பள்ளிக்கரணை



அறிந்த இடம் அறியாத விஷயம்

-பேராச்சி கண்ணன்

அதிகாலை 6 மணி. சென்னையின் முக்கியமான மாநில நெடுஞ்சாலை 109. துரைப்பாக்கத்திலிருந்து பல்லாவரம் செல்லும் இருநூறு அடி சாலையில் பரந்து விரிந்திருக்கிறது பள்ளிக்கரணை சதுப்பு நிலம். இந்தியாவிலேயே நகரத்துக்குள் இருக்கும் ஒரேயொரு சதுப்பு நிலம்! துரைப்பாக்கம் டோல்கேட்டைத் தாண்டி மெதுவாக நகர்ந்தது எங்கள் பயணம். இடது பக்கம் பெரிய பெரிய கட்டிடங்கள்.

வலது பக்கம் துர்நாற்றம் வீசும் குப்பைக்கிடங்குகள் வரவேற்கின்றன. அடுத்த இரண்டடியில் சாலையின் இருபுறங்களிலும் பத்திரப்படுத்தப்பட்ட சதுப்பு நிலம். கொஞ்சம் நீர். நிறைய நீண்டு வளர்ந்து நிற்கும் ‘Typha’ புற்கள் பச்சைப் பசேலென்று காட்சியளிக்கின்றன.

பெலிக்கன், ஃபிளமிங்கோ, செந்நீலக் கொக்கு, நாமக்கோழிகள், முக்குளிப்பான் என விதவிதமான பறவைகள் அதில் இரை தேடிக் கொண்டிருக்கின்றன. சாலை நெடுகிலும் மரங்கள். ஜில்லென மனதை வருடும் காற்று. நிறைய பேர் வாக்கிங், ஜாக்கிங்கில் பிஸியாக உள்ளனர்.

‘சதுப்பு நிலம் பாதுகாக்கப்பட்ட பகுதி’, ‘நிலத்தடி நீரை சேமிக்கிறது சதுப்பு நிலம்’ என வனத்துறையின் வாசகங்களும் எச்சரிக்கை பலகைகளும் வரிசை கட்டுகின்றன. கிருஷ்ணா நகர் வழியாக சதுப்பு நிலத்திற்குள் இறங்கிப் பார்த்தோம். சுமார் ஐநூறுக்கும் மேற்பட்ட மாடுகள் அதற்குள் மேய்ந்து கொண்டிருந்தன.

ஆக்கிரமிப்பைத் தடுக்க நிலத்தைச் சுற்றிலும் வனத்துறையினர் எல்லைகளில் மணல் தடுப்பை வைத்திருக்கிறார்கள். அருகிலேயே பறவைகளை பார்வையிடும் டவர். அதிலேறி புகைப்படங்கள் எடுக்கிறோம். அங்கே, ராமராஜன் ஸ்டைலில் டவுசருடன் மாடுகள் மேய்த்துக் கொண்டிருந்தார் இளைஞர் ஒருவர்.

‘‘எங்க தொழிலே விவசாயம்தான். தாத்தா காலத்துல இருந்து இங்க ஆடு, மாடுகளை மேய்ச்சிட்டு இருக்கோம். இங்குள்ள புற்கள்தான் அதுகளுக்கு தீவனம். ஆனா, இப்ப இது ஃபாரஸ்ட் ஏரியாவாகிடுச்சு. எங்க ஏரியாவும் சிட்டிக்குள்ள வந்துடுச்சு. அதனால, எங்கள, ‘ஆடு, மாடு மேய்க்க செங்கல்பட்டு பக்கமா போங்க’னு அரசே விரட்டுது. சொந்த வீடு, இடத்தையெல்லாம் விட்டுட்டு எப்படி போறது? அதான், இந்த ஃபாரஸ்ட் ஏரியாவுக்கு அந்தாண்ட மாட்டுத் தொழுவம் கட்டியிருக்கேன்.

மழைக் காலம்தான் ரொம்ப கஷ்டம். அந்தா... அங்க தெரியுது பாருங்க...’’ என ஒரு அடுக்குமாடி குடியிருப்பை கை காட்டுகிறார். ‘‘அந்த பில்டிங் முதல் மாடி வரை தண்ணீர் வந்திடும். அப்ப பெரிய ஏரி மாதிரி நிறைஞ்சு இருக்கும். இதுக்குள்ள எட்டு பத்து பேர் விழுந்து இறந்திருக்காங்க...’’ என அவர் சொல்லிக் கொண்டு போகும் போதே அவரின் எருமை மாடுகள் ஒன்றையொன்று முட்டிக் கொள்கின்றன. பாய்ந்து விரட்டுகிறார். உள்ளே நடந்தோம்.

மேற்பகுதி புற்களாக இருந்தாலும் பொந்துகள் பொதிந்து காணப்படுகிறது. நடப்பதற்கு சற்று பயம் கொடுத்தாலும் சதுப்பு நிலத்தின் நடுப்பகுதி வரை சென்றோம். வானுயர்ந்த கட்டிடங்களுக்கு மத்தியில் ஒரு மைதானம் போல விரிந்து கிடக்கிறது சதுப்பு நிலம். அங்கிருந்து கிளம்பி சாலையின் அந்தப் பக்கமுள்ள சதுப்பு நிலத்திற்குள் புகுந்தோம்.

இந்த நிலத்தின் பாதியை மாநகராட்சிக்குச் சொந்தமான பள்ளிக்கரணை குப்பைக் கிடங்கு மூடியிருக்கிறது. அதையடுத்து வேளச்சேரி ரயில்நிலையம். இந்த ரயில்நிலையம் உள்ளிட்ட சுற்றிலும் இருக்கும் குடியிருப்புகள் எல்லாமே சதுப்பு நிலத்திற்குள்தான் இருக்கின்றன. ‘‘வேளச்சேரி ஏரியிலிருந்து இங்க மீன் பிடிக்க வந்திருக்கேன்.

கெழுத்தி, கெண்டைனு நிறைய மீன்கள் கிடைக்கும். இதை வண்டலூர் ஜூவுல கான்ட்ராக்ட் எடுத்தவர்ட்ட வித்திடுவேன். அங்குள்ள முதலைகளுக்கு இதுதான் உணவு. கிலோ 17 ரூபாய்தான். குறைஞ்சது 20 கிலோ பிடிப்பேன். சில நேரங்கள்ல அதிகமாவும் சிக்கும்...’’ என்கிறார் அங்கே தேங்கிக் கிடக்கும் நீரில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ஒரு மீனவர்.

அங்கிருந்தபடியே நங்கநல்லூரில் உள்ள ‘கேர் எர்த்’ டிரஸ்ட்டின் மேனேஜிங் டிரஸ்டியான டாக்டர் ஜெயஸ்ரீ வெங்கடேசனை தொடர்பு கொண்டோம். பள்ளிக்கரணை சதுப்பு நிலத்துக்கு ஒரு விடிவு கிடைத்தது இந்த டிரஸ்ட்டால்தான். ‘‘நீர்நிலைகள்ல ஒருவிதம்தான் சதுப்பு நிலம். ஆங்கிலத்துல ெவட்லேண்ட்னு சொல்வாங்க.

ஆனா, நீர்நிலைக்கும் வெட்லேண்டுக்கும் அடிப்படை வித்தியாசம் ஆழம்தான். அதிக ஆழமில்லாம மூணு அடிக்கு குறைவா நீர் இருந்தா அது சதுப்புநிலம். அதுக்கு மேல ஆழம் அதிகம் இருக்குறது நீர்நிலை. நீர்நிலைகள் மனிதர்களால் உருவாக்கப்பட்டது. ஆனா, சதுப்பு நிலம் இயற்கையா உருவானது. எப்பவும் ஈரத்தன்மையோடு இருக்கும்...’’ என ஒரு டைட்டில் கார்டுடன் பேச ஆரம்பித்தார் ஜெயஸ்ரீ.

‘‘சதுப்பு நிலங்கள்ல நன்னீர், உவப்பு நீர்னு ரெண்டு வகை இருக்கு. உதாரணத்துக்கு பிச்சாவரம் அலையாத்திக்காடுகள் உவப்புநீர் சதுப்புநிலம். ஆனா, நம்ம பள்ளிக்கரணை சதுப்பு நிலம் ரொம்ப ஸ்பெஷலானது. காரணம், ரெண்டு நீரும் இந்த சதுப்பு நிலத்துக்குள்ள இருக்குறதுதான். மழைக் காலம் முழுக்க நன்னீர் சதுப்புநிலமா இருக்கும்.

சம்மர் டைம்ல மட்டும் நீர் குறைய குறைய கடல் நீர் உள்ள வரும். இப்படி கடல்நீர் உள் வந்து பின்வாங்குறதும், மழை நீர் வெளியேறி பின்வாங்குறதுமான இந்த இயக்கம்தான் இதனோட ஸ்பெஷல். அதனாலதான் இதை அழிச்சிடக் கூடாதுனு போராடுறோம். இந்த மாதிரி நீர் பரிவர்த்தனை இருக்குறதால நமக்கு இரண்டு பயன் இருக்கு. ஒண்ணு வெள்ளத் தடுப்பு.

இன்னொண்ணு நிலத்தடி நீர் பெருக்கம். இந்த நிலம் ஒரு ஸ்பாஞ்சு மாதிரி. இந்த ஸ்பாஞ்சு பள்ளிக்கரணைல 35 அடிக்கும் அதிகமா பூமிக்கடில இருக்கு. அதனால எவ்வளவு நீர் வந்தாலும் உறிஞ்சிகிட்டே இருக்கும். எஞ்சிய நீரை ஒரு ஏரியைப் போல தேக்கி வைக்கும். அதுக்கப்புறம் தேங்குற நீர் கொஞ்சம் கொஞ்சமா ஒக்கியம் மடுவுக்குப் போகும்.

அடுத்து பக்கிங்ஹாம் கால்வாய், மணல் பகுதினு போய் கடைசியா கடல்ல கலக்கும். கால்வாய் வழியே போறது கோவளத்துல முடியுது. இந்த சதுப்புநிலத்துக்கு அடியில மூணு நீர்ப் படுகைகள் ஓடுது. அதனால வேளச்சேரி, பள்ளிக்கரணை பகுதில நிலத்தடிநீர் நல்லாயிருக்கும். நிறைய லாரிகள் இங்கிருந்து குடிநீர் எடுத்திட்டுப் போறதை நீங்க பார்க்கலாம். காரணம் சதுப்புநிலம்.

ஆனா, இப்ப நிலத்தடிநீர் இல்லை. இதையும் அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி ஓர் ஆய்வு பண்ணினோம். அப்பவே, கிட்டத்தட்ட பள்ளிக்கரணை ஏரியாவைச் சுத்தி மட்டும் ஒரு நாளைக்கு சராசரியா 900 டேங்கர் லாரிகள் நீர் எடுத்திட்டு போறதை கணக்கிட்ேடாம். அதிர்ச்சியா இருந்துச்சு. அப்ப எப்படி நீர் இருக்கும்? குடியிருப்பும் நிறைய வந்துடுச்சு.

ஆக, இயற்கை நமக்கு கொடுத்த விஷயத்தை நாசம் பண்ணிட்டு வெள்ளம் அழிக்குதுனு கவலைப்பட்டா எப்படி?’’ என்ற ஜெயஸ்ரீ, ‘‘நம் முன்னோர்கள் இந்த நிலத்தை சுத்தி 33 ஏரிகளை அமைச்சிருக்காங்க. இந்த ஏரிகளோட நீர் எல்லாம் சதுப்பு நிலத்துக்கு வர்ற மாதிரி பண்ணியிருக்காங்க. என்ன ஓர் அறிவு பார்த்தீங்களா? அப்பவே சதுப்பு நிலம் பத்தி தெரிஞ்சதாலதான் இப்படி செய்திருக்காங்க. ஆனா, நாம அதைப் பத்தின அறிவில்லாம அழிச்சிட்டு இருக்கோம்...’’ என வேதனைப்பட்டார்.

சரி, எப்போது இதை அரசு கையிலெடுத்தது? ‘‘2001ல் இதைப் பத்தி ஆய்வு பண்ணி அரசுகிட்ட எடுத்துட்டுப் போனோம். அதுக்கப்புறம் அதிகாரிகள்தான் இதை ரொம்ப ஆர்வம் காட்டி செயல்படுத்தினாங்க. இந்தப் பாராட்டு எல்லாம் அவங்களுக்குதான் போய்ச் சேரணும். அடுத்து, எங்க ஆய்வுக்கு துரைப்பாக்கம் பெண்கள் அமைப்பு ரொம்ப சப்போர்ட் பண்ணினாங்க.

ஆனா, வனத்துறை சட்டத்துக்குள்ள இந்த நிலத்தை கொண்டு வரப் போறாங்கனு சொன்னதும் இந்தப் பகுதியோட மதிப்பு அதிகரிச்சது. ஒரு புது டிரெண்டை ரியல் எஸ்டேட்காரர்கள் உருவாக்கினாங்க. சுத்தியிருக்கிற ஏரியா கிரீன் பகுதினு சொல்லி விற்க ஆரம்பிச்சிட்டாங்க. நிலத்தடி நீர் அதிகம், பறவைகளைப் பார்க்கலாம், குருவிகளை ரசிக்கலாம்னு சொல்லி மார்க்கெட் மதிப்பை ஏத்தினாங்க.

பிரிட்டிஷ் டைம்ல இதை புறம்போக்கு நிலம்னு ஆவணப்படுத்தி இருந்ததால நிறைய குடியிருப்புகள் ஏற்கனவே வந்திடுச்சு. இருந்தும் பாதுகாப்பு செய்ய முடிஞ்ச பகுதிகளை அதிகாரிகள் பத்திரப்படுத்தினாங்க. ஆனா, பட்டாவுல இருந்த இடங்களை ஒண்ணும் செய்ய முடியலை. அப்பதான் 593 ஹெக்டேர் பரிந்துரைச்சு 620 ஹெக்டேர் கையகப்படுத்தினாங்க.

தொடர்ந்து ஆய்வு மூலமாவே இதை செயல்படுத்தினோம். அப்புறம் 2005ல் வெள்ளம் வந்தப்ப அப்போதைய முதல்வர் ஹெலிகாப்டர்ல இந்தப் பகுதியை பார்வையிட்டதும் எங்க ஆய்வைக் கொடுத்தோம். உடனே செயல்படுத்த உத்தரவிட்டாங்க. அடுத்து வந்த திமுக அரசும் இந்தப் பகுதியை பாதுகாத்தாங்க...’’ என்கிற ஜெயஸ்ரீ, ‘‘சதுப்பு நிலம் சென்னைக்கு கிடைச்ச மிகப் பெரிய பொக்கிஷம். அதை பாதுகாக்க வேண்டியது நம்ம கடமை!’’ என்கிறார் நிறைவாக.                

படங்கள்: ஆ.வின்சென்ட் பால்

பள்ளிக்கரணை டேட்டா

* 6 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவு கொண்டது. மத்திய கைலாஷ் பகுதியில் தொடங்கி கோவிலம்பாக்கம் வரை நீண்டு கிடக்கிறது.
* விஜயநகர் பஸ் டெர்மினஸ் கூட சதுப்பு நிலம்தானாம்.
* இங்கே 161 வகையான பறவை இனங்கள் வந்து செல்கின்றன. இது வேடந்தாங்கலை விட மூன்று மடங்கு அதிகம்.
* பறவைகளின் இனப்பெருக்கத்திற்கான இடம் வேடந்தாங்கல் என்றால், உணவுக்கான இடம் இந்த பள்ளிக்கரணை சதுப்பு நிலம்.
* d10 கிமீ சுற்றளவுக்கு நிலத்தடி நீர் பெருக்கம் நூறு சதவீதம் இருக்கும்.
* இந்த சதுப்பு நிலம் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது என்கிறது கார்பன் டேட்டிங் மூலம் உறுதிப்படுத்தப்பட்ட ஆய்வுகள்.

கோரிக்கைகள்

* இதைச் சார்ந்து இருக்கும் ஏரிகளைப் பாதுகாக்க வேண்டும். இல்லையெனில் ஏரி நீர் உள்ளே வராமல் போய்விடும். அதேநேரத்தில், ஏரிகளுக்கு வருகிற கால்வாய்களையும் பாதுகாக்க வேண்டும்.
* உள்ளே இருக்கின்ற சீமைக் கருவேல மரங்களை அகற்ற வேண்டும்.
* எந்தவித கட்டிடங்களும் இதற்குள் கட்டக் கூடாது.
* காரியம், மெர்க்குரி என சில கெமிக்கல்ஸ் இதில் கலக்கின்றன. அதை கண்டுபிடித்து தடுக்க வேண்டும்.
* ஜிலேபி, கெண்டை உள்ளிட்ட 9 வகையான தேவையில்லாத மீன் வகைகள் இதில் வாழ்கின்றன. அவற்றை எடுத்து விட வேண்டும். அப்போதுதான் நம் பாரம்பரிய மீன்கள் இங்கே வசிக்க முடியும். சதுப்பு நிலமும் நன்றாயிருக்கும்.
* சுற்றிலும் மரங்கள் நட வேண்டும். அதேபோல், உள்ளே மேடுகள் ஏற்படுத்தி பறவைகள் உட்கார வழி செய்ய வேண்டும்.
* மக்கள் சுற்றிப்பார்க்க வசதிகள் செய்து தர வேண்டும்.
* குப்பைக் கிடங்கைப் பிரித்து துண்டுகளாக்க வேண்டும். இப்படி துண்டுகளாக மாற்றினால்தான் நீர் போக ஏதுவாகும். கழிவுகள் எல்லாம் வெளியேறும். பிறகு, இயற்கையே அதை ஒழுங்குபடுத்தி பச்சைப் பசேலென மாற்றும்.