சரவணன் இருக்க பயமேன்



-குங்குமம் விமர்சனக்குழு

வேலை வெட்டி இல்லாமல் ஊரைச் சுற்றும் உதயநிதி ஊருக்குள் பெரிய மனிதராகும் முயற்சியும், ரகளையுமே ‘சரவணன் இருக்க பயமேன்’.நண்பர்களோடு அரட்டை அடித்து திரியும் உதயநிதிக்கு, நண்பன் சூரி வழியாக அகில இந்தியக் கட்சிக்கு தமிழக தலைவராக வாய்ப்பு வருகிறது. சும்மா இருந்தவர், இதை பயன்படுத்தி பிரபலம் ஆகிறார்.

இதற்கிடையில் சின்ன வயதில் சேர்ந்து விளையாடிய காதல் இணையும் ஊருக்கு வந்து சேருகிறது. இறுதியில் உதயநிதி அந்த காதலில் இணைந்தாரா என்பதே காமெடி கலாட்டா. சீனுக்கு சீன் சிரிக்க வைத்தால் போதும் என இறங்கி அடித்திருக்கிறார் டைரக்டர் எழில். அனைத்து ஹீரோக்களும் சம்பிரதாயமாக நடித்து முடிக்கும் கிராமத்துக் காதல் கதையில் இது உதயநிதியின் கோட்டா!

மனிதர் வெளுத்துக் கட்டுகிறார். பெரும்பாலும் கலாய் காமெடி டயலாக் டெலிவரிதான் நடிப்பு. அதனால் உறுத்தாமல் பொருந்திப் போகிறது உதயநிதியின் துடிப்பு. சூரியோடு சேர்ந்து கொண்டு சிரிப்பு சிக்ஸர் அடிக்கிறார். வீட்டில் தன் அந்தஸ்தை உயர்த்துவதிலாகட்டும், உபயோகமில்லாதவனாக நினைக்கிற ரெஜினாவுக்கு பில்டப் கொடுப்பதிலாகட்டும், ஆழ்ந்த உறக்கத்தில் நீளமாக படுத்திருக்கிற ரெஜினாவை கட்டிப்பிடித்து தூங்கி ஃபீலிங்ஸ் விடுவதாகட்டும்... அட்டகாசம்.

அவர் நண்பர்களுடன் சேர்ந்து வருகிற ஒவ்வொரு ஸ்டாப் ப்ளாக்குமே செம காமெடி மேளா! அந்த உயரத்தில் பட்டர்மில்க் தேவதையாக அபாரமாக வசீகரிக்கிறார் ரெஜினா. அழகும் பொழிவும் ததும்ப, படம் முழுவதும் வருகிறார். குறிப்பாக கட்டிலே கொள்ளாமல் அந்த நீள அகலத்தில் படுத்துறங்கும் ஒரு காட்சியில், ஆஹா! பாடல் காட்சிகளிலும் பரவச ஆச்சர்யம்.

எக்கச்சக்க கிளாமருக்கு இனிமேல் ரெஜினாதான் எதிர்காலம்! பாடல் காட்சியில் இறுக்க நெருக்க க்ளோசப்களில் அபாரம்! சூரி தவிர யோகி பாபு, சாம்ஸ், ரவிமரியா, ரோபோ சங்கர் சேர்ந்து கொள்வதால் காமெடி கொடிகட்டிப் பறக்கிறது. விடாமல் சின்னச் சின்ன சேட்டைகளிலும் கலக்குகிறார்கள். உதயநிதியின் சேட்டை கலாட்டாக்களுக்கு மேற்கண்டவர்கள் பக்கா பக்க வாத்தியம்.

இவர்களை வைத்துக்கொண்டு ஒரு பாடலில் ஜாலி ரைடே அடித்திருக்கிறார் டைரக்டர் எழில். பழகிய திரைக்கதை ஆங்காங்கே திணறும்போதெல்லாம் காமெடி பன்ச்சுகளைக் கொண்டு கரையேற்றி விடுகிறது எழிச்சூர் அரவிந்தன் - ஜோதி அருணாச்சலம் வசனம். திரைக்கதையில் சிருஷ்டி டாங்கே திடீர் என்டரி.

அந்த கன்னக் குழியழகிக்கு நடிக்க பெரிதாக வாய்ப்பு இல்லையென்றாலும், திரையில் இருந்தவரைக்கும் நெகிழ்வு ஊட்டுகிறார். பாடல்களில் ரகளை செய்கிறது இமானின் இசை! மொத்த கேன்வாசையும் அழகாகக் காட்டும் கே.ஜி.வெங்கடேஷ் ஒளிப்பதிவு, பாடல் காட்சிகளில் இன்னும் எக்ஸ்ட்ரா ரம்மியம்.

பின்பாதியிலும் கதையை நடத்திச் செல்வதா, சிரிப்பு ஷோவை தொடர்வதா என்பதில் கொஞ்சம் குழம்பி விட்டார்கள் போல... கதை ஓட்டம் குறைந்து நகைச்சுவையே முன்னணியில் நிற்கிறது. முன் பின் பாதிகளில் ஆங்காங்கே அலுப்புத் தட்டும் சில காட்சிகளில் கத்தரி வைத்திருந்தால் இன்னும் மிரட்டியிருக்கலாம். சரவணன் & கோ சேட்டைகளில், ஜாலி கொண்டாட்டம்.