங் நடந்துச்சு. கடலுக்குள்ள 6 கிலோமீட்டர் வரை ஸ்விம் பண்ணணும். அதுவும் முதல் மூணு கிலோமீட்டர் சாதாரணமாகவும் அடுத்த மூணு கிலோமீட்டர் எதிர் நீச்சலும் போடணும். ஒரு மணி நாற்பது நிமிடம் என்ற அளவுல அந்த தூரத்தை நீந்தி தேசிய சாதனை படைச்சேன்.

இதுக்கு அடுத்ததா உலக சாதனை செய்யணும்னு முடிவு எடுத்தேன். அதற்கு ஈடான உலகத் தர பயிற்சியும் தேவைப்பட்டது. விளையாட்டு வீரர்களுக்கு ஸ்பான்ஸர்ஷிப் கிடைக்கிறதே இங்க கஷ்டம். இதுல மாற்றுத் திறனாளிகள்னா கேட்கவே வேண்டாம். ஸ்பான்சர்ஷிப்புக்காக பல நாட்கள் காத்திருந்தேன்.

ஒண்ணும் பயனில்லை. சரி நாமே பணம் சம்பாதிச்சு பயிற்சி எடுக்கலாம்னு மும்பை ஐ.பி.எம்.ல வேலைக்குச் சேர்ந்தேன். பயிற்சி எடுத்துகிட்டு இருந்தப்ப சென்னை சத்தியபாமா யுனிவர்சிட்டில ஸ்பான்சர்ஷிப் கிடைச்சது. இங்க எம்.பி.ஏ சேர்ந்து படிச்சிகிட்டிருந்தப்ப கோவா காண்டோலிம் பீச்சுல நடந்த ‘பீச் டே ஃபெஸ்ட் 2017’ல கலந்துக்க அழைப்பு வந்தது.

உலக சாதனை படைக்க இதுதான் சரியான நேரம்னு கலந்துகிட்டேன். இந்த முறை 5 கிலோமீட்டர் எதிர்நீச்சல் போட வேண்டியிருந்தது. எட்டு கிலோமீட்டர் தூரத்தை 4 மணி 4 நிமிடத்துல கடந்து உலக சாதனை படைத்தேன்...’’ முகமெல்லாம் பெருமையின் ரேகை  படர சொல்லி முடித்தார் ஷாம்ஸ் ஆலம்.

படங்கள்: ஆ.வின்சென்ட் பால்