எய்தவன்-குங்குமம் விமர்சனக்குழு

பரீட்சையில் பாஸ் செய்து, டாக்டர் ஆகிற கனவில் இருந்த தங்கையை மரணத்திற்கு அழைத்துச் சென்றவர்களை அடையாளம் கண்டு பழிக்குப் பழி வாங்க புறப்படுபவனே ‘எய்தவன்’. எந்த இடையூறும் இல்லாமல் இனிமையாகச் செல்கிறது கலையரசனின் குடும்பம். அப்பா, அம்மாவோடு தங்கையின் கனவை நிறைவேற்ற பாடுபடுகிறார்.

அரசுத் தேர்வை சிறு வித்தியாசத்தில் தவறவிட, தனியார் மருத்துவக் கல்லூரியில் சேர முடிவெடுக்கிறார்கள். பெருந்தொகை கொடுத்து அங்கீகாரம் பெறாத ஒரு கல்லூரியில் சேர்த்துவிடுகிறார்கள். அந்த கல்லூரியை மூட அரசு உத்தரவிடுகிறது. அதில் சேர்ந்த மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குள்ளாகிறது.

சம்பந்தப்பட்டவர்களால் தங்கை விபத்தில் இறந்துவிட, தன் தங்கையின் இறப்புக்கு காரணமானவர்களை கலையரசன் பழி தீர்த்தாரா என்பதே படம்! ஹீரோவின் வாழ்க்கையில் ஏற்படும் திருப்பங்களுக்கு தக்க காரணங்களை வைக்கிறார் புதுமுக இயக்குநர் சக்தி ராஜசேகரன். கோபக்கார இளைஞராக கச்சிதமான அவதாரம் எடுக்கிறார் கலையரசன்.

இன்ஸ்பெக்டர் சத்னாவிடம் காதல் வயப்படுவதும் அருமையான அத்தியாயம். நடுவில் வில்லன் சரீதரன் வேறு விதத்தில் பரபரப்பு ஊட்டுகிறார். குற்றவாளிகளின் துணை கொண்டே கலையரசன், குற்றத்திற்கு அடிப்படையானவர்களை நெருங்குவது கூடுதல் சுவாரஸ்யம். இன்ஸ்பெக்டர் வேஷத்திலும் மிடுக்கு குறைந்து, அழகாகவே இருக்கிறார் சத்னா.

நமக்கு பார்க்கக் கிடைப்பது தெளிவான தேவதை வடிவம். ஆனால், அவரது வேடம் இன்ஸ்பெக்டராக இருந்தும், த்ரில்லருக்கும், கலையரசனுக்கும் அவர் உதவவேயில்லை. ஒரே ஒரு தடவை இன்ஸ்பெக்டரின் முரட்டு அடியிலிருந்து தப்பிக்க மட்டுமே உதவுகிறது. வில்லன் சரீதரன் நல்ல அறிமுகம்.

ஜாடையில் கொஞ்சமாக ரகுவரனை ஞாபகப்படுத்துகிறவர், நடிப்பில் இன்னும் தேர்ந்தால் வகையான வில்லனாக நிச்சயம் வலம் வருவார். ‘ஆடுகளம்’ நரேன் குற்றத்திற்கு துணை போனாலும் அதற்காக துடிக்கிற மனதில், நம் மனதையும் வென்றெடுக்கிறார். கல்வித் துறையின் சகல தகிடுதத்தங்களையும், தெளிவாக எடுத்து வைத்து காட்டிய வகையிலும், எச்சரிக்கை உணர்வில் பின்தங்கிவிடாமல், நம்மை தெளிவுப்படுத்துவதிலும் நல் உணர்வு பளிச்சிடுகிறது.

அறிமுக முயற்சியிலேயே கமர்ஷியல் அம்சங்களில் அதிகம் கண் வைக்காமல், ஏமாறும் மக்களின் பரிதாப நிலையை காட்டிய வகையிலும் டைரக்டர் சக்தி ராஜசேகரனுக்கு வணக்கம்! வேல ராமமூர்த்தி மாதிரியானவர்களை வெறும் அப்பாவாக வீணடித்திருக்க வேண்டாம். களமாடக் கூடியவரை கட்டி வைத்தது மாதிரி இருக்கிறது. திரைக்கதை ஆங்காங்கே தொய்வடைவதை தவிர்த்திருக்கலாம்.

ஆனாலும் படம் முடிந்து வெளியேறும்போதும் கல்வித் துறையில் இருக்கிற குளறுபடிகளை தெரிந்துகொண்ட வகையில் மகிழ்ச்சியே! இசையமைப்பாளர் பார்த்தவ் பர்கோ இசையில் ஒவ்வொரு பாடலும் மினி இடைவேளை. இப்பொழுது பாடல்கள் வித்தியாசப்படுத்தும் டிரெண்டை உணரத் தவறிவிட்டார்கள்.

ஆனாலும், பின்னணியில் பரபரப்பு. இருளில், வேகத்தில் பயணிக்கும் கேமரா மூலம் காட்சிகளில் நேர்த்தி வடிவம் கொடுக்கிறது பிேரம்குமாரின் ஒளிப்பதிவு. வில்லன்களைக் கண்டுபிடித்து நெருங்குவதில் அநியாயத்திற்கு தாமதம் காட்டுவது ஏன்? இத்தனை பேரும் பணத்தையும் அபகரித்தபின் பெற்றோர்கள் மூலமே, சம்பந்தப்பட்டவர்களை உள்ளே வைத்திருக்கலாமே? என்றாலும் இடைவேளையில் வரும் திடீர் டுவிஸ்ட், அட்றாசக்க. அந்த டுவிஸ்ட்டின் டாப் கியர் டெம்போவிலேயே முழுப்படமும் பயணித்திருந்தால், ரேஸ் சேஸாக இருந்திருக்கும்.